புதிய பாராளுமன்றம் திறக்கும் நாளன்று பாலியல் குற்றவாளியும் பாஜக எம்.பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான ப்ரிஜ் பூஷன் சரன்சிங்கை கைது செய்யாததை கண்டித்து மல்யுத்த வீரர் வீராங்கனைகள் டெல்லியில் புதிய பாராளுமன்றத்தை  முற்றுகையிடும் போராட்டம் நடத்தினார்கள். இதனை பாசிச மோடி அரசின் டெல்லி காவல்துறை வன்முறையை கையாண்டு கைது செய்து வழக்கு தொடுத்துள்ளது.

கடந்த மாதம் ஏப்ரல் 23ஆம் தேதி WTF தலைவர் பிரிஷ் பூஸன் சரன்சிங்கை கைது செய்யக் கோரி தொடங்கிய போராட்டம் இன்று வரை நீடித்து வருகிறது. மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் துன்புறுத்தல் செய்ததை கண்டித்து தான் போராட்டத்தை தொடங்கினர் வீராங்கனைகள். ஆனால் இதனை கண்டுக் கொள்ளாத பாசிச அரசாங்கம் குற்றவாளியை பாதுகாத்து வந்தது. போராட்டம் வலுவடைந்த பின்னர் பல்வேறு ஜனநாயக சக்திகளும், விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் தங்களது ஆதரவை போராடும் வீராங்கனைகளுக்கு அளித்தனர்.

சாமானியர்கள் பாலியல் கொடுமைகளுக்கு காவல்நிலையத்திற்கு சென்றால் அவர்கள் நடத்தும் விதம், வழக்கை விசாரிக்கும் விதத்தையும் பார்த்தால் சாமனிய மக்கள் காவல்நிலையம் பக்கமே போகக்கூடாது என்று தோன்றும். ஆனால் இந்தியாவுக்கே பெருமை சேர்த்த ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பதக்கங்களை வென்ற வீராங்கனைகள் அளித்த பாலியல் புகாருக்கு இதுவரை சம்பந்தபட்டவரை கைது செய்யப்படாமல் இருப்பது இந்திய மக்களுக்கு நீதியின் மீது உள்ள நம்பிக்கையை முற்றும் இழக்கச் செய்துள்ளது.

மல்யுத்த வீராங்கனைகள் மீதான அடக்குமுறை! பல்லிளிக்கும் ஜனநாயகம்!

புதிய பாராளுமன்ற திறப்பு நாளில் பாலியல் குற்றவாளி பிரிஷ் பூஸன் சரண்சிங்கை கைது செய்யாத பாசிச மோடி அரசை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தவிருந்த வீராங்கனைகளை, அடக்குமுறையை கையாண்டு கைது செய்திருப்பது மட்டுமல்லால் வழக்கு பதிவும் செய்துள்ளது. அவர்கள் போராட்ட களத்தில் தங்கியிருந்த தற்காலிக கூடாரத்தையும் காலி செய்துள்ளது. வீராங்கனைகள் பதக்கங்கள் வாங்கி வரும் போது மட்டும் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் பிரதமர் மோடி இந்த பிரச்சினை குறித்து வாய் திறக்கவே இல்லை. காரணம் தனது கட்சி எம்.பியை காப்பாற்றுவது தானேயொழிய வேறொன்றும் இல்லை.

இது குறித்து ட்வீட் செய்திருந்த மல்யுத்த வீரர் சாக்‌ஷி மாலிக், “பாலியல் புகாருக்குள்ளான ப்ரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்ய  7 நாட்கள் எடுத்துக் கொண்ட டெல்லி காவல்துறை அமைதியாக போராட்டம் நடத்திய எங்கள் மீது வழக்கு பதிவு செய்ய 7 மணி நேரம் கூட எடுத்துக் கொள்ளவில்லை. நாட்டில் சர்வாதிகாரம் ஓங்குகிறதா? இந்திய அரசு தனது விளையாட்டு வீரர்களை எப்படி நடத்துகிறது என்பதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது” என்று ட்வீட் செய்துள்ளார்.

வினேஷ் போகட், சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட  இந்தியாவின் தலைசிறந்த மல்யுத்த வீராங்கனைகளும் அவர்களுக்கு துணையாக வீரர்களும் களத்தில் போராடுகின்றனர். டெல்லி காவல்துறையின் இந்த அடக்குமுறையை உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டித்துள்ளது.

ஐபில் பைனலில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வெற்றிப் பெற்றதை கொண்டாடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு நீதிக்காக போராடும் வீராங்கனைகளின் போராட்ட சத்தம் காதில் விழ வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்கள் நேசிக்கும் கிரிக்கெட் வீரர்கள் தோனி உட்பட பலரும் இதற்கு குரல் கொடுக்கவில்லை. கோடிகளில் புரளும் கிரிக்கெட் வீரர்களுக்கு பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிய விசயமாக தெரியவில்லை போலும்.

போராடும் வீராங்கனைகள் அடுத்தக் கட்ட போராட்டத்தையும் அறிவித்துள்ளார்கள். இதுவரை தாங்கள் பெற்ற பதக்கங்களை ஹரித்துவாரில் உள்ள கங்கை நதியில் வீசப்போகிறார்கள். நிறவெறியின் காரணமாக ஹோட்டலுக்குள் அனுமதிக்காததை கண்டித்து தான் பெற்ற பதக்கத்தை ஆற்றுக்குள் வீயெறிந்தார் பிரபல குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி. அந்த வழிமுறையையே வீராங்கானைகளும் பின்பற்றுகிறார்கள். இது மோடி அரசின் அராஜகத்தை கண்டிக்கும் நடவடிக்கை மட்டுமல்ல, 30 நாட்களுக்கு மேலாக நடக்கும் போராட்டத்தை கண்டும் காணாமல் இருப்பவர்களின் மௌனத்தை கலைக்கும் நடவடிக்கையும்.

இதையும் படியுங்கள்:

பெண்களை பாலியல் பண்டமாக கருதும் மனுதர்மத்தை ஏற்று ஆட்சி செய்யும் பாசிஸ்டுகள் ஏற்கனவே குஜராத் பாலியல் படுகொலைகளைகளை நடத்தியதோடு மட்டுமல்லாமல் குற்றவாளிகளை விடுதலையும் செய்துள்ளார்கள். உத்திரபிரதேச உன்னா பாலியல் வன்புணர்வு படுகொலையில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ  குல்தீப் செங்கார் பிணையில் வெளியே உள்ளார். ஜம்மு காஷ்மீர் கத்துவாவில் 8 வயது சிறுமி கோவிலுக்குள்ளேயே பாஜக கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக தேசியக் கொடி ஊர்வலம் நடத்தியது சங்பரிவார் கும்பல். இப்படிப்பட்ட கொடூர கும்பலா பாதிக்கப்பட்ட வீராங்கனைகளுக்கு நீதி வழங்கப்போகிறது?

இன்னொரு புறம் மீடியா சங்கி கும்பல் கைதாகி சென்ற வீராங்கனைகள் சிரிப்பது போல் போட்டோஷாப் செய்து பரப்புகிறார்கள். அண்ணாமலை போன்ற அரைவேக்காட்டு கும்பலோ பாலியல் குற்றச்சாட்டுக்கு சரியான ஆதாரம் இல்லாததால் தான் நடவடிக்கை இல்லை என்கிறார்கள்.

புதிய பாராளுமன்றத்தில் வைக்கப்படும் செங்கோல் முதல் நாளே இந்தியாவின் மகள்களுக்காக வேலை பார்க்க ஆரம்பித்துள்ளது. இந்தியாவின் மகள்களை அடக்குமுறை மூலம் துன்புறுத்தியுள்ளது. செங்கோலை பார்த்து ஜனநாயகம் பல்லிளிக்கிறது. ‘பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ’ என்ற பாசிஸ்ட் மோடியின் முழக்கமெல்லாம் வார்த்தை ஜாலம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ப்ரிஜ் பூஷன் சரண்சிங் புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று திமிராக நிற்கிறான். நீதித்துறையும் பாசிச கும்பலுக்கு துணையாக நிற்கிறது. வீராங்கனைகள் போராடுவது பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக அல்ல! நாட்டை பீடித்திருக்கும் பாசிஸ்டுகளுக்கு எதிராக. இது அவர்களுடைய பிரச்சினை மட்டுமல்ல. இந்தியாவில் வாழும் ஒட்டுமொத்த பெண்களின் பிரச்சினை, நமது பிரச்சினை. போராடும் வீராங்கனைகளுக்கு துணை நிற்போம். பாசிஸ்டுகளை கருவறுப்போம்!

  • சுவாதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here