திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தவெக அரசின் முடிவுக்குப் பின்னால் இருப்பது மதச்சார்பற்ற கொள்கையா, தேர்தல் அரசியல் கணக்கா?

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள ‘சர்வே’ கல் மீது தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி அளித்தும், அதை அமல்படுத்தாமல் வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்றியுள்ளது தற்போதைய தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசு.

மேலோட்டமாகப் பார்த்தால் இது ஆர்.எஸ்.எஸ் – பாஜக உள்ளிட்ட இந்துத்துவ சக்திகளின் அழுத்தங்களுக்குப் பணியாத துணிச்சலான முடிவு போலத் தோன்றலாம். ஆனால், இதன் பின்னணியில் இருக்கும் தேர்தல் அரசியலையும், சனாதன சக்திகளின் நீண்டகால வியூகத்தையும் நாம் சற்று ஆழமாகப் பார்க்க வேண்டியுள்ளது.

இரு முகாம்களாகப் பிரிந்த அரசியல் களமும் தவெகவின் மௌனமும்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில், “நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தியே ஆக வேண்டும்” என்று ஒரு முகாமும், “சர்வே கல்லில் புதிதாகத் தீபம் ஏற்றக் கூடாது” என்று மற்றொரு தரப்புமாகத் தமிழ்நாட்டு அரசியல் களம் இரு துருவங்களாகப் பிரிந்து நின்றது.

• தீர்ப்பு வந்த உடனே அதை அமல்படுத்த வேண்டும் என்று பாஜக தீவிரமாகப் பேசியதோடு, தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படாததைக் கண்டித்து இந்துத்துவ அமைப்புகள் சில இடங்களில் போராட்டங்களையும் நடத்தின.

• பாட்டாளி மக்கள் கட்சியின் சௌமியா அன்புமணி தீர்ப்பை வரவேற்றார்; புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியும் நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என அறிக்கை வெளியிட்டார்.

இவ்வளவு விவாதங்கள் நடந்தபோதும், ஆளும் தவெக தரப்பிலிருந்து “இந்தத் தீர்ப்பு தவறானது” என்று ஒருவர்கூட கொள்கை ரீதியாகப் பேசவில்லை. தமிழ்நாட்டின் தேர்தல் அரசியல் சூழலைக் கணக்கில் கொண்டு மட்டுமே அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், எந்த முகாமிலும் வெளிப்படையாகச் சேராமல், இப்போது முற்போக்கு முகாமில் இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றம் தவெக அரசு குறித்து உருவாக்கப்பட்டுள்ளது.

வாக்கு வங்கியைத் தக்கவைக்கும் நிர்பந்தம்

தமிழ்நாட்டுத் தேர்தல் அரசியலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களின் வாக்குகளும்; இந்துத்துவ எதிர்ப்பு நிலைப்பாடு கொண்ட விசிக, நாடாளுமன்ற இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் வாக்குகளும் மிக முக்கியமானவை. கடந்த தேர்தலில் இந்தத் தளங்களின் கணிசமான ஆதரவைப் பெற்றுத்தான் தவெக ஆட்சியைப் பிடித்தது.

படிக்க: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரம்: பாசிஸ்டுகளை உரிய முறையில் எதிர்கொள்வதே தீர்வு!

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அரசு அமல்படுத்தியிருந்தால், அது பாஜகவுக்குப் பணிந்ததாகப் பார்க்கப்பட்டு, இந்த வாக்கு வங்கியில் பெரிய விரிசல் ஏற்படும் என்று அந்தக் கட்சியின் பின்னணியில் இயங்கும் சனாதன சிந்தனைக் குழுக்கள் கணக்கிட்டிருக்கக்கூடும்.

திமுகவுக்கு எதிரான அரசியல் போட்டி

கடந்த ஆண்டு, திமுக ஆட்சியில் இருந்தபோது, நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் சட்டம்-ஒழுங்கு சிக்கல்களைக் காரணம் காட்டி, வழக்கமான இடத்திலேயே – அதாவது நூற்றாண்டுகளாகத் தீபம் ஏற்றப்பட்டு வரும் உச்சிப் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள தீப மண்டபத்திலேயே – தீபம் ஏற்றப்பட்டது.

இப்போது தவெக அரசு ‘சர்வே’ கல் மீது தீபம் ஏற்ற அனுமதித்திருந்தால், “திமுக துணிச்சலாக நின்றது, தவெக பணிந்துவிட்டது” என்ற ஒப்பீடு எழுந்து, சிறுபான்மையினர் மத்தியில் திமுகவுக்கு ஆதரவு பெருகிவிடும் என்ற அச்சமும் இந்த முடிவுக்குப் பின்னால் இருக்கிறது. தவெகவை மதச்சார்பற்ற அணியின் தலைமை என்று முன்வைத்துப் பிரச்சாரம் செய்யும் சில இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகள் மற்றும் தன்னார்வக் குழுக்களுக்குச் சிக்கல் ஏற்படுவதை ஆட்சியாளர்கள் விரும்பவில்லை.

இந்துத்துவ சக்திகளின் இரட்டை ஆதாயமும், மறைமுகப் பாதுகாப்பும்

தீபம் ஏற்றப்பட்டால் அதைத் தங்கள் வெற்றியாகக் கொண்டாடுவது; அரசு தடுத்தால் “இந்துக்களின் உரிமை பறிக்கப்படுகிறது” எனப் பிரச்சாரம் செய்வது என்பதே இந்துத்துவ சக்திகளின் வழக்கம். சட்டப்படியும் மரபுப்படியும் இது ஒரு புதிய பழக்கவழக்கத்தைத் திணிக்கும் முயற்சி என்பதை அறிந்திருந்தும், சமூகத்தில் தொடர்ந்து மதரீதியான கருத்துருவாக்கத்தை நடத்தும் ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் திட்டத்திற்குக் கிடைத்த நகர்வாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

படிக்க: திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க முயலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு!

இதைவிட முக்கியமாக, இந்த விவகாரத்தில் எக்காரணத்தைக் கொண்டும் நடிகர் விஜய் தன்னுடைய சிறுபான்மையினர் வாக்கு வங்கியை இழந்துவிடக் கூடாது; அதேசமயம் திமுகவும் இதனால் அரசியல் ஆதாயம் அடைந்துவிடக் கூடாது என்ற இரட்டை நோக்கத்தை இந்துத்துவ சக்திகள் மிகச் சரியாகக் கையாண்டு விஜய் கட்சியைப் பாதுகாத்துள்ளன. களத்தில் இருக்கும் ஏதுமறியாத சாதாரண இந்துத்துவ ஊழியர்கள் வேண்டுமானால் அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கலாம்; ஆனால், பார்ப்பனிய – இந்துத்துவத் தலைமையின் உள்ளார்ந்த திட்டம் மிகச் சரியாகத் தனது பாதையை அமைத்துக்கொண்டு செல்கிறது.

திராவிடக் கருத்தியலை வீழ்த்தும் நீண்டகாலத் திட்டம்

இந்துத்துவ – சனாதன சக்திகளுக்கு எப்போதும் அச்சுறுத்தலாக இருப்பது திராவிடக் கருத்தியல்தான். திராவிடக் கருத்துகளை வீழ்த்த வேண்டுமென்றால், நடிகர் விஜய் போன்ற அரசியலற்ற, கவர்ச்சிவாத மற்றும் கார்ப்பரேட் கொள்கைகளைச் சுமந்து செல்லும் ஆளுமைகள் செல்வாக்குப் பெற வேண்டும்; தவெக தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.

குறிப்பாக, நீதித்துறை முதல் தொழில்நுட்பத் துறை வரை உள்ள சனாதன ஆதரவுச் சிந்தனையாளர்கள், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை முன்வைத்து, உடனடியாகத் தீபம் ஏற்றுவதைவிடப் படிப்படியாகக் காவி அரசியலைத் தமிழகத்திற்குள் வேரூன்ற வைப்பதையே தொலைநோக்குத் திட்டமாகக் கொண்டுள்ளனர். இந்த மையப்புள்ளியிலிருந்தே நாம் இவ்விவகாரத்தைப் பரிசீலிக்க வேண்டும்.

மக்கள் போராட்டத்தின் வெற்றி – விஜய்யின் கொள்கை வெற்றி அல்ல

கடந்த ஒரு மாத காலமாக மதுரையில் சமூக நல்லிணக்கம் கெட்டுவிடக் கூடாது என்றும், மக்கள் மத்தியில் உள்ள ஒற்றுமை உணர்வும் மதங்களுக்கு இடையிலான சகோதரத்துவமும் சீர்குலைந்து விடக் கூடாது என்றும் தொடர்ச்சியாகப் போராடி வரும் மத நல்லிணக்கக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக சக்திகளின் போராட்டமும்; மதுரை மக்களின் மதச்சார்பற்ற ஜனநாயக உணர்வும்தான் விஜய் அரசாங்கத்தை ஏற்கெனவே நிலவி வரும் பழக்கவழக்கத்தை மட்டுமே கடைப்பிடிக்க நிர்பந்தித்துள்ளது.

படிக்க: சர்வே கல்லை தீபத்தூணாக மாற்றிய கதை!? | மீள்பதிவு

முற்போக்கு முகாமிற்கு ஒரு வேண்டுகோள்

வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றியதற்காகத் தவெக அரசைப் பாராட்டியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், “மதவெறி சக்திகளின் சதிச் செயல்களுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என்பது மீண்டும் ஒருமுறை அழுத்தமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் வீரபாண்டியனும் தவெக அரசின் நடவடிக்கையை வரவேற்று வாழ்த்தியுள்ளார். இதேபோல், முற்போக்கு முகாமைச் சேர்ந்த பலரும், ஏன் மார்க்சியம்-லெனினியம் பேசும் சில குழுக்களும்கூட தவெக அரசைப் பாராட்டி வருகின்றனர்.

தனது வாக்கு வங்கியைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஒரு அரசு எடுக்கும் தற்காப்பு முடிவை, ஏதோ பெரிய கொள்கைப் பிடிப்பு போலக் கருதி முற்போக்குச் சக்திகளும் இடதுசாரிகளும் அவசரப்பட்டுத் தவெகவுக்கு ஆதரவான ஒரு பொதுக்கருத்தை உருவாக்கிவிடக் கூடாது. தேர்தல் லாபத்திற்கான நகர்வுக்கும், உண்மையான பாசிச எதிர்ப்பு அரசியலுக்கும் இடையிலான வேறுபாட்டை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்!

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள ‘சர்வே’ கல் மீது தீபம் ஏற்றாததை முன்வைத்து விஜய் ஆட்சி மதச்சார்பற்ற தன்மையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகக் கருத்துருவாக்கம் செய்வது போன்ற தவறுகளில் இருந்து முற்போக்குச் சக்திகள் வெளியேற வேண்டும்.

இப்படிக்கு,

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here