திருப்பரங்குன்றத்தைத் தமிழ்நாட்டின் அயோத்தியாக மாற்றும் சங்பரிவார் கும்பலின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்கா அருகில் தூணில் தீபம் ஏற்ற ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் இன்று தர்கா அருகில் உள்ள அந்த கல் தூணில் இந்தாண்டு மட்டும் தீபம் ஏற்ற இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். இந்த தீர்ப்பு அயோத்தி பாபர் மசூதியில் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட ராமரை வழிபட அனுமதித்து 1986 ஆம்‌ ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு இணையானது. அயோக்கியத்தனமானது அநீதியானது.

இந்த வழக்கு கடந்து வந்த பாதை

ராம.ரவிக்குமார் எனும் கலவர சங்கி தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் அராஜகமான தீர்ப்பின் விளைவால் கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் கலவரத்திற்கு தயாராக்கப்பட்டது எனலாம். நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நல்லிணக்கத்திற்கு எதிரானது என்ற அடிப்படையில் அதை ஏற்க மறுத்தது திமுக அரசு. ஆனால் அதிகாரத் திமிரில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவசர அவசரமாக அன்றைய தினத்தில் வழக்கு தொடுத்த சூத்திர சங்கி ராமரவிக்குமாருடன் சி.ஆர்.பி.எஃப் வீரர்களை அனுப்பி தீபம் ஏற்றும் உத்தரவிட்டார். அதனையும் “We are not allowing, we will face the consequences” என்று கூறி அமல்படுத்த மறுத்து உறுதியாக நின்றது. இந்த நிகழ்வினை தனக்கு ஏற்ப்பட்ட அவமானமாக கருதிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அளித்த தீர்ப்பை எதிர்த்து திமுக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்புக்குத் தடை விதிக்க மறுத்தது.

அதை எதிர்த்து அன்றைய திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த தாவிக்க அரசு அதைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன சொல்கிறது

இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் பஞ்சோலி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. முழு விசாரணையும் முடிவறாத நிலையில் தற்போது ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம். அதில் கார்த்திகை தீபத் திருநாளன்று தர்கா அருகில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்றுவதற்கு ஒருமுறை நடவடிக்கையாக (one-time measure) மட்டும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அதேவேளையில், அந்த கல் தூணின் தன்மை மற்றும் அது அமைந்துள்ள நிலத்தின் உரிமை தொடர்பாக மெட்ராஸ் உயர்நீதிமன்றம் வெளியிட்ட கருத்துக்கள் மற்றும் முடிவுகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை (Stay) விதித்துள்ளது. மேலும், இந்த தற்காலிக அனுமதி வழங்கப்பட்டதற்காக, அதை ஒரு பாரம்பரிய வழக்கமாகவோ அல்லது வரும் ஆண்டுகளில் அனுமதி கோருவதற்கான உரிமையாகவோ எந்தத் தரப்பும் உரிமை கொண்டாட முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

படிக்க: திருப்பரங்குன்றம் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு: அநீதிக்கு மேல் அநீதி!

இந்த நிகழ்வின் போது தீபம் ஏற்றும் இடத்திற்கு பொதுமக்கள் செல்வதற்கும், அப்பகுதியில் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கும் அல்லது கோஷங்கள் எழுப்புவதற்கும் உச்சநீதிமன்றம் முற்றிலும் தடையும் விதித்துள்ளது. கோயில் நிர்வாகம் (தேவஸ்தானம்) சார்பில் அனுமதிக்கப்பட்ட ஒரு சிறிய குழுவினர் மட்டுமே சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்றும், அக்குழுவின் எண்ணிக்கை மற்றும் நபர்களை கோயில் நிர்வாக அதிகாரி, தொல்லியல் துறை (ASI) மற்றும் காவல் ஆணையருடன் ஆலோசித்து மதுரை மாவட்ட ஆட்சியர் முடிவு செய்வார் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் இந்நிகழ்வை நேரடியாக மேற்பார்வையிடுவார் என்றும், காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், தேவைப்பட்டால் மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) பாதுகாப்பையும் பயன்படுத்தலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. தீபம் ஏற்றியவுடன் அக்குழுவினர் உடனடியாக அவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டும், எந்தப் பொருட்களையும் அங்கே விட்டுச் செல்லக் கூடாது மற்றும் அவ்விடத்தில் புதிய கட்டுமானங்கள் அல்லது அகழ்வாராய்ச்சிகள் எதுவும் செய்யக் கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதேவேளையில், மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா மற்றும் மசூதியில் வழக்கம் போல் நடைபெறும் வழிபாடுகளுக்கும், அங்கு செல்வதற்கான சட்டப்பூர்வ அணுகலுக்கும் எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பண்டிகையின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் கருத்தில் கொண்டு இந்த குறுகிய கால நிபந்தனை அடிப்படையிலான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிமன்றம், வழக்கு தொடர்பான முக்கிய அரசியலமைப்பு மற்றும் மத உரிமை கேள்விகளை பின்னர் ஆராய்வதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும், கார்த்திகை தீபத் திருநாள் முடிந்து மூன்று நாட்களுக்குள் இந்த உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டை அயோத்தியாக்கும் இந்துவாவிற்கு சாதகமான தீர்ப்பு!

தீர்ப்பில் தாங்கள் எவ்வளவு நியாயவாதி தெரியுமா என்று காட்ட முயன்றுள்ளனர் நீதிபதிகள். அதாவது ஒருநாள் மட்டுமே தீபமேற்ற அனுமதி, சிக்கந்தர் பாதுஷா தர்காவுக்கு எந்த இடையூறும் செய்யக் கூடாது, தீபமேற்றியவுடன் அவ்விடத்தைவிட்டு வெளியேற வேண்டும், புதிய கட்டுமானங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சிகள் எதுவும் செய்யக் கூடாது என்றும் நடுநிலையாக இருப்பது போல் இந்துத்துவாவிற்கு சாதகமாக தெளிவாகவே தீர்ப்பெழுதியுள்ளார்கள்.

படிக்க: திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிபதியின் ஆர்.எஸ்.எஸ். சார்பு

ஒருநாள் நில அளவைக்கல்லில் தீபம் ஏற்றலாம் என்று எந்த அடிப்படையில் தீர்ப்பெழுதினார்கள்? ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கியுள்ள தீர்ப்பை உறுதி செய்துள்ளார்களே தவிர, தமிழ்நாடு அரசானது தனது வாதத்தின் போது, தெளிவாக அது தீபத்தூண் அல்ல, “சர்வே கல்” தான் என்பதற்கான ஆதாரங்களை வழங்கியுள்ளது. இதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு கார்த்திகை தீப நாள் நெருங்கி வருவதை சுட்டிக்காட்டி அவசரமாக தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிலும் அதற்கு சொல்லப்படும் காரணம் வழக்கு நடைபெறும் இக்காலத்தில் ஏற்ற அனுமதிக்காமல் போய்விட்டால் அதனை திரும்ப கொடுக்க முடியாது என்று ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளது. அதாவது இந்த முறை ஏற்றாமல் அநீதி இழைத்து விடக்கூடாது என்றது மிகவும் அக்கறையாக உள்ளார்களாம்.

வழக்கு விசாரணை தொடங்கப்படாமலே ஆறரை ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள உமர் காலித், சர்ஜில் இமாம் உள்ளிட்ட இளைஞர்களின் வாழ்க்கையில் அவர்கள் இழக்கும் காலத்தைப் பற்றி இந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இவ்வளவு அக்கறை கொள்ளவில்லை.

சிதம்பரம் கோவிலில் திருட்டு தீட்சிதர்களுக்கு எதிராக, கோயில் நிர்வாகத்தை ஐந்து பேர் கொண்ட குழுவிடம் ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்றம் அக்டோபர் 30ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு 2026 நவம்பர் 4ஆம் தேதி இதே உச்ச நீதிமன்ற அமர்வு (நீதிபதி அரவிந்த் குமார், நீதிபதி விபுல் எம். பஞ்சோலி) தான் இடைக்காலத் தடை விதித்தது. அந்த தீர்ப்பின் முடிவில் “பொது கோயில்களைப் பாதுகாப்பதற்காக உயர் நீதிமன்றங்களுக்கு இருக்கும் ‘Parens Patriae’ (பாதுகாவலர்) அதிகாரம், கோயில்களுக்கு மட்டுமே உரியதா? அல்லது பிற மதங்களைச் சேர்ந்த வழிபாட்டுத் தலங்களான தேவாலயங்கள் உள்ளிட்ட பிற மத நிறுவனங்களுக்கும் இந்த அதிகாரம் பொருந்துமா?” என்று கருத்து கூறி இருந்தனர். இது ஒரு சங்கியின் கண்ணோட்டம் என்பது அறிவார்ந்தவர்களுக்கு தெளிவாகவே தெரியும். இதே நீதிபதிகள் தான் தற்போது திருப்பரங்குன்ற வழக்கிலும் இடைக்கால தீர்ப்பெழுதியுள்ளார்கள்.

படிக்க: குஜராத் வன்முறைகளும் திருப்பரங்குன்றம் ஆர்ப்பாட்டமும்!

திருப்பரங்குன்றம் வழக்கு இந்த அமர்வுக்கு தான் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தவர் வேறு யாருமல்ல, சாட்சாத் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான சூர்யகாந்த் தான். அதாவது இந்துத்துவ கும்பலுக்குத் தேவையான வழக்குகள் (சிதம்பர தீட்சிதர் வழக்கு, திருப்பரங்குன்றம் வழக்கு, குருவாயூர் கோயில் உதயாஸ்தமன பூஜை வழக்கு, வேணு சீனிவாசன் தொடர்பான சிலை கடத்தல் வழக்கு…) எவ்வாறு குறிப்பிட்ட நீதிபதிகளிடம் ஒதுக்கப்படுகிறது என்பது நீதிபதி சூர்யகாந்திற்கே வெளிச்சம்.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக்கூடாதா?

திருப்பரங்குன்றத்தில் தீபமே ஏற்றக்கூடாது என்று யாருமே சொல்லவில்லை. கடந்த 150 வருடங்களாக திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள உச்சப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இதை யாருமே தடுக்கவில்லை. இதுதான் முருகன் கோவில் நிர்வாகத்தின் நடைமுறையும் தற்போதைய கோரிக்கையும் கூட. ஆகம விதிகளும் அவ்வாறு தான் சொல்கின்றன என்கிறார்கள் கோவில் பூசாரிகள். நில அளவைக்கல்லின் மீது தீபம் ஏற்றுவது ஆகமவிதிமீறல் என்றும் கூறுகிறார்கள். அனைத்துசாதி அர்ச்சகர் வழக்கு உட்பட பார்ப்பனர்களுக்கு எதிரான அனைத்து வழக்குகளிலும் ஆகமவிதியை காரணம் காட்டி பார்ப்பனர்களுக்கு சாதகமாக தீர்ப்பெழுதிய நீதிமன்றம் இப்போது அவர்களே சொல்லும் ஆகம விதிக்கு எதிராக இந்துமத வெறியர்களுக்கு ஆதரவாக தீர்ப்பெழுதியுள்ளார்கள்.

திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவின் அருகில் உள்ள நில அளவைக்கல்லில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்களோ, ஆன்மீகவாதிகளோ அல்லது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் நிர்வாகிகளோ அர்ச்சகர்களோ யாருமே இந்த கோரிக்கையை எழுப்பவில்லை. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த அநீதியான தீர்ப்பை எதிர்த்து தவெக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு கொடுப்பது மற்றும் தர்கா அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்ற முடியாது என்று உறுதியாக தனது நிலைப்பாட்டை அறிவிப்பது என்பதை செய்ய வேண்டும். மத நல்லிணக்கத்தையும் அமைதியான வாழ்க்கையும் விரும்பும் அனைவரும் கலவரத்தை உருவாக்கக்கூடிய அநீதியான இந்த உத்தரவுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். போராட வேண்டும்.

நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here