பாகம் 1 படிக்க 

உயர்கல்வி நிறுவனங்களில் சாதி ரீதியான ஒடுக்கு முறை காரணமாக மாணவர்கள் அங்கு கல்வியை தொடர முடியாமல்  பாதியில் வெளியேறுவதும் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாக உள்ளதை அனைவரும் அறிவர்.

சாதி ரீதியான ஒடுக்குமுறை எனும் பொழுது ,நேரடியாக சாதியின் பெயரை குறிப்பிட்டு இழிவாகப் பேசுவதன் மூலம் மட்டும் ஒடுக்குமுறை நடப்பதாக மக்கள் பரவலாக கருதுகின்றனர். ஆனால் எதார்த்தம் அப்படி இல்லை. உயர்கல்வி நிறுவனங்களில் சாதியைச் சொல்லித் திட்டாமல் வேறு பலவழிகளிலும் சாதிய ரீதியிலான ஒடுக்கு முறைகள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கின்றன.

ஐஐடி வகுப்பறையில் நுழைந்த முதல் நாளிலேயே, பேராசிரியர்கள் மாணவர்களின் பெயர்களையும் நுழைவுத் தேர்வில் அவர்கள் பெற்ற ரேங்கையும் (Rank) கேட்கிறார்கள். ஒரு மாணவர் உயர் சாதியை சேர்ந்தவரா அல்லது இட ஒதுக்கீட்டில் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, பட்டியலின அல்லது பழங்குடியின மாணவரா என்பதை பெரும்பாலும் அந்த நுழைவுத் தேர்வின் ரேங்கே கூறி விடுகிறது. இதன் மூலம் ஒரு மாணவர் எந்த  சாதியைச் சேர்ந்தவர் என்பதை அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் பேராசிரியர்கள் செய்து விடுகிறார்கள். 

சில உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் வருகை பதிவேடுகளில் அகரவரிசைப்படி (Alphabetical Order) மாணவர்களின் பெயர்கள் குறிக்கப்படுவதில்லை.

மாறாக மாணவர்கள் ஐஐடி -க்கான நுழைவுத் தேர்வில் எடுத்த ரேங்க்குகளின் அடிப்படையில் அதிக ரேங்க் எடுத்த மாணவர்களின் பெயர்கள் வருகை பதிவேட்டில் மேலே குறிப்பிடப்படுகின்றன. இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்களின் பெயர்கள் வருகை பதிவேட்டின் கடைசியில் குறிப்பிடப்படுகின்றன. இது, எந்த மாணவர்கள் உயர்சாதியினர்? எந்த மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சாதிகளைச் சேர்ந்தவர்கள்? என்பதை அடையாளம் காண்பதற்கான ஒரு வழியாக பின்பற்றப்படுகிறது.

படிக்க: உயர்கல்விக்கு ஆபத்து: புதிய சட்டம் வருகிறது! ரவிக்குமார் எம்.பி

கல்லூரிகளில் ஒவ்வொரு பாட வேளையின் போதும் மாணவர்களின் பெயர்கள் ஒவ்வொன்றாக அழைக்கப்பட்டு  மாணவர்கள் வருகை தந்துள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டு அந்த மாணவர்களின் பெயர்கள் வருகைப் பதிவேட்டில் குறிக்கப்படும். இப்படி ஒவ்வொரு மாணவரின் பெயரையும் அழைத்து சோதிக்கும் பொழுது, பொதுப் பிரிவில் சேர்ந்த மாணவர்களின் பெயர்கள், பெயர் பட்டியலில் முன்பாகவும் இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் பெயர்கள், பட்டியலின் கடைசியிலும் இடம் பெறுவது கண்கூடாக அனைவருக்கும் தெரியும். இப்படி ஒவ்வொரு நாளும் நான்கு அல்லது ஐந்து முறை  மாணவர்களின் சாதியை அடையாளப்படுத்தும் நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.

இப்படி சாதிரீதியாக அடையாளப்படுத்தப்படும் மாணவர்கள் இயல்பாகவே தங்களை ஒத்த சாதியில் உள்ள மாணவர்களிடையே ஒரு இணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வேலையை உயர்கல்வி நிறுவனம் மறைமுகமாக செய்கிறது. 

இப்படிப்பட்ட நிலையில், பட்டியல் சாதியைச் சேர்ந்த மாணவர்களில் 70% பேர் பட்டியல் சாதியை சேர்ந்த மாணவர்களுடன் மட்டும் நண்பர்களாக உள்ளது தெரிய வந்துள்ளது. இது குறித்து கேட்ட பொழுது, பிற உயர்சாதி மாணவர்கள் தங்களை ஒடுக்குபவர்களாகவும் உரிய மதிப்பு அளிக்காதவர்களாகவும் உள்ள நிலையில் தாங்கள், தங்கள் சாதியை ஒத்த மாணவர்களை மட்டுமே நண்பர்களாக கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளனர். 

பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு (தங்கள் செலவுகளை எதிர்கொள்ள) அரசு உதவி (Fellowship) வழங்குகிறது.  அதை பெறுவதற்கான படிவத்தில் (Fellowship Form) கையெழுத்திடாமல் ‘உங்களின் கல்வித் தகுதி சரியில்லை’ ‘உங்களின்  பணி (அறிக்கை/கட்டுரை) தரமானதாக இல்லை’ என்று கூறி பேராசிரியர்கள் இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களை அலைய விடுகிறார்கள். இதனால் பின்தங்கிய நிலையில் இருந்து படிக்க வந்துள்ள மாணவர்கள் தங்கள் செலவுகளை எதிர் கொள்ள முடியாமல் திண்டாட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

படிக்க: உயர்கல்வி சிறந்த தமிழ்நாட்டில் மூடு விழா காணப்போகும் முதற் பல்கலைக்கழகம்!

மாணவர்களின் சாதி பார்த்து இன்டர்னல் மதிப்பெண்கள் (Internal marks) மற்றும் ஆய்வக மதிப்பெண்கள் (Lab Marks) வழங்கப்படுகின்றன. உயர் சாதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு மதிப்பெண்களை அள்ளிக்கொடுப்பது மற்றும் இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்களின் மதிப்பெண்களை வேண்டும் என்றே அநியாயமாக குறைப்பது என்பதை பேராசிரியர்கள் மிகவும் சர்வசாதாரணமாக செய்து வருகின்றனர். இதன் மூலமும் சாதி ரீதியான ஒடுக்குமுறைகள் நடந்த வண்ணம் இருக்கின்றன.

இது மட்டுமின்றி, தலித் மாணவர்களின் தேர்வுத் தாள்களை திருத்தும் பொழுது திட்டமிட்டு மதிப்பெண்களை குறைத்து அவர்களை தேர்ச்சி அடையாதபடி செய்வதும் நடக்கிறது. 

அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை பார்ப்போம்.

டெல்லியில் உள்ள வர்த்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரியில் 25 தலித் மாணவர்கள் தொடர்ந்து ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற விடாமல் செய்யப்பட்டு வந்தனர். இதனை எதிர்த்து அந்த மாணவர்கள் நீதிமன்றத்தில் சென்று வாதாடியதால் அந்த குறிப்பிட்ட பாடத்தில் தங்களின் தேர்ச்சியை நிலை நாட்ட முடிந்தது. 

அதைத்தொடர்ந்து, அந்தக் கல்லூரியில் நடந்த சாதிய ஒடுக்கு முறைகள் குறித்து விசாரிக்க தேசிய பட்டியலின ஆணையம் 2011 ஜூலை 11ல்  டாக்டர் பி. பி. முன்கேகர் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்தது. இந்தக் கல்லூரி நிர்வாகமும் அதன் பேராசிரியர்களும் தலித் மாணவர்களின் மீது சாதி ரீதியான ஒடுக்கு முறைகளை செலுத்தி வந்த உண்மை, இந்தக் குழு அளித்த விசாரணை அறிக்கையின் மூலம் வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. 

படிக்க: சூத்திர, பஞ்சம சாதிகளுக்கு உயர்கல்வி உரிமையை ஒழித்துக்கட்டும் ஆர்எஸ்எஸ் பாஜக!

செமஸ்டர் தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்தும் போது ,வேண்டுமென்றே இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் மதிப்பெண்களை குறைத்து தேர்ச்சி அடையாமல் செய்து அடுத்த செமஸ்டரில் அந்தப் பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி அடைய வேண்டிய சூழலை ஏற்படுத்துகிறார்கள். இதன் காரணமாக அந்த மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுத்து, நல்ல ரேங்கில் தங்களது படிப்பை முடிக்க முடியாத நிலையை ஏற்படுத்துகின்றனர். 

இந்த மாணவர்கள் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் சில பாடங்களில் தோல்வியடைந்து மறுமுறை எழுதி வெற்றி பெற்றவர்கள் என்ற முத்திரை காரணமாக படிப்பை முடித்து வேலையில் சேர்வதற்கான நேர்காணலில் சிறந்த நிறுவனங்கள் இவர்களை திறன் குறைந்தவர்களாக கருதி ஒதுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

ஆக, உயர்கல்வி நிறுவனங்களில் நடக்கும் சாதிய ஒடுக்குமுறை அங்கு படிக்கும் பொழுது நடப்பதுடன் நின்று விடுவதில்லை. மாறாக, அந்த கல்வி நிறுவனங்களில் படித்து முடித்து வெளியில் வந்த பின்பும் அதன் பாதிப்புகளை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்பது எவ்வளவு பெரிய கொடுமை. 

உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு ஹாஸ்டல் அறைகள் , தெளிவாக மாணவர்களின் சாதி பார்த்து ஒதுக்கப்படுகின்றன. 

படிக்க: உயர் கல்வி நிறுவனங்களில் சாதிய ஒடுக்கு முறையை  பாதுகாக்கத் துடிக்கும் ஆர்எஸ்எஸ் சங்கிகள்!

உதாரணமாக தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் (National Law University) இப்படி நடக்கிறது. ஹாஸ்டலில் பல மாடிகள் உள்ள நிலையில், ஒவ்வொரு மாடியும் ஒவ்வொரு குறிப்பிட்ட சாதிகளை சேர்ந்தவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் சாதி ரீதியாக வீதிகள், தலித் காலனிகள் பிரித்து வைக்கப்பட்டுள்ளது போல உயர் கல்வி நிறுவனங்களில் சாதி ரீதியாக மாடிகள் பிரித்து வைக்கப்பட்டுள்ளன.

உயர்கல்வி நிறுவனங்களின் உணவகங்களில் (மெஸ்களில்) ஒரே சமையல் அறையில் அசைவ உணவும் சைவ உணவும் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் அசைவ உணவு உண்பவர்கள் தனியாகவும் சைவ உணவு உண்பவர்கள் தனியாகவும் அமர வைக்கப்பட்டு உணவளிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அசைவ உணவு உண்பவர்களின் தட்டுகள் தனியாகவும் சைவ உணவு உண்பவர்களின் தட்டுகள் தனியாகவும் வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. உணவுத் தட்டுகளில் இந்த வித்தியாசத்தை அறிந்து கொள்வதற்காக குறியீடுகள் இடப்படுகின்றன. உணவுத் தட்டுகளை அடுக்கி வைக்கும் அலமாரிகளில் கூட அசைவ உணவு தட்டுகள் ,சைவ உணவு தட்டுகள் வைக்கும் இடங்கள் என்று பிரித்து குறியிடப்பட்டுள்ளன. 

தீண்டாமையும் இரட்டைக் குவளை முறையும் சாதி வெறி பிடித்த கிராமங்களில் மட்டும்தான் இருக்கிறது என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் உணவு தட்டுகளை பிரித்து பராமரிப்பதன் வழியாக ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களிலும்கூட  இன்றும் தீண்டாமை உயிர்ப்புடன் இருக்கிறது.

ஆனால் ஒரு வித்தியாசம் உள்ளது. கிராமங்களில் பட்டியல் சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் தனிக்குவளை முறை பின்பற்றப்படுகிறது. ஆனால் இங்கு பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கு மட்டுமன்றி பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் (சைவம் அசைவம் என்ற பெயரில்) தனித்தட்டு பராமரிக்கப்படுகிறது.

படிக்க: இன்னும் எத்தனை ரோகித் வெமுலாக்கள் சாக வேண்டும்? 

அசைவ உணவின் மீதான அருவருப்பு, சாதிய வன்மம் காரணமாக இப்படி நடந்து கொள்கிறார்கள். உணவு தட்டை கழுவியப் பின்பும் தீட்டு ஒட்டிக் கொண்டிருக்கிறதா? இங்கே இவ்வளவு வித்தியாசம் பாராட்டுபவர்கள் அமெரிக்க,  ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் பொழுது அங்குள்ள உணவகங்களிலும் இப்படித்தான் நடந்து கொள்கிறார்களா? 

அந்த நாடுகளில், பிறர் அசைவ உணவை எடுத்து உண்ட ஸ்பூன்களில் (spoon) தங்களது உணவுகளையும் எடுத்து உண்ணும் பொழுது அந்த ஸ்பூன் தங்கள் வாய்க்குள்ளேயே சென்று வருகிறதே, அப்பொழுது எங்கே போனது இவர்களின் அசைவத்தின் மீதான அருவருப்பு? ஆக, இவர்களுக்கு அசைவத்தின் மீதான அருவருப்பு என்பதை விட ‘தாழ்ந்த சாதி மாணவர்கள் உண்ட தட்டில் நாமும் சாப்பிடக்கூடாது’ என்ற சாதிவெறி தான் இவர்களிடம் மேலோங்கி உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.

இப்படி உயர்கல்வி நிறுவனங்களில் திரும்பிய பக்கமெல்லாம் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மாணவர்கள் சாதி ரீதியான ஒடுக்கு முறைகளையும் புறக்கணிப்புகளையும் அனுபவித்து வருகின்றனர். இதன் காரணமாகத்தான் இந்த மாணவர்களில் சிலர் படிப்பை தொடர முடியாமல் பாதியிலேயே படிப்பை விட்டு வெளியேறுவது நடக்கிறது. மற்றும் சிலர் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாக உள்ளது.

படிக்க: ஆதிக்க சாதி வெறியர்களின் கூடாரமாக மாறிய மும்பை ஐஐடி 

இந்த நிலையில் தான் உயர் கல்வி நிறுவனங்களில் நடக்கும் சாதிய ரீதியிலான ஒடுக்குமுறைகளை விசாரிப்பதற்கு என்று “சமத்துவ குழு” (Equity Committee) ஏற்படுத்தப்பட்டது.

ஆனால், உயர்கல்வி நிறுவனங்களில் பல்வேறு வழிமுறைகளில் சாதிய ஒடுக்கு முறைகளை செய்து கொண்டிருக்கும் உயர் சாதியை சேர்ந்த பேராசிரியர்கள் இடம் பெறாமல் அமைக்கப்பட்ட சமத்துவக் குழுவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் பாஜகவினர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சமத்துவக் குழுவில் ‘உயர் சாதி’யினர் இடம்பெற்று இருந்தால்தான் சாதிய ஒடுக்குமுறை குறித்த புகார்களின் மீதான விசாரணையை சீர்குலைக்க முடியும். இந்த நோக்கத்திற்காக தான் ஆர் எஸ் எஸ்., பாஜக சங்கிகள் இப்பொழுத சமத்துவக் குழுவை எதிர்த்து சண்டமாருதம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு இதற்கு தக்க எதிர்வினையாற்ற வேண்டியது நம் அனைவரின் கடமை.

– குமரன் 

செய்தி ஆதாரம்: 

https://makkalathikaram.com/lbn6yfcz8nzbas8fuwheyjx5n34vs3d/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here