டந்த வாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் அடுக்கடுக்கான பொய்களை கூறி வந்தார்.  குறிப்பாக ஏப்ரல் 21 அன்று ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில், அவரது உரையுடன் இது தொடங்கியது. முஸ்லிம்களை “ஊடுருவல்காரர்கள்” மற்றும் “அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள்” என்று முத்திரை குத்தி தனியார் செல்வத்தை கைப்பற்றி அவர்களுக்கு மறுவிநியோகம் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். இந்தியாவில் தேர்தல்கள் நடைபெறும் முன்மாதிரி நடத்தை விதிகள் பின்வருமாறு கூறுகிறது: “எந்தவொரு கட்சியும் அல்லது வேட்பாளரும் ஏற்கனவே உள்ள வேறுபாடுகளை மோசமாக்கும் அல்லது பரஸ்பர வெறுப்பை உருவாக்கும் அல்லது வெவ்வேறு சாதிகள் மற்றும் சமூகங்களுக்கிடையே, மத அல்லது மொழி இடையே பதற்றத்தை ஏற்படுத்தும் எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது”

காங்கிரஸ் மற்றும் பிற அரசியல் கட்சிகள் மோடியின் “வெறுக்கத்தக்க பேச்சு” என்று தேர்தல் ஆணையத்திடம் குற்றம் சாட்டி புகார் அளித்தனர். அதன்பிறகு, மோடி முஸ்லிம்களைப் பற்றி வெளிப்படையாகக் குறிப்பிடுவதை நிறுத்தினார். ஆனால், அது ஒரு நாள் மட்டுமே! ஏப்ரல் 23 வாக்கில், சமூக ரீதியாக பின்தங்கிய இந்து குழுக்களின் செலவில் காங்கிரஸிடமிருந்து முஸ்லீம் சமூகம் சலுகைகளைப் பெறுகிறது என்று அவர் மீண்டும் தவறான மற்றும் பிளவுபடுத்தும் கூற்றுக்களைக் கூறினார்.

ஐந்து நாட்களில் (ஏப்ரல் 21 முதல் 25 வரை) மோடி ஆற்றிய ஒவ்வொரு உரையையும் கேட்ட ஸ்க்ரோல் இணைய பத்திரிக்கை, அதில் உள்ள உண்மையை சரிபார்த்தது.  அரசியல் உரைகளில் பயன்படுத்தப்படும் வழக்கமான மிகைப்படுத்தல்களைப் புறக்கணித்து – மோடியின் கணிசமான மற்றும் பிளவுபடுத்தும் பொய்களில் கவனம் செலுத்தினார்கள்! அதில் அவர்கள் கண்டுபிடித்த தரவுகளை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளோம்.

ஏப்ரல் 21, பன்ஸ்வாரா

மோடியின் பொய்:

திருமணமான இந்துப் பெண்களின் தாலியையும், சொத்துக்களையும் அளவீடு மற்றும் பறிமுதல் செய்து, மறுவிநியோகம் செய்வோம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறியதாகக் கூறி மோடி தனது உரையைத் தொடங்கினார். “எனது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் தங்க நகைகள் வெறும் காட்சிப் பொருள் மட்டுமல்ல, அது அவர்களின் சுயமரியாதையுடன் இணைக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார். “அவர்களின் மங்களசூத்ரா(தாலி) அவர்களின் வாழ்க்கையுடன் தொடர்புடையது. உங்கள் தேர்தல் அறிக்கையில், அதை பறிப்பேன் என்று மிரட்டுகிறீர்களா?

உண்மை:

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பெண்களின் மங்கள சூத்திரங்கள்(தாலி) பற்றியும் தனியார் சொத்துரிமை பறிமுதல் செய்யப்படும் என்பது பற்றியும் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மோடியின் பொய்:

நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று முந்தைய காங்கிரஸ் அரசு கூறியதாக மோடி கூறினார்.

உண்மை:

இது மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 2006-ல் ஆற்றிய உரையின் திரிபு! மத சிறுபான்மையினர் மட்டுமல்லாமல், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து பின்தங்கிய பிரிவுகளையும் மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து அவர் பேசி இருந்தார்.

மோடியின் பொய்:

அடுத்து காங்கிரஸ் மக்களின் செல்வத்தை “ஊடுருவல்காரர்கள்” மற்றும் “அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு” விநியோகிக்கும் என்று மோடி கூறினார்.  (“ஊடுருவல்காரர்கள்” மற்றும் “அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் என்று முஸ்லிம்களை குறிப்பிடுகிறார்)

உண்மை:

முஸ்லிம்கள் “ஊடுருவல்காரர்கள்” என்று கூறுவதற்கு எந்த  அடிப்படை உண்மையும் இல்லை.  மேலும்,” சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குறித்த தரவுகள் தன்னிடம் இல்லை என்று மோடி அரசாங்கம் பலமுறை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்திய முஸ்லிம்களின் கருவுறுதல் விகிதம், இந்துக்களைக் காட்டிலும் அதிகமாக இருந்தாலும், மற்ற எல்லா சமூகங்களையும் விட வேகமாக குறைந்து வருகிறது.  கருவுறுதல் என்பது பொருளாதாரத்தின் செயல்பாடே தவிர அது மதம் அல்ல! குறிப்பாக, மிகவும் வளர்ந்த தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள், ஏழை பீகாரில் உள்ள இந்துக்களை விட குறைவான குழந்தைகளையே ஈன்றுள்ளனர்.

ஏப்ரல் 22, அலிகார்

மோடியின் பொய்:

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தனியார் சொத்துக்களை அளவீடு செய்து கையகப்படுத்துவோம் என்று அச்சுறுத்தியது என்ற பொய்யான கூற்றை மோடி மீண்டும் கூறினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைக் குறிப்பிடும் ”ஷெஹ்சாதா (இளவரசர்) கட்சி ஆட்சிக்கு வந்தால், உங்களிடம் எவ்வளவு வருமானம், சொத்து, செல்வம், வீடுகள் உள்ளன என்பதைக் கண்டறிய ஒரு கணக்கெடுப்பு நடத்தும்… அதிலிருந்து அரசாங்கம் சொத்துக்களை பறிமுதல் செய்து மறுவிநியோகம் செய்யும்! இவ்வாறு தேர்தல் அறிக்கை கூறுகிறது” என்றார்.

உண்மை:

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இதைச் சொல்லவில்லை. ஏப்ரல் 6 -ம் தேதி தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பேசிய ராகுல் காந்தி, “நாங்கள் நாட்டை எக்ஸ்ரே எடுப்போம். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள், ஆதிவாசிகள், பொதுப் பிரிவைச் சேர்ந்த ஏழை மக்கள் மற்றும் சிறுபான்மையினர் நாட்டில் தங்கள் பங்கு என்ன என்பதை அறிந்து கொள்வார்கள் என்றார். இதில், காங்கிரஸ் கட்சி தனியார் சொத்துக்களை பறிமுதல் செய்து மறுபங்கீடு செய்யும் என்று அவர் கூறவில்லை.

மோடியின் பொய்:

“உங்கள் கிராமத்தில் உங்களுக்கு ஒரு மூதாதையர் வீடு இருந்தால், உங்கள் குழந்தைகளுக்காக நகரத்தில் ஒரு சிறிய பிளாட்டை நீங்கள் வாங்கியிருந்தால், அதில் ஒன்றை காங்கிரஸ் பறிக்கும் அளவுக்கு செல்லும். இது மாவோயிஸ்டுகளின் சிந்தனை இல்லையா? நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் பறிக்க விரும்புகிறது. அது பெண்களின் சொத்துக்களையும் கொள்ளையடிக்க விரும்புகிறது.

உண்மை:

காங்கிரஸ் அறிக்கையில் மறுவிநியோகம் பற்றிய ஒரே குறிப்பு இதுதான்: “நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் அரசு நிலம் மற்றும் உபரி நிலத்தை ஏழைகளுக்கு விநியோகிப்பதை கண்காணிக்க காங்கிரஸ் ஒரு அதிகாரத்தை நிறுவும்.” இது ஒரு புரட்சிகர வாக்குறுதி அல்ல: இந்தியாவில் 21 மாநிலங்களில் நில உச்சவரம்பு சட்டங்கள் உள்ளன. அவை நாட்டில் நில உரிமையில் உள்ள வரலாற்று சமத்துவமின்மையை நிவர்த்தி செய்வதற்காக 1960 களில் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஏப்ரல் 23, டோங்க்-சவாய் மாதோபூர்

மோடியின் பொய்:

ராகுல் காந்தியின் உரையிலிருந்து எக்ஸ்ரே குறிப்பைக் கொண்டு வந்த மோடி, “இதன் பொருள் என்னவென்றால், உங்கள் வீட்டில் கம்பு தானியங்களை சேமிக்கும் ஒரு பெட்டி இருந்தால், அதுவும் எக்ஸ்ரேக்கு உட்படுத்தப்படும். உங்கள் தேவைக்கு அதிகமாக இருக்கும் உங்கள் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு மறுவிநியோகம் செய்யப்படும். உங்களுக்கு இரண்டு வீடுகள் இருந்தால், அவர்கள் அதை எக்ஸ்ரேயில் கண்டுபிடித்தால், ஒன்றை அரசாங்கம் எடுத்துக் கொள்ளும்! இது உங்களுக்கு ஏற்புடையதா?”

உண்மை:

காங்கிரஸ் அறிக்கையிலோ அல்லது அதன் தலைவர்களின் உரைகளிலோ அரசாங்கம் மக்களின் வீடுகளை பறிமுதல் செய்து மறுவிநியோகம் செய்யும் என்று எந்த குறிப்பும் இல்லை.

மோடியின் பொய்:

அதே உரையில், “நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு, இதைத்தான் மன்மோகன் ஜி கூறினார்” என்ற முந்தைய தவறான கூற்றுக்கு மோடி திரும்பினார்.

உண்மை:

மன்மோகன் சிங்கின் உரை பிரதமர் அலுவலகத்தால் பராமரிக்கப்படும் காப்பகத்தில் கிடைக்கிறது. அந்த நேரத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ஒரு விளக்கம், “வளங்கள் மீதான முதல் உரிமைகோரல் என்ற பிரதமரின் குறிப்பு எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி, பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுபான்மையினரின் மேம்பாட்டிற்கான திட்டங்கள் உட்பட மேலே பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ‘முன்னுரிமை’ பகுதிகளையும் குறிக்கிறது” என்று எடுத்துக்காட்டியது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராஜீந்தர் சச்சார் தலைமையிலான குழு, இந்தியாவில் முஸ்லிம்கள் கல்வி, வருமானம் மற்றும் வேலைவாய்ப்பில் மற்ற சமூகங்களை விட எவ்வாறு பின்தங்கியுள்ளனர் என்பதை ஆவணப்படுத்தும் அறிக்கையை சமர்ப்பித்த ஒரு மாதத்திற்குப் பிறகு மன்மோகன் சிங் தனது உரையை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 24, சாகர்

மோடியின் பொய்:

கர்நாடகாவில், காங்கிரஸ் சட்டவிரோத வழிகளில் மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீட்டை நிறுவியுள்ளது என்று மோடி கூறினார். “ஒரே அறிவிப்பின் மூலம், அனைத்து முஸ்லிம் சமூகங்களையும் ஓபிசி  ஒதுக்கீட்டில் சேர்த்தது. ஓபிசி இடஒதுக்கீட்டின் பெரும்பகுதியை காங்கிரஸ் பறித்து மதத்தின் அடிப்படையில் வழங்கியது.

உண்மை:

1962 ஆம் ஆண்டில், கர்நாடகாவில் காங்கிரஸ் அரசாங்கம் முஸ்லிம் சமூகங்களின் சில சாதிகளை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பட்டியலில் சேர்த்தது. மதத்தின் அடிப்படையில் அல்ல! மாறாக ஆர் நாகன கவுடா கமிஷனின் பரிந்துரையின் பேரில் சேர்க்கப்பட்டது. அனைத்து பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்குமான வகைப்பாட்டின் அளவுகோல்கள் மற்றும் இடஒதுக்கீட்டின் அளவு ஆகியவற்றை பரிந்துரைக்க இந்த குழு அமைக்கப்பட்டது. அதற்கு முன்பே மைசூர் மகாராஜா 1921 இல் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டுக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். பின்னர், 1994 ஆம் ஆண்டில், எச்.டி.தேவகவுடா தலைமையிலான ஜனதா தளம் (மதச்சார்பற்ற) அரசாங்கம் கர்நாடகாவில் உள்ள அனைத்து முஸ்லிம் சமூகங்களையும் ஓபிசி பட்டியலின் கீழ் கொண்டு வந்தது. அவர்களுக்கு 4% துணை ஒதுக்கீட்டை உருவாக்கியது. மதச்சார்பற்ற ஜனதா தளம் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் கூட்டணி கட்சியாக உள்ளது. சமூக மற்றும் பொருளாதார பின்தங்கிய நிலையின் அடிப்படையில், முஸ்லிம் சமூகங்கள் ஓபிசி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கர்நாடகாவும் ஒன்றாகும். மோடி 12 ஆண்டுகள் முதல்வராக இருந்த குஜராத், ஓபிசி -களில் முஸ்லிம் சமூகங்களையும் பட்டியலிடுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ANI செய்தி நிறுவனத்துக்கு மோடி அளித்த பேட்டியில், மாநிலத்தில் 70 முஸ்லிம் சாதிகள் இடஒதுக்கீட்டின் பலன்களைப் பெறுவதாக பெருமையடித்துக் கொண்டார்.

ஏப்ரல் 24, சுர்குஜா

மோடியின் பொய்:

ஆந்திராவில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த காங்கிரஸ் முதலில் முயற்சித்ததாகவும், அதே இடஒதுக்கீட்டை நாடு முழுவதும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் மோடி கூறினார். மேலும், மத அடிப்படையில் 15% இட ஒதுக்கீட்டை முன்மொழிந்தனர்.  இதில், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை குறைத்து, மத அடிப்படையில் சிலருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் முன்மொழிந்தனர். காங்கிரஸ் 2009 -இல் தனது அறிக்கையில் இந்த நோக்கத்தை வெளிப்படுத்தியது. 2014 தேர்தல் அறிக்கையிலும் இந்த விவகாரத்தை விட்டுவிட மாட்டோம் என்று தெளிவாகக் கூறிவிட்டார்கள்.

உண்மை:

ஆந்திராவில் காங்கிரஸ் அரசு 2005 இல் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றியது. உயர் நீதிமன்றம் இந்த சட்டத்தை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று தள்ளுபடி செய்தது. “குடிமக்களின் ஒரு வகுப்பை சமூக ரீதியாக பின்தங்கியவர்களாக தீர்மானிப்பதற்கான ஒரே அடிப்படையாக மதம் இருக்க முடியாது” என்று வாதிட்டது. அதன் 2009 தேர்தல் அறிக்கையில், காங்கிரஸ் ஒரு தெளிவான நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டது. சிறுபான்மையினருக்கு “அவர்களின் சமூகம் மற்றும் பொருளாதார பின்தங்கிய நிலையின் அடிப்படையில்” இடஒதுக்கீடு வழங்குவதில் உறுதியாக இருப்பதாக கூறியது.

அதன் 2014 தேர்தல் அறிக்கையில்: “பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தற்போதுள்ள இடஒதுக்கீட்டை எந்த வகையிலும் பாதிக்காமல், அனைத்து சமூகங்களிலும் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு முன்னோக்கிய வழியைக் கண்டறிய இந்திய தேசிய காங்கிரஸ் உறுதிபூண்டுள்ளது” கட்சியின் 2019 தேர்தல் அறிக்கையில் இந்த விஷயத்தில் மௌனம் சாதித்தது.  2024 தேர்தல் அறிக்கையில் “சிறுபான்மையினர் கல்வி, சுகாதாரம், பொது வேலைவாய்ப்பு, பொதுப்பணி, ஒப்பந்தங்கள், திறன் மேம்பாடு, விளையாட்டு மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் ஆகியவற்றில் பாகுபாடு இல்லாமல் தங்கள் நியாயமான பங்கைப் பெறுவதை உறுதி செய்வோம்” என்றனர்.

மோடியின் பொய்:

அதே உரையில், கர்நாடகாவில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை காங்கிரஸ் அமல்படுத்தியுள்ளது என்ற கூற்றை மோடி மீண்டும் கூறினார். “மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தபோது, அரசியலமைப்பிற்கும் பாபாசாகேப் அம்பேத்கரின் கொள்கைகளுக்கும் எதிரான காங்கிரஸின் முடிவை நாங்கள் ரத்து செய்து, தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளுக்கு அவர்களின் உரிமைகளை மீண்டும் வழங்கினோம்” என்று அவர் கூறினார்.

உண்மை:

மார்ச் 2023 இல், கர்நாடகாவில் பாஜக அரசு, முஸ்லிம் ஓபிசி களுக்கான 4% துணை ஒதுக்கீட்டை ரத்து செய்தது.  ஆனால், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளுக்கு இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்கவில்லை. மாறாக, அது மாநிலத்தின் ஆதிக்க சமூகங்களான லிங்காயத்துகள் மற்றும் ஒக்கலிகர்களிடம் மாற்றியது. இந்த உத்தரவை ஏப்ரல் 2023 இல் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. மேலும், இது “தவறானது” என்று கூறியது.

மோடியின் பொய்:

பின்னர் மோடி மற்றொரு பொய்யை அறிமுகப்படுத்தினார். “பரம்பரை வரி விதிக்கப்போவதாக காங்கிரஸ் கூறுகிறது. இது பெற்றோரிடமிருந்து பெறப்பட்ட சொத்துக்கு கூட வரி விதிக்கும்! நீங்கள் குவிக்கும் செல்வம் உங்கள் குழந்தைகளுக்கு கிடைக்காது! காங்கிரஸ் அதை உங்களிடமிருந்து பறிக்கும்!” என்றார்.

உண்மை:

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பரம்பரை வரி பற்றிய எந்த குறிப்பும் இல்லை. அது சொல்வதெல்லாம்: “கொள்கைகளில் பொருத்தமான மாற்றங்கள் மூலம் செல்வம் மற்றும் வருமானத்தில் அதிகரித்து வரும் சமத்துவமின்மையை நாங்கள் நிவர்த்தி செய்வோம்” அமெரிக்காவில் வசிக்கும் முன்னாள் காங்கிரஸ் ஆலோசகர் சாம் பிட்ரோடா, பரம்பரை வரி ஒரு “சுவாரஸ்யமான யோசனை” என்று கூறினார். ஆனால், காங்கிரஸ் கட்சி முறையாக,இந்த யோசனையை தனது கருத்துக்களிலிருந்து விலக்கிக் கொண்டுள்ளது.

ஏப்ரல் 24, பேதுல்

மோடியின் பொய்:

எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி குழுக்களிடமிருந்து இடஒதுக்கீட்டைப் பறித்து “காசம் காஸ்” அல்லது சிறப்பு வாக்கு வங்கிக்கு வழங்க காங்கிரஸ் விரும்புகிறது என்று மோடி கூறினார். முஸ்லிம்களுக்கு மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை காங்கிரஸ் விரிவுபடுத்துகிறது என்ற கூற்றுக்களை மீண்டும் வலியுறுத்திய அவர், கட்சி “அதன் வாக்கு வங்கியை வலுப்படுத்த” தனியார் செல்வத்தை கைப்பற்றி மறுபகிர்வு செய்ய சதி செய்வதாக கூறினார்.

உண்மை:

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மத அடிப்படையிலான இடஒதுக்கீடு குறித்தோ அல்லது செல்வத்தை மறுபகிர்வு செய்வது குறித்தோ பேசவில்லை.

மோடியின் பொய்:

பரம்பரை வரி விஷயத்திற்கு திரும்பிய மோடி, இதுபோன்ற வரி விதிக்கும் யோசனை சாம் பிட்ரோடாவின் “தனிப்பட்ட கருத்து” என்று காங்கிரஸ் கூறுவது பொய் என்று தெரிவித்தார். “உண்மை என்னவென்றால், 2011 ஆம் ஆண்டில், காங்கிரஸ் பரம்பரை வரியை ஆதரித்தது,” என்றும் அவர் கூறினார்.

உண்மை:

2011 ஆம் ஆண்டில், அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், பரம்பரை வரி பற்றிய யோசனையை முன்வைத்தார். ஆனால் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் மட்டும் பரிசீலிக்கவில்லை. 2017 ஆம் ஆண்டில், மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தில் நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லியும் இந்த யோசனையை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 25, ஆக்ரா

மோடியின் பொய்:

மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்காக ஓபிசி யினருக்கான 27% ஒதுக்கீட்டில் ஒரு பகுதியை திருட காங்கிரஸ் திட்டமிட்டதாக மோடி கூறினார்.

உண்மை:

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மத அடிப்படையிலான இடஒதுக்கீடு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மோடியின் பொய்:

மக்களின் பரம்பரை சொத்துக்களில் 55% ஐ அபகரிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக முதலில் கூறிய மோடி, பின்னர் “உங்கள் அடுத்த தலைமுறைக்கு நீங்கள் விட்டுச் செல்லும் சொத்துக்களில் பாதிக்கும் மேல் வரி விதிக்கப்படும்” என்று வாதிட்டார்.

உண்மை:

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பரம்பரை வரி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அமெரிக்கா பரம்பரை சொத்துக்கு 55% வரி விதிக்கிறது என்ற சாம் பிட்ரோடாவின் உண்மைக்கு புறம்பான கருத்துக்களில் இருந்து கட்சி தன்னை விலக்கிக் கொண்டுள்ளது.

ஏப்ரல் 25, மொரேனா

மோடியின் பொய்:

கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு குறித்த தவறான கூற்றுக்கள், மன்மோகன் சிங்கின் பேச்சு மற்றும் காங்கிரஸ் மங்கள சூத்திரங்களை(தாலியை) பறித்தது ஆகியவற்றை மீண்டும் கூறி, மோடி வாரிசு வரி விஷயத்திற்கு திரும்பினார். இந்த முறை, அவர் ஒரு புதுமையான கூற்றை முன்வைத்தார். “இந்திரா காந்தி இறந்தபோது, அவரது மகன் ராஜீவ் காந்தி தனது சொத்துக்களுக்கு வாரிசாக வரவிருந்தபோது, அரசாங்கத்திற்கு பணம் கிடைக்காமல் இருப்பதை உறுதி செய்ய, சொத்தை காப்பாற்ற, பிரதமர் ராஜீவ் காந்தி பரம்பரை வரியை ரத்து செய்தார்”

உண்மை:

பரம்பரை வரி1985 ஆம் ஆண்டில் அப்போதைய நிதியமைச்சர் வி.பி.சிங் -கால் ரத்து செய்யப்பட்டது. இறந்த நபரின் சொத்துக்களுக்கு விதிக்கப்பட்ட எஸ்டேட் வரி என்பது பரம்பரை வரி அல்ல!  அந்த சொத்தை பராமரிக்கின்ற ஒருவரால் செலுத்தப்படுகிறது. சிங் தனது பட்ஜெட் உரையில், “1985 மார்ச் 16 அல்லது அதற்குப் பிறகு இறந்த தோட்ட உரிமையாளர்களின் வாரிசுகளுக்கு எஸ்டேட் வரி விதிக்கப்படாது” என்று கூறினார். இந்திரா காந்தி அக்டோபர் 31, 1984 அன்று படுகொலை செய்யப்பட்டார்.

ஏப்ரல் 25, ஆன்லா

மோடியின் பொய்:

காங்கிரஸ் கணக்கெடுப்பு நடத்தி மக்களின் சொத்துக்களை அபகரித்ததாக வழக்கமான பொய்யான கூற்றுக்களைப் படித்த பின்னர், மோடி ஒரு புதிய திருப்பத்தைச் சேர்த்தார். அவை, “பொருளாதார கணக்கெடுப்பு மட்டுமல்ல, அனைத்து நிறுவனங்களையும், அனைத்து அலுவலகங்களையும் ஆய்வு செய்வதை காங்கிரஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது. எந்தவொரு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது தலித் குடும்பத்தில் இரண்டு உறுப்பினர்கள் வேலை வைத்திருப்பதைக் கண்டறிந்தால், காங்கிரஸ் ஒருவரின் வேலையை பறித்து, அவர்கள் நினைப்பவர்களுக்கு வழங்கும்” என்றார்

உண்மை:

காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையிலோ அல்லது அதன் தலைவர்களின் உரைகளிலோ பிற்படுத்தப்பட்ட வர்க்கம் அல்லது தலித் குடும்பங்களின் வேலைகளைப் பறிக்கப் போவதாக அச்சுறுத்தவில்லை. கட்சியின் தேர்தல் அறிக்கை இவ்வாறு கூறுகிறது. “சாதிகHள் மற்றும் துணை சாதிகள் மற்றும் அவற்றின் சமூக-பொருளாதார நிலைமைகளைக் கணக்கிட காங்கிரஸ் நாடு தழுவிய சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பை நடத்தும். தரவுகளின் அடிப்படையில், உறுதியான நடவடிக்கைக்கான நிகழ்ச்சி நிரலை நாங்கள் வலுப்படுத்துவோம்” என்றது.

மொழியாக்கம்: சிறகினி

Thanks: Tabassum Barnagarwala & Abhik Deb (Scroll.in)

Link:      Fact-checking five days of Narendra Modi’s speeches: A catalogue of lies (scroll.in)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here