மறுகாலனியாக்கத்தின் தீவிரத் தன்மை காரணமாக இந்தியாவில் உருவெடுத்துள்ள கார்ப்பரேட் காவி பாசிசமானது, ‘இந்து-இந்தி-இந்தியா’ என்ற தனது ஒற்றையாட்சி கோட்பாட்டை நிறுவுவதற்கு மாநிலங்களின் உரிமைகளை பறித்து வருகிறது. மாநிலங்களை உரிமைகளற்ற அடிமை மாகாணங்களாக மாற்றுவது என செயல்பட்டு வருகிறது.

இந்திய ஒன்றியத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள பாசிச பாஜக முன்வைக்கின்ற “ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே சட்டம்” போன்ற செயல்பாடுகளை பெயரளவுக்காவது எதிர்த்து போராடிய மாநில கட்சிகள் ஒவ்வொன்றாக ஒழித்துக் கட்டப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக ஆரிய பார்ப்பன சித்தாந்தத்திற்கு எதிராக மாற்று என்று முன்வைக்கப்பட்ட திராவிட சித்தாந்தங்களை, அதாவது திராவிட கருத்தியல்களை, திராவிட மாடலை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவது என்பது ஆர்எஸ்எஸ் பாஜகவின் நிகழ்ச்சி நிரலில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

கார்ப்பரேட் காவி பாசிச கும்பல் வெறியாட்டம் போடுவதற்கு தடையாக  முன்னிலையில் இருந்தது தமிழ்நாடு.  இதனை முடிவுக்கு கொண்டு வரும் கேடுகெட்ட நோக்கத்தில் ஏறக்குறைய அரை நூற்றாண்டுகளுக்கு மேல் ஆட்சி புரிந்து வந்த திராவிட இயக்கங்களை ஒழித்துக் கட்டுவதற்கு தமிழக வெற்றிக் கழகம் என்ற பி டீம் ஒன்றை களம் இறக்கியது.

இந்த நோக்கத்தில் கட்டப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல், பொருளாதார, வர்க்கப் பின்னணி பற்றி கவலை கொள்ளாத நாடாளுமன்ற இடதுசாரிகள், அம்பேத்கரிஸ்டுகள், பெரியாரிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய அரசியல் பிழைப்புவாதக் கும்பல் ஒன்று கூடி கார்ப்பரேட் காவி பாசிசத்தின் பி டீமான தமிழக வெற்றிக் கழகம் – விஜய் ஆட்சியை தூக்கிப் பிடித்து கொண்டாடுகிறது.

ஆனால் அவர்களின் விருப்பங்கள், ஆரூடங்களுக்கு எதிராக “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு தாங்காது” என்பதைப் போல ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களுக்குள் பெண்கள் பாதுகாப்பு, ஊழல் ஒழிப்பு, சாதி தீண்டாமை வன்கொடுமைகளை தடுத்து நிறுத்துவது, மதச்சார்பற்ற அரசியலை உயர்த்திப் பிடிப்பது போன்ற அனைத்திலும் தோல்வியடைந்து தனது உண்மை முகத்தை காட்டிக் கொண்டுள்ளது விஜய் அரசு. மிகவும் ஆபத்தான பாசிச கோமாளி விஜய் ஆட்சியை பற்றி புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த கட்டுரைகளை தொகுத்து சிறு வெளியீடாக கொண்டு வருகிறோம்.

தமிழக வெற்றிக் கழகம் மற்றும் விஜய் ஆட்சி மீது மாயை கொண்டுள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மட்டுமின்றி பரந்துபட்ட உழைக்கும் மக்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற  வகையிலும், பாசிசத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் ஓர் திசை காட்டும் கருவியாக இந்த வெளியீடு பயன்படும் என்று நம்புகிறோம்.

தோழமையுடன்,

ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம் (மா.லெ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here