சில நாட்களுக்கு முன் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் “இராமர் கோயில் எங்களுக்கு பிரச்சினை இல்லை, பள்ளிவாசலை இடித்துக்கட்டியதை ஏற்க முடியாது” என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி கூறியது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்‌. அதற்கு பதிலளிக்க வக்கில்லாத அண்ணாமலை உதயநிதியிடம் பேட்டி எடுத்த நியூஸ் 18 பத்திரிக்கையாளர் கார்த்திகை செல்வன் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே ‘பாத்து பக்குவமா பல்லு படமா’ என்ற கேவலமான வக்கிர சொல்லை பயன்படுத்தி தரம் தாழ்ந்து தாக்கியுள்ளார்.

அண்ணாமலையின் கேவலமான செயலை தமிழ்நாட்டில் பலரும் கண்டித்து பேசினார்கள். அடுத்த நாள் பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் “ நான் பேசியதில் தவறேதுமில்லை கொங்கு பகுதியில் நாங்கள் சகஜமாக பேசும் வார்த்தை தான்” என்று கூச்சமே இல்லாமல் பொய்யான அருவருப்பான விளக்கத்தை கொடுத்தார். இனி பத்திரிக்கையாளர்களும் தமது வட்டார வழக்கிலேயே அண்ணாமலையை கேள்வி கேட்பதே பொருத்தமாக இருக்கும் என்பது எமது கருத்து.

ஏனெனில், ஆர்எஸ்எஸ் பயிற்சி பள்ளியில் பயின்ற அண்ணாமலை பத்திரிகையாளர்களை தாக்குவது இது முதல் முறை அல்ல. இந்தியா முழுவதும் உள்ள ஊடகங்களை விலைக்கு வாங்கிய மோடியின் Godi மீடியாவால் தமிழகத்தில் உள்ள சில பத்திரிகையாளர்களை விலைக்கு வாங்க முடியவில்லை. அதனால் அவர்களை கீழ்த்தரமாக தாக்கும் வேலைகளை பாலியல் கட்சி செய்து வருகிறது. இவர்கள் இப்படித்தான் என்று கடந்து போய்விட முடியாது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அண்ணாமலையை கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளரை பார்த்து “அண்ணா ஆயிரம் ரூபாய் வாங்கிக்கோங்க, 2000 ரூபாய் வாங்கிக்கங்க” என்று தரம் தாழ்ந்து பேசினார். கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் பத்திரிக்கையாளர்களை தாக்குவது அண்ணாமலையின் பாணி.

குறிப்பாக பத்திரிக்கையாளர்களை டார்கெட் செய்து எந்த பத்திரிக்கை என்று கேள்வி எழுப்புவது, பத்திரிக்கையாளர் பெயரை கேட்பது ‘சன்நியூஸ் பத்திரிக்கை அப்படி தான் கேட்பார்கள்’ என பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்புவதை உளவியல் ரீதியாக தாக்குவதையும் அண்ணாமலை செய்து வருகிறார்.

அதேபோல் கமலாலயத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் youtube சேனல் இருந்து வருபவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க முடியாது என்றும் இனிமேல் அவர்களை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அனுமதிக்க முடியாது என்றும் கூறினார். யூடியூப் சேனல்கள் பாஜகவையும், அண்ணாமலையையும் கிழித்து தொங்க விடுகிறார்கள் என்பதும் அவர்களுக்கு ‘கேள்வியை எழுதிக் கொடுக்க முடியாது’ என்ற பயத்தினால் தான் அண்ணாமலை இந்த முடிவுக்கு வர காரணம்.

கார்ப்பரேட் செய்தி நிறுவனங்கள், அவர்களிட வேலை செய்யும் பத்திரிகையாளர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதில்லை. மீறி அண்ணாமலை உள்ளிட்ட பாஜக காரர்களை கேள்வி எழுப்பினால் வேலையில் இருந்து துரத்தியதும் நிகழ்ந்துள்ளது.

மற்ற மாநிலங்களில் பத்திரிக்கையாளர்களையும், தொலைக்காட்சிகளையும் கையில் வைத்திருக்கும் பாஜகவுக்கு தமிழகத்தில் செய்ய முடியவில்லை என்ற கோபம் உண்டு. பாஜகவின் தமிழ்நாட்டு தலைவர்களிலேயே அண்ணாமலை போன்ற மோசமான தலைவரை பாஜக கண்டிருக்காது. தனக்கு போட்டியாக யாரும் வந்து விடக்கூடாது என்பதற்காக சொந்த கட்சி நபர்களையே வார் ரூம் அமைத்து கண்காணித்தவர் தான் அண்ணாமலை. அதில் சிக்கியவர் தான் பிரபல ’கே டி ராகவன்’ உள்ளிட்டவர்கள்.

இதற்கு முன்னர் பத்திரிகையாளர்களை ஏக வசனத்துடன் அணுகியவர் யார் என்றால் அது பாஜகவின் எச். ராஜா தான். கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியவில்லை என்றால் பத்திரிக்கையாளர்களை கடுமையான வார்த்தைகளால் தாக்குவார். உங்களுக்கு ‘ஆன்ட்டி மோடி மைன்ட் செட்’, ‘ஆன்ட்டி இந்தியன்’, ‘தேசவிரோதிகள்’ என்று அவர் உதித்த முத்துக்கள் ஏராளம். அவரையும் தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை.

ஏன் பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு அண்ணாமலையால் பதில் அளிக்க முடியவில்லை. மத்தியில் ஆளும் பாஜக மக்கள் நலனில் அக்கறை கொண்டு ஏதாவது செய்திருந்தால் அவர்களால் பதில் அளிக்க முடியும். அப்படி எதுவும் செய்யாமல் இருக்கும்போது எதிர்க்கட்சியான திமுகவை குற்றம் சுமத்துவதற்கென்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துவதால் எதிர்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறுகிறார்.

அண்ணாமலையை எப்படியாவது தமிழக மக்களின் தலைவராக மாற்றி விட வேண்டும் என்று தினமலர் உள்ளிட்ட பத்திரிக்கைகள் வேலை செய்கின்றன. தினமும் அண்ணாமலை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த வைப்பது, ’என் மண் என் மக்கள்’ யாத்திரை குறித்து பேச வைப்பது முன்னரே தயாரிக்கப்பட்ட கேள்விகளை அவர்களுக்கு சேவகம் செய்யும் குறிப்பிட்ட பத்திரிக்கையாளர்களை கேட்க வைப்பது, என்று அடிவருடி வேலைகளை ஆதரவு பத்திரிக்கைகள் செய்கின்றன.

அண்ணாமலையின் வக்கிர ஆபாச பேச்சை கண்டித்து செய்தி ஊடகங்கள் பெரிதாக எதிர்ப்புகளை தெரிவிக்கவில்லை. நேரடியாக சம்பந்தப்பட்ட அம்பானியின் நியூஸ் 18 தொலைக்காட்சியும் கண்டிக்கவில்லை.

தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், மாற்றத்திற்கான ஊடக சங்கம் உள்ளிட்ட ஒரு சில சங்கங்களும், எதிர் கட்சிகளும், பத்திரிக்கை ஆசிரியர்கள் ஒரு சிலருமே கண்டித்துள்ளார்கள்.

இதையும் படியுங்கள்:

ஆனால் தொடர்ந்து அண்ணாமலையின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்துக் கொண்டு தான் உள்ளது. தாக்கப்படும் பத்திரிக்கையாளர்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதால் எதிர்ப்பு தெரிவித்தால் வேலை போய் விடும் என்று அச்சப்படுகின்றார்கள். மற்றொரு புறம் இன்று செய்தி சேனல்கள் கார்ப்பரேட் நிறுவனங்களாக உள்ளது. பெரு முதலாளிகள் கையில் உள்ளது. அதனாலேயே அண்ணாமலை போன்றோர்களால் திமிராக பேச முடிகிறது.

இன்று(24.01.2024) அனைத்து பத்திரிக்கையாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அமைப்புக்கள் சார்பாக பத்திரிக்கையாளர்களை கீழ்த்தரமாக பேசி வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

இது வரவேற்கதக்க முயற்சி என்றாலும் இது போதாது. பாசிசம் பத்திரிக்கை சுதந்திரத்தை பறித்து நேர்மையான ஊடகவியலாளர்களையும், பத்திரிக்கையாளர்களையும் செயல்பட விடாமல் தடுக்கிறது. பாசிசத்திற்கு எதிரான சுதந்திர ஊடக ஐக்கிய முன்னணியை உருவாக்குவதன் மூலமே இதனை தடுக்க முடியும்.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here