மீபத்தில் பிரான்ஸைச் சேர்ந்த மீடியாபார்ட் எனும் செய்தி நிறுவனம் மோடியின் பெயரைப் பயன்படுத்தி அனில் அம்பானி தனது வரி பாக்கியை தள்ளுபடி செய்யுமாறு பிரான்ஸ் அமைச்சர்களுக்கு எழுதிய கடிதத்தையும், அதைத் தொடர்ந்து 144 மில்லியன் யூரோ (சுமார் 1400 கோடி) வரியைக் குறைத்து அம்பானிக்கு சலுகை வழங்கப்பட்டதையும் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது.

எதற்காக இந்த வரிவிதிப்பு?

ரிலையன்ஸ் ஃபிளாக் அட்லாண்டிக் பிரான்ஸ் எனும் நிறுவனத்தை அனில் அம்பானி பிரான்சில் நடத்தி வந்தார். அதன் உள் செயல்பாடுகள் குறித்த ஆவணங்களை பிரான்சின் வரி விதிப்பு அதிகாரிகள் விரிவாக ஆராய்ந்து 2008 முதல் 2012 வரையான காலகட்டத்திற்கு 151 மில்லியன் யூரோ வரி மற்றும் அபராதம் செலுத்த வேண்டியுள்ளது என தெரிவித்தனர். இதற்கு பதிலாக 6.2 மில்லியன் யூரோ செலுத்த 2014 ல் அம்பானி நிறுவனம் முன் வந்தது. ஆனால் வரி அதிகாரிகள் இது மிகவும் குறைவு என மறுத்தனர். அதன் பிறகுதான் அம்பானி “மோடி” எனும் தனது துருப்புச் சீட்டை பயன்படுத்தினார் என அந்த அறிக்கை கூறுகிறது.

ஏப்ரல்-14, 2015 அன்று, அன்றைய பிரான்ஸின் நிதி அமைச்சர் மைக்கேல் சபீனுக்கும், பொருளாதாரத் துறையின் அமைச்சராக இருந்த இம்மானுவேல் மேக்ரோனுக்கும் (இன்றைய அதிபர்) வரித் தள்ளுபடி செய்யுமாறு அனில் அம்பானி கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில்தான் இந்த வரிக் குறைப்பு நடந்தது. ஆனால் வரித் துறையின் கட்டுப்பாடு சபீனிடம் இருந்த போதும் மேக்ரோனின் ஈடுபாடு இந்த விஷயத்தில் அதீதமாக இருந்துள்ளது.

மோடியின் தயவால் நிகழ்ந்த வரிக்குறைப்பு!

ஏப்ரல் 2015 – ல் மோடி, அனில் அம்பானியை பிரான்சுக்கு கையோடு கூட்டிச் சென்றார். மோடி அரசாங்கம் கேட்டுக் கொண்டதால் ரஃபேல் விமானம் தயாரிக்கும் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் இந்தியப் பங்காளியாக அனில் அம்பானி நியமிக்கப்பட்டார். பயணத்தை முடித்து வந்தவுடன் அம்பானி பிரான்ஸ் அமைச்சர்களுக்கு எழுதிய கடிதத்தில் மோடியின் பெயரைக் குறிப்பிட்டு வரிக் குறைப்பு கோருகிறார்.

அந்தக் கடிதத்தில், “ஏப்ரல் 10, 11 தேதிகளில் பிரான்ஸ் பயணத்தின் போது இந்தியாவின் தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தனிப்பட்ட முறையில் நமது அரசாங்கங்களுக்கு இடையே இரு தரப்பு பரிமாற்றங்கள் நிகழ்ந்தது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு விதிக்கப்பட்ட வரித் தொகையானது நியாயமற்ற வகையில் அதிகமாக உள்ளது. எனவே இவ்விசயத்தை நியாயமான முறையில் பரிசீலித்து வரியை ரத்து செய்யுமாறும், ரிலையன்ஸ் போன்ற இந்திய முதலீட்டாளர்களுக்கு இதுபோன்ற வரி விதிப்புகளை மேற்கொள்ளாமல் இருக்க உறுதியளிக்க வேண்டும்” எனவும் எழுதினார்.

ஒரே வாரத்தில் வரித் தள்ளுபடி!

அனிலின் கடிதத்துக்கு விரைவில் தீர்வு கிடைத்தது. ஏப்ரல் 20, 2015 அன்று வரி ஆய்வு சேவைகளின் மத்திய இயக்குனரகம் ரிலையன்ஸ் வழக்குக் கோப்பின் நகலை அதன் பிராந்திய அலுவலகத்திடம் கேட்டுப் பெற்றது. உடனடியாக 151 மில்லியன் யூரோவில் இருந்து 6.6 மில்லியன் யூரோவாக வரி குறைக்கப்பட்டது. இந்தியாவில் முதலாளிகளுக்கு வரிச்சலுகைகளை வாரி வழங்கி அதன்மூலம் ஆதாயம் பெறும் மோடி அரசு, ஃபிரான்சிலும் தனது செல்வாக்கை செலுத்தி அம்பானிக்கு மாபெரும் வரிக்குறைப்பை சாத்தியமாக்கி உள்ளது.

ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் நடந்த ஊழல் முறைகேடுகள்!

இந்திய ஒன்றிய அரசு 2016ஆம் ஆண்டு பிரான்சிடமிருந்து 1600 கோடி மதிப்பில் 36 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்தது. ஆனால் இந்தத் தொகையானது கடந்த காங்கிரஸ் அரசால் முடிவு செய்யப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகம் என அப்போதே விமர்சனம் எழுந்தது. மேலும் இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் டசால்ட் ஏவியேஷன் நிறுவனம், இந்திய இடைத் தரகனான சுஷேன் குப்தாவுக்கு பல மில்லியன் யூரோக்களை லஞ்சமாக கொடுத்ததாக பிரான்சில் வழக்கு பதியப்பட்டு அது இன்னும் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் தான் நீதிபதிகள், திருடனிடமே ஆதாரம் கேட்பது போல புலனாய்வு விசாரணைக்கு இந்தியாவின் ஒத்துழைப்பை இப்போது நாடி உள்ளனர். இந்த ரஃபேல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக இந்தியாவிலும் கடும் விமர்சனம் எழுந்தது. வழக்கும் பதியப்பட்டது. ஆனால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ரஞ்சன் கோகோய் தள்ளுபடி செய்துவிட்டார்.

அனில் அம்பானி எப்படி ரஃபேலுக்குள் வந்தார்?

தொலைத் தொடர்பு துறையில் மட்டுமே அனுபவம் பெற்றிருந்த அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பிரான்சில் செயல் பட்டபோது சீனாவின் மூன்று வங்கிகளில் இருந்து பல ஆயிரம் கோடி கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் திவாலான கதை நமக்குத் தெரியும். இந்த நிலையில்தான் அவரை கைதூக்கி விட நினைத்த மோடி டசால்டின் இந்தியப் பங்காளியாக நியமிக்க ஆவண செய்தார்.

பிரான்ஸின் முன்னாள் அதிபரான ஹொலந்தே 2018 ஆம் ஆண்டு ஒரு பேட்டியில், மோடி அரசாங்கம் கொடுத்த அழுத்தத்தின் விளைவாகவே ரஃபேல் போர் விமானத்தின் கூட்டுப் பங்காளியாக அனில் அம்பானி ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்ற உண்மையை போட்டுடைத்தார். ஆக இப்படித்தான் போர் விமானத் தயாரிப்பில் அனுபவம் வாய்ந்த HAL எனும் பொதுத்துறை நிறுவனத்தை கழட்டிவிட்டு,5 முன் அனுபவம் ஏதுமற்ற அம்பானியின் நிறுவனம் உள்ளே நுழைந்தது.

இதில் வேடிக்கை என்னவென்றால், HAL நிறுவனம்தான் உதிரி பாகங்களைத் தயாரித்து அம்பானியின் நிறுவனத்திற்கு அடிமாட்டு விலைக்கு வழங்கும். அதை டசால்ட் நிறுவனத்திற்கு அம்பானி நிறுவனம் விற்று கொழுத்த லாபம் பார்க்கும்.

ஊழலின் ஊற்றுக் கண்ணே மோடிதான்!

ஊழலை ஒழிக்க வந்ததாக கூறப்பட்ட உத்தமர் மோடி இப்படித்தான் பல்வேறு வகைகளில் ஊழல் புரிந்து ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருந்து கொண்டு, கொஞ்சமும் கூச்சமே இல்லாமல் இன்னமும் ஊழல் ஒழிப்பு என்று ஊரை ஏய்த்துக் கொண்டு இருக்கிறார். அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்றவற்றை தனது அடியாள் படையாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை உடைத்து பாஜகவில் சேர்த்துக் கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:

அதில் சமீபத்திய உதாரணம்தான் அஜித் பவார். ஒரு வாரம் முன்பு தான் எழுபதாயிரம் கோடி ஊழல் குற்றவாளி என அஜித் பவாரை சாடி, தன்னிடம் இருந்து அவர் தப்ப முடியாது என சவடால் அடித்தார். சரத் பவாரின் கட்சியை உடைத்து பாஜக- வில் இணைந்தவுடன், அந்த ஊழல் குற்றவாளி புனிதராகி விட்டார். அவருக்கு துணை முதல்வர் பதவியும், நிதி அமைச்சர் பொறுப்பும் வழங்கி அழகு பார்க்கிறார் மோடி.

இத்தகைய கேடுகெட்ட ஆட்சி நடத்தும் பாசிச பாஜக மோடி கும்பலை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிய கருத்தொற்றுமையும், ஒருங்கிணைப்பும் நடந்து வருகிறது. கார்ப்பரேட் – காவி பாசிசத்தை முறியடித்து ஜனநாயகத்தை நிறுவ, மக்கள் அனைவரும் திரண்டு வருவது காலத்தின் கட்டாயமாகும்.

செய்தி ஆதாரம்:
https://m.thewire.in/article/government/rafale-corruption-anil-ambani-france-magistrate-tax

தமிழில் ஆக்கம்: குரு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here