சமீப காலங்களில் நீட் ஆதரவு வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இதனை பரப்புவது யார்? அவர்களின் நோக்கம் என்ன? நீட் எதிர்ப்பு எதனால்? FAIR NEET vs BAN NEET
நீட் தேர்வில் நடந்த முறைகேட்டை கண்டித்து டெல்லியில் நடைபெற்ற போராட்டம் ஆளும் பாசிச பாஜக பாஜகவை பணிய வைத்ததோடு போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையான கல்வி அமைச்சர் தர்மந்த பிரதானை ராஜினாமா செய்ய வைத்தது. பிஜேபி முன்னெடுத்த போராட்டம் வெற்றி பெற்றது. நாமும் பாஜகவை பணிய வைத்த டெல்லி போராட்டத்தின் வெற்றிகளை வரவேற்கிறோம். ஆனால், டெல்லி போராட்டக்காரர்களின் கோரிக்கையும் தமிழ்நாட்டு போராட்டக்காரர்களின் கோரிக்கையும் வெவ்வேறாக இருந்தது.
தமிழ்நாடு நீட் தேர்வை அது திணிக்கப்பட்ட காலத்தில் இருந்தே கடுமையாக எதிர்த்து வந்தது. அனிதாவின் மரணம் போராட்டத்தை தீவிரப்படுத்தியது அன்றிலிருந்து இன்று வரை தமிழ்நாட்டின் முழக்கம் சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வு ரத்து செய் என்பது அந்த கோரிக்கை தான் பால நிலத்தில் போராடியவர்களின் கோரிக்கையும் ஆனால் டெல்லியில் போராடியவனை கோரிக்கை என்பது அதாவது நீட்டில் உள்ள முறைகேடுகளை களைந்து உண்மையான; நேர்மையான நீட் தேர்வை நடத்து என்பதே. அதனால் தான் டெல்லி போராட்டம் முடிந்துகொண்ட உடன் பாலன் இல்லத்தில் நிறைவு பெறாமல் தொடர்ந்த போராட்டம் சலசலப்புடன் நிறைவுற்றது.
டெல்லி FAIR NEET என்றால் தமிழ்நாடு BAN NEET இரண்டிற்கும் பாரிய வேறுபாடு உண்டு. நாமும் பல கட்டுரைகளில், நீட் தேர்வில் முறைகேடு நடந்த பொழுது “நீட் தேர்வே முறைகேடு தான் ரத்து செய்” என்று எழுதினோம். டெல்லியில் நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்தை பாசிசத்திற்கு எதிரான போராட்டம் என்ற வகையிலேயே நாம் ஆதரித்தோம். Fair Neet ஐ Ban Neet ஆக எடுத்துச் செல்லவே போராடினோம்.
டெல்லி மாணவர்கள் போராட்டம் பாசிஸ்டுகளின் பிடரியில் அடித்தாலும் அதில் சில மாற்றுக் கருத்துக்கள் நமக்கு இருக்கவே செய்தன. குறிப்பாக FAIR நீட் எனும் போது அவர்கள் நேர்மையான நீட் தேர்வை கேட்டார்கள். இவ்வளவு முறைகேடுகள் நிறைந்த சமூக நீதிக்கு, அம்பேத்கர் கொள்கைக்கு எதிரான நீட் தேர்வை தடை செய்யுங்கள் என கோரவில்லை.
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயன்ற சங்பரிவார் கும்பல் நீட்டுக்கு ஆதரவான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி கருத்து பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். நீட்டின் மூலம் எவ்வளவு நன்மை நடந்துள்ளது என்ற ‘அரை உண்மை’ பிரச்சாரத்தை தீவிரமாக செய்து வருகிறார்கள். இதனை சாதாரணமாக கடந்து விட முடியாது.
படிக்க:
♦ மாணவர்கள் போராட்டஎழுச்சி: தர்மேந்திர பிரதான் ஓட்டம்! நீட்டுக்கு எதிரான போராட்டத்திற்கு ஓய்வில்லை!
♦ நீட் எனும் ஆட்கொல்லித் தேர்வை ஒழித்துக் கட்டுவோம்!
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான இளைஞர்கள் ‘அரசியலற்ற அரசியலுக்குள்’ நுழைந்துள்ள இந்த காலத்தில் பாஜகவின் நீட் ஆதரவு பிரச்சாரங்கள் எளிதில் அவர்களுக்குள் நுழைந்து விடும் ஆபத்து உள்ளது இதனை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவது தற்போது அவசியம்.
நீட் தேர்வை ஆதரிப்பவர்கள் கூறுவது என்ன?
நீட் (NEET) தேர்வை ஆதரிப்பவர்கள், மருத்துவ மாணவர் சேர்க்கையில் நாடு முழுவதும் ஒரே தரநிலை, வெளிப்படைத்தன்மை மற்றும் தகுதி அடிப்படையிலான தேர்வை உறுதி செய்வதற்காகவே இந்தத் தேர்வு கொண்டு வரப்பட்டதாகக் கூறுகின்றனர். மாநிலம், கல்வி வாரியம் அல்லது பொருளாதாரப் பின்னணி எதுவாக இருந்தாலும், அனைத்து மாணவர்களும் ஒரே தேர்வின் மூலம் சமமாகப் போட்டியிட முடியும் என்பது அவர்களின் முக்கிய வாதமாகும்.
மேலும், நீட்டுக்கு முன்பு இருந்த பல்வேறு நுழைவுத் தேர்வுகள் மற்றும் சேர்க்கை முறைகளுக்குப் பதிலாக, ஒரே தேர்வு மற்றும் ஒருங்கிணைந்த கலந்தாய்வு முறை மாணவர் சேர்க்கையை எளிமையாகவும் வெளிப்படையாகவும் மாற்றியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். பள்ளி வாரியங்களுக்கு இடையிலான மதிப்பீட்டு வேறுபாடுகளை நீக்கி, நாடு முழுவதும் ஒரே அளவுகோலில் மாணவர்களை மதிப்பிடவும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முறைகேடுகளைக் கட்டுப்படுத்தவும், இந்தியாவின் எந்த மருத்துவக் கல்லூரியிலும் சேரும் வாய்ப்பை வழங்கவும் நீட் உதவுகிறது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
படிக்க:
♦ நீட் தேர்வில் முறைகேடு! ஏழை மாணவர்களை வஞ்சிக்கும் நீட் தேர்வு முறையை ஒழிப்பதே தீர்வு!!
♦ போட்டித் தேர்வு முறைகேடுகளுக்கும் மோடி உள்ளிட்ட பாஜகவினருக்கும் உள்ள தொடர்பு!
எனவே, நீட் தேர்வை ஆதரிப்பவர்களின் பார்வையில், இது மருத்துவக் கல்வியில் ஒரே தரநிலை, வெளிப்படைத்தன்மை மற்றும் சமமான போட்டியை உறுதிப்படுத்தும் முக்கியமான கல்வி சீர்திருத்தமாகக் கருதப்படுகிறது.
ஆனால், நீட்டை ஆதரித்து முன்வைக்கப்படும் இந்த வாதங்களிலேயே பல முரண்பாடுகள் இருக்கிறது என்பதே நமது வாதம். ஜீரோ பெர்சண்டைல், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள், அந்த முரண்பாடுகளின் வெளிப்பாடாகவே தோன்றியது.
இப்பொழுது இந்த வாதங்களையெல்லாம் புறந்தள்ளி விட்டு மக்களை ஏய்க்கும் வகையிலான காணொளிகளை பரப்பி வருகிறார்கள். ஆடு மேய்ப்பவர் மகன் இன்று டாக்டராகிறான். அது நீட் தேர்வால் தான் நிகழ்ந்தது. பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர் டாக்டராகிறார் அது நீட்டால் தான் சாத்தியம். நீட் இல்லையென்றால் கோடிக் கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டும். இப்போது பணம் அல்லது லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கொள்ளை நின்று விட்டது என்றும் பிதற்றுகிறார்கள்.
இதற்கு முன் சாமானிய அடித்தட்டு மக்களின் குழந்தைகள் மருத்துவர் ஆனதில்லையா? இந்த கேள்வியை யாரும் எழுப்புவதில்லை. ஏதோ இன்று தான் நீட் தேர்வால் நடந்தது போல் ஒரு பிம்பத்தை கட்டமைக்கிறார்கள். இந்த அயோக்கிய தனத்தை அம்பலப்படுத்த வேண்டாமா?
நீட் கார்ப்பரேட் காவிக் கொள்கையின் தூண்!
நீட் வெறும் நுழைவுத் தேர்வு அல்ல; கல்வியை சந்தைப் பொருளாக மாற்றும் கருவியாகும். பல கட்டணம் வாங்கும் பயிற்சி மையங்களைச் சார்ந்திருக்கும் இந்த முறை, அரசு பள்ளி, கிராமப்புறம், தொழிலாளர் மற்றும் ஏழை குடும்ப மாணவர்களை சமமற்ற போட்டிக்குள் தள்ளுகிறது. பள்ளிக் கல்வியின் முக்கியத்துவத்தைப் புறக்கணித்து, ஒரே நாள் தேர்வின் அடிப்படையில் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதும் தவறான முறையே..
மேலும், கோச்சிங் மையங்களின் வளர்ச்சியால் கல்வி வணிகமயமாகி, திறமையை விட பொருளாதார வசதியே வெற்றியை நிர்ணயிக்கும் நிலை உருவாகியுள்ளது. சமூக நீதி, அரசு பள்ளி மாணவர்களின் வாய்ப்பு, மாநிலங்களின் கல்வி உரிமை ஆகியவற்றையும் நீட் தேர்வு பாதிக்கிறது.
படிக்க:
♦ விஸ்வகர்மா யோஜனா: புதிய ஒப்பனையில் நவீன குலத்தொழில் திட்டம் !
♦ விஸ்வகர்மா யோஜனா: படிக்காதே! அப்பன் தொழிலை செய்! தலை விரித்தாடும் பச்சை பார்ப்பனியம்!
காவிக் கும்பலை பொறுத்தவரையில் செருப்பு தைப்பவரின் மகன், செருப்பு தைக்கும் தொழில் தான் வேண்டும். தச்சனின் மகன் தச்சுத் தொழில் தான் செய்ய வேண்டும் என சாதி அடிப்படையில் ஆன தொழில்களை செய்ய நிர்பந்திக்கிறார்கள். வர்ணாசிரம சாதி அடிப்படையில் ஆன வேலைகளை அவரவர் செய்ய வேண்டும் என்பதே இந்துத்துவவாதிகளின் கருத்து. அதற்கேற்ப விஸ்வகர்மா யோஜனா என்னும் பெயரில் குலக்கல்வி அமல்படுத்தியுள்ளார்கள். இவர்களை அடித்தட்டு மக்களின் குழந்தைகள் மருத்துவர் ஆவதை விரும்புவார்கள்?
இதன் வெளிப்பாடு தான் எல்லாரும் சமீபத்தில் தவெக அமைச்சர் சி.டி.நிர்மல் குமார் கூறிய கருத்து. “நாம்தான் தவறாகத் தேர்வு செய்துவிட்டு கஷ்டப்படுகிறோம். 4 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகிவரும் மாணவி, மீண்டும் டாக்டர் ஆக வேண்டும் என வந்தார் அவரிடம் வழக்கறிஞருக்கு படி என்று கூறினேன். நம்மைச் சுற்றி உள்ள வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ப துறையைத் தேர்வு செய்ய வேண்டும். ELECTRICIAN, PLUMBER, CARPENTER என எல்லா துறையும் துறைதான். அவர்களின் தேவை அதிகமாக உள்ளது” என்று ஆர்.எஸ்.எஸ்- குரலாய் தன்னை அடையாளப் படுத்தியுள்ளார்.
எனவே, நீட்டுக்கு எதிரான போராட்டம் ஒரு தேர்வை எதிர்ப்பது மட்டுமல்ல; கல்வி உரிமை, சமூக நீதி, மாநில உரிமை மற்றும் சமமான கல்வி வாய்ப்பைப் பாதுகாக்கும் அரசியல் போராட்டமாகும். ஆகையால நீட் ஆதரவு காணொளிகளை புறந்தள்ளுங்கள். மாணவர்களுக்கு அதன் ஆபத்தை விளக்குங்கள. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் நீட் தேர்வை ஒழித்துக் கட்டுவது தான் நமது இலக்கு. அதை நோக்கி பயணிப்போம்.
- நந்தன்






