மக்களைத் திரட்டும் அரசியல்:
செயல் தந்திர அரசியலும், சரியான மக்கள் திரள் வழியுமே என்பதை நிரூபித்த தஞ்சை இசை விழா!
இந்தியாவில் புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தும் லட்சியத்துடன் செயல்பட்டு வருகின்ற புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகம் உள்ளிட்ட புரட்சிகர இயக்கங்கள் சமீபத்தில் தஞ்சையில் நடத்திய தமிழ் மக்கள் இசை விழா, மக்களை அணிதிரட்டுவதற்கு அரசியல் செயல் தந்திரத்தின் அவசியத்தையும், அதன் வெற்றியையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளது.
ஒவ்வொரு அரசியல் போராட்டமும், திருத்தல்வாதத்தையும், சமரசப் போக்குகளையும், சந்தர்ப்பவாதத்தையும் எதிர்த்துப் போராடுகின்ற சித்தாந்தப் போராட்டம் தான் என்பதையும் இந்த இசை விழாவின் வெற்றி நிரூபித்துள்ளது.
கடந்த நான்கு தசாப்த காலமாக நாடு தழுவிய அளவில் மக்கள் எழுச்சியை உருவாக்குவதற்கும், அரசியலதிகாரத்தை கைப்பற்றுவதற்கு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் அரசியல் போராட்டம் தான் முன் நிபந்தனை என்று முன் வைத்ததை கண்டு பலரும் முகத்தை சுளித்து கொண்டிருந்தனர். அரசியல் போராட்டங்கள் என்பது கூட நிகழ்ச்சிப் போக்கில் பகுதி அளவில் நடக்கின்ற அரசுக்கு எதிரான போராட்டங்கள், பகுதிப் பிரச்சனைகள் ஆகியவற்றை முன்வைத்து நடத்துவது அல்ல என்பதையும், அறிவியல் பூர்வமாக அரசியல் செயல் தந்திரங்களை வரையறை செய்து, அந்த செயல் தந்திரங்களின் அடிப்படையில் மக்களை திரட்டுவது தான் புரட்சியை நோக்கி மக்கள் அணிதிரண்டு வரச் செய்யும் என்பதை அறிவித்து அந்த அடிப்படையில் செயல்பட்டு வருகிறது புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள்.
சிபிஐ, சிபிஎம், சிபிஐ எம்-எல் ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற சரணடைவு அரசியலை நிராகரித்து, ஆயுதப் போராட்ட அரசியலை முன்வைத்த போது இது பற்றி எமது நிலைப்பாடுகளை கீழ்கண்டவாறு ஆவணப்படுத்தியுள்ளோம்
“பொருளாதாரவாதத்துடன் இணைந்த நிகழ்ச்சி போக்கின் வகைப்பட்ட செயல் தந்திரங்கள் மூலமாக பரந்துபட்ட மக்களை அரசியல்படுத்துவதாகவும், இப்ப போராட்டங் களையும் ஆயுதப் போராட்டங்களாக வளர்த்தெடுப்பதாகவும் கூறிக் கொள்ளும் இந்த போக்குதான் மார்க்சிய லெனினிய இயக்கத்திற்குள் பிரதானமாகி வலது சந்தர்ப்பவாத அபாயத்தை தோற்றுவித்திருக்கிறது.
புரட்சிகரமான சொல்லடுக்குகளால் தன்னை அலங்கரித்து மூடி மறைத்து கொண்டுள்ள இந்த வலதுசாரி போக்கிற்கெதிரான உக்கிரமான சித்தாந்த போராட்டத்தின் ஊடாக தான் சரியான மக்கள் திரள் வழியை வகுத்து வரையறுத்து நடைமுறையில் நிலைநாட்ட முடியும்.
பல்வேறு பிரிவு மக்களுக்கும் வர்க்கங்களுக்கும் தனித்தனியான மக்கள் திரள் அமைப்புகளை நிறுவி அவர்களது பகுதி மற்றும் அன்றாட கோரிக்கைகளுக்கான போராட்டங்களை நடத்துவதன் மூலம் விவசாயத் திட்டத்தையும், அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஆயுதப் போராட்ட அரசியலை பிரச்சாரம் செய்வதன் மூலமும், பரந்துபட்ட மக்களுக்கு அரசியல் பிரக்ஞை ஏற்படுத்தும் பகுதி மற்றும் அன்றாட கோரிக்கைகளுக்கான போராட்டங்களையும், அரசாங்கத்திற்கு எதிரான துண்டு துண்டான சில அரசியல் பிரச்சனைகள் மீதான போராட்டங்களையும் நடத்தி அவற்றின் வளர்ச்சி போக்கையே ஆயுதப் போராட்டமாக மாற்றுவதும் என்ற முறையிலேயே இந்த வலது சந்தர்ப்பவாதம் எழுகிறது.” என்று முன் வைத்திருக்கிறோம்.
இந்தியாவில் நிலவும் யதார்த்தங்களையும் அவற்றுக்குரிய தனிச்சிறப்பான கூறுகளையும் கண்டறிந்து வரையறுத்துக் கொள்வதற்கு பதிலாக மாவோவின் மக்கள் யுத்தப் பாதை என்ற பெயரில், சீனத்தின் லின்பியாவோ கொச்சையாக தொகுத்துரைத்த கொரில்லா போர் முறையை எந்திர முறையில் பிரயோகித்தனர் சாருமஜும்தார் தலைமையிலான இந்திய இடது சந்தர்ப்ப வாதிகள். அவரது வழிமுறையை தொடர்ந்து பின்பற்றி தேக்கத்தையும், பின்னடைவையும் சந்தித்துள்ளனர் மாவோயிஸ்டுகள்.
படிக்க:
♦ புதிய ஜனநாயகம் | செப்டம்பர் 2026 மாத அச்சு இதழ்
♦ அரசியல் செயல்தந்திர வழியில் மக்களை திரட்ட முடியும் என்பதை மீண்டும் நிரூபித்த மக்கள் அதிகார மாநாடு!
அதற்கு நேர் எதிராக பகுதி பிரச்சனைகளையும், அரசுக்கு எதிரான போராட்டங்களையும் தொடர்ச்சியாக நடத்துவதன் மூலம் மக்களை புரட்சிக்கு அணி திரட்டி விட முடியும் என்று செயல்பட்டு வருகின்றனர் வலது சந்தர்ப்பவாதிகள். இந்த இரண்டு போக்குகளுமே மக்களை புரட்சிக்கு அணிதிரட்ட உதவாது என்கிறோம்.
இவ்வாறு வரையறுப்பதால் அன்றாட மற்றும் பகுதி கோரிக்கைகளுக்கான போராட்டங்களையும் அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் பிரச்சனைகள் மீதான போராட்டங்களையும் நடத்துவதையோ, விவசாயத் திட்டத்தையும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஆயுதப் போராட்ட அரசியலையும் பிரச்சாரம் செய்வதையோ கூடாது என்று நாங்கள் கூறவில்லை. மாறாக இவை அவசியமானவையே. ஆனால் இந்த வழிமுறைகளின் மூலம் பரந்துபட்ட மக்களுக்கு அரசியல் பிரக்ஞையை ஏற்படுத்தவோ, இப்போராட்டங்களையே ஆயுதப் போராட்டக்களாக வளர்த்தெடுக்கவோ முடியாது என்று மட்டுமே சொல்கின்றோம்.
இந்த புரிதலின் அடிப்படையில் கடந்த 40 ஆண்டு காலமாக, அரசியல் செயல்தந்திர முழக்கங்களின் கீழ் கருவறை நுழைவுப் போராட்டம் முதல் தற்போது தஞ்சையில் நடத்தப்பட்ட தமிழ் மக்கள் இசை விழா வரை அனைத்தும் மக்களை திரட்டுகின்ற சரியான மார்க்சிய லெனினிய வழிமுறைகளாகும்.
அது மட்டுமல்ல! “குறிப்பிட்ட தருணத்தின் பருண்மையான நிலைமைகள் பாசிச எதிர்ப்பு அல்லது யுத்த எதிர்ப்பு அரசியல் நடத்தை வழியை கொண்ட செயல் தந்திரத்தை வகுத்து நடைமுறைப்படுத்தும்படி கோரினால் அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் எல்லா பகுதி மற்றும் அன்றாட கோரிக்கைகளுடன் அவற்றுக்கெதிரான போராட்டங்களுடனும், அரசு மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான எல்லா அரசியல் பிரச்சனைகளுடனும் அவற்றுக்கான போராட்டங்களுடனும் பாசிச எதிர்ப்பு அல்லது யுத்த எதிர்ப்பு அரசியல் இணைக்கப்படும். பாசிச எதிர்ப்பு அல்லது யுத்த எதிர்ப்பு அரசியல் நடத்தை வழியை கொண்ட திட்ட வகைப்பட்ட அரசியல் செயல் தந்திரமே எல்லா பிரச்சனைகள் மீதான வரம்புகளையும், அமைப்பு மற்றும் போராட்ட வடிவங்களையும் தீர்மானிக்கும்” என்பதையும் கோட்பாடாக மட்டுமின்றி நடைமுறையிலும் அமுல்படுத்தி வருகிறோம்.
இவை மட்டுமல்ல! பல்வேறு வர்க்கங்களாக பிரிந்து கிடக்கின்ற பெரும்பான்மை உழைக்கும் மக்களை அணி திரட்டுவதற்கு அவர்களின் வர்க்க குணாம்சங்கள் மற்றும் வர்க்க வாழ்க்கைத் தேவையின் அடிப்படையில் அமைப்புகளை கட்டுவதுடன், அவர்களை ஒருங்கிணைக்கின்ற அரசியல் போராட்டத்தின் மூலம் தான் புரட்சிகர எழுச்சிக்கு அவர்களை தயார் படுத்த முடியும் என்ற மார்க்சிய லெனினிய சமூக விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னேறிச் செல்ல முடியும் என்கிறோம்.
இதற்கு மாறாக தொழில் ரீதியான போராட்டங்களை முதற்கட்டமாக பிரித்து பின்னர் அரசியல் போராட்டங்கள் என்பது அல்லது தொழில் ரீதியான போராட்டங்கள் மூலமாகவே அரசியல் போராட்டங்களில் அவசியத்தை உணரும் பொழுது அரசியல், ஆயுதப் போராட்டங்கள் என்பது முற்றிலும் தவறானது என்பதையும் அறிவிக்கின்றோம்.
ஏனென்றால் இத்தகைய போராட்டங்கள் பரந்தப்பட்ட மக்களை நிலப்பிரபுத்துவ அல்லது முதலாளித்துவ சித்தாந்தத்தில் தள்ளக் கூடியது. மார்க்சிய லெனினிய அரசியலுக்கு விரோதமானது என்பதால் பல்வேறு பிரிவு உழைக்கும் மக்களையும் ஒரு குறிப்பிட்ட அரசியல் முழக்கத்தின் கீழ் அதாவது செயல்தந்திர அரசியல் முழக்கத்தின் கீழ் அணி திரட்டுவது என்பது புரட்சியின் பல்வேறு கட்டங்களில் ஒன்றானது; அவசியமானது; முக்கியமானது. அந்த கண்ணோட்டத்திலிருந்து இசை விழா முன்வைத்த, “கீழடி நாகரிகத்தை உயர்த்திப்பிடி! வேத நாகரிகத்தை துரத்தியடி” என்பது நேரடியாக மக்களின் வாழ்க்கை, பொருளாதார தேவைகளுடன் தொடர்பில்லாத போதிலும் அவர்களின் சித்தாந்த கண்ணோட்டத்தையும் அரசியல் வாழ்க்கையையும் தீர்மானிப்பதாக இருக்கின்றது என்ற அளவில் அவை வெற்றி பெற்றுள்ளது.
இத்தகைய கண்ணோட்டத்தில் மக்களை திரட்டி புதிய ஜனநாயகப் புரட்சி பாதையில் முன்னேறி செல்வோம். அதற்கு இடையில் நாட்டையும், மக்களையும் அச்சுறுத்தி வரும் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதத்திற்கு எதிராக திட்ட வகைப்பட்ட செயல் தந்திரங்களின் மூலம் மக்களின் அரசியல் உணர்வையும், போர்குணமிக்க போராட்ட உணர்வையும் உருவாக்கி மக்கள் எழுச்சியின் மூலம் மகத்தான வெற்றிகளை பெற்று முன்னேறுவோம்.
செப்டம்பர் 2026 இதழில் வெளியான கட்டுரை.
புதிய ஜனநாயகம்
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்







