ந்தியாவின் சமூக அமைப்பு பல நூற்றாண்டுகளாக படிநிலை அடுக்கு, சாதிப் பிரிவுகளை கொண்ட, அந்த சாதிய உறவு முறைகளை கட்டிக் காக்கின்ற நிலப்பிரபுத்துவ சமூகமாக நீடித்திருந்தது.

இந்த நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு ஒரு புரட்சியின் மூலம் தகர்த்து எறியப்படாத சூழலில், எந்த ஒரு சாதியை சேர்ந்த தலைவராக இருந்தாலும், அவரது பொதுவான சமூக நடவடிக்கைகள் மற்றும் அதை ஒட்டிய வேலைகளை பற்றி விமர்சனம் செய்யாமல், அவரது பிறப்பை மட்டுமே கொண்டு விமர்சிக்கின்ற சாதிய கண்ணோட்டம் அனைத்திலும் வெளிப்படுகிறது.

வருண் சாதி

சமீபத்தில் ஆந்திராவில் தற்போதுள்ள மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, அதை ஒட்டி கடந்த சில நாட்களாக நடந்து வரும் வன்முறை வெறியாட்டங்கள் இந்த ஆதிக்க சாதி வெறி மற்றும் உயர் சாதி இந்து மனோபாவத்தை அம்பலப்படுத்துகிறது.

ஏற்கனவே இருக்கும் ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்கள் மக்களவைத் தொகுதிகளில் அடிப்படையில் 25 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. அதில் கோனசீமா என்ற மாவட்டம் அமலாபுரம் என்ற நகரைத் தலைநகராகக் கொண்டு துவங்கப்பட்டது.

அந்த மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் மக்களிடம் கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டு, அந்த மாவட்டத்தின் பெயர் மாற்றம் செய்து, அம்பேத்கார் கோனசீமா மாவட்டம் என்று பெயரிட்டு ஆந்திர அரசு செய்தி வெளியிட்டது.

 

உடனே அதை எதிர்த்து அமலாபுரம் பகுதியில் வன்முறை வெறியாட்டம் துவங்கியுள்ளது. ஒய் எஸ் ஆர் காங்கிரசை சேர்ந்த உள்ளூர் எம் எல் ஏ சதீஷ் வீடு மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஸ்வநாதன் வீடு ஆகியவை தீவைத்துக் கொளுத்தப்பட்டு உள்ளது.

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ளே புகுந்து கலவரத்தை நடத்தியுள்ளது ஆதிக்க சாதி வெறிக் கும்பல்.

ஆனால் ஜனசேனா கட்சியின் தலைவரான தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் “மாவட்டம் பிரித்த போதே இவ்வாறு அறிவித்திருந்தால் பிரச்சினை இருந்திருக்காது” என்று நாடகமாடுகிறார். தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடு அரசு திட்டமிட்டு இது போன்ற வன்முறைகளை உருவாக்குவதாக பசப்புகிறார்.

கலவரக்காரர்கள் பேருந்துகளை எரித்த காட்சி

தமிழகத்தில் ஆதிக்க சாதியினர் பெயரை மாவட்டத்திற்கு சூட்டிய போது பெரிதாக கலவரங்கள் ஏற்பட வில்லை. ஆனால் போக்குவரத்து கழகங்களுக்கு சில மாவட்டங்களுக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வீரன் சுந்தரலிங்கம், அழகுமுத்துக்கோன் போன்ற பெயர்களை சூட்டிய உடன் வன்முறை தலைவிரித்து ஆடியது.

அப்போதைய திமுக அரசு இந்த சாதி ஆதிக்க சக்திகளுக்கு அடிபணிந்து புதிதாக மாவட்டத்தின் பெயர் மாற்றியதை ரத்து செய்தது. போக்குவரத்துக் கழகங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து அரசு போக்குவரத்து கழகம் என்று பெயர் மாற்றம் செய்வது.

அதுபோன்ற திசையில்தான் ஆந்திராவில் தற்போது ஆட்சி செய்கின்ற ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் செல்கிறார்.

அமலாபுரத்தில் அமைச்சர் பினிபே விஸ்வரூப்பின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது

இந்தியாவின் அரசியல் சட்டத்தை வகுத்துக் கொடுத்தவர், பாராளுமன்ற வளாகத்தில் அவருக்கு சிலை இருக்கிறது என்பதெல்லாம் ஆதிக்க சாதி பிரமுகர்களுக்கும் வெறியர்களுக்கும் இன்னமும் உறுத்தலாகவே இருக்கிறது என்பதால் ஆர்எஸ்எஸ் பாஜக கொண்டுவரத் துடிக்கும் பார்ப்பன பேரரசை அங்கீகரிக்கும் மனோபாவமும், ஆதிக்கசாதி வெறி கண்ணோட்டமும் உள்ளது.

இந்தியாவில் நிலவும் சாதி- தீண்டாமைக் கொடுமைகளுக்கு, அடிப்படையான அரை நிலப்பிரபுத்துவ உறவுகளை தகர்த்தெரியாமல், குறைந்தபட்ச சீர்திருத்த நடவடிக்கைகள் கூட நிறைவேறாது என்பதையே கோனசீமா மாவட்ட பெயர்மாற்றம் தொடர்பான ஆதிக்க சாதி வெறியாட்டங்கள் நமக்கு உணர்த்துகிறது.

இரா.கபிலன்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here