தமிழ்நாட்டு மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கையை இன்னும் குறைந்தது 25 ஆண்டுகளுக்கு மாற்றமின்றி உறையச் செய்யும் தொகுதி மீள்வரை (மறுவரையறை) சட்டத்தை மட்டுமே தமிழ்நாடு ஏற்க வேண்டும். வேறு எவ்வகைச் சட்டத்தையும் எதிர்த்து நிற்க வேண்டும்.

கடந்த ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்ட தொகுதி மீள்வரைச் சட்ட முன்வடிவு மக்களவையில் மூன்றிலிரு பங்கு ஆதரவில்லாமல் தோற்கடிக்கப்பட்டது. இப்போது எதிர்க்கட்சிகளை அரட்டி உருட்டி விலைபேசி எப்படியாவது தொகுதி மீள்வரைச் சட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறது மோதி அரசு.

மழைக்கால கூட்டத் தொடரை முறைப்படி முடிக்காமலே விட்டு வைத்திருந்தது பாசக அரசு. எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தைக் கூட்டி மீள்வரைச் சட்டத்தை பாசக நிறைவேற்ற முயலும் என்ற அச்சம் நிலவிக் கொண்டிருந்த நிலையில், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜு மழைக்காலத் தொடரின் பகுதியாக சிறப்பு அமர்வு வருகின்ற நவம்பர் 30 ஆம் நாள் மக்களவையிலும் திசம்பர் 2 ஆம் நாள் மாநிலங்களவையிலும் நடக்கவிருக்கிறது என்று நேற்று ( 26-11-2026) அறிவித்துள்ளார். அதாவது, கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி மழைக்கால கூட்டத் தொடர் இடைநிறுத்தப்பட்டு 108 ஆவது நாளில் மக்களவைக் கூட்டப்படுகிறது.

மாநிலங்களவையைப் பொறுத்தவரை பாசகவுக்கு 152 வாக்குகள் உள்ளன. 3 இல் 2 பெரும்பான்மையை எட்ட 164 வாக்குகள் வேண்டும். இது எட்டிவிடக் கூடிய இலக்குதான்.

மக்களவையைப் பொறுத்தவரை கடந்த ஏப்ரலுக்குப் பின் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளன. திரினாமுல் காங்கிரசில் இருந்து வெளியேறிய 20 பேர், சிவசேனாவில் இருந்து கட்சி தாவிய 6 பேர், ஒய்.எஸ்.ஆர் காங்கிரசை சேர்ந்த நான்கு பேர், சிரோமணி அகாலிதள எம்.பி. ஒருவர் ஆகியோர் தொகுதி மீள் வரை சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க உள்ளனர்.

சிவசேனா, என்.சி.பி. ( 8 பேர்) , திமுக ( 22 பேர்), சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்களின் ஆதரவை பெற மோதி பெரிதும் முயன்றுவருகிறார் என்று பாசக ஆதரவு ஊடகங்கள் பேசி வருகின்றன.

540 பேரும் அவையில் இருந்தால் 3 ல் 2 பெரும்பான்மை என்பது 360 ஆகும். ஒரு மூத்த பாசக தலைவர் தமக்கு 358 பேரது ஆதரவு இருக்கிறதென்று சொல்வதாக ஆங்கில இந்து நாளிதழில் வெளிவந்துள்ளது.

தொகுதிகளின் எண்ணிக்கை மக்கள்தொகைக்கு ஏற்ப உயர்த்தப்பட்டால் தென்மாநிலங்கள் வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகும் என்ற அச்சம் வலுப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கையும் எவ்விதப் பாகுபாடும் இன்றி 50% உயர்த்தப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளிக்கிறார் என்று சொல்லபடுகிறது. அதாவது மொத்த மக்களவை இருக்கைகளில் ஒவ்வொரு மாநிலத்துக்குமான தொகுதிகளின் தகவு (விகிதம்) பாதிக்கப்படாது என்கிறார்கள். இதனால் தென் மாநிலங்களுக்குப் பாதிப்பில்லை என்றும் இது நியாயமான தொகுதி மீள்வரையாக ( Fair Delimitation) இருக்கும் என்றும் பேசப்படுகிறது.

திமுக தலைமையிலான முந்தைய தமிழ்நாடு அரசு அமைத்த ஒன்றிய – மாநில உறவுகள் பற்றிய உயர்நிலைக் குழு (குரியன் ஜோசப் குழு), தன் அறிக்கையின் முதல் பகுதியில், நியாயமான தொகுதி மீள்வரை குறித்துப் பரிந்துரைகள் வழங்கியிருக்கிறது:

முதலாவதாக, தென் மாநிலங்களுக்கும் வட மாநிலங்களுக்கும் இடையே மொத்தக் கருவுறு தகவிலான (TRF) இடைவெளி பெரிதாக இருப்பதால் அடுத்த 100 ஆண்டுகளுக்குத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றமின்றி உறையச் செய்ய வேண்டும்.

படிக்க: பாராளுமன்ற தொகுதி மறுவரையறை: தென்மாநிலங்களை அரசியல் ரீதியில் அடிமையாக்க வரும் பாசிச ஆயுதம்

இரண்டாவதாக, தொகுதி மீள்வரை ஆணையத்திற்கு நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும், நீதிமன்றங்களும் வரம்புக்குட்பட்ட அளவில் கடிவாளமிடக் கூடிய சட்டத் திருத்தங்கள் வேண்டும். இப்போதுள்ள தேர்தல் ஆணையம் போலவே பாசக அரசு அமைக்கக் கூடிய தொகுதி மீள்வரை ஆணையமும் இந்துத்துவ ஆட்சியாளர்களின் தாளத்துக்கு ஆடுவதாகவே இருக்கக் கூடும்.

மூன்றாவதாக, மாநிலங்களவையில் அனைத்து மாநிலங்களுக்கும் சரிநிகரான பெயராண்மை (பிரதிநிதித்துவம்) கிடைக்கச் செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் செய்தால்தான் அது நியாயமான தொகுதி மீள்வரையாக இருக்கக் கூடும் என்பது உயர்நிலைக் குழுவின் கருத்தாகும்.

இன்றைய நிலையில் ஒன்றிய அரசு அமைக்கும் தொகுதி மீள்வரை ஆணையம் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, இந்தியத் தேர்தல் ஆணையர் ஆகியோரைக் கொண்ட அமைப்பாக இருக்கும். மோதி அரசு ஏற்கெனவே நீதித்துறை, தேர்தல் ஆணையம், ஆர்.பி.ஐ., அமலாக்கத் துறை, என்.ஐ.ஏ., ஆகியவற்றைக் கைப்பற்றி விட்டது என்பது நாடறிந்த உண்மையாகும். இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வாக்குத் திருட்டுக் குற்றத்திற்காகப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாடெங்கிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஒரு வாக்குக்கு ஒரு மதிப்பு என்பதன் பெயரால் தொகுதி மீள்வரை செய்தே ஆக வேண்டும் என்று சொல்லும் பாசக, ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற உரிமையை வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) மூலமாக விழுங்கி விட்டது. இன்று நாடெங்கிலும் 13 கோடி வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது.

படிக்க: பாசிச மோடி அரசின் கீழ் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை: நாட்டிற்கே ஆபத்து!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக இசுலாமியர்கள் போராட்டம் நடத்தி அதைத் தடுத்து நிறுத்தியிருந்தனர். ஆனால், பாசக ஆட்சியின் தேர்தல் ஆணையம் SIR என்ற பெயரில் இசுலாமியர்களின் வாக்குரிமையைப் பறித்து அவர்களைக் கொல்லைப்புற வழியில் இரண்டாம்நிலை குடிமக்களாக்கும் வேலையைக் செய்து கொண்டிருக்கிறது.

வாக்குரிமையை உறுதிசெய்ய வேண்டிய தேர்தல் ஆணையம் அதற்கு நேரெதிராகக் கோடிக்கணக்கானோரின் வாக்குரிமையைப் பறித்துக் கொண்டிருக்கும்போது, அவ்வாணையம் நியாயமான தொகுதி வரையறையை மேற்கொள்ளும் என்று நம்பி அச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது போல் அடிமுட்டாள்தனம் வேறு ஏதாவது இருக்க முடியுமா?

50% தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது நியாயமான தீர்வா? மக்களவையிலும், மாநிலங்களவையிலும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் உள்ள இருக்கைகளின் தகவு அடிப்படையில் சட்டங்கள் இயற்றப்படுவதோ திருத்தப்படுவதோ தடுக்கப்படுவதோ இல்லை. மாறாக மொத்த எண்ணிக்கை அடிப்படையில்தான் அது செய்யப்படுகிறது. நேர்வைப் பொறுத்து எளிய பெரும்பான்மை அடிப்படையிலோ 3 இல் 2 பங்குப் பெரும்பான்மை அடிப்படையிலோ முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இன்றளவில் உத்தரப்பிரதேசம் தமிழ்நாட்டை விடவும் 40 இடங்கள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இப்போது முன்மொழியப்படுவது போல் , 50% உயர்த்தினால் மக்களவையில் உத்தரபிரதேச இடங்கள் 120 ஆக உயர, தமிழ்நாட்டு இடங்கள் 60ஆக உயரும். உ.பி.க்குத் தமிழ்நாட்டை விடவும் 60 இடங்கள் ( அதாவது 60 வாக்குகள்) கூடுதலாக இருக்கும். அதாவது ஒரு சட்டத்தை இயற்றுவதற்கோ திருத்துவதற்கோ தடுப்பதற்கோ தமிழ்நாட்டுக்குள்ள வாய்ப்புகள் மேலும் குறைந்து போகும். ஒரே தகவில் இருக்கைகளை உயர்த்தி விட்டால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை என்பதற்கு அறிவுக்குகந்த அடிப்படை இல்லை.

2021இல் கோவிட் பெருந்தொற்று காரணமாக உலகின் பல நாடுகளும் பத்தாண்டுக்கு ஒரு முறை மேற்கொள்ளும் மக்கள்தொகைக் கணிப்பை (சென்சஸ்) தள்ளிப்போட்டன. ஆனால், 2023ஆம் ஆண்டே இந்தியா, நைஜிரியா, சிரியா போன்ற நாடுகளைத் தவிர சுமார் 180 நாடுகளும் சென்சஸ் நடத்தி முடித்து விட்டன.

படிக்க: தோல்வியடைந்த தொகுதி மறு வரையறை மசோதாவும், அமித்ஷாவின் பொய்களும்!

SIR நடத்துவதற்கு இவ்வளவு முனைப்புக் காட்டும் மோதி அரசு 2021இல் இருந்து 2026 வரை சென்சஸ் நடத்தாமல் தள்ளிப்போட்டது. 2001இல் இயற்றப்பட்ட தொகுதி மீள்வரைச் சட்டப்படி 2026 க்குப் பின்பு நடத்தப்படும் மக்கள்தொகைக் கணிப்பின் அடிப்படையில் தொகுதி மீள்வரை செய்தாக வேண்டும். தொகுதி மீள்வரையை மனத்தில் கொண்டுதான் மோதி அரசு சென்சஸ் நடத்தாமல் 5 ஆண்டுகளைக் கடத்தியுள்ளது.

இப்போது மொத்த இருக்கைகளை 50% உயர்த்துவதாக அமித் ஷா சொல்வதன் நோக்கம் மொத்த எண்ணிக்கையை 800க்கு மேல் உயர்த்தி விட்டு தொகுதிகளின் எல்லைகளை மீள்வரை செய்வதே ஆகும். அசாமிலும் காசுமீரிலும் இசுலாமியர்களின் வாக்குகளைப் பொருளற்றதாக்கும் நோக்கில் தொகுதி மீள்வரை செய்து விட்டது மோதி அரசு. அதே பாணியில் நாடெங்கிலும் தொகுதி எல்லைகளை மாற்றியமைப்பதன் மூலம் பாசக வெற்றி பெறக்கூடிய இடங்களை 10% உயர்த்திக் கொள்ள முடியும் என்பதே மோதியின் திட்டமாகும். இதன் மூலம் 2029ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதோடு, பெரும்பான்மையையும் பெருமளவு உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதே மோதியின் விருப்பம்.

தொகுதி மீள்வரையைப் பொறுத்த வரை 50% உயர்த்துவதாக ஆசை வார்த்தை காட்டி விட்டு, பின்னர் தொகுதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாநிலங்களின் எல்லைகளை மறுவரையறை செய்வதே ஆர்.எஸ்.எஸ். திட்டமாகும். அதாவது, இந்தியாவை மொழிவழி மாநிலங்களாக பிரிக்காமல் 75 ஜன்பத் மண்டலங்களாகப் பிரிப்பதே ஆர்.எஸ்.எஸ். திட்டமாகும்.

சாவர்க்கர், ஹெட்கேவர், கோல்வார்க்கர், சியாம் பிரசாத் முகர்ஜி போன்றோர் அன்றைக்குக் கொண்டிருந்தவை கருத்துகளும் இலட்சியங்களும் ஆகும். ஆனால், இவற்றையெல்லாம் இன்றைக்கு முழு நீள வழித்தட வரைபடத்துடன் ஆர்.எஸ்.எஸ். செயல்படுத்திவருகிறது. இவற்றைத் திட்டமிட்டபடி செய்து முடிப்பதற்குத் தொடர்ச்சியாக அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதிலும், மென்மேலும் விரிவாக்கிக் கொள்வதிலும் குறியாக இருக்கிறது.

பாசக, தேசிய சனநாயகக் கூட்டணி தவிர அனைத்துக் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் மீது அறவே நம்பிக்கை இழந்து விட்ட நிலையில் மோடியின் கைப்பாவையாக இவ்வாணையம்தான் தொகுதி மீள்வரை செய்யப் போகிறது. இவ்வாணையம் சனநாயகத்தின் பக்கம் நின்று சட்டப்படி செயல்படும் என்று எதிர்பார்க்க முடியுமா?

ஒன்றிய பாசக அரசு ஆட்சியில் நீடிக்கும் வரை தொகுதி மீள்வரை என்பதற்கு இணங்கிப் போவது மோதி – அமித்ஷா பின்னியுள்ள சதி வலையில் மாட்டிக் கொள்வதற்கு ஒப்பாகும். எனவே, அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொகுதிகளின் எண்ணிக்கையை உறையச் செய்வதுதான் இப்போதிருக்கக் கூடிய ஒரேஒரு வாய்ப்பு.

படிக்க: தேசிய இனங்களின் உரிமைகளை ஒடுக்கும், மாநில உரிமைகளைப் பறிக்கும் தொகுதி மறு சீரமைப்புச் சட்டம்.

தொகுதி மீள்வரைக்கும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டுக்கும் முடிச்சுப் போடும் மோதி அரசின் சூழ்ச்சிக்கு எதிர்க்கட்சிகள் இரையாகி விடக் கூடாது. இப்போதுள்ள எண்ணிக்கைக்குள்ளேயே பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டையும் செயலாக்க முடியும்.

மக்களவை, மாநிலங்களவையில் தொகுதி மீள்வரைக்கான சட்ட முன்வடிவை எதிர்த்து வாக்களித்து தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறியடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு :

தியாகு, பொதுச்செயலாளர்,
தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்

செந்தில், ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி

மனோகரன், மாநில செயலாளர்,
சிபிஐ(எம்-எல்) ரெட் ஸ்டார்

மணி, மாநில அமைப்பாளர்,
பாட்டாளி வர்க்க சமரன் அணி

திருச்சி செழியன், பொதுச்செயலாளர்,
மக்கள் அதிகாரம்

மதியவன் இரும்பொறை, பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மார்க்சிய கழகம்

ஆ. தேவதாசு, தமிழ்நாடு பொதுவுடமை இயக்கம்

சி. ராசன், கர்நாடக தமிழ் மக்கள் உரிமை முன்னணி

மா.சேகர், தொழிலாளர் சீரமைப்பு இயக்கம்

– தமிழ்நாடு – தொடர்புக்கு : 99419 31499.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here