ந்திய அரசியல் சட்டத்தின்படி ஆட்சி செய்யும் அரசுகள் மக்கள் நலஅரசு என்ற வகையில் செயலாற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைக் கொண்டுள்ளதாகவும் அதன்படி ஏழை, அடித்தட்டு மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி அவர்களையும் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்வதே குறிக்கோளாகக் கொள்ளவேண்டும் என்று உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மக்கள் நல அரசு என்ற வார்த்தையே அடியோடு ஒழிக்கப்பட்டு விட்டது.

அதே சமயத்தில் அரசு முன்வைக்கின்ற மக்கள் நல அரசு என்ற பம்மாத்து குறித்து ஆதாரப்பூர்வமாக நாம் அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டியுள்ளது.

ஒரு நாட்டில் மக்கள் நலஅரசு என்பது உணவுப் பாதுகாப்பு, வேலை இல்லாதோருக்கான உதவித்தொகை, சுகாதாரம், தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு தொகை, முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், வீட்டு வசதி, மற்றும் மானியங்கள் போன்ற திட்டங்கள் மூலம் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு உதவி வழங்குகின்றன.

இந்தியாவில் வெறும் பெயரளவுக்கு, ஊழல் நிறைந்த வகையில், பெரும்பாலான பயனாளர்களையே சென்றடையாமல்தான் இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மக்களின் உழைப்பை வரியாகச் சுரண்டி நாட்டின் வருவாயாகக் கணக்கிட்டு பிறகு அதில் ஒரு சிறுபகுதியைக் கிள்ளி மக்களுக்கு திருப்பி வழங்கப்படுவதாகக் கணக்கு காட்டப்படும்

இதுபோன்ற திட்டங்களை மக்களுக்கான உரிமை என்றவகையில் இல்லாமல் வேண்டாவெறுப்பாக, மக்களை எப்பொழுதும் நச்சரிக்கும் பிச்சைக்காரர்களாகக் கருதியே அரசுகள் செயல்படுத்துகின்றன.

இவ்வாறு வேண்டாவெறுப்பாக நடத்தப்படும் இத்திட்டங்களையே பணக்கார, மேல்தட்டு மக்களிடமும், நடுத்தர மக்களிடமும் பூதாகாரமாகக் காட்டி கடுமையாக சுரண்டப்படும் ஏழை உழைக்கும் மக்களின் மீது வெறுப்பை ஊட்டி வளர்க்கிறது.

அதன் ஒரு வெளிப்பாடாகத்தான் இத்தகைய திட்டங்களுக்கு எதிரான மனநிலை மேல்தட்டு மற்றும் நடுத்தர மக்களிடம் வளர்ந்துள்ளது. “மாநில அரசுகள் மக்களுக்காக வழங்கும் இலவச திட்டங்கள் பெரும் நிதிச்சுமையில் தள்ளிவிடும்” என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட SBI வங்கியின் அறிக்கையும் அதைத்தான் காட்டுகிறது.

ஆனால் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பது என்ன? வளரும் நாடுகளிலும், பின்தங்கிய நாடுகளிலும் சமூகநலத் திட்டங்களை படிப்படியாக கைவிடக்கோரும் பல முதலாளித்துவ நாடுகளும், வளர்ந்த நாடுகளும் கூட சமூகப் பாதுகாப்பிற்காக செலவிடுகின்றன. எடுத்துக்காட்டாக, 2019 ஆம் ஆண்டில், அமெரிக்கா தனது பட்ஜெட்டில் 23% சமூகப் பாதுகாப்பிற்காக செலவிட்டது [$1 டிரில்லியன்].

அதே ஆண்டில் பிரெஞ்சு அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை சமூக நலத்திட்டங்களுக்காக செலவிட்டது. டென்மார்க், ஸ்வீடன் மற்றும் நார்வே ஆகியவை 25% க்கும் அதிகமாக செலவிடுகின்றன. கனடா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, இத்தாலி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் சராசரியாக 20% நலத் திட்டங்களுக்காகச் செலவிடுகின்றன. இந்தியா அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% மட்டுமே மானியங்களுக்காக செலவிடுகிறது.

சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் கடுமையாக இருக்கும் இந்தியாவில் வறுமையால் எழும் பிரச்சினைகளைத் தீர்க்க நீண்ட கால நிலையான கொள்கைகளுடன் தீர்ப்பதற்குப் பதிலாக தற்காலிகமான மானியங்கள் மற்றும் ஜனரஞ்சகத் திட்டங்களைச் சொல்லி தேர்தல் ஆதாயங்களுக்காக ஆளும்வர்க்க கட்சிகளை இந்திய ஜனநாயக அமைப்பு கோருகிறது.

எனவே இலவச திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது நிரந்தர தீர்வாக அல்லாமல் மக்களை தற்காலிகமாக கவரும் வாக்கு வங்கி திட்டங்களாகவே உள்ளன.

ஆனால் சீனாவோ மானியங்கள் மூலம் அல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலமும், அடிப்படை சேவைகளை மேம்படுத்துவதன் மூலமும் வறுமைப் பிரச்சினையை தீர்த்துள்ளது.

தற்போது மானியங்களைக்கூட உற்பத்தி அடிப்படையிலிருந்து (உணவு, எரிபொருள் மற்றும் உரங்களுக்கு) தனிநபர் அடிப்படையிலான மானியங்களாக (பணப் பரிமாற்றம்) மாற்றி ஊற்றிமூடப்படுகின்றன.

படிக்க:

♦  மோடி ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, குழந்தைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு பாதியாக குறைந்துள்ளது!

இதனால் அரசாங்கங்கள் விலை உயர்வுக்கு ஏற்ப மானியங்களை உயர்த்தாமல் நிலையான மானியத்தை மக்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்துகின்றன. அப்படி தங்கள் கணக்குகளில் நேரடியாக விழும் அற்பத்தொகையில் மக்கள் திருப்தி அடையவேண்டியுள்ளது.

மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் மூன்று முக்கியத் துறைகளில் அவற்றின் விளைவுகளை பகுப்பாய்வு செய்வோம்.

ஊரக வேலைவாய்ப்பு:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புச் சட்டத்தின் (MGNREGA) கீழ் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை 2021-22 நிதியாண்டில் 43% அதிகரித்து 13.3 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால், இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அரசு 35% குறைத்துள்ளது.

2021-22 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 73,000 கோடி ரூபாய் முழுமையாக பயன்படுத்தப்பட்டு 21 மாநிலங்களில் இத்திட்டத்திற்கான நிதி பற்றாக்குறை நிலவுகிறது. மார்ச் 2020 இல் தேசிய ஊரடங்குக்கு முன்பு, ஒன்றிய அரசு ரூ.61,500 கோடியை ஒதுக்கியது. ஆனால் ஊரடங்கு காரணமாக, நகரங்களில் இருந்து தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்கு இடம்பெயர்ந்ததால் கிராமங்களில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டிய தேவை அதிகரித்தது.

எனவே, 2020-21ல், அவசர நடவடிக்கையாக, ஒதுக்கீடு, 81 சதவீதம் அதிகரித்து, 1,11,500 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஆனால், 2021-22-ல் நிலமைகள் முழுவதுமாக இயல்புக்கு மாறாத போதும் மீண்டும் 34 சதவீதம் குறைக்கப்பட்டு ரூ.73,000 கோடியாக உள்ளது.

பொதுசுகாதாரம்:

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதாரத் துறை மக்களுக்கு ஆரோக்யஸ்ரீ மற்றும் ஆயுஷ்மான் பார்தி போன்ற திட்டங்கள் மூலம் கார்ப்பரேட் தரத்திலான மருத்துவ சேவையை வழங்குவதாகவும் இந்திய அரசுகள் பெரிய அளவில் பிரச்சாரம் செய்து வருகின்றன.

 

ஆனால் உலக சுகாதார அமைப்பு (WHO)நிர்ணயித்த மில்லினியம் வளர்ச்சி இலக்குகளில், தாய் இறப்பு விகிதம் (2015-ல் 113/100,000 மற்றும் 2020-ல் 99/100,000), சிசு இறப்பு (2015-ல் 30/1000 மற்றும் 2020-ல் 26/1000) என்ற விகிதத்தில் இந்தியா பின்தங்கியுள்ளது.

 

அரசு மருத்துவமனைகளில் ஆரம்ப சுகாதார பராமரிப்பு, சமூக பரவல் நோய்களைத் தடுப்பது மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மருத்துவத்திற்கு தனியார் துறையையே மக்கள் நாடவேண்டியுள்ளது.

எனவே, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் 20% மட்டுமே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 63 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் மருத்துவத்துக்காக அவர்களின் சொந்த பணத்தையே செலவிடவேண்டியுள்ளது. இது உலக நாடுகளின் சராசரியைவிட மிக அதிகமாகும்.

மருத்துவ செலவிற்காக கடன் வாங்குவதன் மூலமோ அல்லது சொத்துக்களை விற்பதன் மூலமோ ஒவ்வொரு ஆண்டும் 30% நோயாளிகள் நடுத்தர வர்க்கத்திலிருந்து வறுமைக் கோட்டிற்குக் கீழ் நழுவி வருகின்றனர்.

ஊட்டச்சத்து:

“இந்தியா ஒளிர்கிறது” என்று பிரச்சாரம் செய்யப்படும் “விஸ்வ குருவின்” தரம் என்னவோ சர்வதேச அளவுக்கு தகுதிபெறவில்லை என்பதுதான் நிதர்சனம்.

உலக பசி குறியீட்டில் 116 நாடுகளில் 101-வது இடத்தில் இருக்கிறோம். பசிப் பிரச்சனை இல்லாத நாடாக சீனா 5 புள்ளிகளுக்குக் குறைவாக இருந்தால், நமது நாடு 27.5 புள்ளிகளைப் பெற்று கடுமையான பசிப் பிரச்சனை உள்ள நாடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

FAO அறிக்கையின்படி 14% மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். UNICEF புள்ளிவிவரங்களின்படி 20 கோடி மக்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிடுகிறார்கள், ஆண்டுதோறும் 25 லட்சம் பேர் பட்டினியால் இறக்கின்றனர். ஆண்டுக்கு 18.5 கோடி இந்தியர்கள் தவறான ஊட்டச்சத்து காரணமாக நோய்வாய்ப்படுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 5 வயதுக்குட்பட்ட 8.8 லட்சம் குழந்தைகள் உணவுப் பற்றாக்குறையால் இறக்கின்றனர்.

அக்டோபர் 14, 2021 நிலவரப்படி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 17.76 லட்சம் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள (SAM) குழந்தைகளும், 15.46 லட்சம் மிதமான கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள (MAM) குழந்தைகளும் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வின்படி [NFHS 2019-20 அறிக்கை], 6 முதல் 23 மாத வயதுடைய 89% குழந்தைகளுக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை. 32% குழந்தைகள் எடை குறைவாகவும், 35% வளர்ச்சி குன்றியவர்களாகவும், 20% குழந்தைகள் முற்றிலும் மெலிந்தவர்களாகவும் உள்ளனர். 68% குழந்தைகளும் 66% பெண்களும் 2020-ல் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் (2016-ஆம் ஆண்டில் முறையே 36% குழந்தைகள் மற்றும் 46% பெண்கள்). மக்களின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதையே இப்புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அங்கன்வாடி சேவைகள் (AWS) மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் திட்டம் (ICDS), துணை ஊட்டச்சத்து திட்டம் (SANP) ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து ஆதரவு திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கான நிதி ஒதுக்கீடு வெட்டிச் சுருக்கப்பட்டு வருகிறது. 2020-21 ஆண்டிற்கான மதிய உணவு திட்டத்திற்கான ஒதுக்கீடு ₹12,900 கோடி. ஆனால் 2021-22 பட்ஜெட்டில் ₹11,500 கோடியாக நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது.

இத்தகைய ஓட்டை உடைசல்களுடன் வேண்டாவெறுப்பாக ஆளும்வர்க்கங்களால் செயல்படுத்தப்படும் இத்திட்டங்கள் பெரும்பாலான மக்களை சென்றடைவதில்லை என்பதைத்தான் மேற்கண்ட புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த உண்மைகளை ஒருபோதும் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல், ஏதோ மொத்த உற்பத்தியில் பெரும்பகுதியை மக்களுக்கே செலவு செய்வது போன்ற ஒரு தோற்றத்தை மக்களிடம் தொடர் பொய்பிரச்சாரத்தின் மூலம் ஆளும்வர்க்கம் ஏற்படுத்தி வருகிறது.

ஒரு அரசு தனது குடிமகனிடம் வரிவசூலிக்கும் அதிகாரத்தை பெறுவது அக்குடிமகனுக்கு உணவு, கல்வி, மருத்துவம், இருப்பிடம், வேலைவாய்ப்பு, கௌரவமான வாழ்க்கை தரம், ஓய்விற்குப்பின்னான பராமரிப்பு, சுற்றுசூழல் போன்ற அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்வதாக உறுதியளிப்பதின் மூலம்தான் பெறுகிறது.

ஆனால் இந்த முதலாளித்துவ அரசுகள் தங்களுடைய வாக்குறுதிகளை, கடைமைகளைக் கைகழுவி விட்டு, மக்களிடம் வரிவசூலிக்கும் அதிகாரத்தை மட்டும் விடாப்பிடியாக தக்கவைத்துக் கொண்டு மக்களை மென்மேலும் கசக்கிப்பிழிந்து வருகின்றன.

நாட்டின் பெரும்பாலான மக்களை ஒட்டச்சுரண்டி வெகு சில முதலாளிகளை மட்டும் கொழுக்கவைக்கும் முதலாளித்துவ அரசுகளையும், கட்சிகளையும் வீழ்த்தி, முதலாளித்துவத்தை படுகுழிக்குள் அனுப்புவதே நமது தலையாய கடமையாக அமையவேண்டும்.

மாற்றாக, மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதையே முதன்மையாகக் கொண்ட, சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை போக்கி, உழைக்கும் மக்களை சுரண்டலிலிருந்து விடுவித்து, மக்களின் கைகளில் அதிகாரத்தை வழங்கும் அரசு கட்டமைப்பை உருவாக்குவோம்.

அதிலிருந்து சோசலிசமே நம்மை நிரந்தரமாக பாதுகாக்கின்ற கட்டமைப்பு என்பதை புரிந்துகொண்டு அதை நோக்கி முன்னேறுகின்ற வகையில் புதிய ஜனநாயக சமுதாயத்தை இந்தியாவில் அமைக்க உறுதியேற்போம்.

  • ஜூலியஸ்

மூலம்: https://countercurrents.org/2022/05/is-india-a-welfare-state/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here