தொல்பொருள் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா சமர்ப்பித்த அகழ்வாராய்ச்சி அறிக்கை அறிவியல் பூர்வமானது அல்ல என்றும், அதில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் சென்னையில் அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இன்ஸ்டா பக்கத்தில் இன்று 21 செப்டம்பரில் பேட்டி பதிவேற்றப்பட்டுள்ளது. (https://www.instagram.com/reel/DdiF3C-ERxs/?stkn=MXBqdzlnMWFibjl6eA==)

மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், The Indian Express நாளிதழின் ‘ஐடியா எக்ஸ்சேஞ்ச்’ நிகழ்ச்சியில் கீழடி அகழ்வாய்வு குறித்துப் பேசுகையில், தொல்லியல் கண்டுபிடிப்புகளுக்கு முழுமையான அறிவியல் பூர்வமான சான்றுகள் மற்றும் சரிபார்ப்பு தேவைப்படுவதாகத் தெரிவித்தார். அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படும் பட்சத்தில் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை எண்ணி ஒட்டுமொத்த நாடும் பெருமகிழ்ச்சி அடையும் என்று அவர் குறிப்பிட்டார்.

கஜேந்திர சிங் செகாவத்!

கஜேந்திர சிங் செகாவத் (Gajendra Singh Shekhawat) இந்தியாவின் முக்கியமான மத்திய அமைச்சர்களில் ஒருவர் ஆவார். அவர் தற்போது இந்திய அரசின் மத்திய சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் பாரதிய ஜனதா கட்சி (BJP). இராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தொடர்ந்து மூன்று முறை (2014, 2019 மற்றும் 2024) தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இதற்கு முன்பு மோடியின் அமைச்சரவையில் மிக முக்கியமான மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சராக (மத்திய நீர்வளத்துறை) சிறப்பாகப் பணியாற்றினார் என்றெல்லாம் விக்கிப்பீடியாவில் விவரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.

செகாவத்தைப் பற்றி பதிவேற்றப்பட்ட விவரங்கள் அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டும் என்றோ, பதிவேற்றப்படாமல் இருக்கும் விஷயங்கள் முக்கியத்துவமற்றவை என்றோ நாம் கருத முடியுமா? நிச்சயம் முடியாது.

மோடியின் கைத்தடியான கழிசடை சங்கி!

கீழடி தொடர்பாக தொல்லியல் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அமர்நாத் ராமகிருஷ்ணாவின் தலைமையில் ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அந்த அறிக்கையின் மீதான விமர்சனத்தை வைப்பதற்கு செகாவத் தொல்லியல் துறையில் நிபுணராக இருக்க வேண்டும்; அல்லது அப்படி தகுதி வாய்ந்த நபர்களால் கீழடி அகழ்வாய்வு அறிக்கை மறுக்கப்பட்டு இருப்பதற்கான ஆதாரத்தின் அடிப்படையில் பேச வேண்டும். மேற்குறிப்பிட்ட இரண்டில் எந்த ஒன்றின் அடிப்படையிலும் அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நேர்காணலில் பேசியிருப்பதாக தெரியவில்லை.

இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (ASI) நிபுணர்களின் கருத்துக்கள் முதன்மை தொல்லியல் ஆய்வாளருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. இறுதி சரிபார்ப்புகளுக்குப் பிறகே அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும் என 2025 இல் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளார். இன்று வரை ஏன் வெளியிடப்படவில்லை?

மற்றும் ஒரு இடத்தில் “அகழ்வாராய்ச்சி தொடர்பான ஆதாரங்களை அரசியல்மயமாக்குவதில் அவசரம் காட்டுவதற்குப் பதிலாக, இது தொடர்பாக மத்திய அரசு தமிழக அரசின் ஆதரவைக் கோரியுள்ளதாக” அவர் கூறியுள்ளார்.

“தமிழகம் ஏன் தனது ஒத்துழைப்பை வழங்கத் தயங்குகிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை?”எனவும் எக்ஸ் தளத்தில் போட்டுள்ளார் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்.

படிக்க:

 மதுரையில் கீழடிக்காக ம.க.இ.க. வின் ஆர்ப்பாட்டம்!

 கீழடி நாகரிக உண்மையும் மார்க்சிய வரலாற்று வழிகாட்டலும்

கீழடியின் தொன்மையை உலகமே அறிவியல் பூர்வமாக ஏற்றுக் கொண்ட பிறகும், ஒன்றிய அரசு அதன் ஆய்வு முடிவுகளை வெளியிடத் தயங்குவது ஏன் என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழர்களின் நகர நாகரிகப் பெருமையை உலகறியச் செய்ய இந்த அறிக்கை உடனே வெளியிடப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டின் முந்தைய ஆட்சியாளர்கள் – திமுகவினர் – உண்மைக்கு மாறாக தமது இனத்தின் வரலாறு குறித்து எதையாவது பதிவு செய்துள்ளார்கள் என்று எந்த ஒரு சான்றையும் மத்திய அமைச்சர் முன்வைக்கவில்லை. ஆனால் அவர்களின் விருப்பத்திற்கு – கண்ணோட்டத்திற்கு இணங்கத்தான் ஆய்வாளர்கள் தவறாக அறிக்கை தந்துள்ளதாக போகிற போக்கில் அடித்து விட்டுள்ளார்.

கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் சான்றுகளாக தெரியவில்லையா செகாவத் அவர்களே? உங்களிடம் உண்மை இருந்தால், உங்களுக்கு துணிவு இருந்தால் தமிழகத்தில் நேருக்கு நேர் விவாதிக்க வாருங்கள்!முந்தைய ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் கீழடி அகழ்வாய்வில் ஈடுபட்டவர்கள் என ஒருவர் கூட பின்வாங்க மாட்டார்கள்; உங்களை பொருத்தமாக எதிர்கொள்வார்கள் என்று தமிழகத்தின் சார்பில் நாங்கள் அறைகூவல் விடுக்கிறோம்.

ஏற்கனவே முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் பேசிய ஷெகாவத், தமிழகத்தின் பாரம்பரியத்தைப் பிரிவினைவாத உணர்வுகளின் மூலம் அல்ல, மாறாக அறிவுசார் நேர்மையின் மூலமே போற்ற வேண்டும் என்றும், மேலும் இந்த மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் வலியுறுத்தினார்.

தமிழகம் போன்ற பல மாநிலங்களும், பல இன மக்களும் இணைந்தது தான் இந்தியா என்ற புரிதல் உங்களுக்கு உள்ளதா ஒன்றிய அமைச்சரே? அல்லது தமிழ்நாடு என்பது நீங்கள் ஆளும் ஆட்சிப் பரப்பின் எல்லைக்குள் அமைந்த ஒரு மாகாணம் என்ற கருத்து தான் கோலோச்சுகிறதா?

முந்தைய ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு இணங்கி தான், கீழடி அகழ்வாய்வை நடத்தியவர்கள் உண்மைக்கு மாறாக, அறிவியல் கண்ணோட்டத்திற்கு ஆய்வு முறைக்கு பொருந்தாத வகையில் அறிக்கை தந்துள்ளார்கள் என்று இதுவரை அதிகாரப்பூர்வமாக ஒன்றிய அரசு அறிவிக்கவில்லை. ஆனால் ஒன்றிய அமைச்சர் தொலைக்காட்சி நேர்காணலில் இப்படி தன் விருப்பத்திற்கு கதை அளக்கிறார்.

படிக்க:

 கீழடி: ஆரியம் செரித்து விட முழுங்கும் இரும்புக் கடப்பாறை! | Documentary | EZHUGA

 கீழடியே இந்திய வரலாற்றின் திறவுகோல்

ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள அறிக்கைகளை கரையான் அரிப்பதற்கு வீசிவிட்ட உங்களின் சதித்தனம் இனியும் தமிழகத்தில் – கீழடியில் எடுபடாது சகுனி அமைச்சரே!

காவி பாசிஸ்டுகளுக்கு ஒரு தேவை இருக்கிறது. தென்னிந்தியாவானது, அதிலும் குறிப்பாக தமிழ்நாடானது சனாதானத்திற்கு – பார்ப்பனியத்திற்கு எதிராக சமர் புரிந்த வரலாற்றை கொண்டுள்ளது. அத்தகைய பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதால்தான் ஆர்எஸ்எஸ் – பிஜேபியால் தமிழகத்தில் அவ்வளவு எளிதாக காலூன்ற முடியாமல் தவிக்கிறது.

தமிழர்களிடம் உள்ள தர்க்கத்தையும், பகுத்தறிவையும், அறிவியல் பூர்வ கண்ணோட்டத்தையும் சிதைத்து, இந்து மதம்தான் இருப்பதிலேயே உயர்வானது, சிறப்பானது என்பதை நிலைநாட்ட வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறீர்கள் என்பது நன்றாகவே புரிகிறது காவிகளே.

கீழடி எனும் சம்மட்டி அடி!

இத்தகைய பார்ப்பனிய – வேதநாகரிகத் திணிப்பை நோக்கமாக கொண்டவர்கள் ஒன்றியத்தின் ஆட்சி பொறுப்பில் வீற்றிருக்கும் போது, தமிழகத்தின் அகழாய்வு முடிவுகள் அவர்களின் தலையில் சம்மட்டியாக இறங்குகிறது என்பதில் வியப்பேதும் இல்லை.

படிக்க:

 அறிவியல்–தொழில்நுட்பத்தில் இந்தியா ஏன் பின்தங்கியது? கீழடி உணர்த்தும் பாடம்!

 வேத நாகரிகத்தைத் துரத்தும் கீழடி!

குறிப்பாக கீழடி அகழாய்வில் சுமார் கிமு.500 களில் வாழ்ந்த தமிழர்கள் அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கி இருப்பதும், நகர நாகரிகத்தில் முன்னேறி இருப்பதும், அவர்களுக்கு கடவுளோ மதமோ தேவைப்படாமல் இருப்பதும் தோண்டி எடுக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையை ஏற்க மறுத்து தனது அரசியல் உள்நோக்கங்களின் படி திருத்தித் தருமாறு நிர்பந்தித்ததை அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான நேர்மையான தொல்லியல் ஆய்வாளர்கள் நிராகரித்து விட்டார்கள்.

தமது வானரப் படைகளை கொண்டு எப்படியாவது அகழாய்வு அறிக்கையை திருத்தி விட வேண்டும் என்று குழுக்களாக அனுப்பியும் பார்க்கிறது மோடி அமித்ஷா ஷெகாவத் கும்பல்.

தோண்டி எடுக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் முறையாக பாதுகாக்கப்பட்டு, திறந்தவெளி அருங்காட்சியகமாகவும், கீழடி அருங்காட்சியகமாகவும் உலகத்திற்கே வெளிச்சம் போட்டு காட்டப்பட்டு கொண்டிருக்கிறது.

அகழாய்வில் கிடைத்த பொருட்களின் பகுப்பாய்வு முடிவுகள் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் ஆய்வு நிறுவனங்களின் மூலம் பெறப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களையும் அருங்காட்சியகத்திற்குள் காட்சிக்கு வைத்துள்ளார்கள்.

எனவே தான் அமர்நாத் ராமகிருஷ்ணா கொடுத்த அறிக்கையை கிழித்துப் போடுவதோ புதைப்பதோ எரிப்பதோ மட்டும் பிரச்சனையை தீர்க்காது. தமிழர்கள் மட்டுமல்ல இந்தியர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதிலிருந்தும் கூட சுற்றுலா பயணிகளாக வந்து தமிழனின் பாரம்பரியத்தை நேரில் கண்டு வியப்பதை தடுக்கவும் முடியாது.

இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுங்கள்!

கலாச்சாரத்துறை அமைச்சர் ஷெகாவத்தின் முன் உள்ள வழிகள் இரண்டு தான். ஒன்று அறிக்கையை பரிசீலித்து ஏற்க வேண்டும்; அல்லது இந்த இந்த காரணங்களால் தவறு என்று துணிச்சலாக நிராகரிக்க வேண்டும். அப்படி செய்யாமல் கிசுகிசு பாணியில் பேட்டியில் புளுகிக் கொண்டு திரிவது ஒன்றிய அமைச்சருக்கு அழகல்ல.

ஒன்றிய அரசு அல்லது தொல்லியல் துறை ஒரு ஆய்வறிக்கையை முறையாக நிராகரிக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த அறிக்கையை முன் வைத்தவர்கள் அதன் மீது எதிர்வினையாற்றுவர். தேவைப்பட்டால் மூன்றாம் தரப்பின் பரிசீலனைக்கும், உலக நாடுகளின் மதிப்பீட்டுக்கும் கூட கொண்டு செல்ல முடியும். எது சரி என்பது வெளிச்சத்திற்கும் வரும்.

பாசிஸ்டுகள் எப்போதும் கோழைகளே!

உங்கள் தரப்பில் உள்ள ‘உண்மையை’ உரிய முறைப்படி சொல்வதற்கு அச்சம் ஏன்? முறைப்படி கீழடி ஆய்வறிக்கை தவறானது என்று துணிந்து மறுங்களேன். அதற்கு பதிலாக அகழாய்வு அறிக்கையை ஆண்டு கணக்கில் கிடப்பில் போட்டுவிட்டு, கீழடியை அகழ்ந்த ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவையும் இடமாற்றம் செய்துவிட்டு, கிசுகிசு பாணியில் ஊடகங்கள் அவதூறு செய்யாதீர்கள்.

தவெக அமைச்சர் ராஜ்மோகன் கீழடி அகழாய்வு என்பது உலக நாகரிகத்தின் தாய்மடி போன்றது. மத்திய அரசுடன் இணைந்து, கூடுதல் அறிவியல் ஆதாரங்களுடன் கீழடியின் பெருமையை உலகளவில் கொண்டு சேர்க்கத் தேவையான அனைத்து அகழாய்வுப் பணிகளும் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார். ஆனால் நடப்பாண்டில் தொல்லியல் துறைக்கு வெறும் ஒரு கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது விஜய் அரசு. இதுவெல்லாம் ஒன்றிய அமைச்சர் செகாவத்துக்கு தெரியாமல் தான் நடக்கிறதா?

உங்கள் B – டீமான விஜய் அரசாங்கத்தின் மூலம் தமிழகத்தின் அகழாய்வுக்கு நிதி ஒதுக்காமல், வெறும் ஒரு கோடியை மட்டும் ஒதுக்க வைத்து தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதி தான் என்றெல்லாம் பசப்பாதீர்கள். தோண்டி எடுத்து அதன் மீதான முடிவை அறிவிக்காமல், அறிக்கையை ஏற்காமல் அல்லது மறுக்காமல், புதிதாக பழனியில் தோண்டுகிறோம் என்று உண்மையை திரிக்காதீர்கள்!

பழங்குடியின மக்களின் கடவுளான, வேட்டுவ இனத்தின் தலைவனான முருகனை சுப்ரமணியனாகியது வரலாற்றில் சாத்தியமாய் இருக்கலாம். ஆனால் தமிழினம் விழித்தெழுந்து நிற்கும் இன்றைய நிலையில் உங்களின் சதிகள் அனைத்தும் அனைத்தும் பகல் கனவாகவே கலையும்.

உண்மை கசக்கும் தான் சங்கிகளே! நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தமிழினம் தனது தொன்மையை உலகிற்கு நிரூபித்தே தீரும். தமிழகத்தின் வாழ்வியல் இந்து மதத்தின் வர்ணாசிரமத்திற்கு நேர் எதிரானது என்பது வெளிச்சத்திற்கு வந்தே தீரும். பார்ப்பனியம் துடைப்பதால் துடைத்தெறியப்படும்.

  •  இளமாறன்

2 COMMENTS

  1. கட்டுரையில் பிரதானமாக ‘ஒன்றிய அரசு, அமர்நாத் அறிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்; இல்லையேல் நிராகரிப் பதற்கான காரணங்களை விளக்க வேண்டும்’ – என்ற பாணியில் கோரிக்கை பிரதானப்படுத்தப் பட்டுள்ளது. அது மட்டுமல்ல பிரச்சனை; அளிக்கப்பட்ட அறிக்கையை ஒன்றிய தொல்லியல் துறை/ஒன்றிய பாசிச காவி அரசு அனைத்துத் தரப்பினரும் பார்க்கத் தக்க வகையில் பொது வெளியில் வெளியிட வேண்டும்; மக்கள்/அறிவு ஜீவிகள்/சிறந்த வல்லுனர்கள் படித்துப் பார்த்து தத்தம் கருத்துக்களை பதிவு செய்யட்டும்; உலகளாவிய அளவில் அவர்நாத் ராமகிருஷ்ணாவின் கீழடி அகழாய்வு அறிக்கை விவாதத்திற்கு உட்படுத்தப் படட்டும்! பின்னர் இறுதி முடிவு எடுக்கலாம். சங்கிகள் ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் இருப்பதாலும், தமிழ் நாட்டில் அவர்களின் அடிவருடி ஆட்சி அதிகாரத்தில் இருப்பதாலும் கீழடி அகழாய்வு உண்மைகளை குழி தோண்டி புதைத்து விடலாம் எனக் காவிக் கும்பல் சதித் திட்டம் தீட்டுகிறது! தமிழ்நாட்டு மக்கள் உண்மையான விஞ்ஞானத்தின் பக்கம் – உண்மையான வரலாற்றின் பக்கம் தோள் கொடுத்து நிற்போம்! நிதியை நிலைநாட்ட – விஞ்ஞான உண்மையை நிலைநாட்ட வீதியில் இறங்கிப் போராடுவோம்! வெற்றிதனை ஈட்டுவோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here