2024 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி ஆர்எஸ்எஸ் பாஜக மற்றும் சங்க பரிவார கும்பலின் பிரதமர் மோடி துவங்கி உள்ளூரில் கூலிக்கு மாரடிக்கும் சங்கி பிரச்சாரகர்கள் வரை இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களான தலித்துகள், பழங்குடிகள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றன.
அதிலும் குறிப்பாக ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு பிரச்சாரம் செய்கின்ற சமூக வலைத்தளங்கள் துவங்கி செய்தி ஊடகங்கள் வரை அனைத்திலும் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான மதவெறுப்பு, இன வெறுப்பு திட்டமிட்டே பரப்பப்படுகிறது.
நாட்டின் பிரதமரான பாசிச மோடி தான் பல்வேறு மதங்கள், பல்வேறு இனங்கள் கொண்ட நாட்டில் பிரதமர் என்ற முறையில் அனைவருக்கும் பொதுவான நபர் என்பதை மறந்து விட்டு அப்பட்டமாக பார்ப்பன மதவெறி கும்பலின் பிரச்சாரகனாக மாறி தனது காவி பாசிச அரசியலை முன்னிறுத்தி பேசி வருகிறார்.
“ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது; பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டை புடுங்கி இஸ்லாமியர்களிடம் கொடுத்து விடுவார்கள்; பெண்களின் தாலி உட்பட அனைத்தையும் பறிமுதல் செய்து இஸ்லாமியர்களுக்கு பிரித்துக் கொடுப்பார்கள்; நாட்டின் செல்வ வளங்களை கணக்கெடுப்பு செய்து இஸ்லாமியர்களுக்கு பிரித்துக் கொடுப்பார்கள்; நீங்கள் சேமித்து வைக்கும் சொத்து உங்கள் வாரிசுகளுக்கு சென்று சேராது நீங்கள் இறந்தவுடன் அதன் மீது வரி போட்டு பிடுங்கி விடுவார்கள்; காங்கிரசின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் அறிக்கை போல உள்ளது; ராகுல் காந்தியின் பேச்சுகள் அனைத்தும் நகர்ப்புற நக்சல் போல உள்ளது” என்றெல்லாம் அடுக்கடுக்காக பேசிக் கொண்டே உள்ளார்.
சாதி ரீதியாகவோ, மத ரீதியாகவோ, இன ரீதியாகவோ தேர்தலில் பரப்புரைகள் மேற்கொள்ளக்கூடாது போன்ற தேர்தல் கமிஷனின் தகிடுதத்தங்களை எல்லாம் தூக்கியெறிந்துவிட்டு அப்பட்டமான பார்ப்பன பாசிஸ்டாக பேசி வெறியூட்டி வருகிறார்.
மோடியின் வெறுப்பு பேச்சுகளை கண்டு நடுநிலை வகிக்கின்ற குட்டி முதலாளித்துவ அறிவுஜீவிகளும் வெறுப்பு பேச்சினால் உடனடியாக பாதிக்கப்படப் போகின்ற மதச் சிறுபான்மையினரும் அச்சத்திலும் பீதியிலும் உறைந்துள்ளனர்.
இவை வெறும் வெறுப்பு பேச்சு மற்றும் இஸ்லாமிய வெறுப்பு அரசியல் மட்டும் தானா என்றால் இல்லை. இல்லவே இல்லை. இது தான் பார்ப்பன பாசிசம். அது மட்டுமின்றி பார்ப்பன பயங்கரவாதமாகும்.
இத்தகைய பேச்சுக்களை நிலவுகின்ற சட்ட திட்டங்களின் மூலமாகவோ அல்லது தேர்தல் ஆணையம் முன்வைக்கின்ற வழிமுறைகள் மூலமாகவோ ஒருபோதும் கட்டுப்படுத்தவே முடியாது. ஏனென்றால் அதன் விதிமுறைகள் அனைத்தும் சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத்திற்கு எதிராக மாற்றப்பட்டுள்ளது மட்டுமின்றி அதில் வேலை செய்யும் அனைவரும் ஆர்எஸ்எஸ் சங்பரிவார கும்பலினால் நிரப்பப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல்களில் மீண்டும் ஒருமுறை பாசிச மோடி பிரதமராக வந்து விடக்கூடாது என்பதற்காக பாசிச பாஜகவை எதிர்த்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது வேறு, மாற்றாக முன்னிறுத்தப்பட்டுள்ள இந்தியா கூட்டணியை ஆதரிப்பது வேறு! ஆனால் இவை அனைத்தும் ஆர்எஸ்எஸ் பாஜக உருவாக்க துடிக்கின்ற கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதத்திற்கு முன்னால் ஒன்றுமில்லாதது தான்.
இவ்வாறு முன் வைப்பதாலேயே நாடாளுமன்றத் தேர்தலை ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்தவே கூடாது என்ற எதிர்நிலை முடிவிற்கு சென்று விடக்கூடாது. மக்களிடமிருந்து தனிமைப்பட்டு போய் உள்ள ‘இடது சந்தர்ப்பவாதிகள்’ இவ்வாறு தான் பிதற்றிக் கொண்டுள்ளனர் என்பதை பற்றி பல்வேறு கட்டுரைகளில் வலியுறுத்தியுள்ளோம்.
கார்ப்பரேட் காவி பாசிசம் ஒருங்கிணைந்த முறையில் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதலை கட்டவிழ்த்து விடுகின்ற சூழலில், நாட்டு மக்கள் அனைவரையும் ஓரணியின் கீழே திரட்ட வேண்டிய பொறுப்பும், கடமையும் பாட்டாளி வர்க்கத்திற்கு உள்ளது. இதனை சாதிப்பதற்கு கீழ்கண்ட வகையில் ஒருங்கிணைந்த முறையில் செயல்பட வேண்டும்.
முதலாவதாக, நாட்டின் பிரதானமான அபாயம் கார்ப்பரேட் காவி பாசிசம் தான் என்பதை அனைத்து மட்டங்களுக்கும், அனைத்து வர்க்க பிரிவினர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டியுள்ளது. ஏனென்றால் ஏற்றத்தாழ்வான உற்பத்தி முறையை கொண்டுள்ள, பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட துணைக் கண்டமான இந்தியாவில் நாடு முழுவதும் ஒரே கருத்தை உருவாக்குவது மிக மிக அவசியமானதாகும் என்பது மட்டுமின்றி அது பெரும் பணியுமாகும்.
இரண்டாவதாக, இத்தகைய பாசிச அபாயத்தை புரிந்து கொள்ளாமல் இன்னமும் நாட்டில் ஜனநாயக அல்லது போலி ஜனநாயக ஆட்சி தான் நடந்து கொண்டுள்ளது, பாசிசம் ஆட்சி அதிகாரத்தில் வரவில்லை என்ற புரிதல் மட்டுமின்றி, நாட்டின் நிலவுவது எதேச்சதிகாரம், சர்வாதிகாரம், போலி ஜனநாயகம் என்றெல்லாம் புரிந்து கொண்டு செயல்படுகின்ற பல வண்ண இடதுசாரிகள் மத்தியில் கார்ப்பரேட் காவி பாசிசத்தின் உண்மையான அபாயத்தை புரிய வைத்து உணர வைப்பது.
மூன்றாவதாக, பாசிச பாஜகவிற்கு எதிராக போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக இயக்கங்களுக்குள் ஒற்றுமையை உருவாக்குவது, இந்த ஒற்றுமை ஆர்எஸ்எஸ் பாஜக உருவாக்க நினைக்கின்ற ஆரிய பார்ப்பன சாம்ராஜ்யம் என்ற இந்து ராஷ்டிரத்திற்கு எதிரான சித்தாந்த ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்திய பிறகு, ஜனநாயக கூட்டரசு ஒன்றை நிறுவுவதை நோக்கி புரிதல் இருக்க வேண்டும். அதற்கு வெவ்வேறு கருத்துக்கள் இருந்தாலும் குறைந்தபட்ச செயல் திட்டத்தின் கீழ் பாசிசத்தை வீழ்த்துவதை பிரதான வேலையாக கொண்டு செயல்பட வேண்டும்.
நான்காவதாக, பாசிச மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் பாஜகவின் பிரச்சாரகர்கள் அன்றாடம் பேசுகின்ற அல்லது எழுதுகின்ற அல்லது ஊடகங்களில் வெளியிடுகின்ற செய்திகளையும் காணொளிகளையும் வெறும் வெறுப்பு அரசியல் என்று மதிப்பீடு செய்வதை பற்றி விளக்கி புரிய வைப்பது. இது அப்பட்டமான கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதம் என்பதை விளங்க செய்வது. அதற்கு எதிராக , ஜனநாயக சக்திகளை கொண்டு இணை பிரச்சாரம் மேற்கொள்வது கட்டாயமாகிறது
ஐந்தாவதாக, கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிராக அமைப்பு ரீதியான பலம் மட்டுமே அதனை வீழ்த்துவதற்கு முடியும் என்பதை பாசிச எதிர்ப்பு சக்திகளுக்கு உணர்த்துவது, பாசிச பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக உறுதியுடன் போராடுகின்ற அமைப்பை நாடு தழுவிய அளவில் உருவாக்குவது உடனடி கடமையாக வேண்டும். பாசிச எதிர்ப்பு கூட்டங்களில் கூடுகின்ற கூட்டம், வீடியோக்களை ஆதரிப்பவர்கள், லைக் போடுபவர்கள் எண்ணிக்கையை வைத்து இதனை முடிவு செய்ய முடியாது. களத்தில் நேருக்கு நேர் நிற்பதற்கு தயாராக உள்ளவர்களை நாடு முழுவதும் ஒரு அமைப்பின் கீழ் உருவாக்க வேண்டும்.
இதையும் படியுங்கள்: உலகை விழுங்கவும், நசுக்கவும் பரவும் பாசிசம்! தீர்வு கம்யூனிசம் மட்டுமே!
ஆறாவதாக, பாசிசம் என்று பொதுவாக முன் வைப்பது அல்லது மதவெறி அபாயம், கார்ப்பரேட் எல்லாம் இல்லை காவி பாசிசம் தான் என்று குருட்டுப் பூனை விட்டத்தில் தவ்வியதை போல பேசுவதோ, எழுதுவதோ அடிப்படையிலேயே தவறானது, இதற்கும் மேலே சென்று ஆர் எஸ் எஸ் பாஜக காவி அரசியலை தான் அமல்படுத்துகிறது எனவே அதைத்தான் எதிர்க்க வேண்டும் போன்ற அரைகுறையான புரிதல் அபாயகரமானது என்பதை விளக்கி உணர்த்தப்பட வேண்டும். ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் பொருளாதாரப் பின்புலம் இல்லாமல் பாசிசம் உருவாக முடியாது என்பதை புரிய வைக்க வேண்டும். இந்த அடிப்படையான விடயத்தை புரிந்து கொள்வதற்கு கம்யூனிச சித்தாந்தத்தை முன்னிறுத்தி பிரச்சாரங்களையும், பரப்புரைகளையும் மேற்கொள்ள வேண்டும். பாசிசத்திற்கு எதிர் கம்யூனிசமே என புரிய வைக்க வேண்டும்.
ஏழாவதாக, ஆர்எஸ்எஸ் பாஜகவின் நடவடிக்கைகள் அனைத்தும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை, ஒரு பயங்கரவாதத்தை நிறுவுவதற்கு முயற்சிக்கின்றது என்ற அடிப்படையிலேயே விளக்கப்பட வேண்டும். ‘சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்வதா?’, ‘கார்ப்பரேட் காவி பாசிசம்’ என்று பொதுவாக பேசுவதா?, ‘எப்போதும் கார்ப்பரேட் காவி பாசிசம் என்று பேசிக் கொண்டிருப்பதா?’, ‘பாசிஸ்டுகளின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உடனுக்குடன் வினையாற்ற வேண்டாமா?’ என்றெல்லாம் பேசுவதுதான் ‘முற்போக்கானது’ என்று கருதிக் கொண்டு, பாமரத்தனமாக இருப்பதை இவ்வாறு பேசுபவர்களுக்கு உணர வைக்க வேண்டும்.
எட்டாவதாக, பாசிசத்தை வீழ்த்துவதற்கு விவசாயிகள், தொழிலாளர்கள் ஒற்றுமையை கட்டியமைப்பதும், அவர்கள் மத்தியிலிருந்து பொருத்தமான பாசிச எதிர்ப்பு படையை கட்டியமைப்பது அவசியமானதும், முக்கியமானதுமாகும் இது இல்லாமல் பாசிசத்தை ஒருக்காலும் வீழ்த்தவே முடியாது என்பதையும், அதே சமயத்தில் பாசிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் போதே, தாக்குதலுக்கு தயாராகின்ற ‘இடது சந்தர்ப்பவாத’ கண்ணோட்டத்தையும், பாசிசத்தின் தாக்குதல்களை பாராளுமன்றத்தின் மூலமாகவே தடுத்து நிறுத்தி விட முடியும் என்ற ‘வலது சந்தர்ப்பவாத’ கண்ணோட்டத்தையும் அம்பலப்படுத்த வேண்டும்.
நாட்டின் பிரதான அபாயமாக மாறி 143 கோடி மக்களுக்கும் எதிராக உருவாகியுள்ள, கையடக்கமேயான கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாத கும்பலை வீழ்த்துவதற்கு நாட்டு மக்கள் அனைவரையும் ஒரணியில் திரட்டுவோம்.
ஆர்எஸ்எஸ் பாஜக பாசிச மோடி உள்ளிட்டவர்களின் பேச்சை வெறுப்பு அரசியல் என்று சுருக்கி பார்க்காமல் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதத்தின் கவர்ச்சிவாத பேச்சாக (demogogy) நாட்டின் ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கின்ற, பாசிச பாஜக தேர்தலில் தோற்றாலும், வென்றாலும் சிறுபான்மையினருக்கு எதிராக பயங்கர கலவரத்தை உருவாக்குவதற்கு வித்திடுகின்ற பேச்சாக புரிந்துக் கொள்வோம். எதிர்த்து நின்று களமாடுவோம்.
- மணிமாறன்