டெல்டாவைச் சூழும் வெறுமை
மேகங்கள் வானத்தில் தவழ்ந்தபடி வைகாசி, ஆனி மாதங்கள் கடந்துவிட்டன; ஆடி மாதமும் முடிவடைகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் வழக்கம் போலப் பச்சைப் பசேலெனக் குலுங்க வேண்டிய குறுவைச் சாகுபடி, இந்த ஆண்டும் வறட்சியிலும் வெறுமையிலும் போய் முடிந்துள்ளது.
காவிரிப் பாசனத்தை மட்டுமே நம்பியிருக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் உழைப்பும் வாழ்வாதாரமும் இன்றைக்குக் கேள்விக்குறியாக நிற்கின்றன.
“எல் நினோ, போதுமான மழை பெய்யவில்லை, இயற்கை ஒத்துழைக்கவில்லை” என்று வழக்கம் போல இயற்கை மீது பழியைப் போட்டுத் தப்பித்துக் கொள்ள நடிகர் ஆட்சி முயலுகிறது. ஆனால், இது இயற்கையின் சதியல்ல; நடிகர் ஆட்சியின் கையாலாகாத்தனம்!
கர்நாடக அணைகளில் நீர் இருப்பு இருந்தும், உரிய காலத்தில் முன்கூட்டியே தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரைப் போராடிப் பெறத் தவறிய நடிகர் ஆட்சியில், உளறல்கள் மட்டுமே ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடுகின்றன.
அறியாமையும் சங்கித்தனத்தின் வெளிப்பாடும்
தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சனையான காவிரி நீருக்காக தமிழ்நாடே கொதித்துக் கொண்டிருக்கும் வேளையில், புதிதாகக் கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்து உல்லாசமாய் உலாவரும் நடிகரின் அமைச்சரவை சகா CTR நிர்மல் குமார் பேசிய பேச்சு, அவர்களின் அரசியல் அறியாமையை உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளது.
கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழகத்திற்குத் தண்ணீர் தர மறுப்பது குறித்துப் பேசிய அந்தப் பெருமதிப்பிற்குரிய அரசியல் ‘மேதை’
“கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு தமிழகத்திற்குத் தண்ணீர் தரத் தயார் என்றுதான் சொல்கிறது. ஆனால், திமுக தான் — அதாவது மு.க.ஸ்டாலின்தான் ‘கர்நாடகா தண்ணீர் திறந்துவிடக் கூடாது’ என்கிறார். அதனால்தான் கர்நாடகா தண்ணீர் தர மறுக்கிறது!”
— என்று பொறுப்பற்றுப் பேசியிருக்கிறார்.
இதை வெறும் உளறல் என்று பார்ப்பதை விட, பொய்யையே மூலதனமாகக் கொண்டுள்ள சங்கித்தனத்தின் வெளிப்பாடு என்றுதான் பார்க்க வேண்டும்.
கூத்துக் களமாய் தமிழ்நாடு
நிர்மல் குமாரின் இந்தப் பேச்சைக் கேட்டு டெல்டா விவசாயிகள் சிரிப்பதா அல்லது கதறி அழுவதா என்றே தெரியவில்லை!
1. முரண்பாட்டின் உச்சம்: ஸ்டாலின் சொன்னால் கர்நாடக காங்கிரஸ் அரசு கேட்கும் என்றால், கடந்த காலங்களில் ஜூன் மாதத்திலேயே குறுவைச் சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்ட போது, “ஸ்டாலின் கேட்டுக்கொண்டதால்தான் கர்நாடகா காங்கிரஸ் நீர் திறந்தது” என்று இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
2. முட்டாள்தனமான குற்றச்சாட்டு: தன் சொந்த மாநில விவசாயிகள் நீரின்றிக் கருகி அழியும் போது, தண்ணீர் பெற்றுத்தர வக்கற்றவர்கள் இப்படி பொறுப்பற்ற ஒரு மலிவான அரசியல் கூத்து அரங்கேற்றுகின்றனர்.
3. கர்நாடக அரசியலின் உண்மை: மேகதாட்டு அணை கட்டுவதையே நோக்கமாகக் கொண்டு, தமிழகத்திற்கான உரிமைகளை மறுக்கும் கர்நாடக காங்கிரசின் கன்னட இனவெறி அரசியலை மறைத்துவிட்டு, அதற்குத் தூபமிடும் வகையில் பேசுவது யாருக்கான அரசியல்?
அவதூறுகளை ஸ்டாலின் மீது அள்ளி வீசும் இந்த நடிகர் ஆட்சி, தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக காங்கிரசுக்கு எதிராகத் தனது மந்திரிசபையில் பங்கேற்கும் தமிழ்நாட்டு காங்கிரசை வெளியேற்றுவதுதானே? மானஸ்தனாய் இருந்தால் இதெல்லாம் உரைக்கும்.
படிக்க:
♦ டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் கொள்முதல் இல்லாமல் அழிகிறது! திமுக அரசே முதன்மை குற்றவாளி?
♦ காவிரி நீரைத் தருவதில் கர்நாடகா தொடர்ந்து அடாவடி! தன்னுரிமை கேள்!
“அறுக்க மாட்டாதவனுக்கு இடுப்பில் 1008 அருவாள்” என்ற பழமொழிக்கு ஏற்ப, எதைப் பேசுவது, எதை எங்குப் பொருத்துவது என்று தெரியாமல் பேசுவதுதான் இவர்களின் “மாற்று அரசியல்” லட்சணமா?
நாலு வார்த்தை பேசத் தெரியாதவர்களின் கையாலாகாத்தனம்!
தமிழகத்தின் வரலாற்றையோ, காவிரி நீர்ப்பங்கீட்டுச் சிக்கலின் பின்னணியையோ, அரசியலமைப்பு உரிமைகளையோ எதையுமே படித்தறியாமல், வெறும் திரைப்படக் கவர்ச்சியை மட்டுமே வைத்துக்கொண்டு நாற்காலியைப் பிடித்த கூட்டத்தின் கையாலாகாத்தனமே இத்தகைய பிதற்றல்கள் ஆகும்.
நாட்டின் மிக முக்கியப் பாசனச் சிக்கல் பற்றி நாலு வார்த்தை உருப்படியாகப் பேசத் தெரியாதவர்களையும், எந்தவித அரசியல் கோட்பாடும் இல்லாதவர்களையும் ஆட்சியில் உட்கார வைத்தால் நாடு என்ன கதியாகும் என்பதற்கு இவர்களின் இந்தப் பேச்சு ஒரு எச்சரிக்கை மணி!
நாம் சிந்திக்க வேண்டியது என்ன?
காவிரிப் பிரச்சனை என்பது ஏதோ இரு மாநில ஆளும் கட்சிகளின் அரசியல் விளையாட்டு அல்ல; அது லட்சக்கணக்கான உழைக்கும் விவசாயிகளின் வாழ்வுரிமைப் பிரச்சனை!
ஒருபுறம் மாநில உரிமைகளை அடகு வைத்தல்; மறுபுறம் அடிப்படைப் புரிதலே இல்லாமல் வெறும் பிம்பங்களை மட்டும் வைத்து மக்களை ஏமாற்றத் துடிக்கும் ‘நடிகரின்’ கையாலாகா அரசியல்.
இத்தகைய போலித்தனங்களையும், வரலாற்று அறியாமைகளையும் உழைக்கும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். காவிரி உரிமையை வென்றெடுக்கத் தேவை திரையுலகக் கவர்ச்சியோ, மேடை உளறல்களோ அல்ல; மக்களின் சமரசமற்ற போர்க்குணமிக்கப் போராட்டமே!
— தமிழ்மணி






