2014 ல் இருந்து விவசாயத் தொழிலாளர்களுக்கான உண்மையான ஊதியம் தேக்கமடைந்துள்ளது. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய பத்தாண்டுகளில் அவர்கள் ஆண்டுதோறும் 5-6% வளர்ச்சி அடைந்துள்ளனர். ஐ.சி.டி.எஸ் (ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள்) மற்றும் மதிய உணவுக்கான செலவுகள் 40% குறைந்துள்ளது.
வேலையில்லா திண்டாட்டத்தின் காரணமாக லோக்சபா தேர்தலுக்கு முன், ஒட்டுமொத்த உழைக்கும் மக்களையும் ஒருங்கிணைக்கின்ற போது எழும் கீழ்க்கண்ட கேள்விகள்
- இந்தியாவின் முக்கியமான பிரிவுகள் ஏன் வேலையில்லாமல் இருக்கின்றன?
- வேலையில்லாத இந்தியர்கள் எப்படி வாழ்கிறார்கள்?
- கிடைக்கிற வேலை ஏன் வாழ்வாதாரத்துக்குப் போதவில்லை?
- இந்தியர்கள் எப்படி வேலைவாய்ப்பைப் பெறுகிறார்கள்?
- வேலையில்லாமல் எவ்வளவு நேரம் காத்திருப்பது?
இந்தியாவில் தற்போது மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்றான வேலையில்லா திண்டாட்டத்தை ”The Wire’s series” நமக்கு இந்த கட்டுரை மூலமாக ஆராய்ந்து கொடுத்துள்ளது.
பொருளாதார வல்லுநர்கள் ஜீன் டிரேஸ் மற்றும் ரீத்திகா கேரா ஆகியோர் தொகுத்த தரவுகளின்படி, தேங்கி நிற்கும் உண்மையான ஊதியங்கள், சீரழிந்து வரும் சமூக பாதுகாப்பு அமைப்பு மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் மீதான அக்கறையின்மை ஆகியவை மோடி அரசின் 10 ஆண்டு கால ஆட்சியை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
கடந்த வாரம் லோக்தந்த்ரா பச்சாவோ 2024 ஏற்பாடு செய்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பொருளாதார வல்லுநர்கள் விவசாயம், விவசாயம் அல்லாத மற்றும் கட்டுமானத் துறைகளில் “2014 முதல் நாட்டின் சராசரி ஊதியம் மிகவும் குறைவாகவே உயர்ந்துள்ளது” என்று கூறியுள்ளனர்.
2014-2024 மோடி ஆட்சியில், விவசாயத் தொழிலாளர்களுக்கான உண்மையான ஊதியம் (பணவீக்கத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்ட ஊதியம்) ஒவ்வொரு ஆண்டும் 1.3% குறைந்துள்ளதாக வேளாண் அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2004-2014 வரையிலான மன்மோகன் சிங் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் உண்மையான ஊதியங்கள் ஒவ்வொரு ஆண்டும் 6.8% அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
“மோடி ஆட்சிக்கு வருவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு மக்களின் உண்மையான ஊதியம் மிக வேகமாக வளர்ந்தது. இது ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 5-6% ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் உண்மையான ஊதியத்தின் வேகமான வளர்ச்சியாகும். ஆனால், அது இப்போது கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக உள்ளது“ என்று டிரேஸ் கூறினார்.
கூலித் தேக்கமும் – சரிவும் விவசாயத் தொழிலாளர்களுக்கு மட்டும் அல்ல; மாறாக, ராஜஸ்தான் மற்றும் குஜராத் முழுவதும் உள்ள செங்கல் சூளைத் தொழிலாளர்களும் தங்கள் ஊதியத்தில் உண்மையான வளர்ச்சியைக் காணவில்லை! பணவீக்கம் மற்றும் பிற வேலை வாய்ப்புகள் இல்லாததால் உழைக்கும் மக்கள் வேட்டையாடப்படுகிறார்கள். செங்கல் சூளைகளில் வேலை என்பது உடல் உழைப்பு மிகுந்ததாகவும், இந்தியாவின் ஏழ்மையான மக்களுக்கு வேலை வாய்ப்பைப் பெறுவதற்கான கடைசி வழியாகவும் பார்க்கப்படுகின்றன.
பொருளாதார வல்லுநர்களால் மேற்கோள் காட்டப்பட்ட PLFS (Periodic Labour Force Survey) தரவு (2017-22) படி, சம்பளம் பெறும் வர்க்கம் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கும் உண்மையான ஊதியம் தேக்க நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நலச் செலவுகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு
மோடி அரசாங்கம், மக்கள் நலனுக்காக செலவு செய்கிறது என்ற கட்டமைக்கப்பட்ட நற்பெயரை ஆய்வின் முடிவில் எங்களால் சொல்ல இயலவில்லை என்று கேரா மற்றும் ட்ரேஸ் தெரிவிக்கின்றனர்.
2014 ஆம் ஆண்டில், ஐந்து முதன்மைத் திட்டங்கள் நாட்டில் உறுதியான சமூகப் பாதுகாப்பு அமைப்புக்கு அடித்தளமிட்டன. அவை பொது விநியோக முறை (PDS), தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (NREGA), மகப்பேறு பலன்கள், சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (ICDS) கீழ் குழந்தை ஊட்டச்சத்து திட்டங்கள் மற்றும் மதிய உணவுத் திட்டம்.
“மேற்குறிப்பிட்ட ஐந்து திட்டங்களும் NDA-வால் ஏதோ ஒரு வகையில் குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளன” என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர். ஏனெனில், ஓய்வூதியங்களைத் தவிர மற்ற அனைத்து திட்டங்களும் இந்திய குடிமக்களுக்கு சட்டப்பூர்வ உரிமைகளின் ஒரு பகுதியாகும். அவை சட்டம் அல்லது நீதிமன்ற உத்தரவுகளின் மூலம் பெறப்படுகின்றன. மேலும், எந்தவொரு அரசாங்கத்தின் தாராள மனப்பான்மையின் அடிப்படையில் நிறைவேற்றபட்டது அல்ல!
குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள்
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ICDS (Integrated Child Development Services) மற்றும் மதிய உணவுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 40% குறைந்துள்ளது. முன்னதாக ICDS இன் கீழ் சேவைகளின் ஒரு பெரிய நிதி இருந்தபோது, NDA அரசாங்கம் 2021 இல் சக்ஷம் மற்றும் சமர்த்தியா என்ற வெவ்வேறு இரண்டு திட்டங்களைக் கூட்ட இதில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது.
2020ல் அங்கன்வாடி சேவைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.20,532 கோடி. 2021 ஆம் ஆண்டில், அங்கன்வாடியுடன் தேசிய ஊட்டச்சத்து இயக்கத்தையும் உள்ளடக்கிய சக்ஷம் திட்டத்தின் மூலம் ரூ.20,105 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் அங்கன்வாடியுடன் சேர்த்து மற்ற மூன்று திட்டங்களையும் இணைத்ததின் விளைவாக ஒரு திட்டத்திற்கு சராசரியாக ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டது.
பொது விநியோக முறை
புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் இல்லாததாலும், 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதில் மோடி அரசு தவறியதாலும் கிட்டத்தட்ட 10 கோடி மக்கள் PDS -ல் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
“கடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் 80 கோடி எண்ணிக்கையில் நாம் இன்னும் சிக்கிக்கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஏனெனில், 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒருபோதும் நடத்தப்படவில்லை! இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். எங்கள் சட்டங்களின்படி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, நகர்ப்புறங்களில் இருந்து 50% மற்றும் கிராமப்புறங்களில் இருந்து 75% மக்கள் PDS இன் கீழ் இருக்க வேண்டும். இப்படித்தான் அரசு 80 கோடி மக்களை PDS -ல் கணக்கு காட்டியது. ஒருவேளை இன்று மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், கிட்டத்தட்ட 10 கோடி பேர் PDS பயனாளிகளாக சேர்க்கப்படுவார்கள்” என்று கேரா கூறினார்.
இது தவிர, “ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை என்ற வகையில் மகப்பேறு சலுகைகள் சட்டவிரோதமாக நிறுத்தப்பட்டுள்ளன; தேசிய சமூக உதவித் திட்டத்தின் (NSAP) கீழ் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கான மத்திய பங்களிப்பு மாதத்திற்கு ரூ.200 என்ற அளவில் குறைந்துள்ளது; NREGA (தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம்) ஊதியங்கள் அதிக அளவில் தேக்கமடைந்துள்ளன. ஏனெனில், ஊதியம் உரிய நேரத்தில் கொடுக்கப்படாமல் மிகவும் அரிதாகவே வழங்கப்படுகின்றன” என்று இருவரும் சுட்டிக்காட்டினர்.
திட்டங்களுக்கு மறுபெயரிடுதல் மற்றும் மிகைப்படுத்துதல்
NDA அரசாங்கம், கழிவறைகள் கட்டுதல், சமையல் எரிவாயு (LPG) வழங்குதல் மற்றும் வீட்டுவசதியை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியதின் மூலம் இந்த சரிவை ஓரளவிற்கு ஈடுசெய்தாலும், அவர்களின் வெற்றி அரசாங்கம் கூறுவதை விட மிகவும் சிறியது என்று கேரா மற்றும் ட்ரேஸ் கூறுகின்றனர்.
உதாரணமாக, NDA அரசாங்கம் 2019 இல் இந்தியாவை “திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாமலாக்கியது” என்று அறிவித்தது. ஆனால் 2019-21 ஆம் ஆண்டிற்கான NFHS-5 (National Family Health Survey) -வின் தரவுபடி 20% வீடுகளில் கழிவறை வசதி இல்லை என்ற புள்ளி விவரம் மோடி அரசின் பொய்யை அம்பலப்படுத்தியது.
குறிப்பாக,
- PM Awas Yojayana என்பது இந்திரா ஆவாஸ் யோஜனா ஆகும்.
- ஸ்வச் பாரத் மிஷன் என்பது நிர்மல் பாரத் மிஷனில் இருந்து வந்தது.
- ICDS மற்றும் மதிய உணவு ஆகியவை PM POSHAN இன் கீழ் இணைக்கப்பட்டன.
- ராஜீவ் காந்தி குடிநீர் திட்டம் என்பது ஜல் ஜீவன் மிஷன் ஆனது.
- PDS என்பது பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா என மறுபெயரிடப்பட்டது
மேற்குறிப்பிட்ட திட்டங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்தால் தொடங்கப்பட்டவை ஆகும். அந்த திட்டங்களின் பெயர்களை மாற்றியமைத்து, மக்கள் தொடர்பு மற்றும் சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களால் அவற்றைப் பெருமைப்படுத்தியதிலிருந்து மோடி அரசாங்கம் மக்களின்முன் குற்றவாளியாக நிற்கிறது.
நன்றி: எலிஷா வெர்மனி (தி வயர்)
தமிழில்: சிறகினி
https://thewire.in/labour/growth-in-real-wages-virtually-zero-under-modi-government-data