ரியானாவின் ஜிந்த் நகரில் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலை பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. இந்த நிகழ்ச்சியில் ஹரியானா மாநில முதல்வர் நயாக்சிங் சைனி மற்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்துள்ளனர்.

இது ஹரியானா மாநிலத்தில் ஜிந்த்-சோனிபட் இடையே ஜூலை 17 முதல் ஓட தொடங்கியுள்ளது. இவ்விழாவில் பேசிய பிரதமர் மோடி இந்திய ரயில்வேயானது இந்த 21 ஆம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தை கொண்டு ஒரு முக்கிய முன்னேற்றத்தை எட்டியுள்ளது. இந்த வழித்தடம் 90 கிலோ மீட்டர் தொலைவு கொண்டிருந்தாலும் எதிர்காலத்தில் விரிவு படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நாங்கள் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்வோம். செலவுகளை குறைப்பதற்கான வழிகளை கண்டறிவோம். செயல் திறனை மேம்படுத்த பணியாற்றுவோம் என்று அறிவித்துள்ளார்.

தினமலரின் பாசம்!

இவ்விழாவைப் பற்றி புகழ்ந்து உள்ள தினமலர் நாளிதழானது கீழ்க்கண்டவாறு சொல்கிறது:

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் ரூபாய் 118 கோடியில் சென்னையில் உள்ள ஐசிஎஃபில் உருவானது என்பது நமக்கெல்லாம் பெருமிதம் தரக்கூடியது. இந்த ரயில் 10 பெட்டிகளை கொண்டது பாரம்பரியமான டீசல் அல்லது மின்சக்திக்கு பதிலாக ஹைட்ரஜன் எரிபொருளை பயன்படுத்தி இயங்குகிறது. 1200 கிலோ வாட் திறன் கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் கலந்து பயன்படுத்தப்படுகிறது புகையை முற்றிலும் உமிழாத இந்த ஹைட்ரஜன் தொழில்நுட்பம் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் வேதிவினையின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து ரயில் இயங்குகிறது.

இந்த ரயில் இன்ஜின் கழிவாக வெறும் நீராவியை மட்டுமே வெளியேற்றுகிறது. மணிக்கு 120 – 140 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. ஒரு முறை ஹைட்ரஜன் எரிபொருளை முழுமையாக நிரப்பினால் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு செல்லும் என நம்மை புளகாங்கிதம் அடையச் சொல்கிறது.

ஹைட்ரஜன் எப்படி கிடைக்கிறது?

பூமியில் ஒரு தனிமமாக ஹைட்ரஜன் ஏராளமாகக் காணப்பட்டாலும், அது பெரும்பாலும் நீர் (H₂O) அல்லது மீத்தேன் (CH₄) போன்ற மற்றொரு சேர்மத்தின் ஒரு பகுதியாகவே காணப்படுகிறது. எரிபொருள் மின்கல மின்சார வாகனங்கள் அல்லது ஹைட்ரஜன் உள் எரிப்பு இயந்திர வாகனங்களில் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு, வேதியியல் அல்லது மின்வேதியியல் வினைகளைப் பயன்படுத்தி இந்தச் சேர்மங்களிலிருந்து அது பிரிக்கப்பட வேண்டும். பொதுவாக இரு வழி முறைகளில் ஹைட்ரஜனை நாம் பெற முடியும்.

  1. மின்னாற்பகுப்பு (Electrolysis): தண்ணீரில் மின்சாரத்தைச் செலுத்தி, மூலக்கூறுகளைப் பிரிப்பதன் மூலம் தூய ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயுக்கள் பெறப்படுகின்றன. இந்த முறைக்குத் தேவையான மின்சாரம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து பெறப்பட்டால் இது ‘பச்சை ஹைட்ரஜன்’ (Green Hydrogen) என்று அழைக்கப்படுகிறது.
  2. நீராவி சீர்திருத்தம் (Steam Reforming): இயற்கை வாயுவில் (Methane) உள்ள நீராவி மற்றும் வெப்ப வேதியியல் வினைகள் மூலம் ஹைட்ரஜனைப் பிரித்தெடுக்கும் முறையாகும். உலகின் பெரும்பாலான ஹைட்ரஜன் இம்முறையில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

இயற்கை எரிவாயுவை உயர் வெப்பநிலை நீராவியுடன் வினைபுரியச் செய்வதன் மூலம், ஹைட்ரஜன், கார்பன் மோனாக்சைடு மற்றும் சிறிதளவு கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றின் கலவையான செயற்கை வாயு உருவாக்கப்படுகிறது. கூடுதல் ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்காக, கார்பன் மோனாக்சைடு நீருடன் வினைபுரிகிறது. இந்த முறை மிகவும் மலிவானதும், திறன்மிக்கதும், மற்றும் மிகவும் பொதுவானதும் ஆகும். அமெரிக்காவில் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜனில் பெரும்பாலானது, இயற்கை எரிவாயுவை நீராவி மூலம் சீர்திருத்தம் (Steam Reforming) செய்யும் முறையில் தயாரிக்கப்படுகிறது.

ஹைட்ரஜனில் கழிவு வராதோ!

ஹைட்ரஜனை பயன்படுத்தி ரயிலை இயக்கும் போது அதில் நீராவி மட்டும்தான் தெளிவாக வெளியேறுகிறது இது உண்மைதான். ஆனால், அந்த ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதில் கழிவு வருகிறது அதை எந்த கணக்கில் சேர்ப்பது.

மின்னாற்பகுப்பு(Electrolysis) செய்ய வேண்டும் என்றால் அதற்கு மின்சாரம் தேவை. மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு நிலக்கரியை – புதை படிவ  எரிபொருளை எரித்தால் அதில் கழிவுகள் நிச்சயம் உருவாகும். மின்சாரத்தை அணுமின் நிலையத்திலிருந்து பெற்றாலும் அணுகழிவுகள் நிச்சயம் உருவாகும். சூரிய ஒளியில் இருந்து பெற்றால் அந்த சூரிய ஒளி தகடுகள் ஒரு கட்டத்தில் கழிவாக தேங்கும்.

படிக்க:

 அழிகிறது சுற்றுச்சூழல்! எரிகிறது வனக்காடுகள்!! இதுவே பூமியின் இறுதிக்காலம்!!

 கோவையில் முதல் தனியார் ரயில்!  ரத்தம் கொதிக்கிறது!

இயற்கை எரிவாயு போன்ற ஒரு மீத்தேன் மூலத்திலிருந்து ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய, உயர்-வெப்பநிலை நீராவி (700°C–1,000°C) தேவை. இந்த நீராவியை உற்பத்தி செய்ய எதை எரிக்கப் போகிறோம் என்பதை பொறுத்து அதற்கான கழிவுகள் நிச்சயம் வரவே செய்யும். எனவே பூஜ்ஜிய கழிவு என்று நம் காதில் ஹைட்ரஜன் ரயிலை பற்றி பூ சுற்றுகிறார் பிரதமர் மோடி.

யாருக்கான சேவைக்கு உதவும்?

ஏற்கனவே இருக்கும் ரயில்களையும், ரயில் நிலையங்களையும் பராமரிக்க துப்பின்றி கார்ப்பரேட்டுகளுக்கு தவணை முறையில் விற்று வருகிறது மோடி அரசு. ஹைட்ரஜன் ரயில் திட்டமும் நிச்சயம் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கானதாகவே மாறும்.

உழைக்கும் மக்கள் ஏற்கனவே மோடி அரசு அறிமுகப்படுத்தியுள்ள வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களை திரும்பியே பார்ப்பதில்லை. அவை உழைக்கும் வர்க்கத்திற்கு பிடிக்காது என்பதல்ல; மோடி அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை செலுத்த முடியாது என்பது தான் அதன் அர்த்தம்.

தற்போது ஹைட்ரஜன் உற்பத்திக்கு அதிக செலவிடப்படுகிறது. அந்த எரிபொருளை பயன்படுத்தி ரயிலை இயக்கும் பொழுது பயணக் கட்டணமும் அதிகரிக்கவே செய்யும். அப்படி இருக்க நேரடியாக மின்சாரத்தை பயன்படுத்தியோ, டீசலை பயன்படுத்தியோ ஓடும் ரயிலின் முன்பதிவு பெட்டியில் கூட அடித்தட்டு உழைக்கும் மக்கள் பயணிக்க முடியாத போது, மோடி அறிவித்துள்ள தூய ஹைட்ரஜன் ரயிலில் யார் பயணிப்பார்கள்? ஊதாரித்தனமாக செலவிடுவதற்கு தயங்காத மேட்டுக்குடிகளும், அதிகாரிகளும், கார்ப்பரேட்டுகளும்தானே.

எனவே மேட்டுக்குடிகளுக்கான வரவாக வந்துள்ள ஹைட்ரஜன் ரயிலை  பாசிச மோடியும், மோடி அரசின் ஊதுகுழலான தினமலர்களும் கொண்டாடலாம். அதை சென்னை ஐசிஎப்  ஆலைதான் உருவாக்கி உள்ளது என்பதற்காக நம்மையும் கொண்டாடச் சொல்லலாம். ஆனால் உழைக்கும் மக்களுக்கான ஊடகங்களோ இதன் பின்னுள்ள  ஆளும் வர்க்க நலனை அம்பலப்படுத்தவே வேண்டும்; அவ்வகையில் நாமும் அம்பலப்படுத்துகிறோம்.

  •  இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here