உரைவீச்சு :

 “மணிப்பூர் எரிகிறது;
‘மௌனசாமிக் கும்பலை’
இனியும் நம்பவேண்டுமா?”


“ஆமா, இந்த மௌனசாமி யார்?”  என்று நண்பன் வேலன் கேட்டான்.

மௌன மண்டல ‘அகண்ட  பாரதத்தில்’ இந்த
“மௌனசாமி ” ஓர் ஆள் !
இவாளது மௌனம் சோகவிரதம் அல்ல;
ஒருநொடி பின்தங்கிப் பிறகு
சீறும் மௌனமுமல்ல;

இசைப்பாடல்  நடுவே வரும்
அசைவின் இடையே தயங்கும் மௌனமல்ல;

கண்ணைச்சொக்கவைக்கும்
தாலாட்டில் லயிக்கும்
சிசுவின் மௌனமல்ல;

சொல்லிமுடித்த புத்தனின்
போதிநிழல்
மௌனஒளி அல்ல;

கண்டுவிட்ட கனவைச்
சொல்ல எண்ணித் தோற்கும்
கண்ணில் ஊமையின் மௌனமல்ல;

ஏமாற்றப்பட்ட எத்தனையோ ரக
மாற்றுத் திறனாளிகளின்
குமுறும் மௌனமா? அல்ல;

வறுத்தெடுத்த வலியை
வாள்முனையில் குத்திச்
சிலுவையில் அறையப்பட்டுத்
தலைசாய்த்துப் புலம்பும்
ஏசுவின் மௌனமுமல்ல;

பலயுகமாய்ச் செத்ததுபோல் உறங்கும் நீர்ப்படுக்கை  நாரணனுமல்ல,
சிவமும் அல்ல சவமும் அல்ல

000

வேலா,
உன்கேள்விக்கு இதோ பதில்:
இந்த ஆள்  மோடிமஸ்தான் தான்

“மௌனசாமி”,
நாடுமுழுக்க நடக்கும் அத்தனைக்
கலவரங்களுக்கும் — குறிப்பாக
மணிப்பூரின் வக்கிர வன்முறைகளுக்கும்
சம்மதமே இதன் மௌனம்!

ஆம்,
இந்த  மௌனம்
கண் எதிரே மணிப்பூரில்
சதைரத்தம் பொசுங்கி
கொலைத் துப்பாக்கியால் சுடப்பட்ட
சின்னஞ்சிறுசுகளின் பெண்களின்
வேகும் சடலங்கள் சேர்த்துச் சொரிந்த
ஆகுதி ஆகுதி ஆகுதி *
எழும் சூட்டின் ஏகாந்த மௌனமே
அந்த ஆளின் சம்மத மௌனம்
ஆகுதி ஆகுதி ஆகுதி
வைதீகப் பார்ப்பன  வேள்வி யாகக் குண்டமே
ஆகுதி ஆகுதி ஆகுதி
கிறித்தவரையும் பூர்வகுடிப்
பழக்கவழக்கங்களையும்  பிரித்து ஒதுக்கும்
இந்துமதவெறி  ஆகுதி ஆகுதி ஆகுதி
பாசிச மோடிமஸ்தானின்
ஹோமம்  கோஷம் வேஷமே
ஆகுதி ஆகுதி ஆகுதித் தீ !

இத்தனைக்குள்ளும் புதைந்துகிடப்பதே
மோடிமஸ்தானின் மௌனம்!

சாதாரணமாகவே —
வேடிக்கை பார்க்கும் ஆட்களுக்கெல்லாம்
கடமைகள் இல்லை, பொறுப்பும் இல்லை ;
இன்னொருவிதத்தில் சொல்வோமானால் பொறுப்பற்ற கும்பல்.
பார்ப்பதற்குச் சும்மாஇருப்பதுபோல்
தெரிந்தாலும்
வடகிழக்கு  இனங்களைப்  பிரித்து
அரசியல் செய்து குழப்பிச்
சுக்குநூறாக உடைத்தெறிய அது
வன்முறையைத்  தூண்டுவதும்
நன்றாகத் தெரிகிறது.

ஆயிரக் கணக்கில் வீடுகள் எரிப்பு,
அறுபதினாயிரம் பேர் ஊரையே காலிசெய்துவிட்டு ஓட ,
இருபத்தைந்தாயிரம் பேருக்குமேல்
பல அகதிகள் முகாம்களில்,
செய்தி வெளியே போகாமல்  வாயடைப்பு,
வேறென்ன வேண்டுமாம்
தூண்டுதலுக்குச்  சாட்சி  சொல்ல ?

000

வேலா,
இந்த   ‘ மௌனசாமி ‘யை —
அது ஒத்தை ஆள் அல்ல
அந்த ஒட்டுமொத்தக் கும்பலை —
வேறென்ன சொல்ல ?
இந்த ‘ மௌனசாமிக் கும்பலை ‘
வேறென்ன செய்யலாம், சொல் !

ஒன்றாய்த் திரண்டே நாம் சொல்வோம் !
சொல்வோம் ;
சொன்ன வேலை செய்வோம் !!

குறிப்பு : “ஆகுதி” என்றால் வேள்வி என்று கொள்க.

ஆக்கம் : புதிய திருமூலன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here