கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ் (கிழக்கிந்திய நிறுவனத்தின் மெட்ராஸ் எஸ்டாப்ளிஷ்மென்ட்டில் பணியாற்றிய இராணுவ அதிகாரி) எழுதிய Military Reminiscences (இராணுவ நினைவுகள்) புத்தகத்தில் நாங்கள் கட்டபொம்மனை,ஊமைத்துரையை கைதுசெய்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை சிதைத்துவிட்டு அவர்களை இழுத்துவந்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தோம். கட்டபொம்மனை தூக்கில் போட்டோம். ஊமைத்துரை தப்பித்துச்சென்றார். தப்பித்தவர் அவரது ஆட்களோடு வெறும் ஆறே நாட்களில் அந்த கோட்டையை மீண்டும் கட்டினார்கள். அது பெரிய அதிசயம் போல எங்களுக்கு தோன்றியது. இந்தமுறை எங்கள் பீரங்கி குண்டுகளால் துளைக்கமுடியாத அளவு கோட்டைச் சுவர்கள் வலுவாக இருந்தன. பீரங்கி குண்டுகள் சுவற்றில் சென்று புதைந்தன. ஆனால் சுவரை உடைக்க முடியவில்லை. மேஜர் மெக்காலேயின் தரைப்படையினர், குதிரைப்படையினர் கோட்டை அருகே சென்றார்கள். ஆனால் அனைவரையும் ஊமைத்துரை படையினர் ஈட்டியால் குத்திக் கொன்றார்கள். வெறும் நாற்பத்தி ஆறு பேர் மட்டுமே காயமின்றி உயிர்தப்பினர். அதிகாரிகள், பீரங்கிப் படையினர் உட்பட நூற்று ஆறு பேர் இந்த போரில் கொல்லப்பட்டார்கள் . நாங்கள் தோற்று பின்வாங்கி பாளையங்கோட்டை திரும்பிவிட்டோம். எங்களுக்கு கப்பம்கட்டிய எட்டயபுரம் பாளையத்தார் படையை அனுப்பிவைத்தோம். அவர்கள் ஆயிரம் பேர் கொண்ட படையுடன் சென்று பாஞ்சாலக்குறிச்சி கோட்டையை தாக்கினார்கள். அவர்களாலும் வெற்றிப்பெற முடியவில்லை, அவர்கள் பக்கம் எத்தனைப்பேர் இறந்தார்கள் என்று எங்களால் கணக்கெடுக்க முடியவில்லை.

இது கதைக்காவாது என்று நாங்கள் சுதாரித்து கர்நாடகா, மலபார் கடற்கரை போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து எங்கள் படைகளை அழைத்தோம். அவர்கள் திப்பு சுல்தானை எதிர்த்து போர்புரிந்துக் கொண்டிருந்தார்கள். குதிரைப்படை வீரர்கள் வந்தார்கள். திருச்சியிலிருந்து பெரியளவில் பீரங்கிப்படையை கொண்டுவந்தோம். மிகப்பெரிய வீரரான கர்னல் பீட்டர் ஆக்னியூவை அந்த படைகளுக்கு தலைவராக நியமித்தோம். கர்னல் பீட்டர் ஆக்னியூ தலைமையில் அந்தப்படை 1801ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியை சென்று சேர்ந்தது. மூன்று நாட்கள் விடாமல் சரமாரியாக குண்டுமழை பொழிந்தோம். உறங்க நேரமில்லை. உண்ணவில்லை. ஓய்வெடுக்கவில்லை. கர்னல் அக்னியூ மே மாதம் 21ஆம் தேதி படைகளின் தலைமைப்பொறுப்பை ஏற்றார். சரியாக மூன்றே நாட்களுக்குள், மே 24ஆம் தேதி கோட்டையை கைப்பற்றினோம். நாங்கள் கோட்டையின் உள்ளே நுழையும்போது 450 சடலங்களை கண்டுபிடித்தோம். ஊமைத்துரை ஆட்கள் இரண்டாயிரம் பேர் கோட்டை பின்பக்கம் வழியாக தப்பித்து கருவேலங்காட்டுக்குள் ஓடினார்கள். புகைமண்டலத்தின் ஊடாக அவர்களை பின்தொடர்ந்தோம். வழியெங்கும் பலர் காயமுற்று, உயிரிழந்து கிடந்தார்கள். மூன்று மைல் தாண்டி ஒரு கிராமத்தில் ஊமைத்துரை அவரது ஆட்கள் சிலர் குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்தார்கள்.

கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ் இதுவரை சொன்னது பெரிய விஷயமில்லை. இதற்கு பிறகு விவரிப்பதுதான் பெரிய விஷயம்.

ஒரு பெண்மணி போரில் கலந்துக்கொண்ட அவரது மகனை தேடி வந்துக் கொண்டிருந்தார். அந்த பிணக்குவியல் நடுவே மகனை அடையாளம் கண்டுப்பிடித்து மடியில் போட்டு அழுதார். அந்தப் பெண்ணின் மகன் மரணத்தின் கடைசி நொடியில் இருந்தான். அவன் சொன்னது அம்மா, என்னைக் காப்பாற்ற முயற்சிக்காதே. நான் நிச்சயம் இறந்து விடுவேன். பக்கத்தில் சாமி அடிப்பட்டு கிடக்கிறார், அவரை காப்பாற்று என்று சொல்லி உயிர்விடுகிறான். ஊமைத்துரையை அந்த மக்கள் சாமி என்றுதான் அழைப்பார்கள் என்று ஜேம்ஸ் வெல்ஷ் சொன்னதாக கடந்தப்பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அந்தப்பெண் அவரது மகன் உடலை விட்டுவிட்டு ஊமைத்துரையை மட்டும் தூக்கிக்கொண்டு அவரது வீட்டில் வைத்து வெளியே வேப்பிலையை கட்டிவிட்டார். இப்போது எட்டயபுர படையினரும், ஆங்கிலேய படையினரும் சேர்ந்து ஊமைத்துரையை தேடி கிராமத்துக்குள் புகுகிறார்கள். ஊமைத்துரையை முகம் மறைத்து ஒரு துணியால் மூடிவைத்துள்ளார்கள். அங்குச்சென்ற படைவீரர்களிடம் சின்னமை வந்து இறந்துப்போன உடல் என்று பொய்சொல்ல வீரர்கள் பயந்துப்போய் திரும்புகிறார்கள்.

படிக்க: கட்டபொம்மன், ஊமைத்துரை, சின்னமருது மகஇக பாடல்

பிறகு ஊமைத்துரை குணமடைந்து அங்கிருந்து தப்பி சிலநாட்கள் கழித்து மருது சகோதரர்களுடன் இணைந்து சண்டையிட அவர்களால் இந்தமுறை பீட்டர் ஆக்னியூ முன்பு எதிர்த்து நிற்க முடியவில்லை. போரின் முடிவில் மருது சகோதரர்கள் திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலிடப்பட ஊமைத்துரை பாஞ்சாலங்குறிச்சி கோட்டை பக்கத்தில் இருந்த சிறுகுன்றின் மேல் தூக்கிலிடப்பட்டார். பாஞ்சாலங்குறிச்சி கோட்டை சுவடே தெரியக்கூடாது என்று பீரங்கி வைத்து தகர்க்கிறார்கள்.

ஊமைத்துரை பற்றி கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ் இப்படி சொல்கிறார்.

ஊமைத்துரையால் பேச முடியாது, அவருக்கு காதும் கேட்காது. எனவே அவரை ஆங்கிலத்தில் ‘Dumb brother’ என்றே அழைத்தோம். அவர் கட்டபொம்மன் போல் இல்லை. மெலிந்த தேகம் கொண்ட இளைஞர், ஆனால் கடும் சிக்கலான நேரங்களில் சிறப்பாக செயல்படக் கூடியவர், அபாரமான மனவலிமை உடையவர். அவர் மீது அதீத நம்பிக்கை கொண்ட மக்கள் அவரை கடவுளாகப் பார்த்தனர், சாமி என்று அழைத்தார்கள். ஊமைத்துரை மக்களால் போற்றப்பட்டார். அவரது சிறு சைகை கூட மக்களுக்கு இறைவாக்கு, ஒவ்வொரு மனிதனும் அவர் கட்டளையிட்டதை நிறைவேற்ற துடித்தார். அவர் தலைமை தாங்காத எந்த சபையும் அங்கே கூடவில்லை. அவர் தலைமை தாங்காத எந்த துணிச்சலான சாகசமும் மேற்கொள்ளப்படவில்லை. சைகைகள் மூலமாகவே பல நாட்களுக்கு ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரை தலைமையேற்று நடத்தியவர். இவரைப் போல ஒருவரை வரலாற்றில் காண்பது அரிது. சொல்லப்போனால் எங்களுக்கு கட்டபொம்மனை விட ஊமைத்துரையை சமாளிப்பதுதான் பெரும் சவாலாக இருந்தது. அவரால்தான் அதிகளவு ஆங்கிலேயே வீரர்களை நாங்கள் இழந்தோம்.

படிக்க: மாவீரன் கட்டபொம்மன் 225 வது நினைவு தினம்! மறுகாலனியாக்கத்தை எதிர்த்து மீண்டுமொரு விடுதலைப்போரை நடத்துவோம்!

ஆங்கிலேயப் படைகள் வரும்போது இவர்கள் கருவேலங்காட்டுக்குள் ஒளிந்து வேவுபார்ப்பார்கள். ஆங்கிலேயப்படைகள் வருவதை அவரது வீரர்களுக்கு உணர்த்த ஊமைத்துரை இடது கையில் வைக்கோல் புற்களை வைத்துக் காட்டி, வலது கையால் தொப்பி அணிவது போல சைகை செய்வார். உடனே படைகள் சுதாரிக்கும். அவர்களைத் தாக்குங்கள் என்று சொல்வதற்கு ஒரு வித்தியாசமான சத்தத்தை எழுப்புவார். அதுபோல கையில் வெறும் வாளேந்தி ஆங்கிலேயே குதிரைப்படைகள் முன்பு நிற்பார்கள். குதிரைப்படை துரத்தும்போது சிறுசிறு குழுக்களாக பின்வாங்கி ஓடுவார்கள். நாங்கள் துரத்தி அவர்கள் கிட்டே போகும்போது அவர்கள் திடீரென அங்கு மண்ணில் மறைத்து வைத்திருக்கும் பதினைந்து அடி ஈட்டியை எடுத்து குதிரை அல்லது குதிரை மேல் இருக்கும் வீரர்கள் நெஞ்சில் பாய்ச்சிவிடுவார்கள் . அது ஒரு டிராப் என்று எங்களுக்கு தாமதமாகதான் தெரியும். இரவில் நாங்கள் உறங்கும்போது தொலைவில் படைகளுடன் சூழந்து ஒருவித குலவை சத்தம் எழுப்புவார்கள். நள்ளிரவு கும்மிருட்டில் அதை கேட்கும் ஆங்கிலேயே படைகளின் மனஉறுதி கலைந்துவிடும்.

இன்று ஊமைத்துரையின் 225-வது நினைவு நாள்.

முகநூல் பதிவு

நன்றி

Vinayaga Murugan

1 COMMENT

  1. போர் வீரன் ஊமத்துரையின் இந்த சிறு குறிப்பு வரலாறை படிக்கும் போது பெரும் போராட்ட உணர்வு ஏற்படுகிறது.
    ஆங்கிலேய படையை அடித்து விரட்டிய வாய் பேச முடியாது ஒரு மாபெரும் வீரனாக இருந்து எப்படிப்பட்ட போர்களை புரிந்துள்ளார் என்பது இன்றைய தலைமைக்கு புதிய தகவல் ஆச்சரியமானது கூட இப்படிப்பட்ட ஆங்கிலேயே ஏகாதிபத்திய எதிர்த்த போர் வீரனை இன்று சாதியை தலைவனாக மாற்றுவதும் , அன்று ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வீரன் ஊமதுரை.
    இன்று மாற்றம் என்றும் ஒப்பந்தங்கள் என்றும் ஆட்சி செய்ய கூடிய மோடி அரசாங்கம் நாடு மீண்டும் அடிமையாக மாற்றப்படுகிறது.
    அன்று ஒரு ஊமத்துரை போல் என்று பல ஊமதுரைகள் உண்மையான விடுதலை போராட்டத்திற்கு தேவை என்பதை இந்த கட்டுரை உணர்த்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here