ஆர்.என்.ரவி: ஆளுநரின் பெயரில் ஆர்.எஸ்.எஸ். அடியாள்!
புதிய ஜனநாயகம்

ட்டுக்குத் தாடியும், மாநிலத்துக்கு ஆளுநரும் எதற்கு? என்ற அரசியல் சொலவடையை உருவாக்கியது அண்ணா காலத்து அரசியல். ஆளுநர் பதவி என்பது தேவையற்றது என்பதை குறிக்கும் முகமாகவும், மக்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்கள் அதிகாரமே மக்களாட்சி என்ற வகையிலும் அது சொல்லப்பட்டது.
எனினும், மத்திய அரசுக்கு கட்டுப்படாமல் இருக்கும் மாநில அரசுகளை மிரட்டியும், முடக்கியும் பணிய வைக்கவும், அப்படிப்பட்ட ஆட்சிகளைக் கலைக்கவும் ஆளுநர்களை பயன்படுத்துவது என்பதை ஒரு உத்தியாகவே மத்தியில் ஆளும் கட்சிகள் செய்து வருகிறது. இதில் காங்கிரசும் விலக்கல்ல. குறிப்பாக, புதுச்சேரியில் மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரசு ஆட்சியில் இருக்கும் போது மத்தியில் ஆண்ட காங்கிரசு உரிய நிதி ஒதுக்கீடுகளைத் தராததால், பலதுறைகளின் செயல்பாடுகளே அற்றுப் போய் மக்கள் அல்லோலகல்லோலப்பட்டனர்..

மத்தியில் ஆர்.எஸ்.எஸ். மோடி கும்பல் ஆட்சியதிகாரத்திற்கு வந்த பின்னர், தங்களது இந்துத்துவ (பார்ப்பன பாசிச)_ மற்றும் கார்ப்பரேட் நலன்களுக்கு ஏற்ப மாநில உரிமைகள் ஒவ்வொன்றிலும் தலையிட்டு அதிகார குறிக்கீடுகளை செய்து வருகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் நேரடியாகவே களத்தில் இறங்கி வேலை செய்யும் சங்கி கும்பல், தனக்கு ஒத்து வராத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எம்,எல்.ஏ.-க்களை விலை பேசி தன் பக்கம் இழுத்தும், அதுவும் சரிவராத பட்சத்தில் ஆட்சிக் கவிழ்ப்புக்களை நடத்தியும் தனக்கான அடிமை அரசை நிறுவிக் கொள்கிறது. ஆனால், இவை அனைத்தும் ஒத்துவராத நிலையில்தான், ஆளுநர் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். அடிமைகளை அனுப்பி, ஆட்சியை முடக்குகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்ட பெயரளவிலான, போலி ஜனநாயக அமைப்பு முறையைக் கூட இன்று ஆளுநர்களை வைத்து சல்லி சல்லியாக நொறுக்கி வருகிறது பாஜக பாசிச கும்பல்.

அதிமுக ஜெயா மரணப் படுக்கையில் இருந்த அந்திம காலத்தில், சசிகலா – ஓபிஎஸ் – இபிஎஸ் அதிகார சண்டையில் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவை வைத்து சசிகலாவை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு, ஜெயாவின் தேர்ந்த அடிமையான ஓபிஎஸ்-ஐ முதல்வராக்கியது. அதைத் தொடர்ந்த சட்டமன்றத் தேர்தலில் இபிஎஸ்-ஐ முதல்வராக்கி தனது அடிமை ஆட்சியை நிறுவி பத்தாண்டு காலம் தமிழகத்தை சீரழித்தது மோடி கும்பல்.

ஆர்.எஸ்.தலைவர் மோகன் பகவத்-டன் தமிழக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

அதன் பிறகு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வுகள் நடத்தி பாஜக-வாகவே மாறி செயல்பட்டார். அவரது பதவி காலம் முடிவடைவதற்கு ஓராண்டு முன்பே 2021 செப்டம்பர் 18 அன்று நாகாலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்திற்கு புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். கலைஞரை விட ஸ்டாலின் அபாயகரமானவர் என சங்கி ஹெச். ராஜாவால் சொல்லப்பட்ட நிலையில், ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டது கவனத்துக்குறியது.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை எதிர்கொள்வதற்கும், முடக்குவதற்கும் சரியான ஆள் என்று சொல்லி அவரது வருகையை கொண்டாடித் தீர்த்தது சங்கி கும்பல். தமிழகத்தில் தனது சித்தாந்த எதிரியாகக் கருதும் திமுக-வை முடக்க, தேர்ந்த ஆர்.எஸ்.எஸ். சங்கி தேவை என்ற அடிப்படையிலேயே ரவியை தேர்வு செய்தது பாசிச ஆர்.எஸ்.எஸ்.

படிக்க:

♦  ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்!
♦  RSS கைக்கூலி ஆளுநர் ரவியை தமிழகத்திலிருந்து வெளியேற்றுவோம்!

தமிழக ஆளுநரான ஆர்.என்.ரவி என்கிற ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி பீகாரில் உள்ள பாட்னாவில் பிறந்தவர். இயற்பியலில் முதுகலைப் பட்டம் படித்துவிட்டு சில காலம் பத்திரிகைத் துறை பணியில் இருந்தவர். அதன்பிறகு ஐ.பி.எஸ். அதிகாரியாகவும் மத்திய அரசின் உளவுத்துறை (ஐ.பி.) அதிகாரியாகவும் பணியாற்றியவர்.

2012-இல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பிரதமர் அலுவலகத்திலும், 2019 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நாகாலாந்து ஆளுநராகவும் பணியாற்றியவர் தற்போது தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாகாலாந்து ஆளுநர் பொறுப்பில் இருந்து மாற்றப்படுகிறார் என்ற செய்தியை அறிந்த நாகாலாந்து பத்திரிக்கையாளர்களும் மக்களும் பட்டாசு வெடித்துக் கொண்டாடி உள்ளனர் என்பதிலிருந்தே இந்த ஆர்.எஸ்.எஸ் அடிமையின் சேவைகளை நாம் புரிந்து கொள்ளலாம்.

உளவுத்துறை பின்புலம் கொண்ட இவர் பதவியில் அமர்ந்தவுடன் எதிர்பார்த்தபடியே தமிழ்நாட்டில் மாநில ஆட்சியில் குறுக்கிட ஆரம்பித்தார். வழக்கத்துக்கு மாறாக சட்டம் ஒழுங்கு மற்றும் உளவுத்துறை டிஜிபிக்களை நேரில் அழைத்து பேசியும், தலைமைச் செயலரை தனக்கு நேரடியாக அறிக்கையளிக்கும்படி உத்தரவிட்டும் தனது அதிகார வரம்புகளை மீறினார்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்தை எவ்வித நியாயமான காரணமும் இல்லாமல் திட்டமிட்டே குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் நிலுவையில் வைத்திருக்கிறார். இதனுடன் எழுவர் விடுதலை உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த தமிழக அரசின் 19 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டு, தமிழக அரசை முடக்கும் செயலிலும் ஈடுபட்டுள்ளார்.

துணை வேந்தர் நியமனத்தில், தனது அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டும், ஆரசியல் அமைப்பு சட்டத்தை மீறியும் செயல்பட்டுள்ளார். அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 10(4) இன் படி துணைவேந்தரின் பதவிக் காலம் முடியும் தருவாயில் புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் குழு அமைக்கப்படாமலோ, அவர்கள் மூவரை பரிந்துரை செய்யாமலோ இருக்கும் பட்சத்தில் ஏற்கனவே இருப்பவருக்கு பதவியில் இருக்கும் போதே பதவி நீட்டிப்பு தரப்பட வேண்டும்.

அதே சமயம் பரிந்துரை கிடைத்துவிட்டால் அந்த பரிந்துரையில் உள்ள மூவரில் ஒருவரை தேர்ந்தெடுப்பது வேந்தரின் (கவர்னரின்) கடமையாகிறது. இந்த விவகாரத்தில் அரசியல் அமைப்பு கவர்னருக்கு வழங்கிய அதிகாரத்தை பயன்படுத்தக் கூடாது. பல்கலைக் கழகத்தின் சட்டவிதிமுறைகளின் படிதான் நடக்க வேண்டும் என்பது தான் கல்வியாளர்களின் கருத்து.

ஆனால், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 10-வது துணைவேந்தராக இருந்த டாக்டர் சுதா சேஷய்யனின் பதவிக் காலம் கடந்த 2021 டிசம்பர் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்ததை முன்னிட்டு, அதற்கு முன்னதாகவே புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தெரிவுக் குழுவை தமிழக அரசு நியமித்து, மூன்று பேரை பரிந்துரை செய்தது.

வழக்கம் போல ஆளுநர் கடந்த நான்கு மாதங்களாக அந்த மூவரில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுக்காமல் கிடப்பில் போட்டார். நியாயப்படி 2021 டிசம்பரில் நடந்திருக்க வேண்டிய புதிய துணைவேந்தரின் நியமனம் ஆளுநரின் அதிகாரத் திமிரால் நடக்கவில்லை. பல்கலைக் கழக செயல்பாடுகள் மூன்று மாதங்களுக்கும் மேலாக ஸ்தம்பித்து கிடந்தது. இந்தச் சூழலில் முந்தைய துணைவேந்தரான சுதாசேஷய்யனுக்கே பதவி நீட்டிப்பு வழங்கி ஆளுநர் உத்தரவிட்டுள்ளதோடு, புதிய துணைவேந்தர் தேர்வுக்கு புதிய தேர்வு குழுவை நியமிக்கும்படியும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது அப்பட்டமான அதிகார அத்து மீறலாகும்.

அதே போல், 2021 செப்டம்பரில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கொடுக்கப்பட்டது. ஐந்து மாதங்களாக கிடப்பில் போட்டுவிட்டு, பிப்ரவரி மாதத்தில் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். ஆளுநரின் இந்த நடவடிக்கையை பாஜக – அதிமுக கூட்டணியைத் தவிர மற்ற கட்சிகள் ஒரே குரலில் எதிர்த்ததுடன், மீண்டும் ஒரே வாரத்தில் பிப்ரவரி 8-ஆம் தேதி நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது திமுக அரசு. தற்போதும், இரண்டரை மாதங்களைக் கடந்த நிலையில் அது பற்றி வாய் திறக்காமல் மௌனம் சாதிக்கிறார் ஆளுநர்.

இது தொடர்பாக பிபிசிக்கு அளித்த விளக்கத்தில், “அரசியலமைப்பு ஆளுநருக்கு வழங்கிய அதிகாரங்களின்படி பண மசோதா நீங்கலாக, வேறு எந்தவொரு மசோதாவாக இருந்தாலும், அது சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாவாக இருந்தாலும் கூட அதன் மீது ஆளுநருக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே அதை குடியரசு தலைவருக்கு அவர் அனுப்பி வைப்பார். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மசோதா அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்ற அழுத்தம் ஆளுநருக்கு இல்லை” என கூறியிருந்தது.

படிக்க:

♦  ஆர் எஸ் எஸ் கைக்கூலி ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழகத்திலிருந்து வெளியேற்றுவோம்!
♦  கவர்னரின் அத்துமீறல்களும், கள்ள மெளனம் சாதிக்கும் ஸ்டாலினும்!

இதை மறுத்துள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன், “சட்டப்பேரவை நிறைவேற்றிய ஒரு மசோதாவை ஆளுநர் கால வரம்பின்றி தன்னிடம் வைத்திருக்கலாம் என அரசியல் சட்டம் அனுமதியளிக்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பே மேலானது என்பதுதான் அரசியல் சட்டத்தின் சாராம்சம்” என்பதை குறிப்பிட்டுள்ளார். இதே போன்ற கருத்தையே ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கற்பக விநாயகமும், “ஆளுநர் என்பவர் மாநில அரசுடன் இணக்கமாகச் செயல்பட வேண்டுமே தவிர, மாநில அரசின் முடிவுக்கு எதிராகச் செயல்பட முடியாது” என்று பிபிசி தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். .

இந்த நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பிய விவகாரத்தில், ஆளுநருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக அளித்த நோட்டீசில், “தமிழ்நாடு ஆளுநர் தமது கடமைகளையும் பொறுப்புகளையும் அரசியலமைப்பின் 200-ஆவது பிரிவின்படி ஆற்றாமல் அரசியலமைப்பு முறைகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தி வருகிறார். அவர், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமலும் ஒத்திசைவுப் பட்டியல் மூன்றின் கீழ் வரும் மசோதாக்களை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்காமலும் இருக்கிறார்” என்று கூறப்பட்டிருந்தது.

அரசியலமைப்பின் 200ஆவது விதி என்பது, சட்டப் பேரவை மற்றும் சட்ட மேலவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பப்படும்போது, அவர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதன்படி இரண்டாவது முறையாக விளக்கம் கேட்பதற்கு ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஒப்புதல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டியது ஆளுநரின் கடமை” என்பதை நீதிபதி கற்பக விநாயகம் உறுதிப் படுத்தியுள்ளார்.
“அரசியலமைப்பு 200- இல் கூறப்பட்டுள்ள ”As soon as possible” என்பது ‘விரைந்து அனுப்ப வேண்டும்’ என்பதையே குறிக்கும்,” அதாவது, “அரசியல் சட்டம் தொடர்பாக அரசியல் நிர்ணய சபையில் விவாதிக்கப்படும்போது தற்போது 200 என இருக்கும் இந்த விதி, 175-ஆக இருந்தது. அதில் ஆறு வாரங்களுக்குள் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் மசோதாவை அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் கால அளவு அதிகமாக இருப்பதாகக் கருதியே ‘As soon as possible’ என்பது சேர்க்கப்பட்டது. இதற்காக அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதங்களைப் பார்த்தால் இது புரிந்து விடும். அதனால் ‘காலவரம்பற்றது’ என்று இதைக் கருத முடியாது” என்பதை நீதிபதி அரிபரந்தாமனும் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு விதி 168-இன் படி, சட்டப்பேரவையுடன் ஒருங்கிணைந்த அங்கம்தான் ஆளுநர் என்று பிபிசி தமிழுக்கு ஆளுநர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். “அரசியலமைப்பின் 168-ஆவது விதியில் அப்படிக் குறிப்பிடப்பட்டுள்ளது உண்மைதான். ‘ஆளுநர்’ பேரவையின் ஒருங்கிணைந்த அங்கமாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பேரவையின் முடிவை அவர் தடுக்க முடியாது” என இது பற்றி கேட்டபோது நீதிபதி அரிபரந்தாமன் தெளிவுபடுத்தியுள்ளார்.

நீதிபதி ஹரிபரந்தாமன்

இப்படி சட்ட வல்லுநர்களும், நீதிபதிகளும் சொல்வதிலிருந்து சட்ட அமைப்புகளும், அரசியல் அமைப்புக்களும் சொல்லும் விதிகளுக்கு மாறாக ஆளுநர் செயல்படுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனாலும், தான் அரசியல் சட்ட விதிகளுக்கு முரணாக செயல்படவில்லை என்று சட்டகங்களுக்குள் ஒளிந்து கொண்டு நியாயவானாக நடிக்கிறார் ஆளுநர் ரவி. ஆனால், சட்டத்திற்கு அப்பாற்பட்டு, தமது பேச்சுக்கள் மற்றும் செயல்கள் மூலம், தான் தேர்ந்த ஆர்.எஸ்.எஸ்.காரன் என நிருபிக்கும் விதமாக இந்து – இந்தி – இந்தியா எனும் சித்தாந்தத்தை பிரச்சாரமும் செய்துவருகிறார்.
குறிப்பாக, குடியரசு தினத்தன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “ஒவ்வொரு பாரதிய குடிமகனின் உள்ளத்திலும் ஸ்ரீ ராமன் குடியிருக்கிறார்” என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட போது, “தனி ஒரு மாநில வளர்ச்சி, தேச அளவிலான வளர்ச்சியை பாதிக்கும். எனவே, தேசிய பார்வையை எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும். மாநில ரீதியாக சிந்திக்காமல், இந்திய வளர்ச்சி என்ற உணர்வுடன் சிந்தித்து செயல்பட வேண்டும்” என மாநில வளர்ச்சி தேவையற்றது என்று பொருள் படும்படி பேசியுள்ளார். அதாவது, தமிழ்நாடு போன்ற வளர்ச்சி அடைந்த மாநிலங்கள், தான் பிறந்த மாநிலமான பீகார் போன்று பின் தங்கிய மாநிலங்களுக்கு நிதியை விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற மோடி – நிம்மியின் வாயை வாடகைக்கு வாங்கிப் பேசியுள்ளார்.

தருமபுர ஆதீனத்திடம் பேசும்போது “இந்தியாவில் உள்ள எல்லோருக்குமான ஒரே கடவுள் சிவன்தான்” என்கிறார். இவ்வாறு தொடர்ச்சியாக ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ சிந்தாந்தத்தை பிரச்சாரம் செய்யும் விதமாகவே பேசிவருகிறார்.
ஆளுநர் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகிறாரா, இல்லையா என்ற விவாதங்களைத் தாண்டி தனது ஆளுநர் பதவியைப் பயன்படுத்தி மாநிலத்தின் உரிமைகளுக்கும், மாநில மக்களது நலன்களுக்கு எதிராகவும் செயல்படக் கூடாது என்ற குறைந்தபட்ச ஜனநாயக முறைகளைக் கூட அமுல்படுத்த மறுக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல் தனது அகண்ட பாரத கனவிற்கான பாதையை செப்பனிடுவதற்காக, பாஜக அல்லாத கட்சிகள் ஆளக்கூடிய தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தனது ஆர்.எஸ்.எஸ். கங்காணிகளை ஆளுநர்கள் என்ற பெயரில் அனுப்பி வைத்து மாநில உரிமைகளை வெட்டிச் சுருக்கி முற்போக்கு மற்றும் சமூக நீதி நடவடிக்கைகளை ஒழிக்க முயற்சித்து வருகிறது.
குறிப்பாக, நீட் விலக்கு மசோதா, எழுவர் விடுதலைக்கு தடை போன்றவற்றில் ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஒரே குரலில் தங்களது எதிர்ப்புக்களைப் பதிவு செய்த பின்னரும், மக்களின் நலன்களை விட ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டம்தான் முக்கியமானது என ஒரு முழு சங்கியாகவே மாறி தமிழக மக்களுக்கு எதிராக நடந்து வருகிறார்.
முற்போக்கு சிந்தனைக்கும், சமூகநீதிப் பார்வைக்கும் பேர் போன தமிழகத்தில், அவற்றை ஒழித்துக் கட்டி வடமாநிலங்களைப் போலவே, இந்துத்துவத்தைப் புகுத்தி, சாதி – மத ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கி, கலவர பூமியாக்கும் வகையிலேயே ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் உள்ளன. ஆமை புகுந்த இடம் வெளங்காது என்பது மூட நம்பிக்கையாகக் கூட இருக்கலாம். ஆர்.எஸ்.எஸ். (ரவி) புகுந்த இடம் வெளங்காது என்பது தான் வரலாற்று உண்மை..

சமூக அமைதியுடன் கூடிய தமிழகத்தில் நாம் தொடர்ந்து வாழ வேண்டுமென்றால், சமூக அமைதியைக் கெடுக்கும் ஆளுநர் ரவி தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதை ஒவ்வொரு தமிழனின் குரலாகவும் ஒலிக்கச் செய்வதன் மூலம் அதை சாத்தியமாக்க முடியும். ஆர்.என்.ரவி என்ற சங்கியை அகற்றினால், இன்னொரு ஆர்.எஸ்.எஸ். சங்கியை மோடி கும்பல் கொண்டு வரும். அதனால், ரவியை வெளியேற்றும் போராட்டத்துடன், கவர்னர் என்ற கங்காணி முறையை நீக்கவும் அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றி ஜனநாயகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கான போராட்டத்துடனும் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை ஒழிக்கும் போராட்டத்துடனும் இணைக்கவேண்டும். கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்தி ஜனநாயக கூட்டரசை நிறுவும் வேலையை உடனடி திட்டமாக்கி அனைத்து பாசிச எதிர்ப்பு சக்திகளையும் ஒன்றிணைப்பதே தீர்வாக இருக்கும்.

  • இரணியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here