இது ‘ரீல்ஸ்’ காலமா? வரலாற்று உண்மை பேசும் காலமா?

அனைவருக்கும் வணக்கம்!

மன்மதன்கள் எல்லாம் மாண்புமிகுக்களாக உலாவரும் இந்தக் காலத்தில், எனது வணக்கம் மன்மத வணக்கமாக ஆகிவிடக்கூடாது என்பதால், உழைக்கும் மக்களின் சமத்துவ வணக்கத்தை முதற்கண் உரித்தாக்குகிறேன்!

பிற்பகல் இடைவேளையில்  எல்லோரும் வயிற்றுப் பசியாற்றிவிட்டு அமர்ந்திருக்கிறீர்கள்.

கடந்த 18 ஆண்டுகளாக தமிழ் மக்கள் இசைவிழா நடைபெறாததால் நமக்கோ பெரும் வரலாற்றுப் பசி. நம்மை இப்படிப் பட்டிணி போட்டது திருவாளர் மோடிதான்.  பாபர் மசூதி இடிப்பு, CAA – NRC – NPR போன்ற திட்டங்கள் மூலம் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள், பண மதிப்பிழப்பு என மக்களுக்கு பாதகமான திட்டங்களை மோடி செயல்படுத்தியதால் அவற்றை எதிர்த்து நாம் போராட்டங்கள் நடத்த வேண்டி இருந்ததனால் ஒரு 12 ஆண்டு காலம் தமிழ் மக்கள் இசை விழாவை நடத்த முடியாமல் போனது.‌

வலுவாக இருந்த நமது குடும்பத்தில்  நமது குடும்பத் தலைவர் திடீரென இடறி விட்டதால் சில தம்பிகள் நம்மிடம் இருந்து விலகி தனிக் குடித்தனம் நடத்தச் சென்று விட்டனர். நமது குடும்பத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருந்ததால் தமிழ் மக்கள் இசை விழாவை ஒரு ஆறாண்டு காலம் நடத்த முடியாமல் போனது. இனி பிரிந்து சென்ற தம்பிகளின் பிள்ளைகளாவது மீண்டும் இந்தக் குடும்பத்தில் சேருவார்கள் என்று நம்புகிறேன்.

இன்று காலை முதல் நடைபெற்ற இந்த ஆய்வரங்கம், கருத்தரங்கத்தில், கீழடி நாகரிகத்தின் தொன்மை குறித்தும், வடக்கிலிருந்து எழுதப்பட்ட வரலாற்று மோசடிகள் குறித்தும், நமது தேசிய இன உணர்வுகளைச் சிதைக்க நடக்கும் சூழ்ச்சிகள் பற்றியும், அழுகி நாறும் வேத நாகரிகம் குறித்தும், தெற்கு திசைதான் இந்திய வரலாறு என்பது பற்றியும் தோழர்களும் அறிஞர்களும் மிகச் சிறப்பாகப் பேசி அமர்ந்திருக்கிறார்கள்.

இன்றைய நவீன டிஜிட்டல் உலகத்தில் நான்கு பத்திகளைப் படிப்பதற்குள் நாக்கு தள்ளிவிடும் என்பதால், ஒரே பத்தியில் ‘மீம்ஸ்’ போடும் காலம் இது! அந்த மீம்ஸைக் கூடப் படிக்க நேரமில்லாமல் 30 விநாடிகளில் பார்த்துவிட்டு நகரும் ‘ரீல்ஸ்’ காலமும் இதுதான்!

30 விநாடி ரீல்ஸ்களும், 15 விநாடி ஷார்ட்ஸ்களும் மனித மூளையின் யோசிக்கும் நரம்புகளை எப்படி மரத்துப் போகச் செய்கின்றன தெரியுமா? இன்றைக்குச் சமையல் செய்வதிலிருந்து அரசியல் வரை எல்லாவற்றையும் 15 விநாடியில் பார்த்துவிட்டுப் போகிறோம். இந்த முதலாளித்துவத் தொழில்நுட்பம் நம்மைச் சிந்திக்கவிடாமல் ஆக்குகிறது. ஆனால், அதற்காக “மாற்றம்” என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான், இந்த மதிய வேளையிலும் நாம் மணிக்கணக்கில் பேச வேண்டியிருக்கிறது. 3000 ஆண்டுகால வரலாற்றை 30 விநாடியில் புரிய வைக்க முடியாது; வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு பொறுமை வேண்டும்!

வயிற்றைக் கிள்ளும் பசியைவிடப் பெரிய பசி வரலாற்றுப் பசி. நமக்கோ 18 ஆண்டுகால வரலாற்றுப் பசி. அந்த வரலாற்றுப் பசியைப் போக்க, கீழடி நாகரிக உண்மையை மார்க்சிய வழிகாட்டலில் இப்பொழுது சுவைத்து நாம் பசியாறுவோம்!

பூமிப் பந்திலிருந்து மனித தோற்றம் வரை: வரலாற்றுப் பின்னணி

கீழடியை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், இந்த உலகத்தின் தோற்றத்திலிருந்து தொடங்க வேண்டும்.

இந்த பூமிப் பந்து தோன்றி 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன.

பூமியில் முதல் உயிரினம் தோன்றியது 420 கோடி ஆண்டுகளுக்கு முன்பு.

23 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ‘ஜுராசிக் பார்க்’ படத்தில் நாம் பார்த்த டைனோசர்கள் வாழ்ந்தன. அதன் பிறகு விண்கோள் ஒன்று பூமியில் மோதியதால் டைனோசர்கள் முற்றிலும் அழிந்து போனதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலப்பரப்பாக இருந்த பூமிப் பந்து கண்டங்களாகப் பிரியத் தொடங்கியது. ஆப்பிரிக்காவோடும் மடகாஸ்கரோடும் ஒட்டி இருந்த இந்திய நிலப்பரப்பு தனியாகப் பிரிந்து வந்த காலம் அது. மனித இனம் தோன்றுவதற்கு முன்பே கண்டங்கள் பிரிந்து விட்டதால் மனிதர்களும் சேர்ந்து கண்டங்களோடு சேர்ந்தே வந்தார்கள் என்பது வரலாற்று ரீதியாக ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.

படிக்க:

 கீழடி: ஆரியம் செரித்து விட முழுங்கும் இரும்புக் கடப்பாறை! | Documentary | EZHUGA

 கீழடி ஆய்வு முடிவுகளை குழி தோண்டிப் புதைக்கப் பார்க்கும் தொல்லியல் துறையின் உள்ளடிகள்!

அதன் பிறகுதான் இந்த பூமியில் நுண்ணுயிரிகள், ஊர்வன, பறப்பன எனப் பல்லுயிர்கள் தோன்றி கடைசியில் 30 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதி மனித இனம் தோன்றியது.

ஆனால் மத நூல்கள் என்ன கதை அளக்கின்றன? பிரம்மா முதலில்  மனதைப் படைத்தானாம். பிறகு அகங்காரம் மற்றும் முக்குணங்களைப் படைத்தானாம், அதன் பிறகு மனிதனையும் விலங்குகளையும் படைத்தானாம். மனம் மனித மூளையின் ஒரு வெளிப்பாடு, மனிதன் தோன்றிய பிறகே மனம் உருவாகும் என்கிற எளிய உண்மைக்கு மாறாக மனுஸ்மிருதி இத்தகைய மூடத்தனத்தைப் போதிக்கிறது. உயிரியலையும் பரிணாம வளர்ச்சியையும் மூடி மறைத்துப் புராணப் புளுகுகளை வரலாறாக மாற்றப் பார்க்கிறார்கள்!

மனித இடப்பெயர்ச்சியும் ஆதி நாகரிகங்களின் மலர்ச்சியும்

மனித குலத்தின் வரலாறு என்பது உழைப்போடு சேர்ந்த அதன் இடப்பெயர்ச்சியின் வரலாறு!

20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்ரிக்காவில் தோன்றிய ஹோமோ எரக்டஸ் எனும் ஆதிமனிதன், உணவு தேடி அங்கிருந்து வெளியேறி உலகின் பல பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்த போது உணவுக்காக வேட்டையாடப் பெரும் கற்களைப் பயன்படுத்தினான்.

மனிதர்கள் ஏதோ நேற்று வந்தவர்கள் அல்ல! 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளூர் மாவட்டம் அத்திரம்பாக்கத்தில் நம் ஆதி மூதாதையர் கல்லைச் சீவி ஆயுதம் செய்திருக்கிறான்! ஆப்பிரிக்காவிலிருந்து வந்த ஆதி மனிதர்கள்தான் இவர்களும் என்பதை ஆய்வுகள் கூறுகின்றன.

மத்தியப் பிரதேசத்தின் பீம்பேட்காவில் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதிகால ஹோமோ எரக்டஸ் மனிதன்  கற்கருவிகளைப் பயன்படுத்தி இருக்கிறான்.

உலகமே உறைந்து கிடந்த காலத்தில், இந்தியாவில் அதுவும் நம் மண்ணில் இந்தத் தமிழ் நிலத்தில் மனிதனின் கைத்தடம் பதிந்திருக்கிறது! ஆனால், கடும் இயற்கைச் சீற்றங்களால் இந்த ஹோமோ எரக்டஸ் எனும் ஆதி மனித இனம் ஒருகட்டத்தில் முற்றிலுமாக அழிந்து போனது.

3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ சேப்பியன்ஸ் எனும் நவீன மனித இனமும்.   ஆப்பிரிக்காவில்தான் தோன்றியது. ஒரு காலத்தில் அங்கு நிலவிய கடும் வறட்சியாலும் பஞ்சத்தாலும் இவர்கள் பல்வேறு திசைகளில் உலகமெங்கும் இடம் பெயர்ந்தனர்.

நைல் நதி நோக்கிச் சென்றவர்கள் எகிப்து நாகரிகத்தை உருவாக்கி, கி.மு. 3100-ல் பிரமிடுகளைக் கட்டினர்.

யூப்ரடீஸ் – டைகரீஸ் நதிப் பகுதிக்குச் சென்றவர்கள் மெசபடோமியா நாகரிகத்தை (கி.மு. 4000-3500) உருவாக்கி, அரண்மனைகளைக் கட்டினர்.

சிந்து நதிப் பகுதிக்குச் சென்றவர்கள் சிந்துவெளி நகர நாகரிகத்தை (கி.மு. 3000-1900) உருவாக்கினர். சிந்து வெளியில் மேற்கொள்ளப்பட்ட அகழாவுகள்கள் அங்கே ஆன்மீகச் சின்னங்களோ, கோயில்களோ, அரண்மனைகளோ எதுவுமே இல்லை என்று சொல்லுகிறது.

மத்திய ஆசியாவின் ஸ்டெப்பி புல்வெளி நோக்கியும் சிலர் நகர்ந்தனர். இவர்களே தங்களை ஆரியர்கள் என்று சொல்லிக்கொண்டு பிற்காலத்தில் இந்தியாவுக்குள் நுழைந்தனர் (கி.மு 1900).

கிழக்கு நோக்கியும் (சீனா) சிலர் சென்றனர். இந்திய தீபகற்பத்தின் தெற்கு நோக்கி வந்த மனிதர்கள் உருவாக்கியதுதான் வைகை கீழடி நகர நாகரிகம்!

இப்படி ஒரு நகர நாகரிக வாழ்க்கையை அமைப்பதற்கான மனித இனத்தின் பயணக் காலம் சுமார் 65000 ஆண்டுகள் ஆகும்.

இந்த மனிதப் பயணம் எப்படி இருந்திருக்கும்?

65000 ஆண்டுகளுக்கு முன்பு அவன் நடக்கத் தொடங்கிய காலங்களில் அவனது கால்களில் ‘டாடா’ செருப்போ, ‘அடிதாஸ்’ ஷூவோ இல்லை! வழிகாட்டி தார்ச் சாலைகளோ, மண் சாலைகளோ இல்லை. பயணிக்க பைக்குகளோ, கார்களோ, பேருந்துகளோ, ரயில்களோ, விமானங்களோ அன்று இல்லை! போகும் வழியில் இளைப்பாற, பசியாற ‘ஹைவே மோட்டல்களோ’, ‘A2B’ உணவகங்களோ கிடையாது; தாகம் தீர்க்கத் தண்ணீர் பாட்டில்கள் கிடையாது.

முட்களும் கற்களும் பாதங்களைப் பதம் பார்க்க, வெறுங்கால்களோடு நடந்த உழைப்பு அது! நீரின்றி, உணவின்றி, விலங்குகளின் தாக்குதலால் அழிந்து போனவர்கள் எண்ணற்றோர். எஞ்சியவர்களே அடுத்த இடத்தை அடைந்தார்கள். உழைப்பின் தொடக்கம் நடையில்தான் தொடங்குகிறது. நடப்பது என உழைப்பை அவன் செய்யவில்லை என்றால் தான் தோன்றிய இடத்திலேயே அவன் மாண்டு போகிறிருப்பான்.

இன்றைய தேதியிலும்கூட நாம் நடக்கிறோம். எதற்காக? உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்பையும் சர்க்கரையையும் குறைப்பதற்காக! இதுவும் ஒரு வகை உழைப்புதான். ஆனால் இது நாகரிகத்தை உருவாக்குவதற்கான உழைப்பு அல்ல.

அன்று உணவின்றி மாண்டார்கள்; இன்று மிதமிஞ்சிய உணவால் மாண்டு கொண்டிருக்கிறோம்! அன்று மாண்டவர்கள் வரலாற்றை விட்டுச் சென்றார்கள். இன்று மாள்பவர்களோ வரலாறு இல்லாமலேயே மறைந்து போகிறார்கள்.

ஸ்டெப்பி புல்வெளியும் கங்கைச் சமவெளியும்: ரௌடிசத்தின் வரலாறு

யூப்ரடீஸ்-டைகரீஸின் மெசபடோமியா, நைல் நதியின் எகிப்து, சிந்துவெளி மற்றும் வைகைக் கீழடி, பொருநை நதிக்கரை சிவகளை, ஆதிச்சநல்லூர். தூத்துக்குடி கடற்கரை பட்டணமருதூர், கிருஷ்ணகிரி மயிலாடும்பாறை, ஈரோடு கொடுமணல் என ஒட்டு மொத்தத் தமிழ் நிலத்தின் மக்கள் வேளாண்மையிலும் கைவினைத் தொழில்களிலும் கடல் வணிகத்திலும் சிறந்து விளங்கியபோது, ஸ்டெப்பி புல்வெளிப் பகுதியிலிருந்து மாடுகளை மேய்க்கும் நாடோடிக் கூட்டம் ஒன்று கைபர் போலன் கனவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தது (கி.மு 1900).

சிந்து சமவெளி உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்தவர்கள் வேளாண்மை  மட்பாண்டம், நெசவு, மணிகள் செய்தல் என நுணுக்கமான வேலைகளைச் செய்தவர்கள்.

விலங்குகளை எதிர்த்துப் போராடி நாடோடிகளாக வாழ்ந்த ஒரு முரட்டு ரௌடிக் கூட்டம், இந்த மென்மையான உழைக்கும் மக்களை பலத்தால் வீழ்த்துவது எளிதான ஒன்று!

படிக்க:

 கீழடியே இந்திய வரலாற்றின் திறவுகோல்

 அறிவியல்–தொழில்நுட்பத்தில் இந்தியா ஏன் பின்தங்கியது? கீழடி உணர்த்தும் பாடம்!

ஒரு ஊரில் அமைதியாக விவசாயம் செய்து, வீடுகட்டி வாழும் மக்களை, கையில் ஆயுதத்தோடு வரும் ரௌடிக் கூட்டம் மிரட்டி அடக்குவதைப் போலத்தான் ஆரியத்தின் இந்திய வருகை இருந்தது!

இந்தியாவுக்கள் நுழைந்த இவர்கள் கங்கை-யமுனை நதிகளுக்கிடையில் அங்கு வாழ்ந்த மக்களை பலத்தாலும் சூழ்ச்சியாலும் வீழ்த்தி தங்கள் ஆளுகையின் கீழ் கோண்டு வந்து அதை ஆரிய வர்த்தகம் என்றனர். இங்குதான் அவர்கள் வேதங்களையும் சாஸ்திரங்களையும் எழுதிக் குவித்தார்கள். எழுதிக் குவித்தார்கள் என்பதைவிட பாடித் தள்ளினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அவர்கள் எதையும்  உற்பத்தி செய்யவில்லை; உழைப்பவனின் உற்பத்தியைப் பிடுங்கினார்கள். அதற்கு ‘வர்ண தர்மம்’ என்று மனுவின் பெயரில் சட்டம் எழுதினார்கள்.

தெற்கே வாழ்ந்த மக்கள் செழுமையான நகர நாகரிக வாழ்க்கை வாழ்ந்தவர்கள். அவ்வளவு எளிதில் ஆரியர்களால் விந்திய மலையைத் தாண்டி நுழைய முடியவில்லை.

என்அவர்கள் தெற்கே நகர்ந்தபோது, மது-மாது, சூது-வாது உள்ளிட்ட அனைத்து தாரக மந்திரங்களையும் பயன்படுத்தி கூவத்தூரைப் போல மன்னர்களை மயக்கித் தம் வசப்படுத்தி, நமது மக்களை அரச பலத்தாலும் ஆன்மீகப் பொய்களாலும் வீழ்த்தினார்கள். இன்றும்கூட நாம் வீழ்ந்துதானே கிடக்கிறோம்!

மார்க்சிய அறிஞர்கள் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?

“ரிக் வேத காலம் என்பது ஒரு கிராமப்புற மேய்ச்சல் சமூகம்” என்கிறார்  ராகுல சாங்கிருத்தியாயன்

“வேத காலத்தில் உற்பத்தி எதுவும் இல்லை. அவர்களின் அடிப்படைத் தொழிலே மேய்ச்சல்தான்” என்கிறார்  வரலாற்று ஆய்வாளர்  இர்ஃபான் ஹபீப்.

“இந்திய வரலாறு என்பது அரசர்களின் வரலாறு அல்ல; அது உற்பத்தி சாதனங்கள் மற்றும் உற்பத்தி உறவுகளின் வரலாறு.

நாடோடிகளாக வாழ்ந்த ஆரியர்கள் நகரங்களை அழித்தவர்கள், நாகரிகத்தைச் சிதைத்தவர்கள்.

அவர்கள் எந்த உற்பத்திக் கருவிகளையும் உருவாக்கவில்லைஎன்பது டி.டி. கோசாம்பி  அவர்களின் கருத்து.

இந்திய நாகரிகத்தைத் தோற்றுவித்தவர்கள் ஆரியர்கள் அல்ல!” என்கிறார் ரஷ்ய ஆய்வாளர் வி.பி. அலெக்ஸீவ்.

ரஷ்ய நாட்டுக்காரனுக்குத் தெரிந்த வரலாறுகூட நமக்குத் தெரியாமல் போனதுதான் வேதனை! ஆனால் அந்த வேதனைக்கு இன்று முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது கீழடி!

சரஸ்வதி நதி என்று இன்று கதை விடுகிறார்களே… காகர்-ஹக்ரா நதியைத்தான் அப்படிச் சொல்கிறார்கள். ‘சரஸ்’ என்றால் நீர்நிலை, ‘வதி’ என்றால் கொண்டது. அதிக நீரைக் கொண்டது சரஸ்வதி. சிந்துவின் துணை நதிகளான ஜீலம், செனாப், ராவி, பியாஸ், சட்லஜ் போல அதுவும் ஒரு துணை நதி. இன்று அந்த நதி கிடையாது.

படிக்க:

 வேத நாகரிகத்தைத் துரத்தும் கீழடி!

 கீழடி ஆய்வு முடிவுகளை வெளியிடு! இந்திய வரலாற்றை தென்னிந்தியாவிலிருந்து திருத்தி எழுது!

இந்தியாவில் எத்தனையோ நதிகள் ஓடின. காலநிலை மாற்றத்தால் அவற்றில் பல புதைந்து போயின. அண்மையில்கூட திருப்பத்தூருக்கு அருகில் ஒரு கிராமத்தில் மேடான நிலங்களில் டன் கணக்கில் மணல் அள்ளினார்கள். ஒரு காலத்தின் ஆற்றப்படுகைதான் இன்று விளை நிலங்களாக உள்ளது.

அந்த நதியை சிந்துவெளி நாகரிகத்தோடு இணைத்து சிந்து சமவெளி நாகரிக வரலாறுதான் வேதங்களின் வரலாறு, தங்களின் வரலாறு அதுதான் இந்திய வரலாறும் எனக் கதை அளக்கிறார்கள்.

சிந்துசமவெளி நாகரிகம் முடிவுறும் காலத்தில் அதாவது கி.மு 1900 வாக்கில்தான் ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைகின்றனர். ஏற்கனவே முடிவுக்கு வந்த ஒரு நாகரிகத்தை புதிதாக வந்தவர்கள் தங்களுடைய நாகரிகம் என்று உரிமை கோருவது காலப் பொருத்தமற்றுது.

வரலாறு என்பது உற்பத்தோடு தொடர்புடையது. உற்பத்தியில் ஈடுபடாத ஒரு மேய்ச்சல் சமூகத்திற்கு ஏது வரலாறு?

உழைப்பு, உற்பத்திக் கருவிகள் மற்றும் உபரி உற்பத்தி (மார்க்சியப் பார்வை)

“உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிதான் சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு — அதாவது நாகரிக கட்டத்திற்கு உயர்த்துகிறது” என்பார் ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ். அதுதான் கீழடியில் நடந்துள்ளது!

மனிதனின் முதல் உழைப்பு — உணவுக்காக நடப்பதும் வேட்டையாடுவதும்தான்!

தற்காப்புக்கு எறிந்த கற்கள், பின்னர் கூர்மையான ஆயுதங்களாயின.

கழிகளின் முனையில் விலங்கு எலும்புகளின் நுனியில் கற்களைச் சொறுகி அதை ஈட்டிகளாக்கினர். உற்பத்திக் கருவிகள் பிறந்தன!

வேட்டை கிடைக்காதபோது, இயற்கையாய் விளைந்து கிடைத்த தானியங்களை உண்டனர்.

பின்னர் அதையே விதைத்து வேளாண்மை செய்தனர். வேளாண்மையை அதிகப்படுத்த மரக்கலப்பைகள் பிறந்தன.

இரும்பும் உபரி உற்பத்தியும்:

இரும்பின் கண்டுபிடிப்பு வேளாண்மை உற்பத்தியைப் பல மடங்கு பெருக்கியது. ஒரு மூட்டை நெல் விளைந்த இடத்தில் பத்து மூட்டை விளைகிறது! ஒன்பது மூட்டை உபரி நெல் கிடைக்கிறது!

இங்கேதான் மார்க்சியத்தின் ‘மூலதனம்’ (Das Kapital) பேசுகிறது:

எகிப்திலும் மெசபடோமியாவிலும் அந்த ஒன்பது மூட்டை உபரியைப் பிடுங்கிக் கொண்ட நிலவுடைமையாளர்களும் அரசர்களும், தங்களின் பெருமையைப் பேசப் பிரமிடுகளையும் அரண்மனைகளையும் கட்டினார்கள்!

சிந்துவெளியிலும் கீழடியிலும் உபரியைப் பிடுங்கும் மன்னர்களோ, ஒடுக்குமுறை அமைப்புகளோ இல்லை! கிடைத்த உபரியை தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு மிகவும் நேர்த்தியான நகரக் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்தார்கள். உழைக்கும் நேரம் போக மற்ற நேரத்தில் ஓய்வெடுத்தார்கள் (Leisure Time).

அவர்கள் பயன்படுத்திய செங்கற்கள் இன்றும்கூட அதாவது 2600 ஆண்டுகள் கழித்தும்கூட அழியாமல் உருக்குலையாமல் அப்படியே இருக்கிறது. அவர்கள் அமைத்த கழிவுநீர் வாய்க்கால்கள் கூட அப்படியே உள்ளன.

1924 ஆம் ஆண்டு சிந்து சமவெளி வழியாக ரயில் பாதை அமைக்க ஆங்கிலேயன் முயன்ற போது கிடைத்த செங்கற்கள் புதிய கட்டுமானத்திற்காகப் பயன்படுத்தும் அளவிற்கு அங்கு கண்டெடுக்கப்பட்ட செங்கற்கள் தரமாக இருந்தன என்கிறது தொல்லியல் ஆய்வு முடிவுகள்.

ஆனால் இன்று லாபம் மட்டுமே நோக்கமாகக் கொண்ட இந்த முதலாளித்து உற்பத்தி சமூகத்தில் உற்பத்தியாகும் செங்கல் அது கட்டுமானத்தின் போது தட்டினால் பட்டென உடைந்து போகிறது. ஊழல் படிந்த அதிகார வர்க்கங்களால் நகராட்சிகள் ஊராட்சிகளில் அமைக்கப்படும் சாக்கடைகள் சில நாட்களிலேயே சின்னாபின்னமாக சிதைந்து போகிறது.

கீழடி உணர்த்தும் பாடம் ஒன்றுதான். சொத்து சேர்க்கும் வெறி இல்லாததால் அங்கு ஊழலும் இல்லை. அதனால் காலத்தால் அழிக்க முடியாத தரமான கட்டமைப்புகள் உருவாகின.

அந்த ஓய்வு நேரத்தில்தான் ஆடல், பாடல், கலைகள் மற்றும் விளையாட்டுகள் பிறந்தன! கீழடியில் கிடைத்த சொக்கட்டான் காய்களுசுடுமண் பொம்மைகளும், மக்கள் ஓய்வு நேரத்தை மகிழ்ச்சியாகக் கழித்ததை உணர்த்துகின்றன.

இன்றைய உபரி

இன்றைக்கு எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர உறக்கம், எட்டு மணி நேர ஓய்வு அல்லது  பொழுதுபோக்கு என்று நாம் போராடிப் பெற்ற உரிமையை, மோடி போன்ற முதலாளித்துவ ஆதரவாளர்கள் சட்டங்களை மாற்றி அபகரிக்த்து வருகிறார்கள்!

இன்று எல்லாமே தினக்கூலிகள், ஒப்பந்த ஊழியர்கள், ஃபிக்ஸட் டேர்ம் எம்ப்ளாய்மென்ட்! அர்ப்பக் கூலிக்கு உழைப்பவனுக்கு எப்படி உபரி வரும்? அப்புறம் எங்கே ஆட்டம் பாட்டம்? இன்று உபரி இல்லாததால் பிள்ளைகளின்  படிப்பு, திருமணம், மருத்துவம் உள்ளிட்ட செலவுகளை ஈடுகட்ட முடியாமல் வீட்டில் அக்கப்போர்தான் உபரியாக மிஞ்சுகிறது!

படிக்க:

 கீழடி: தமிழர்களின் முன்னேறிய நாகரிகத்தின் அடையாளம்!

 சிறப்பாக தொடங்கி நடந்துக் கொண்டிருக்கும் இசைவிழா!

தற்போது நமக்குக் கிடைக்கும் கொஞ்சநஞ்ச ஓய்வு நேரத்திலும், சரக்கு, சாராயம், கஞ்சா போதை, சினிமா, ஆபாச மற்றும் பொருளற்ற ‘ரீல்ஸ்கள்’, மகளிருக்குத் தொல்லை தரும் டிவி தொடர்களைக் கொடுத்து முதலாளித்துவம் நம்மை சிந்திக்க விடாமல் செய்கிறது! இது போதாதென்று சடங்கு, சம்பிரதாயம், ஆன்மீகம் என்ற போர்வையில் நமது அர்ப்ப சொர்ப்ப உபரியையும் புரோகிதம் பிடுங்கிக் கொள்கிறது!

மொழி என்பது கூட்டு உழைப்பின் சொத்து!

சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு மனித குலம் உருவாக்கிய மிக முக்கிய சாதனை — மொழி!

“உழைப்புதான் மொழியை உருவாக்குகிறது; சமூகத்தைக் கட்டமைக்கிறது; ஒழுங்குபடுத்துகிறது” என்பார் ஜார்ஜ் தாம்சன்.

மொழி என்பது அகத்திய முனிவர் ஆற்று முகத்துவாரத்தில் உட்கார்ந்து உருவாக்கியது அல்ல; அது கடவுள் கொடுத்ததும் அல்ல! மொழி உழைப்புக் களத்தில் உருவானது!

ஒரு கனமான மரக்கட்டையைத் தூக்கும்போது மனிதன் தன்னை அறியாமல் ஏதோ ஒரு வகையில் எழுப்பும் ஒலியில்தான் மொழி பிறக்கிறது. தனி மனிதன் மொழியை உருவாக்க முடியாது; உழைப்பின் ஊடே ஒருவருக்கு ஒருவர் தகவலை பரிமாறிக் கொள்ளும் முயற்சியில்தான் மொழி தோன்றுகிறது. எளிமையாகச் சொன்னால் கூட்டு உழைப்புதான் மொழியை உருவாக்கியது! எனவே தமிழ் மொழி என்பது மனித குலத்தின் கூட்டு உழைப்பின் ஒட்டுமொத்த வெளிப்பாடு! அதை கீழடி காட்டுகிறது. ஆம் கீழடி மக்களின் உழைப்பின் வெளிப்பாடுதான் தமிழ்.

ஆனால் புராணம் என்ன கதை கட்டுகிறது?

இந்து புராணங்களின்படி, சிவபெருமானின் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. உலகைச் சமநிலைப்படுத்த சிவன் அகத்தியரை தென்னகத்திற்கு அனுப்பினார். அப்போது அகத்தியருக்கு சிவபெருமான் தமிழைக் கற்றுக்கொடுத்து அனுப்பியதாக ஆன்மீக நூல்கள் கூறுகின்றன. மற்றொரு கதையில், சிவனும் முருகனும் அகத்தியருக்கு தமிழ் கற்பித்ததாகக் கூறப்படுகிறது

இங்கே அவர்கள் மொழி உருவாக்கத்திற்கான உழைப்பை உதாசீனப்படுத்துகிறார்கள்.

இது கட்டுக்கதை என்றாலும் இதில் ஒரு உண்மை ஒளிந்திருக்கிறது. அன்றே தமிழர்கள் உயர்ந்த நிலையில் இருந்திருக்கிறார்கள். உயர்ந்து நின்ற தமிழர்களை தாழ்த்துவதற்காகத்தான் சிவபெருமான் அகத்தியனை அனுப்பினான் போலும்!

நிற்க, சிந்துவெளி எழுத்து வடிவமும் கீழடி தமிழ்-பிராமி எழுத்து வடிவமும் ஒன்றுபோல இருப்பதற்குக் காரணம், இரண்டு இடங்களிலும் உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியும் மக்களின் கூட்டு உழைப்பும் ஒன்றுபோல இருந்ததுதான்!

3000 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி அறிவு பெற்றிருந்த தமிழன் இன்று தற்குறியானது எப்படி?

அன்று வேதம் மட்டும்தான் படிப்பு என்றார்கள். எழுத்து வடிவம் வராத காலத்தில் மனப்பாடமாகக் கூடப் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் வேதம் ஓதக் கூடாது என்றார்கள். அதனால் கல்வி அறிவு பெற்றிருந்த கீழடிகளும் அதில் புதைந்து போயின; கீழடி உள்ளிட்ட தமிழ்நாட்டின் எல்லா பரப்பிலும் பிற்காலத்தில் பார்ப்பன ஆதிக்கம் மேலோங்கியது. அதன் விளைவு கடந்த 2000 ஆண்டுகளாக நாம் தற்குறிகளாக்கப்பட்டோம்!

வெள்ளைக்காரன் வந்துதான் அவனுக்குச் சேவை செய்வதற்காகவேனும் நமக்குக் கல்வி கொடுத்தான். நம்மவர் சிலருக்கு படிப்பு கிடைத்தது. இப்படிப் பேசினால் உடனே, “திருவள்ளுவர் படிக்கவில்லையா? கம்பன் படிக்கவில்லையா? காளமேகம் படிக்கவில்லையா?” என்று கேட்பார்கள். படித்தார்கள்! மறுப்பதற்கில்லை. திருவள்ளுவர் இதில் விதிவிலக்கு. அவர் சங்க காலம். அவர் சங்க இலக்கிய காலத்தைச் சேர்ந்தவர். ஆனால் அதன் பிறகு ஆனால் களப்பிரர் ஆட்சிக்குப் பிறகு (கி.பி.400) பக்தி என்ற பெயரில் மக்களை முட்டாளாக்குவோர் மட்டும் படித்தார்கள்; அவர்களை மட்டும் படிக்க விட்டார்கள்! அவர்கள் நாயன்மார்களாக ஆழ்வார்களாக அவதாரம் எடுத்தார்கள்.

நமக்குப் பிறகு மொழியைக் கண்டறிந்து கல்வி பெற்ற ஐரோப்பியன் தொழில் புரட்சியைச் செய்தான். ஒரு காலத்தில் பல்வேறு துறைகளில் கோளோச்சிய நாம் கண்டதோ வெறுமனே ‘ஆன்மீகப் புரட்சி’! மட்டும்தான். இந்த ஆன்மீகப் புரட்சிதான் நமது அறிவியல் புரட்சியை இல்லாமல் செய்தது.

ஒரு ஆர்க்கிமிடிஸ் கோட்பாட்டை, ஒரு பாயில்ஸ் லாவை, ஒரு ஓம்ஸ் லாவை ஏன் நம்மால் உருவாக்க முடியவில்லை? இரும்பைக் கண்டுபிடித்து அதில் கார்பனைக் கலந்து எஃகு எனும் அலாய் இரும்பை உருவாக்கியவனால் (சிவகளை, ஆதிச்சநல்லூர், கீழடி, எள்ளப்பட்டி, மயிலாடும்பாறை) ஒரு ‘பீரியாடிக் டேபிளை’ (Periodic Table) உருவாக்க முடியவில்லையே! அதற்கு ஒரு மெண்டலீவ் ரஷ்யாவிலிருந்து வர வேண்டியிருந்ததே, ஏன்?

1538°C-இல் தான் இரும்பு உருகி திரவமாகும் என்பதையும், இரும்பை உருக்கும் போது அதில் Pearlite, Ferrite, Cementite, Austenite, Ledeburite உருவாகும் என்பதையும் தொகுத்துச் சொல்லவும், ஒரு ‘Iron-Carbon Phase Diagram’ ஐ வடிவமைக்க நம்மால் முடியவில்லையே, ஏன்?

காரணம் — நமக்குக் கல்வி மறுக்கப்பட்டதுதான்! தமிழ்நாட்டை ஆண்ட சனாதன அடிவருடி மன்னர்கள், ஆரியப்  பார்ப்பன சனாதனிகள் வாழ்வதற்காக வழி வகுத்தார்கள். அதற்குச் சாட்சிதான் இதோ இன்றும்  எதிரில் உயர்ந்து நிற்கிறதே இந்த தஞ்சைப் பெரிய கோயில்! இது போல இன்னும் பல.

அன்று மயிலாடும்பாறை தமிழனும், சிவகளை தமிழனும், கீழடி தமிழனும் ஆலைகளை அமைத்தான். ஆனால் பிற்கால மன்னர்களோ பார்ப்பனர்கள் வாழ ஆலயங்களை அமைத்தார்கள்!

ஆலயங்கள் அதிகமாக உள்ள ஊரும், மருத்துவமனைகள் அதிகமாக உள்ள ஊரும் மன மற்றும் உடல் நோயாளிகள் நிறைந்த ஊர் என்றால் அது மிகை அல்ல. ஒரு வரியில் சொன்னப் போனால் ஆரோக்கியமற்ற மனிதர்கள் வாழும் ஊர் என்று பொருள்! இதிலும் தமிழ்நாடுதான் இன்று முன்னோடி — அதுவும் எங்கள் வேலூருக்கு அதில் முதலிடம்.

யார் உழைக்கிறார்களோ அவர்களால்தான் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க முடியும். முதல் அடி எடுத்து வைத்து நடக்கத் தொடங்கிய அந்த உழைப்புதான் இன்று நவீன தொழில்நுட்பமாக ரோபோ வரை வானுயர வளர்ந்து நிற்கிறது.

புதியதை உருவாக்க வெறும் உழைப்பு மட்டும் போதாது. கல்வி அறிவும் வேண்டும். கல்வியை பறித்து விட்டால் செக்கு மாடு போல செய்த வேலைகளைத்தான் செய்து கொண்டிருப்பார்களே ஒழிய புதுமையை ஒரு போதும் உருவாக்க முடியாது. உழைக்கும் மக்களுக்கான கல்வியை மறுத்து புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அன்றும் இன்றும் முட்டுக்கட்டை போட்டது / போடுவது ஆரியம் எனும் சனாதனம்.

“மர்மமான ஆன்மீகத்தை விட மனித உறவுகளும் நடைமுறை அறிவியல் கண்டுபிடிப்புகளுமே சமூகத்தின் நீடித்த வளர்ச்சிக்கு உதவும்” என்பதை இன்று சீனர்கள் உலகிற்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கீழடி — கம்யூனிஸ்டுகளின் கையில் கிடைத்த மாபெரும் ஆயுதம்!

தோழர்களே!

மனிதனின் தொடர்ச்சியான உழைப்புதான் கருவிகளை உருவாக்கியது. அந்தக் கருவிகள்தான் உழைப்பை எளிதாக்கி உற்பத்தியை பெருக்கியது. உற்பத்தி அதிகரிப்பால் உபரியும் உருவானது. ஆனால், அந்த உற்பத்திக் கருவிகளையும் உபரியையும் இன்றைக்கு முதலாளிகள் கைப்பற்றிக்கொண்டு மக்களின் உழைப்பைச் சுரண்டுகிறார்கள்.

ஆனால், கீழடி நமக்கு உணர்த்துவது என்ன?

கீழடியில், மக்கள் மீது ஆதிக்கம் செலுத்திய ஆளும் வர்க்கம் இல்லை! எளிமையாகச் சொன்னால் உழைப்பை, உபரியை அபகரிக்கும் பண்ணையார்களோ மன்னர்களோ இல்லை.

நமக்குக் கொடுத்து வெச்சது அவ்வளவுதான்என சுரண்டலை நியாயப்படுத்தும் ஆன்மிகமோ, கடவுளோ, கோயில்களோ இல்லை!

மனிதர்கள் வேறு வேறா?

எனது உரையின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்டது போல ஆதி மனித இனம் தோன்றியதும், இன்றைய நவீன மனித இனம் தோன்றியதும் ஒரே இடம், அது ஆப்பிரிக்காதான் என்பதை நவீன அறிவியல் உறுதியாகச் சொல்கிறது. அங்கிருந்து பல்வேறு காலகட்டங்களில் இடப்பெயர்வு மூலம் உலகின் பல பகுதிகளில் வாழ்ந்தவர்களும் வாழ்ந்து வருபவர்களும் ஆப்பிரிக்காவில் இருந்து சென்றவர்கள்தான்.

நீண்ட காலம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்ந்தவர்கள் தங்களுக்கான உற்பத்தி, உணவு, மொழி, பண்பாடு, என உருவாக்கிக் கொண்டு தனியானதொரு மக்கள் கூட்டமாக நாளடைவில் பரிணாமம் அடைந்தார்கள்.

இந்த தனி ஒரு மக்கள் கூட்டத்திற்குள் ஒரே மொழியை பேசினாலும் அல்லது வேறு வேறு மொழியைப் பேசினாலும் அவர்களை வருணங்களையும் சாதிகளையும் வகைப்படுத்தி, மேலும் அவர்களை பள்ளர் பறையர்  கவுண்டர் வன்னியர் பிள்ளை கள்ளர் மறவர் நாடார் உடையார் என் பலநூறு சாதிகளாக பிளவுபடுத்தினர் ஆரியர்கள்.

எனவே உலகின் பல நாடுகளில் வாழ்கின்ற பல்வேறு நாட்டு மக்களும், பல்வேறு மொழி பேசுகின்ற மக்களும், நான் இந்தியன், நான் ஐரோப்பியன், நான் பாகிஸ்தானி என்று பெருமை பேசுவதற்கோ; நான் மராத்தியன், நான் வங்காளி, நான் தெலுங்கன், நான் மலையாளி, நான் கன்னடன், நான் தமிழன் என்று பெருமை பேசுவதற்கோ; நான் ஐயர் நான் ஐயங்கார் நான் கவுண்டன் நான் வெள்ளாளன் என்று ஜம்பம் அடித்துக் கொள்வதற்கோ ஏதேனும் பொருள் உண்டா?

நாம் எல்லோரும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள்தான் என்று மரபணு ஆய்வுகள் உறுதி செய்த பிறகும் நமக்குள் இந்தப் பாகுபாடு தேவைதானா? தேவையில்லை என்பதைத்தான் கீழடி அகழ்வாய்வு சான்றுகள் உணர்த்துகின்றன.

கீழடி மக்களிடையே சாதிகள் இருந்ததற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை. கீழடியில் வாழ்ந்த மக்கள் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத தீண்டாமையற்ற சமத்துவமான கூட்டு வாழ்க்கை முறையை மேற்கொண்டிருப்பர் என்றால் அது மிகையல்ல!

இன்று கீழடி என்பது கம்யூனிஸ்டுகளின் கையில் கிடைத்திருக்கிற ஒரு மாபெரும் வரலாற்று ஆயுதம்!

“இதுவரை புராணங்களையும் கல்வெட்டுகளையும் மட்டும் வைத்து எழுதப்பட்ட வரலாறு முடிவுக்கு வந்துவிட்டது. இனி மரபியல், தொல்லியல், மொழியியல் ஆய்வுகளின் அடிப்படையில் வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும்” என்கிறார் டோனி ஜோசப்.

முன்பு ராகுல சாங்கிருத்தியாயன் “வால்காவிலிருந்து கங்கை வரை” எழுதினார். இனி நாம் “கீழடியிலிருந்து கங்கை வரை” அல்லது “கீழடியிலிருந்து வால்கா வரை” என்று இந்திய வரலாற்றை தமிழகத்திலிருந்து தொடங்கி திருத்தி எழுதுவோம்!

“கீழடியை உயர்த்திப் பிடி!” — ஏன் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பதைத் தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களது ஆய்வுகளின் அடிப்படையில் பேராசிரியர் மாரப்பன் அவர்கள் தெளிவுபடுத்திவிட்டார். கீழடிதான் இன்று இந்திய வரலாற்றின் தொடக்கப்புள்ளி!

“வேத நாகரிகத்தை விரட்டியடி!” — தோழர்கள் ஓவியா மற்றும் பொழிலன் கூறியது போல, உழைக்கும் மக்களுக்கும் தேசிய உரிமைகளுக்கும் சனாதன வேத நாகரிகம் ஒத்து வராது. அதை விரட்டியடிப்போம்! வேத நாகரிகம் ஒரு அநாகரிக நாகரிகம். அதை வேத அநாகரிகம் என்று அழைப்பதே சரி.

பிறப்பு இறப்பு சடங்குகள் முதல் திருமணம் உள்ளிட்ட நமது அன்றாட வாழ்க்கை நடைமுறைகளில் நம்மைக் கவ்வியிருக்கும் வேத அநாகரிகத்தை கைவிட்டு, நமக்கான வாழ்வியல் முறையை உருவாக்குவதுதான் வேதநாகரிகத்தை துரத்தி அடிப்பதற்கான முதல் படி. சனாதனிகள் தங்களுக்கான அதிகாரத்தை பயன்படுத்தி ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடுஎன நம் மீது வேதஅநாகரிகத்தைத் திணிக்க முற்படும் பொழுது அதற்கு அடிப்படையாக உள்ள அவர்களின் அதிகாரத்தையே தூக்கி எறியும் பொழுதுதான் வேத அநாகரிகம் விரட்டி அடிக்கப்படும். சனாதனிகளை வீழ்த்துவதற்கு வேத நாகரிகத்தை விரட்டியடிப்பதற்கு நமக்கு கிடைத்துள்ள ஒரு மாபெரும் ஆயுதம்தான் கீழடி.

“தெற்குதான் இந்திய நாகரிகத்தின் திசைவழி!”

தோழர் களப்பிரன் எடுத்துரைத்தது போல, 5000 ஆண்டு பழமையான மயிலாடும்பாறையும் ஆதிச்சநல்லூரும் இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து திருத்தி எழுதச் சொல்கின்றன!

கடைசியாக ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன் உழைப்பு இந்த உழைப்பு ஒன்றுதான் வரலாற்றைப் படைக்கிறது. வரலாறு படைக்கும் உழைப்பாளிகள் மீது, உழைக்காமல் பஜனை பாடும்  ஒரு சோம்பேறிக் கூட்டம் நம் மீது சவாரி செய்வதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

மக்கள்கலை இலக்கியக் கழகம் முன்னெடுத்த இந்தத் தமிழ் மக்கள் இசை விழாவின் போர்முழக்கம் இன்று மக்கள் மொழியாக மாறியுள்ளது. இந்த விழாவும் ஒரு மாபெரும் வெற்றி விழாவாக நடந்து கொண்டுள்ளது.

தோழர்களே,

மாலைநேர ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளுக்கு வழிவிட்டு அமர்கிறேன்.

நன்றி, வணக்கம்!

  • தமிழ்மணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here