தமிழகத்தில் இந்த ஆண்டில் 246 அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் மூடப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 24,349 அரசு தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இதில் 14,829 (60.90%) பள்ளிகளில், 30க்கும் குறைவான மாணவர்களே படிக்கின்றனர் என்ற தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரசுப் பள்ளிகளில் இலவசமாக கல்வி கற்பிக்கப்படுகிறது என்ற நிலையிலும் கூட பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளை புறக்கணித்துவிட்டு பல்லாயிரக்கணக்கான ரூபாய் கட்டணம் செலுத்தி தங்கள் பிள்ளைகளை எதற்காக தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர்?
இதுதொடர்பாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ‘அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி இருந்தாலும், சில பெற்றோரிடம் தனியார் பள்ளியே சிறந்தது என்ற எண்ணம் உள்ளது. பல அரசு பள்ளிகளில் கட்டிடம், கழிப்பறை, ஆய்வகம், விளையாட்டு மைதானம், ஸ்மார்ட் வகுப்பறை போன்ற வசதிகள் குறைவாக உள்ளன…. அதோடு பெரும்பாலான அரசு தொடக்கப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் இல்லாததால், பெற்றோர் ஆரம்பத்திலேயே தனியார் பள்ளிகளை நாடுகின்றனர்’ என்று கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.
“தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளில்தான் ஆங்கிலம் சிறப்பாக கற்பிக்கப்படுகிறது. எனவே
தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படித்தால் தான் தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும்” என்று பெற்றோர் கருதுகின்றனர். இது எந்த அளவிற்கு உண்மை என்பது ஒரு புறம் இருக்கட்டும்.
அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் சிறப்பான முறையில் கற்பிக்கப்படுவதில்லை என்று பெற்றோர்கள் நினைப்பதற்கு காரணம் என்ன? ஏற்கனவே அரசு பள்ளியில் படித்த பெற்றோர் தங்களால் ஆங்கிலத்தில் பேசவோ எழுதவோ முடியவில்லை என்ற வருத்தத்தில் உள்ளனர். இந்த நிலையில் தங்கள் பிள்ளைகளும் தங்களைப் போல் ஆங்கிலம் தெரியாததால் கஷ்டப்படக் கூடாது என்று நினைக்கின்றனர். இதன் காரணமாகவும் கணிசமான பெற்றோர் தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கின்றனர்.
அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தினமும் ஒரு பாடவேளை (40 நிமிடம்) ஆங்கிலம் கற்றுக் கொடுப்பதற்காக ஒதுக்கப்படுகிறது. மொத்தம் 180 நாட்கள் ஒரு ஆண்டில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. இதன்படி பார்த்தால் ஒரு ஆண்டிற்கு 120 மணி நேரம் ஒரு மாணவருக்கு ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. ஒரு மாணவன் 10 ஆம் வகுப்பு வரை படிப்பதாக வைத்துக் கொண்டால் மொத்தம் 1200 மணி நேரம் ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது.
இவ்வளவு மணி நேரம் ஆங்கிலம் கற்பிக்கப்பட்ட பிறகும் ஒரு மாணவனால் ஆங்கிலத்தில் பேசவோ எழுதவோ முடியவில்லை என்றால் பிரச்சனை எங்குள்ளது? ஆங்கிலப் பாடத்திட்டத்திலும் ஆங்கிலத்தை கற்பிக்கும் முறையிலும் தான் மிகப்பெரிய குறை உள்ளது.
உதாரணமாக, இரண்டே இரண்டு வார்த்தைகளை கொண்டு (I go என்பது போன்ற) ஒரு மிக எளிய வாக்கியத்தைக் கூட அமைக்க தெரியாத மாணவனுக்கு நேர் கூற்று (direct speech) அயற் கூற்று (indirect speech) பற்றி பாடம் நடத்தப்படுகிறது; அது குறித்து தேர்வுகளிலும் கேள்விகள் கேட்கப்படுகின்றன.
இப்படிப்பட்ட, விளங்காத பாடத்திட்டத்தை வடிவமைத்தவர்கள் விவரம் தெரியாதவர்கள் அல்ல; மெத்தப் படித்த மேதாவிகள் என்பதும் உண்மை. இப்படிப்பட்ட பாடத்திட்டத்தினால் மாணவர்கள் ஆங்கிலத்தை கற்றுத் தேர முடியாது என்பது தெரிந்தே தான், இன்னும் துல்லியமாக கூற வேண்டுமானால், அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கில மொழியை பயன்படுத்தும் அளவிற்கு தேர்ச்சி பெற்று விடக் கூடாது என்பதற்காக திட்டமிட்டு தான் இப்படிப்பட்ட பாடத்திட்டம் உருவாக்கப்படுகிறது.
எந்த நோக்கத்திற்காக இப்படிப்பட்ட பாடத்திட்டம் உருவாக்கப்படுகிறது?
அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் திறன் பெறும் அளவிற்கு பாடத்திட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்தி விட்டால் தனியார் ஆங்கில வழிப் பள்ளிகள் கல்லா கட்ட முடியாது. இதற்கு மாறாக, கல்வி முதலாளிகள் கொள்ளையடிக்க பெற்றோர்களை தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளை நோக்கி தள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அரசு பள்ளிகளின் பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த பாடத்திட்டத்தை வகுத்தவர்களின் திட்டம் மிக வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள், தங்கள் பிள்ளைகளின் கல்விக்காக, தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளில் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை கொட்டி அழுகிறார்கள்.
படிக்க
♦ அன்றாடம் மூடப்படும் அரசுப் பள்ளிகள்!
♦ அரசுப்பள்ளி ஆசிரியர்களே திருந்துங்கள்!
இந்தப் பாடத்திட்டங்களில் உள்ள குறைபாடுகள் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களின் சங்கங்களுக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், தங்கள் சம்பள உயர்விற்காகவும் இன்ன பிற சலுகைகளுக்காகவும் போராடும் இவர்கள் இது குறித்து வாய் திறப்பதே இல்லை. இப்பொழுதுகூட அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவதை கல்விமுறையின் சீர்கேடு, மக்களை தனியார் கல்வி முதலாளிகள் சுரண்டுவதற்கான ஏற்பாடு என்ற அடிப்படையில் ஆசிரியர் சங்கங்கள் பார்க்கவில்லை; தங்கள் கருத்துக்களை, கண்டனங்களை தெரிவிக்கவில்லை.
மாறாக, அரசுப் பள்ளிகள் மூடப்படுவது அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவது குறித்து கருத்து தெரிவித்த ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ‘…. இதனால் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு வேலை பறிபோகும் அபாயம் உள்ளதாக’ (மட்டும்) கவலைப்படுவதாக செய்தி வெளிவந்துள்ளது. எவ்வளவு சுயநலம்?
90 களுக்கு முன்பிருந்தே தனியார் பள்ளி, கல்லூரிகள் இயங்கி வந்தாலும் 90களில் காட்ஸ்(GATS) ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்ட பிறகு கல்வியில் தனியார்மயத்தை புகுத்தும் வேலைகள் திட்டமிட்டு செய்யப்படுகின்றன. அதன் விளைவாக தனியார் பள்ளி கல்லூரிகள் புற்றீசல்கள் போல பெருகுகின்றன.
படிக்க:
♦ அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகள் ‘தத்தெடுக்கும் திட்டத்தை’ உடனே நிறுத்து! | புமாஇமு
♦ அமைச்சர் கீர்த்தனாவின் அரசுப்பள்ளி ரீல்ஸ் அடாவடி!
கல்வி நிறுவனங்களை (பள்ளி கல்லூரிகளை) அரசு ஏற்று நடத்துவதை கைவிடுவதற்கான முன் ஏற்பாடாக அரசு பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காமல் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமாக அற்ப கூலிக்கு ஆசிரியர்களை நியமித்து பாடங்கள் நடத்தப்படுகின்றன. கல்லூரிகளில் நிரந்தர விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுவதற்கு பதிலாக Guest Lecturer என்ற பெயரில், தற்காலிகமாக, தினக்கூலிக்கு விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுகின்றன.
இப்பொழுது வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை இந்தியாவில் தொடங்குவதற்கான வேலைகள் மிக வேகமாக நடந்து வருகின்றன. கல்வியைத் தனியார்மயமாக்கிடும் திசையிலேயே மத்திய மாநில அரசுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் காங்கிரஸ் – பாஜக, அதிமுக – திமுக என்ற வேறுபாடு எல்லாம் இல்லை. இப்பொழுது ஆட்சியில் இருக்கும் தவெக –வும் இதற்கு விதிவிலக்காக இருக்கப் போவதில்லை.
“கல்வியை இலவசமாக அரசே மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று ஏதாவது கட்சிகள் கூறுமானால் ஏற்கனவே கல்வியில் கல்லா கட்டிக் கொண்டிருக்கும் தனியார் பள்ளி கல்லூரிகளை அரசே ஏற்று நடத்துவதற்கு ஆதரவளிப்பதற்கு தயார் என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். ஆட்சியில் உள்ள கட்சிகள் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். இதை விடுத்து வெறுமனே “தரமான, இலவச கல்வி மக்களின் உரிமை; அதைத் தர வேண்டியது அரசின் கடமை” என்று கட்சிகள் – அமைப்புகள் பேசிக் கொண்டிருப்பது ஏமாற்று என்பதை மக்கள் உணர வேண்டும்.
அனைவருக்கும் தரமான கல்வியை இலவசமாக வழங்குவதற்கு கல்வியில் தனியார்மயத்தை ஒழிக்க வேண்டும் என்பது முன்நிபந்தனையாக உள்ளது. இதை உணர்ந்து புரட்சிகர முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைவரும் ஓர் அணியில் திரண்டு போராட முன்வரவேண்டும்.
– குமரன்







