ஆளுநரே வெளியேறு!


 

  • நீட் விலக்கு தீர்மானத்தைதிருப்பி அனுப்பிய ஆர் எஸ் எஸ் கைக்கூலி ஆளுநரின் திமிர்த்தனம்!
  • தமிழ்நாட்டு சட்டப்பேரவையையும், மக்களையும் மதிக்காத ஆளுநரே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்ற மசோதாவை தி.மு.க. அரசு, சட்டமன்றத்தில் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி- க்கு  அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

நீட் விலக்கு கோரிய மசோதா-வின் மீது ஆளுநர் கண்டிப்பாக தனது சித்தாந்த குருமார்கள் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே முடிவு எடுப்பார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த பிப்ரவரி 01-ஆம் தேதி, அந்த மசோதா-வை சட்டப்பேரவை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை துச்சமாகவும் கிள்ளுக்கீரை போலவும் அணுகியுள்ளார்.

தமிழக ஆளுநரின் இந்த நடவடிக்கை மருத்துவ கனவில் இருக்கும் சமூகத்தில் பின் தங்கிய, ஏழை  அரசுப் பள்ளி மாணவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆளுநரின் இந்த முடிவுக்கு பாஜக-வினர் தவிர அனைத்துக் கட்சிகளும், ஜனநாயக இயக்கங்களும், மாணவர் அமைப்புக்களும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டு அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வில் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. மாணவி அனிதா தொடங்கி அடுத்தடுத்த ஆண்டுகளில் நீட் தோல்வியினால் தற்கொலை மரணங்கள், தொடர்கதையாகிப் போயுள்ளது. 2021 அக்டோபர் வரை 17 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

2017-ல் மாணவி அனிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த தமிழகமும் நீட் தேர்வை எதிர்த்தது. ஆனாலும், மத்திய அரசு நீட் தேர்வு நடத்துவது பற்றி அந்தந்த மாநிலங்களே முடிவு செய்யலாம் என்ற கோரிக்கையை ஏற்காமலும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திலிருந்து விலக்களிக்காமலும் வலுக்கட்டாயமாகத் திணித்தும் வருகிறது.

இந்த நிலையில், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, 2021 ஜூலையில் தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கங்கள் தொடர்பாக ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான கமிட்டி அமைத்தது. 80,000-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களிடம் கருத்துக்களைக் கேட்டும், சட்ட வல்லுநர்களின் கருத்துக்களின் அடிப்படையிலும், ஏ.கே.ராஜன் கமிட்டி அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதே கால கட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை மூன்று முறை நேரில் சந்திக்க முயற்சித்த திமுக நாடாளுமன்றக் குழுவினருக்கு அனுமதி நிராகரிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி 31-ஆம் தேதி நீட் விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவாக அளிக்கப்பட்டன. ஓட்டுக் கட்சி அரசியலில் உள்ளவர்கள் கடைபிடிக்கின்ற குறைந்தபட்ச அரசியல் நாகரிகத்தைக் கூட அமித்ஷா கும்பல் கடைபிடிக்கவில்லை.

சமீபத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலும் நீட் விலக்கு தொடர்பான கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. இந்தச் சூழலில் தான் தமிழக ஆளுநர் நீட் விலக்கு கோரிய தமிழக அரசின் தீர்மானத்தை அரசுக்கே திருப்பி அனுப்பி உள்ளார்.

தற்போதும், ஆளுநரின் இந்த நடவடிக்கையை விவாதிக்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக, காங்கிரசு, திரிணாமுல் காங்கிரசு கட்சியைச் சார்ந்த எம்.பி.-க்கள் முறையிட்ட பிறகும் அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அனுமதி அளிக்கவில்லை.

இப்படி தமிழகத்தின் குரல் நாடாளுமன்றத்தில் எடுபடாத நிலையில், சட்ட ரீதியாக நீட் தேர்வைத் தடுப்பதற்கான வாய்ப்புக்களும் இல்லை என்பதே உண்மை. இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலத்தில், மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. ஆனால், எமர்ஜென்சி நீக்கப்பட்ட பிறகு, கல்வி மாநிலப்பட்டியலுக்கு திரும்ப கொண்டு வரப்படவில்லை. எனவே, கல்வித் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், தனியார்மயத்தைப் புகுத்துவது, புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது என கல்வியை தனது கார்ப்பரேட் மற்றும் காவி பாசிச நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தி வருகிறது.

நீட் விலக்கு கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாலும், கல்வி பொதுப்பட்டியலில் இருக்கின்ற காரணத்தைக் காட்டியே நீட்டை சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டு விடும்.

தற்போது கூட, தமிழகத்தின் நீட் விலக்கு கோரும் தீர்மானம் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக இருப்பதாகவும், தமிழகத்தின் சமூக நீதி பாதிப்படையவில்லை என்றும், அந்தத் தீர்மானத்தை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் பொய்யான காரணத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டில், அரசுப் பள்ளி மாணவர்கள் 2500 பேர் தேர்ச்சி பெற்றும், 10 பேருக்கு மட்டுமே கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. குறிப்பாக, நீட் தேர்வுக்கு முன், 2014-15 கல்வி ஆண்டில், 38 பேரும், 2015-16 , 2016-17 ஆண்டுகளில் முறையே 36, 37 பேரும் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். நீட் தேர்வு வந்த பிறகு, 2017-18 கல்வி ஆண்டில் 3 பேரும், 2018-19, 2019-20, 2020-21 ஆண்டுகளில் முறையே 5, 6, 11 பேரும் தேர்வாகி உள்ளனர்.

அதே போல் தமிழ்வழியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கையும் நீட் – டிற்குப் பிறகு வெகுவாகக் குறைந்துள்ளது. 2016-17 க்கு முன்பு வரை ஆண்டுக்கு சராசரியாக 500-க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்ற நிலையில், 2017-18 –ற்குப் பிறகு, 56, 119, 71, 82 என அடுத்தடுத்த ஆண்டுகளில் குறைந்துள்ளது 2020-21 கல்வி ஆண்டில் 7.5% உள் ஒதுக்கீடு கொடுக்கப்பட்ட பிறகும், தமிழ்வழிக்கல்வியில் படித்த 299 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவ்வாறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் சமூகத்தில் பின் தங்கிய மற்றும் ஏழை மாணவர்கள் என்பதை நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. 2020-ல் 7.5% உள் ஒதுக்கீடு மூலம் மாணவர்களின் நீட் தேர்ச்சி விகிதம் அதிகரித்த பின்னரும், மருத்துவப் படிப்பில் சீட் கிடைக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சொற்பமாகவே உள்ளது.

நீட் தேர்வுக்கு முன்பு வரை, மாணவர்கள் படித்த மதிப்பெண்கள் அடிப்படையில் ஒளிவு மறைவற்ற வகையில் வெளிப்படைத் தன்மையுடன் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடந்தது. ஆனால், நீட் தேர்வு வந்த பிறகு, பணம் கொழிக்கும் தொழிலாக மாறிவிட்டது.  நீட் பயிற்சி அளிக்கும் தனியார் நிறுவனங்கள் ஆண்டுக்கு 1700 கோடி ரூபாயை வருமானம் ஈட்டுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், நீட் தேர்வின் மூலம் ஏழை மாணவர்களின் சமூக நீதியில் எந்த பாதிப்பும் இல்லை என தனது சித்தாந்த குருமார்கள் ஆன ஆர்எஸ்எஸ் கும்பல் உத்தரவிடுவது போல புளுகுகிறார் ஆளுநர் ரவி.

Ravindra Narayan Ravi sworn in as Governor of Tamil Nadu - Know more about  the former IPS officer here

இப்படி நீட் தேர்வைக் கட்டாயமாக்க வேண்டும் என்று செயல்பட்டுக் கொண்டே மறுபுறம், எம்.டி., எம்.எஸ். உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புக்கான நீட் – பி.ஜி. தேர்வில் இருந்து மத்திய அரசின் கீழ் இயங்கும் 11 கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளித்துள்ளது மோடி அரசு. அதற்கு மாற்றாக, INI – CET எனும் சிறப்பு நுழைவுத் தேர்வை நடத்தவிருப்பவதாக கடந்த நவம்பர் மாதம் அறிவித்துள்ளது. சிறந்த மருத்துவர்களை உருவாக்குவதற்கான தேர்வு முறை என நீட்டி முழக்கப்பட்ட நீட் தேர்விலிருந்து மத்திய கல்வி நிறுவனங்களுக்கு விலக்களிக்க முடியும் என்றால், தமிழகம் போன்று மருத்துவக் கட்டமைப்பைக் கொண்ட மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று ஏன் அந்த மாநிலங்களுக்கு விலக்களிக்க முடியாது என கேள்வி எழுப்பியுள்ளது சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம்.

எனவே, நீட்டே சிறந்த தேர்வு முறை என்பதெல்லாம் ஏமாற்று. உண்மையில் அரசுப் பள்ளியில் பயிலும் பின் தங்கிய மற்றும் ஏழை மாணவர்களை மருத்துவத் துறையிலிருந்து அப்புறப்படுத்துவது என்ற இந்துத்துவ நடவடிக்கையை நீட் தேர்வின் மூலம் தமிழகத்தின் மீது திணிக்க முயல்கிறது கடந்த 70 ஆண்டுகளாக மருத்துவ படிப்பில் படித்து தேர்வான மருத்துவர்கள் ஏதோ தகுதி இல்லாதவர்கள் போலவும் நீட் மூலம் தேர்வு நடத்தி தேர்வு செய்தால் தான் தரமான மருத்துவர்கள் உருவாவார்கள் என்று மோடி கும்பல். பித்தலாட்டம் புரிகின்றனர். இதற்கு ஒத்திசைவாக வேலை செய்கிறார் தமிழக ஆளுநர் திருவாளர் ரவி.

சமூக நீதி – பகுத்தறிவுவை உயர்த்திப் பிடிக்கும் தமிழக மக்களின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கும் நீட் எதிர்ப்புக் குரலை நசுக்கும் வகையில் சட்டமன்றத் தீர்மானத்தை திருப்பி அனுப்பி திமிர்த்தனமாக ஆளுநர் ரவி நடந்து கொண்டுள்ளார். ஆளுநர் ரவியின் நியமனத்தை அப்போதே கொண்டாடிய சங்கி கும்பலின் உள்நோக்கத்தை இதிலிருந்து நாம் மீண்டும் ஒரு முறை புரிந்து கொள்ளலாம்.

எனவே, ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும், பாசிச பாஜக-வின் கையாளாகவும் செயல்படும் தமிழக ஆளுநர் ரவி-யை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அவ்வாறு மத்திய அரசு செயல்படத் தவறும் பட்சத்தில் தமிழக மக்களாகிய நாம் தான் அவரை விரட்டியடிக்க வேண்டும். அதற்கான போராட்டம் நீட்டை தமிழகத்திலிருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்துவதற்கான போராட்டமாக மாற்றப்பட வேண்டும். மாற்றுவோம்!

தமிழக ஆளுநரை விரட்டியடிப்போம்!

நீட்டையும் அவருடனேயே விரட்டியடிப்போம்!

மக்கள் அதிகாரம்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here