குஜராத்தில் மாட்டுக் கறி தொடர்பாக சில நாட்களுக்கு முன் அளிக்கப்பட்ட தீர்ப்பைப் பற்றி தான் இக்கட்டுரை பேசப்போகிறது. மாட்டிறைச்சியை விற்பனை செய்ய முயன்ற வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது குஜராத் நீதிமன்றம். 

குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தின் கலோல் கூடுதல் அமர்வு நீதிமன்றம் வழங்கி உள்ள இந்த ‘அற்புதமான’ தீர்ப்பின் விவரத்தை பார்ப்போம். 2024 ஆகஸ்ட் 22 அன்று ஜம்லா கிராமத்தில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 277 கிலோ மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. மாடுகளைக் கொன்று இறைச்சியை விற்பனை செய்ய முயன்றதாக வழக்கு தொடரப்பட்டது. 

குஜராத்தில் விலங்கு பாதுகாப்பு சட்டம் 1954, 2011 மற்றும் 2017-ல் திருத்தப்பட்டது. 2017-ல் இச்சட்டம் திருத்தப்பட்டபோது இந்துத்துவவாதிகளுக்கு ஏற்றார்போல் கடுமையாக்கப்பட்டது. குறிப்பாக சட்டத்தின் பிரிவு 5, பிரிவு 6B ஆகியவை பசு, எருது, காளை ஆகியவற்றை கொல்வதை தடை விதிக்கிறது அதேபோல் பசு இறைச்சியை விற்பது, வைத்திருப்பது அல்லது சேமிப்பது வேறு இடங்களுக்கு செல்வது ஆகியவற்றிற்கும் தடை விதித்துள்ளது. 

பசுவைக் கொன்றால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அதிகபட்சமாக ஆயுள் சிறை. ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை அபராதம், பிணையில் வெளிவர முடியாத அளவு சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதுவே பசு இறைச்சியை வைத்திருந்தால் 7 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ஒன்று முதல் ஐந்து லட்சம் வரை அபராதம். 

தடை செய்யப்பட்ட இறைச்சியை வைத்திருப்பதோ அல்லது கொள்வதோ குற்றம் எனும் போது வழங்கப்பட்ட தண்டனை சரியானது தானே! என்று மாட்டிறைச்சி அரசியல் குறித்து புரிதல் இல்லாமல் சிலர் கேட்கலாம். ஆனால், அதன் பின்னே உள்ள அரசியல் மிக முக்கியமானது. 

இந்த வழக்கையே எடுத்துக் கொள்வோம். நீதிபதியின் தீர்ப்பின் அடிப்படையை பார்த்தால் அவர்களின் நோக்கத்தை புரிந்து கொள்ளலாம். இவ்வழக்கின் நீதிபதி பிரிஜேஸ் குமாரி ரமேஷ்வர்சிங் ராஜ்பத் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கும் போது மனு ஸ்மிருதி, ரிக் வேதம் உள்ளிட்ட இந்து மத புராணப் புரட்டுகளை மேற்கோள் காட்டியுள்ளார்.

படிக்க: மாட்டிறைச்சி: முதலாளிக்குப் பணம்! பாஜகவுக்கு அரசியல் அதிகாரம்!

மனுஸ்மிருதி பசுக்களை வெறும் விலங்காகக் கருதாமல், சமூகத்திற்கும் மதத்திற்கும் முக்கியமான தூணாகக் கருதுவதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும், கால்நடைகளைப் பாதுகாப்பது, பசுக்களைப் பராமரிப்பது தொடர்பான கடமைகளையும் இந்து மத நூல்களில் பசுக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தையும் தீர்ப்பில் விவாதித்துள்ளது.

ரிக் வேதத்தில் பசுக்கள் “அதன்யா” (Adhanya) என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதற்குப் பசுக்களைக் கொல்லக் கூடாது என்பது பொருள் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தீர்ப்பில் இடம்பெற்றுள்ள சமஸ்கிருத வாசகமானது, “நீ அனைத்து தெய்வங்களுக்கும் தாய்; புனித யாகங்களுக்குக் காரணமானவள். அனைத்து புனித நீர்நிலைகளையும் புனிதத் தலங்களையும் விடப் புனிதமானவள். எப்போதும் தூய்மையானவளும் மங்களகரமானவளுமான உன்னை நான் வணங்குகிறேன்” என்று பொருள் கூறப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் மதங்களுக்கு அப்பாற்பட்டது. நீதிபதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர் ஆனால் ஒரு சங்கியைப் போல் மனுஸ்மிருதியை உதாரணம் காட்டி அரசியலமைப்புச் சட்டத்தை புறந்தள்ளியுள்ளார். குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்ற காரணத்தின் அடிப்படையிலேயே இப்படியான மூடக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்து மதம் என சொல்லக்கூடிய பார்ப்பனிய மதம் குறிப்பாக பார்ப்பனர்கள் பசுவைப்புனிதமாக வகைப்படுத்தி உள்ளார்கள், என்பதற்காக மாநில அரசு சட்டம் இயற்றி பசுவைக் கொல்லக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கிறது. அதாவது இந்தியாவில் நூறில் மூன்று சதவீதம் கூட இல்லாத பார்ப்பனர்களுக்கு ஏற்றார் போல் சட்டம் இயற்றி மற்ற யாரும் சாப்பிடக்கூடாது என சொல்வது பாசிசம் இல்லையா? 

படிக்க: உணவு பாசிசம்: அசாமில் மாட்டிறைச்சிக்குத் தடை!

மாட்டுக்கறி இஸ்லாமியர்கள் மட்டும் உண்பதில்லை. தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடிகள், கிறிஸ்தவர்கள் என இந்து மதத்தில் உள்ளடங்கிய பல்வேறு பிரிவினர் மாட்டிறைச்சியை உண்கிறார்கள். அரசின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் கூட சுமார் ஒரு கோடியே 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் விரும்பி உண்ணும் இறைச்சியாக மாட்டு இறைச்சி உள்ளது. அதனைக் குறிப்பிட்ட சிலரின் நோக்கத்திற்காக தடை விதிப்பது எவ்வாறு சரியாகும். 

பசுவை தெய்வமாக பார்க்கிறோம் எனக் கூறும் யோக்கியர்கள் கன்றுக்கு இருக்கும் பாலைக் கறந்து அதனை நெய்யாக்கி  வெண்ணெய் ஆக்கி சுவைத்து உண்பதை தீர்ப்பு வழங்கிய நீதிபதி உட்பட யாரும் கேள்வி எழுப்புவதில்லை. மாட்டிலிருந்து கிடைக்கும் புரதத்தை, தான் மட்டும் உண்டு வயிறு புடைத்து திரிய வேண்டும். மற்றவர்களுக்கு அது கிடைத்து விடக்கூடாது என்பது தானே அவர்களின் நோக்கம். அதற்கு தானே பசுவிற்கு புனிதப் பட்டத்தை சூட்டியுள்ளார்கள். 

பசு இறைச்சியை உண்பதாலேயே அது அழிந்துவிடும் என அறிவிலித்தனமான கருத்தையும் கூறியுள்ளார் நீதிபதி. குஜராத்தி மொழியில் எழுதப்பட்ட தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிடுகிறார். 

“விளைவுகளை நன்கு அறிந்திருந்தும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாயைப் போன்ற பசுக்களைக் கொடூரமாகக் கொன்றுள்ளனர். அவற்றின் வாய்கள், வயிறுகள், கால்கள் மற்றும் தோல்களைத் துண்டித்துள்ளனர். பசுக்களிடமிருந்து 277 கிலோ மாட்டிறைச்சியைப் பிரித்தெடுத்து, அதை விற்பனைக்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டனர்.

பசுக்களின் உடல் உறுப்புகளைத் துண்டு துண்டாக வெட்டி, அவற்றைப் பிரித்தெடுத்த இத்தகைய கொடூரமான குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்படாவிட்டால், காலப்போக்கில் பசு மாதா இந்தப் பூமியிலிருந்து முற்றிலும் அழிந்துவிடும்” என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

படிக்க: மாட்டுக்கறி பெயரில் முதியவரை தாக்கிய கும்பல்! சமூகமயமாகியுள்ள பாசிசத்தின் அறிகுறி!

சரி. மாட்டிறைச்சியை தின்றால் மாட்டின் குறிப்பிட்ட இனம் அழிந்துவிடும் என்று சொல்கிறார்களே, இந்தியாவில் ஆட்டிறைச்சி விரும்பி பலர் உண்கிறார்கள். அதன் காரணமாக ஆடு என்ற இனமே அழிந்துவிட்டதா என்ன? அப்படி பார்த்தால் மனிதன் விரும்பி உண்ணும் அத்தனை உயிரினங்களும் அழிந்திருக்குமே. மனிதன் இன்று நேற்றல்ல. குரங்கிலிருந்து மனிதனாக மாற்றமடைந்த காலந்தொட்டு விலங்கினங்களை உணவாக உண்ண ஆரம்பிக்கலானான். இன்னும் சொல்லப்போனால் மனிதன் மனிதனாக சிந்திக்க ஆரம்பிக்க காரணமே இறைச்சியை உணவாக உண்ண ஆரம்பித்த பிறகு தான் என் கிறது அறிவியல் ஆய்வுகள். ஆனால் எல்லாவற்றுக்கும் முரணாக அறிவியல் புரிதலின்றி கருத்துக் கூறியுள்ளார்.

மாடு இறைச்சிக்காக வளர்க்கப்படுகிறதா? 

மாட்டை தன்னுடைய பிள்ளை போல் வளப்பவர்கள் தான் பிற்காலத்தில் அதனால் பலனில்லை எனும் போது அடிமாட்டுக்கு அனுப்புகிறார்கள். நன்றாக பால் கொடுக்கக்கூடிய மாட்டையோ, பளுவை இழுக்கக்கூடிய மாட்டையோ யாரும் அடி மாட்டிற்கு அனுப்புவதில்லை. மாட்டை வளர்ப்பவர்களை பொறுத்தவரை அது ஒரு முதலீடு அவ்வளவுதான். அதனை அடிமாட்டிற்கு விற்கவில்லை என்றால் அடுத்த மாட்டை வாங்க முடியாத நிலை ஏற்படும். குடும்ப வருமானமும் பாதிக்கப்படும்.  நீதிபதி கூறுவது போல் பசுமாதா என்பதெல்லா பணம் கொடுக்கும் வரை தான். அதனால் நீதிபதியின் கருத்து மிகைப்படுத்தப்பட்டது என்பதை பசு மாட்டின் இறைச்சி தடை விதிக்கப்பட்ட  பாஜக ஆளும் மாநிலங்களில் பராமரிக்க முடியாத மாடுகள் உரிமையாளர்களால் கைவிடப்பட்டு தெருவில் நிற்பதை பார்க்கலாம். 

படிக்க: பள்ளி மாணவன் தற்கொலை : கோவையின் வெள்ளைக்காலர் கொலையாளிகள்!

மக்கள் மாட்டை விவசாயத்தோடு சேர்ந்த உப வருமானமாக பார்க்கிறார்கள். முதலாளிகள் அதன் கறியை ஏற்றுமதி செய்து கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறார்கள். இந்தியாவில் உள்ள பார்ப்பன கும்பலோ மாட்டில் கிடைக்கும் புரதத்தை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு வேறு யாரும் அதனை அனுபவிக்காதவாறு புனிதம்  பட்டத்தைச் சூட்டி தடை விதிக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் உணவு உரிமையை பறிக்கிறது. 

இதற்கு பொருத்தமாக மோடியின் பாசிச ஆட்சியில் மாட்டிற்காக சட்டம் இயற்றப்பட்டு உழைக்கின்ற  சிறுபான்மை மற்றும் தலித் மக்கள் பலி கொடுக்கப்படுகிறார்கள். நீதித்துறையில் அமர்ந்திருக்கும் சங்கிகள் பொருத்தமான வேதங்களை ஓதி அதனை நியாயப்படுத்துகிறார்கள். இதன் மற்றொரு பிரிவு மாட்டின் பெயரில் படுகொலைகளை அரங்கேற்றுகிறது. இதுதான் இந்துராஷ்டிரத்தில் ‘நீதி’; ஜனநாயக சமூகத்தில் அநீதி. இத்தகைய அநீதியான தீர்ப்புகளுக்கு எதிராக குரல் எழுப்புவது நமது கடமை. 

அம்பேத்கர் வார்த்தைகளில் சொல்வதாயின் “இந்துராஷ்டிரம் அமைவதை உயிரைக் கொடுத்தேனும் தடுக்க வேண்டும்”. தடுப்போம்!

  • நந்தன்

https://www.livelaw.in/amp/news-updates/gujarat-court-life-term-cow-slaughter-case-manusmriti-vedas-556484?utm_source=chatgpt.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here