இந்திய ஒன்றியத்தில் சாமான்ய மக்களின் வாழ்வியலும், அதிகார வர்க்கத்தின் கொள்கை முடிவுகளும் எப்போதும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதில்லை என்பதற்குத் தற்கால நிர்வாக நடைமுறைகள் அப்பட்டமான சாட்சிகளாக இருக்கின்றன. அரசுகள் கொண்டுவரும் கட்டுப்பாடுகளும் விதிகளும் யாருடைய நலனைக் குறிவைத்துச் செயல்படுகின்றன என்ற கேள்வி இன்று மிக ஆழமாக எழுந்துள்ளது.
எரிவாயு இணைப்புகளும் ஆதார் கட்டாயமும்!
மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறவும், புதிய இணைப்புகளைப் பெறவும் அக்டோபர் 1, 2026 முதல் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டது. ஆதார் இல்லாதவர்கள் அல்லது முறையான ஆவணங்கள் இல்லாதவர்கள் அதிக விலை கொடுத்து வெளிச்சந்தையில் வாங்க வேண்டிய கட்டாயம் உருவாக்கப்பட்டது. இதன் பின்னணியில் உள்ள நியாயமாகச் சொல்லப்படும் காரணம் என்னவென்றால்—”ஒரு நபருக்கு அல்லது ஒரு குடும்பத்திற்கு ஒரு சிலிண்டர் இணைப்புதான் இருக்க வேண்டும்; பல இணைப்புகளை வைத்துக்கொண்டு கள்ளச்சந்தையில் விநியோகிக்கும் மோசடிகளைத் தடுக்கவே இந்த நடவடிக்கை” என்பதுதான்.
ஒரு வகையில், கள்ளச்சந்தை வணிகத்தை ஒழிக்க இது அவசியமானதே என்று வாதிடலாம். ஆனால், இதே தர்க்கம் பெருமுதலாளிகளுக்கும், பல்லாயிரம் கோடிகளைப் பதுக்கும் பணக்காரர்களுக்கும் ஏன் பொருந்த மறுக்கிறது?
ஒரு ஆதாரத்துக்கு ஒரு வங்கி கணக்கு மட்டும் ஏன் கூடாது
இன்று ஒரு ஆதார் எண் இல்லாமல் எந்தவொரு சிறு வங்கிக் கணக்கையும் தொடங்கிவிட முடியாது என்ற கடுமையான விதி நடைமுறையில் உள்ளது. அப்படியிருக்க, சாமானியனின் எரிவாயு சிலிண்டருக்குக் காட்டப்படும் அதே தீவிரம், பல வங்கிக் கணக்குகளை வைத்துக்கொண்டு கோடிக்கணக்கில் புழங்கும் பெரும் புள்ளிகள் மீது காட்டப்படுகிறதா?
“ஒரு ஆதாருக்கு ஒரு எரிவாயு இணைப்பு” சாத்தியம் என்றால், “ஒரு ஆதாருக்கு ஒரு வங்கிக் கணக்கு” என்பது ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை?
பல வங்கிக் கணக்குகளை ஒரு நபர் வைத்திருப்பதன் மூலமாகத்தான் பினாமி கணக்குகள் உருவாக்கப்படுகின்றன; கறுப்புப் பணம் பதுக்கப்படுகிறது; வரி ஏய்ப்பு மற்றும் பண மோசடிகள் அரங்கேறுகின்றன. ஆனால், இந்த முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய அதிகார வர்க்கமோ அல்லது ஆட்சியாளர்களோ, பல வங்கிக் கணக்குகளை வைத்திருக்கும் பெரும் பணக்காரர்கள் மீது கைவைக்கத் தயங்குகிறார்கள்.
கண்காணிப்பு வெறும் மாயையா?
“அனைத்துக் கணக்குகளும் ஆதார் மற்றும் பான் (PAN) எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால், அவை ஏற்கனவே வருமான வரித்துறையின் கண்காணிப்பில்தான் உள்ளன” என்று பொருளாதார வல்லுநர்கள் வாதாடலாம். ஆனால், கள எதார்த்தம் என்ன?
படிக்க:
♦ வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு ஆபத்து என்ன?
♦ மக்களுக்கு ஆதார்! மாணவனுக்கு அபார்! பாசிச ஆர்எஸ்எஸ் மோடியின் டிஜிட்டல் அட்டாக்!
ஒரு சிறு நடுத்தரக் குடும்பத்தின் கணக்கில் சொத்து விற்பனை, திருமணத்துக்குக் கடன் பெறுதல் போன்ற காரணங்களால் சில லட்சங்கள் பரிமாற்றம் நடந்தால் உடனடியாக வருமான வரித்துறையிடமிருந்து நோட்டீஸ் பறந்துவிடும். ஆனால், பல வங்கிக் கணக்குகளில் லட்சங்களும் கோடிகளும் புரளும்போது, அந்தப் பணத்தின் தோற்றுவாய் (Source) என்னவென்று தேடிப் பிடித்துக் கேள்வி கேட்கும் துணிச்சல் ஒன்றிய அரசுக்கு இருக்கிறதா? பினாமி பெயர்களிலும், கூட்டுக்கணக்குகள் (Joint Account) என்று மறைமுகமாகவும் பதுக்கப்படும் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்பதே நிதர்சனம்.
ஏழை எளிய நடுத்தர மக்களின் ஒரு சிலிண்டர் மானியத்தையோ அல்லது சிறுசேமிப்புகளையோ கண்காணிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் மட்டுமே விதிகள் கடுமையாக்கப்படுகிறதா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
சாமானியனுக்கு ஒரு நியாயம், சக்கரவர்த்திக்கு ஒரு நியாயம் என்றில்லாமல், எரிவாயு சிலிண்டரில் காட்டப்படும் கெடுபிடி வங்கிக் கணக்குகள் மற்றும் பெருமுதலாளிகளின் நிதிப் பரிமாற்றங்கள் மீதும் பாய வேண்டும். நடுத்தர ஏழை எளிய மக்கள் மீது மட்டும் கயிறு இறுகி, பெரும் பணக்காரர்கள் தப்பிக்கவிடப்படும் வரை, இந்த ஜனநாயகம் சமத்துவமானதாக மாறப்போவதில்லை!
- தமிழ்மணி






