ந்திய மல்யுத்த கூட்டமைப்பானது (WFI) சர்வாதிகாரமாக நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராடும் வீராங்கனைகள் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக பாலியல் குற்றசாட்டுகளையும் முன்வைத்துள்ளனர்.

பாலியல் குற்றசாட்டை முன் வைத்தவர்கள் சர்வதேச அளவில் பதக்கங்களை வென்ற வீராங்கனைகள். இந்த தர்ணா போராட்டத்தில் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மல்யுத்த வீராங்கானை வினேஷ் போகட், ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

வீராங்கனை வினேஷ் போகட்டின் பேட்டி

நடந்துக் கொண்டிருக்கும் போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வினேஷ் போகட் “இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் ஆதரவுப் பெற்ற சில பயிற்சியாளர்கள் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர், சில பயிற்சியாளர்கள் பெண் பயிற்சியாளர்களையும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் (WFI) தலைவரும், பாஜகவின் எம்பியுமான பிரிஜ் பூஜன் சரண்சிங் ஏராளமான பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தோல்விக்கு பின்னர் என்னை எதற்கும் பயனற்றவர் என்று அழைத்தார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு என்னை உளவியல் ரீதியாக துன்புறுத்தியது, நான் என் வாழ்வை முடித்துக் கொள்ளலாம் என எண்ணவும் தோன்றியது.

பாஜக எம்பி பிரிஜ் பூஜன் சரண்சிங்

எங்களை போன்ற வீரர்களுக்கு ஏதாவது ஆனால் அதற்கு இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் தான் காரணம். பெண் மல்யுத்த வீரர்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் 10லிருந்து 20 சம்பவங்கள் எனக்கு தெரியும். குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும் அதுவரை நாங்கள் எந்த போட்டியிலும் கலந்து கொள்ள மாட்டோம்” என்று செய்தியாளர்களிடம் வினேஷ் போகட் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வினேஷ் போகட்டுக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாஜக பாலியல் வக்கிர கும்பலின் கூடாரம்

கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் பாஜகவின் பெண் தலைவர்கள் தங்களுக்கு கட்சியில் பாலியல் தொல்லை தரப்படுகிறது என்று கட்சியில் இருந்து வெளியேறினார்கள். அதேபோல் நடிகையும் பாஜகவின் தலைவர்களில் ஒருவருமான காயத்ரி ரகுராம் தன்னை பாஜக தலைவரான அண்ணாமலைக்கு நெருக்கமானவர்கள் சமூகவலைதளத்தில் பாலியல் ரீதியாக தாக்கும் வேலையை செய்கிறார்கள் என்றும், இதற்காக ஒரு வார்ரூம் அமைத்து செயல்படுகிறார்கள் என்றும், எதிர்த்து கேள்விக் கேட்ட தன்னை கட்சியில் இருந்து நீக்கிவிட்டார்கள் என்றும் குற்றசாட்டை முன் வைத்துள்ளார்.

பாஜகவின் திருச்சி சூர்யா அதே கட்சியில் உள்ள டெய்சி என்ற பெண்ணை காது கூசும் அளவிற்கு தகாத வார்த்தைகளில் பேசியது சமூகவலைதளங்களில் பரவி நாறியது. அதன் பின்னர் சூர்யாவை 6 மாதம் சஸ்பெண்ட் செய்தார் அண்ணாமலை. பாஜகவில் உள்ளவர்களை மிரட்ட அண்ணாமலையே பெண்களை வைத்து தவறான வீடியோக்கள் எடுத்து மிரட்டியதும் நடந்துள்ளது. இவையனைத்தும் பாஜக கட்சிக்குள்ளேயே நடந்த சம்பவங்கள் தான். பாஜகவில் இருக்கும் பெண்களுக்கே இந்த நிலை என்றால் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் பாஜக தலைவர்கள் என்னென்ன செய்வார்கள்.

பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கும் பாஜக

2002 குஜராத் இனப்படுகொலையில் பயந்து தப்பியோடிய பில்கிஸ்பானோ உட்பட 3 பேரை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக கும்பல் 8 பேரை கொடூரமாக கொலை செய்தது. இதில் பில்கிஸ் பானோவின் 5 வயது குழந்தையை பாறையில் அடித்து கொலை செய்தது அந்தக் கும்பல். இதில் சம்பந்தப்பட்ட 11 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்து சிறைய்ல் அடைத்தனர். இவர்களை கடந்த வருடம் குஜராத் தேர்தலுக்கு முன்னர் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்தது உத்தரவிட்டது குஜராத் பாஜக அரசு. ஈவிரக்கமின்றி கொலை செய்த செய்த கும்பலை விடுதலை செய்ததோடு மட்டுமல்லாமல் வாசலில் இனிப்பு கொடுத்தும் கொண்டாடியது இந்த பாலியல் வக்கிர கும்பல்.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை: 11 கொலை குற்றவாளிகள் விடுதலை! பில்கிஸ் பானோவுக்கு இழைக்கப்பட்ட அநீதி!

நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் செங்கார் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணே புகார் கொடுத்தார். பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் தான் குல்தீப் செங்கார் கைது செய்யப்பட்டார். இவரை பாதுகாக்க உத்திரபிரதேச பாஜக அரசு போராடியும் மக்கள் எதிர்ப்பின் காரணமாக எதுவும் செய்யமுடியவில்லை. அவர் தற்போது இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். நாளை பில்கிஸ் பானோ வழக்கு போல நன்னடத்தை என்றுக் கூறி விடுதலை செய்யவும் படலாம்.

காஷ்மீரின் கத்துவாவில் 8 வயது சிறுமி ஆசிஃபா கோவிலுக்குள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதில் சம்பந்தப்பட்ட கோவில் பூசாரி உட்பட 6 பேருக்கு ஆதரவாக பாஜக பாலியல் வக்கிர கும்பல் தேசியக் கொடியுடன் ஊர்வலம் நடத்தியது. இதற்கு எதிராக இந்திய மக்கள் கொதித்தெழுந்து பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் நடத்திய பின்னரே இந்த கும்பல் அடங்கியது.

இதையும் படியுங்கள்: பாலியல் ஜல்சா பார்ட்டி-(BJP) சூர்யா சேவியர்

இப்படி பாஜக பாலியல் வக்கிர கும்பலின் அக்கிரமங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆர்.எஸ்.எஸ், பாஜக கும்பலின் சித்தாந்தமே பெண்ணை போகபொருளாகவும், பாலியல் பண்டமாகவுமே பார்க்கிறது. இப்படிப்பட்ட கும்பல் அதிகாரத்தில் அமரும் போது அதனை கேடாக பயன்படுத்தி பெண்களை பாலியல் சீண்டலுக்கும், வல்லுறவுக்கும் உள்ளாக்குகிறது. கொலையும் செய்ய துணிகிறது.

போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு துணை நிற்போம்

விளையாட்டுத்துறையில் பெண்கள் நுழைவது இந்தியாவில் சாதாரண காரியம் இல்லை. பெண்களை வீட்டு வேலைகள் செய்பவராகவும், கணவனுக்கு பணிவிடை செய்பவராகவுமே பார்த்து பழக்கப்பட்ட சமூகத்தில், இவையனைத்தையும் கடந்து விளையாட்டுத் துறையில் பெண்கள் நுழைந்தால் இது பாலியல் வக்கிர கும்பலின் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடுகிறது. இதைத் தாண்டி தான் அவர்கள் உலகளவில் சாதிக்கிறார்கள்.

இந்த பாசிச பாலியல் கும்பலுக்கு எதிராக துணிந்து களத்தில் போராடுகிறார்கள் மல்யுத்த வீராங்கனைகள். பாலியல் துன்புறுத்தல்கள் அவர்கள் கட்சிக்குள்ளேயும் உள்ள நிலையில் பல்வேறு விளையாட்டு சம்மேளனங்களின் தலைமை பொறுப்புகளிலும் இந்த பாசிச கும்பலே அமர்ந்துள்ளது. அங்கேயும் நிச்சயம் பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் அவர்களும் களத்தில் வீராங்கனைகளுடன் ஒன்றிணைய வேண்டும்.

நாம் வீழ்த்த நினைப்பது குரூரமாக வளர்ந்து நிற்கும் பாசிஸ்ட்டுகளை. பெண்களை போகப்பொருளாகவும், பாலியல் பண்டமாகவும் பார்க்கும் இந்த பாசிச கும்பலை களத்தில் வீழ்த்த போராடும் வீராங்கனைகளுக்கு அனைவரும் துணைநிற்போம்.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here