
பாரதிய ஜனதா கட்சி தனது 2019 தேர்தல் அறிக்கையில் உறுதியளித்த விவசாயத் துறை தொடர்பான 33 வாக்குறுதிகளை சமூக அறிவியல் ஆய்வாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்த குழு ஆய்வு செய்துள்ளது., விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான முதலீடுகள் மற்றும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா போன்ற நலத்திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லாதது மற்றும் நிதி ஒதுக்கீடு இல்லாததால் அறிவிக்கப்பட்டாலும் நடைமுறைக்கு வராத திட்டங்கள் போன்றவற்றை கண்டறிந்தது. வாக்குறுதிகள்- நிறைவேறிய அளவு ஆகியவற்றை ஒப்பிட்டு செயல்திறன் பகுப்பாய்வு மூலம் விழிப்புணர்வுமிக்க வாக்காளர்களை(Informed Voters project -IVP) உருவாக்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த அறிக்கை உள்ளது.
செப்டம்பர் 2019 இல், டிராக்டர்கள் மற்றும் பிற விவசாய இயந்திரங்களை வாடகைக்கு எடுப்பதற்கும் வாங்குவதற்கும் டிஜிட்டல் தீர்வாக மொபைல் செயலியை மத்திய விவசாய துறை அமைச்சகம் வெளியிட்டது. FARMS or Farm Machinery Solutions என்று பெயரிடப்பட்ட இந்த செயலி விவசாயிகள் தங்கள் விவசாய இயந்திரங்களை வாடகைக்கு விடுவதற்கு அல்லது பெறுவதற்கு மற்றும் பழைய இயந்திரங்களை விற்கவோ -வாங்கவோ வகை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது.அப்போதைய மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இந்த செயலியை ‘புரட்சிகர சேவை’ என்று அழைத்தார்.
2019ல் வெளியிடப்பட்ட பா.ஜ.க வின் தேர்தல் அறிக்கையில் ”ஒருங்கிணைந்த விவசாயம் மற்றும் தொழில்நுட்பம்” என்ற தலைப்பில் இந்த செயலி குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்பதும் அவர்கள் அளித்த 33 வாக்குறுதிகளில் ஒன்றாகும்.
கடந்த 17 ஏப்ரல் 2024 வரையில் 5 கோடி விவசாயிகள் பயனர்களாக இந்த செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதில் 98% அதிகமான பதிவுகள் ஏற்கனவே இருந்த விவசாயிகளின் தரவுதளத்தில் இருந்து மாற்றப்பட்டவை. உண்மையில் தாங்களாக முன்வந்து பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 11,587 மட்டுமே. நான்கு வருடங்களில் 885 கருவிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. 19 பேரே கருவிகளை. வாங்கியுள்ளனர்.
2019ம் ஆண்டு பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதிகளில் விவசாயம் சம்பந்தப்பட்ட 33 வாக்குறுதிகளில் 14 வாக்குறுதிகளில் (43%) இந்த FARMS செயலி குறிப்பிடப்பட்டுள்ளது. பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை ஆய்வு செய்த சிவில் சமூக முன்முயற்சி குழுவின் வாக்காளர் விழிப்புணர்வு திட்டத்தின் (IVP) ஆறு மாத கடுமையான ஆய்வுக்குப் பிறகு தொகுக்கப்பட்ட அறிக்கையில், ‘மிகக் குறைவான’ செயல்திறன் என்ற தரத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதிகளை அரசாங்க வலைத்தளங்களில் இருக்கும் தகவல்கள் மற்றும் தரவுகளோடு ஒப்பிட்டு பார்ப்பது, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு கிடைக்கும் அமைச்சகத்தின் பதில்கள், பாராளுமன்ற குழு அறிக்கைகள், செய்தித்துறை அறிக்கைகள், செய்தித்தாள்கள், செய்தி தளங்கள் மற்றும் தனியார் அறிக்கைகளின் தகவல்களை ஒப்பிட்டு பார்க்கும் இந்த ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வை கடந்த 2023 அக்டோபரில் இருந்து ஏப்ரல் 2024 வரை தன்னார்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட ஒரு குழு மேற்கொண்டது.
இந்த வாக்காளர் விழிப்புணர்வு திட்டம் (IVP) பா.ஜ.க வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 46 வாக்குறுதிகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 33 வாக்குறுதிகள் விவசாயம் சம்பந்தப்பட்டதாகும் மற்ற 13 ம் காடுகள், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுசூழல் அமைச்சகம் தொடர்புடையதாகும்.
89% விவசாயம் தொடர்புடைய வாக்குறுதிகளும் 77% சுற்றுசூழல் தொடர்புடைய வாக்குறுதிகளும் ஆராயப்பட்டதில் ’மிதமான’ அல்லது அதற்கும் கீழே என்று வகைப்படுத்தக்கூடிய அளவில் தான் திட்டங்களின் செயல்திறன் இருப்பதாக வாக்காளர் விழிப்புணர்வு திட்டத்தின் (IVP) இணை நிறுவனர் விவேக் கிலானி கூறுகிறார்.
”ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிப்பதை கடமையாக நினைத்து தவறாமல் வாக்களிக்கும் குடிமக்கள் கூட தன்னுடைய வாக்கு பயனளிக்குமா என்ற சந்தேகத்தை தொடர்ந்து எதிர்கொள்கின்றனர்.தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களும் அந்த சந்தேகத்திற்கு வலுசேர்க்கிறார்கள்” என்று கிலானி கூறுகிறார்.
அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளில் இருந்து அவர்களின் செயல்திறனைப் பகுத்து பார்க்க ஒரு வழி இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இந்த வாக்காளர் விழிப்புணர்வு திட்டம் (IVP) அத்தகைய ஒரு முயற்சியே என்று கிலானி கூறினார்.
மும்பையில் அறக்கட்டளையாகப் பதிவுசெய்யப்பட்ட, வாக்காளர் விழிப்புணர்வு திட்டம் (the Informed Voter Project (IVP)) என்பது வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தனமை வாய்ந்த சிவில் சமூக அமைப்பாகும், இது 2009 தேர்தலிலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் செயல்திறன் பகுப்பாய்வுகளை வெளியிட்டு, அவர்கள் தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதிகளையும் நடைமுறையில் அவர்களது செயல்பாடுகளையும் கண்காணித்து வருகிறது.
2019 தேர்தல் அறிக்கையில் விவசாயத் துறையின் உற்பத்தித் திறனை மேம்படுத்த ரூ.25 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று கொடுத்த வாக்குறுதி, நடைமுறையில் 84% பற்றாக்குறையாக உள்ளதாக வாக்காளர் விழிப்புணர்வு (IVP) திட்ட அறிக்கை கண்டறிந்துள்ளது.
25 லட்சம் கோடி முதலீடு செய்வதாக வாக்குறுதி அளித்த அரசு அதனை நிறைவேற்றாத அதே சமயம் செலவினங்களை அதிகரித்துள்ளது. 2019-20 முதல் 2022-23 வரையிலான அமைச்சகத்தின் ஆண்டுச் செலவு மற்றும் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டின் மூலம், அரசாங்கத்தின் முந்தைய ஆட்சிக் காலத்தில் ஆண்டு செலவினத்தை விட ரூ. 3.98 லட்சம் கோடி அதிகரித்துள்ளதாக அறிக்கை கண்டறிந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, விவசாயத் துறையில் மதிப்பிடப்பட்ட வாக்குறுதிகளில் 43% நடைமுறையில் ‘மிகக் குறைவான’ செயல்திறனைக் கொண்டுள்ளதாக அறிக்கை கண்டறிந்துள்ளது.
2019 மக்களவைத் தேர்தலுக்கு முன் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை செயல்படுத்தவில்லை என்பதை 2020 முதலே ஆரம்பித்து தற்போது வரை முடிவில்லாமல் நீடித்து வரும் விவசாயிகள் போராட்டம் உறுதிபடுத்துகிறது. 2022ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்பது 2019ம் ஆண்டு பா.ஜ.க கொடுத்த தேர்தல் வாக்குறுதி என்பது குறிப்பிடத்தக்கது.
“இந்த முறை பாஜகவின் தேர்தல் அறிக்கை கடுமையான விவசாய நெருக்கடி குறித்து வேண்டுமென்றே மௌனம் காக்கிறது” என்று அகில இந்திய கிசான் சபாவின் தலைவரும், 2020-21ல் டெல்லியின் புறநகர்ப் பகுதியில். வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகளின் போராட்டத்தை ஒருங்கிணைத்த விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் தலைவர்களில் ஒருவருமான அசோக் தவாலே கூறினார்.
மற்ற கட்சிகளின் அறிக்கைகள் குறைந்த பட்ச ஆதரவு விலையின் அவசியத்தை உறுதிப்படுத்தும் அதே வேளையில், NDA அரசாங்கம் கார்ப்பரேட்களுக்கு ஆதரவான கொள்கையை பின்பற்றுவதாகவும் “மோடி உத்தரவாதம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே விகாஸை (முன்னேற்றம்) வழங்கும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் பரவலான தற்கொலைகளை அதிகப்படுத்தும்.” என்றும் தவாலே கூறினார்.
தேசிய குற்றப்பதிவு அலுவலகத்தால் (NCRB) தொகுக்கப்பட்ட தரவுகளின்படி, “விவசாய தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களின்” தற்கொலைகள் 2020 இல் 10,677 ஆக இருந்து 2021 இல் 10,881 ஆகவும், 2022 இல் 11,292 ஆகவும் உயர்ந்துள்ளது.
தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் நலன் தொடர்பாக அளிக்கப்பட்ட பல வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு ஆர்வம் காட்டவில்லை.
இவற்றில் குறுகிய கால புதிய விவசாயக் கடன்கள் (கிசான் கிரெடிட் கார்டு அல்லது கேசிசி கடன்கள்) ரூ. 1 லட்சம் வரை 0% வட்டி விகிதத்தில் ஒன்று முதல் ஐந்தாண்டுகளுக்கு வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் அடங்கும்.
2019-ம் ஆண்டு யூனியன் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே இதுபோன்ற ஒரு திட்டத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி எதுவும் நடக்கவில்லை, மாறாக சில போலி செய்தித்தாள்களில் 0% வட்டி விகிதத்தில் கடன் தரும் கிசான் கிரெடிட் கார்டு தொடங்கப்பட உள்ளதாக பொய் செய்தி பரப்பப்பட்டது. பின்னர் உண்மை கண்டறியும் ஆர்வலர்கள் இத்தகைய செய்திகளின் போலித்தன்மையை தோலுரித்துக்காட்டினர். கிசான் கிரெடிட் கார்டு திட்டம் 1990களின் பிற்பகுதியில் தொடங்கப்பட்டது. வட்டி மானியங்கள், மிகக் குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் KCC மூலம் வங்கிகளால் வழங்கப்பட்ட நிலுவையில் உள்ள கடன்களின் அதிகரிப்பு ஆகியவை இருந்தன, ஆனால் 0% வட்டி விகிதத்தில் கடன்கள் இல்லை.
“எண்ணெய் விதைகள் மற்றும் பிற வேளாண்மைப் பொருட்களில் தன்னிறைவுக்கான திட்டம்” என்ற வாக்குறுதியின் பேரில், அரசாங்கம் 11,040 கோடி ரூபாய் நிதிச் செலவில் சமையல் எண்ணெய்கள் மற்றும் பாமாயில் தொடர்பான புதிய பணியைத் தொடங்கும் அதே வேளையில், இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி உண்மையில் உயர்ந்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக இந்த இறக்குமதி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
முன்கணிக்கக்கூடிய ஏற்றுமதி – இறக்குமதி கொள்கைகளை வகுக்கவல்ல உட்கட்டமைக்கப்பட்ட பொறிமுறை மூலம் ஏற்றுமதியை ஊக்கப்படுத்தவும் இறக்குமதியை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தான் அளித்த வாக்குறுதிகளில் மற்றொன்றையும் பா.ஜ.க அரசு கிடப்பில் போட்டுவிட்டது. . 2019 ஆம் ஆண்டில் 12.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த இந்தியாவின் விவசாய இறக்குமதிகள் 2022ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 40 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்து 2023 ஆம் ஆண்டில் 37 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது என்று அமெரிக்க வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது. இந்தியா விவசாயம் மற்றும் அது சார்ந்த பொருட்களின் பெரிய இறக்குமதியாளர்களில் உலக அளவில் எட்டாவது இடத்தில் உள்ளது.
விவசாய விளைபொருட்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் ‘ சேமிப்பு கிடங்குகள் ‘ மற்றும் அது சார்ந்த தொடர் கட்டமைப்புகள் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என்று அறிக்கை கூறியுள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கான பாஜக தேர்தல் அறிக்கையில், விவசாயிகள் தங்கள் கிராமங்களுக்கு அருகில் விவசாயப் பொருட்களை சேமித்து, தகுந்த விலை கிடைக்கும்போது விற்கலாம் எனவும், விவசாயப் பொருட்களுக்கான ‘கிராம சேமிப்புத் திட்டம்’ மூலம், விவசாயப் பொருட்களுக்கான சேமிப்பு ரசீதுகளின் அடிப்படையில் எளிய முறையில் கடன் பெறலாம் என்றும் வாக்குறுதி அளித்திருந்தது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பிப்ரவரி 2020 யூனியன் பட்ஜெட் உரையில், இந்த கிராம சேமிப்புத் திட்டம் சுயஉதவி குழுக்களால் நடத்தப்படும், கிராமங்களில் உள்ள பெண்கள் “தானிய லட்சுமி” (தானியத்தின் தெய்வம்) என்ற நிலையை மீண்டும் பெற உதவும் என்றும் பேசியிருந்தார்.
ஆகஸ்ட் 2021 இல், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் இந்த திட்டம் “பரிசீலனையில் உள்ளது” என்று பாராளுமன்றத்தில் தெரிவித்தது. இத்திட்டம் கடைசிவரை செயல்படுத்தப்படவில்லை.
(தொடரும்…)
-கவிதா
மொழியாக்கம்: தாமோதரன்