
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஆந்திராவில் விசாகப்பட்டினம் நகரத்தில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றில் ஆந்திராவின் முதலமைச்சரான திருவாளர் சந்திரபாபு நாயுடு கீழ்கண்டவாறு தனது முன்மொழிதலை தெரிவித்திருந்தார். இது பற்றி,, “ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு-2026 நேற்று தொடங்கியது. 3 நாள் நடைபெறும் இதில் முக்கிய விருந்தினராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார். மேலும், மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் 58 நாடுகளை சேர்ந்த நிறுவன சிஇஓக்கள், நிர்வாக இயக்குநர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டை தொடங்கி வைத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: என் தலைமையில் இதுவரை 8 முதலீட்டாளர்கள் மாநாடு நடந்துள்ளது. என் மீதுள்ள நம்பிக்கையில் பல நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க முன்வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. 2024 ஜூன் மாதம் முதல் ரூ.22.6 லட்சம் கோடி முதலீடுகளுடன் 714 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதில் ரூ.7.3 லட்சம் கோடி முதலீடுகள் தொழில் தொடங்கும் நிலையில் உள்ளது.
முதலீட்டாளர்களுக்கு உரிய பாதுகாப்பு சட்டத்தை இயற்றுவது மிக அவசியம். இதை மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் என்னுடைய கோரிக்கையாக வைக்கிறேன். ஆட்சிகள் மாறும்போது இது ஒரு காழ்ப்புணர்வாக தொழிற்சாலைகள் மீது செயல்படுத்தப்படுகிறது.
இது தொடர்பாக ஆந்திர அமைச்சரவை மற்றும் பேரவை, மேலவைகளில் சட்டம் இயற்றி அனுப்பி வைக்கிறோம். இதனை தேசிய அளவில் சட்டம் இயற்றினால், இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்” என்று இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டு இருந்தது.
இந்திய ஒன்றியத்தில் கார்ப்பரேட் காவி பாசிசம் தலைவிரித்து ஆடுகிறது என்று மார்க்சிய லெனினிய அமைப்புகள் முன்வைப்பதை பெரும்பான்மை உழைக்கும் மக்கள் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு புரிகின்ற வகையில் கொண்டு சேர்க்கும் பணியை புரட்சிகர அமைப்புகள் முழு வீச்சில் செய்யவில்லை என்பதுதான் எதார்த்த உண்மையாகும்.
எதிரிகள் பலமாக இருக்கிறார்கள் என்பதற்கு காரணம் அவர்களின் அரசியல், சித்தாந்த, பண்பாட்டு ரீதியிலான கொள்கைகளோ அல்லது அவர்கள் முன்வைக்கின்ற பொருளாதார திட்டங்களோ கிடையாது. மாறாக அவற்றை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி அவர்களை வீழ்த்துகின்ற அளவிற்கு பாசிச எதிர்ப்பு சக்திகள் ஓர் அணியின் கீழ் இல்லை என்பது தான் முக்கியமான விடயமாகும்.
இது ஒருபுறம் இருக்க கார்ப்பரேட்டுகளின் சேவையில் இந்திய ஒன்றியத்தின் பிரதமரான பாசிச மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை அந்த கூட்டணியில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தின் முதல்வர்களும் நிரூபித்து வருகிறார்கள்.
முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு என்ற பெயரில் தொழிற்சங்க சட்டங்களை கடுமையாக ஒடுக்குவது, ஏற்கனவே தொழிலாளர்களுக்கு உள்ள அரைகுறை உண்மைகளை பறித்து நவீன கொத்தடிமைகளாக அவர்களை மாற்றுவது, குறைந்த கூலிக்கு அவர்களின் உழைப்பு சக்தியை சுரண்டுவது, அதற்கு எதிராக தொழிற்சங்கங்களை அமைத்து உரிமைகளுக்காக போராடுவதை தடுப்பது என்ற வகையில் கார்ப்பரேட்டுகளின் மனம் குளிருகின்ற தீர்மானங்களை முன் வைத்துள்ளார் திருவாளர் சந்திரபாபு நாயுடு.
அது மட்டுமல்ல! முதலீட்டாளர்கள் பாதுகாப்புக்கு என தனியாக தீர்மானங்களை இயற்றி சட்டப்பேரவை மற்றும் மேலவையில் நிறைவேற்றிய அதனை இந்திய ஒன்றிய அரசுக்கு அனுப்புவதாகவும் அதன் அடிப்படையில் இந்திய ஒன்றிய அரசு செயல்பட்டால் அந்நிய முதலீடுகளை ஈர்க்க முடியும், தொழில் பாதுகாப்பு என்ற பெயரில் முதலீட்டாளர்களுக்கு எந்த விதமான அச்சமும் இன்றி சுதந்திரமாக இந்தியாவின் கனிம வளங்களையும், காட்டு வளங்களையும் உழைப்பு சக்தியையும் கொள்ளையடிப்பதற்கு முடியும் என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்றவுடன் கார்ப்பரேட் முதலாளிகளின் அடியாளாக மாறி செயல்பட துவங்கியதை 2025 ஜூன் மாத தினசரியில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தோம்
“தமிழகத்தின் அண்டை மாநிலமாக உள்ள ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு மற்றும் பாஜக கூட்டணி ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்தை வென்றது. சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்தது முதல் ஆந்திராவில் விவசாயிகளின் வாழ்வுரிமை பறிக்கின்ற பல்வேறு நடவடிக்கைகள் முதல் தொழிலாளர்களின் கழுத்தை நெரிக்கின்ற சட்டத் திருத்தங்கள் வரை ஒவ்வொன்றாக அமல்படுத்தி வருகின்றார்.
இதன் மூலம் பாசிச மோடி கும்பலின் மனம் கவர்ந்த எடுபிடியாகவும், சொந்த முறையில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமை சேவகம் செய்கின்ற விசுவாசியாகவும் மாறியுள்ளார் என்பது தொடர்ந்து அம்பலமாகி வருகிறது.
கார்ப்பரேட் முதலாளிகளின் சேவையில் முன்னிலையில் உள்ள ஆந்திர மாநில சந்திரபாபு நாயுடுவின் அரசாங்கம் ஆந்திராவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிகின்ற தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை என்ற அடிப்படை உரிமையை மாற்றி 10 மணி நேர வேலை செய்ய வேண்டும் என்று சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது..
ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, கார்ப்பரேட் லாப வெறிக்கு ஏற்ப வணிகம் செய்வதை எளிதாக்குவதற்காகவும், அன்னிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகவும் அதிகபட்ச வேலை நேரத்தை ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக உயர்த்த முடிவு செய்துள்ளது. இதற்கு ஏற்ப தொழிலாளர் சட்டங்களை திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் கே. பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்” என்று சந்திரபாபு நாயுடுவின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி இருந்தோம். அவை தற்போது நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டுள்ளது என்பதைத்தான் அவரது ஆட்சி நிரூபித்து வருகிறது.
மாநிலங்களின் வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை போடுவது; சில லட்சம் கோடிகளில் அவர்களின் முதலீடுகளை ஈர்ப்பது; அவர்கள் மனம் குளிருகின்ற வகையில் உள்நாட்டில் உள்ள சட்ட திட்டங்கள், மாநிலங்களின் அதிகாரத்திற்கு உட்பட்ட வகையில் உள்ள கட்டுப்பாடுகள் அனைத்தையும் தடையின்றி நீக்குவது ஒன்றே நாட்டின் வளர்ச்சிக்கான பாதை என்பதை ஆளும் வர்க்கங்கள் தொடர்ச்சியாக ஊளையிட்டு வருகின்றன.
நாட்டின் வளங்களை கொள்ளையடிப்பதற்கும், உலகிலேயே அதிக மனித உழைப்பை கொண்ட நாட்டின் உழைப்பு சக்தியை குறைந்த கூலிக்கு விற்பனை செய்யவும் தயாராக உள்ள இந்த தேசவிரோத கும்பல், வளர்ச்சி என்ற பெயரில் முன்வைக்கின்ற அபத்தங்களை, சதித்திட்டங்களை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே தேசபக்தர்கள் என்று முன் வைக்கிறார்கள்., அதற்கு மாறாக அதனை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் தேசவிரோதிகள், திமாகி நக்சல்கள் என்று முத்திரை குத்தி ஒடுக்க நினைக்கின்றனர்.
இந்திய ஒன்றிய அரசாங்கமானது தொழிலாளர்களின் நலனை ஒடுக்குவதற்கும், அவர்களின் குறைந்தபட்ச பணி பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமைகளுக்கு முடிவு கட்டுவதற்கும் தீவிரமான முயற்சி எடுத்துக் கொண்டு வருகின்ற சூழலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன் வைத்துள்ள கருத்துக்கள், தீர்மானங்கள் அனைத்தும் ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கத்திற்கும் எதிரானது.
விவசாயிகளின் விவசாய புரட்சியில் முன்னிலையில் நின்ற தெலுங்கானாவை இந்திய ஒன்றியத்திற்கு கொடையாக அளித்த ஆந்திராவின் தொழிலாளி மற்றும் விவசாயிகள் கூட்டணி இது போன்ற முயற்சிகளை முறியடிக்கின்ற வகையில் போராடும் என்பதை உணர்த்துவோம்.
முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு என்று ஆளும் வர்க்கத்திற்கு பச்சையாக காவடி தூக்குகின்ற வேலையை சந்திரபாபு நாயுடுகள் செய்ய நினைத்தால் அதற்கு எதிராக தொழிலாளி வர்க்கத்திற்கும் அவர்களின் நேச சக்திகளான விவசாயிகளுக்கும் பாதுகாப்பு ஒன்றை உருவாக்குவதற்கு இன்றைய தருணத்தில் பொருத்தமான ஜனநாயக கூட்டரசு ஒன்றை நிறுவுவதை நோக்கி முன்னேறுவோம்.
- மருது பாண்டியன்.
புதிய ஜனநாயகம் தினசரி






