இந்தியாவின் மகள்களை இழிவுபடுத்தும் மோடி அரசு!
பாலியல் குற்றம் புரிந்த பாஜக எம்.பிக்கு எதிராக மல்லுக்கட்டும் மல்யுத்த வீரர்கள்!


ந்திய மல்யுத்த (Wrestling) சாம்பியன்கள் பலரும் கடந்த ஜனவரியில் மல்யுத்த மேடையில் களமாடுவதை விடுத்து  போராட்டக் களத்தில் இறங்கினர். இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி, அவர் மீது நடவடிக்கை எடுக்கவும், கூட்டமைப்பைக் கலைக்கவும் கோரி போராட்டத்தைத் துவங்கினர்.

ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர், இது குறித்து விசாரிப்பதற்காகக் குழு ஒன்றை அமைப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். ஆனால் மூன்று மாதங்களுக்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழலில், மீண்டும் ஏப்ரல் 23 முதல் அவர்கள் இரண்டாவது முறையாக ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கி, பிரிஜ் பூஷன் சிங்கை பதவியில் இருந்து நீக்கவும், கைது செய்து சிறையில் அடைக்கவும் வலியுறுத்துகின்றனர்.

காமன்வெல்த் மற்றும் ஆசியப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவரும் போராட்டக் களத்தில் உள்ளவருமான வீராங்கனை வினேஷ் போகட், “மல்யுத்த மேடையில் இருந்து போராட்டக்களம் வரை…. நள்ளிரவில் திறந்த வானத்தின் கீழ் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்…” என்பதாக டிவீட் செய்தார். பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு முக்கியம் என்பதைப் போல விளையாட்டு வீராங்கனைகளுக்கும் பாதுகாப்பான சூழல் அவசியம். அதை உறுதி செய்ய மறுக்கும் ஆளும் கும்பலே, இன்றைய போராட்டத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.

போராட்ட வீரர்கள், “இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் கட்டுப்பாடற்ற அதிகாரத்துக்கு அடிபணியும் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்” என உறுதியுடன் கூறுகின்றனர்.  தனித்தனியாக ஏழு பேர் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராகப் புகார் அளித்தும், டெல்லி காவல் துறை முதல் தகவல் அறிக்கையை ( FIR ) பதிவு செய்ய மறுத்தது. எனவே அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்ற தலையீட்டிற்கு பிறகுதான் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அதன் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

குற்றச்சாட்டுக்கு உரிய தீர்வு கிடைக்குமா?

இந்தப் பிரச்சனையில் இருந்து பாடம் கற்க ஏராளமான விசயங்கள் உள்ளன. விளையாட்டு வீரர்களைப் பொறுத்தவரை விளையாட்டு அரங்கங்கள் மற்றும் பயிற்சி முகாம்களே அவர்களுக்கான பணியிடமாக உள்ளது. பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் 2013- விளையாட்டுத் துறைக்கு பொருந்தாமல் இருப்பது வேடிக்கையாகவும், பெரிய குறைபாடாகவும் உள்ளது.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக பேராசிரியரும், இந்தியப் பெண்கள் ஆய்வு அமைப்பின் துணைச் செயலருமான ஷதாப் பானோ, “நிறுவன  வெளிகளில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகள், அங்கு ஏதோ ஒரு வகையான அதிகார மையம் இருப்பதை உறுதி செய்கிறது. இத்தகைய நிறுவனங்களில் புகாரை பதிவு செய்து விசாரிக்கும் வகையிலான உள் குழுக்கள் இருக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தல்கள் அதிகம் நிகழ வாய்ப்புள்ள இது போன்ற இடங்களில் அத்தகையக் குழு இல்லாதது விசித்திரமாக உள்ளது” என்றார்.

கோ ஸ்போர்ட்ஸ்(Go Sports) அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி தீப்தி போபையா, “மிக வளர்ந்த நாடு ஒன்றில் ஜிம்னாஸ்டிக் துறையில் பாலியல் துன்புறுத்தல்கள் பல ஆண்டுகளாகத் தொடர்கின்றன. சுமார் 360 குழந்தைகள் மீது லாரி நாசர் என்பவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அப்படி ஏதாவது நடக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டுமா? எதையாவது செய்து உடனே  இதை தடுக்க வேண்டும்” என்றார். (அமெரிக்க ஜிம்னாஸ்டிக்  அணியின் மருத்துவராக 14 ஆண்டுகள் பணியாற்றிய நாசர் நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்ட பிறகுதான், விசாரிக்கப்பட்டு 40 ஆண்டுகள் சிறை தண்டனையைப் பெற்றார்)

மல்யுத்தக் கூட்டமைப்பில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான நடவடிக்கை குழு இருப்பதாக காகிதத்தில் உள்ளது. அதன் இணையதளத்தில் நெறிமுறைகள் ஆணையம் (Ethics Commission) உள்ளதாக காட்டப்படுகிறது. அதே போல ஒரு நிறுவனத்தின் உள்புகார் குழுவில் உள்ள உறுப்பினர்களில் பாதிக்கு மேல் பெண்களாக இருக்க வேண்டும். அந்தக் குழுவுக்கு ஒரு பெண் தலைமை தாங்க வேண்டும் என விதிகளில் உள்ளது.

இங்கு அப்படியெல்லாம் இல்லை. குழுவில் நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் உள்ளனர். அந்தப் பெண்ணும் (ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக்) இப்போது ஜந்தர் மந்தர் களத்தில் தான் போராடுகிறார். மேலும் குறைதீர்க்கும் குழு ஒன்று இருந்தாலும் அந்தக் குழுவின் தலைவராக இப்போது குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷன் சிங்தான் இருக்கிறார்.  விசாரிப்பவர் மீதே புகார் அளித்து என்ன பயன்?

வீராங்கனைகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்யத் தவறுவது ஏன்?

விளையாட்டு என்பதை வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் எனப் பார்ப்பது இன்றியமையாதது. எனினும் ஒழுக்கத்தின் தனித்துவமான பண்புகளையும் மனதில் கொள்ள வேண்டும். விளையாட்டு வீரர்கள் வீட்டை விட்டு விலகி நீண்ட நாட்கள் இருக்கவேண்டிய சூழல் உள்ளது. மற்றவர்களுடன் அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டும். இதன் விளைவாக சக வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் தொழில்முறை உறவுகளுடன் நட்பு ஏற்படுகிறது. இந்த சூழலில் நடைபெறும் பாலியல் அத்துமீறல்கள், உச்ச நீதிமன்றத்தால் 1997-ல் வழங்கப்பட்ட விசாகா வழிகாட்டுதல்கள் மூலம் (பெண்களுக்கு பணியிடத்தில் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு தீர்வு காணும் வழிமுறைகள்) விசாரிக்கப்பட வேண்டும்.

பொதுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனமான தி குவாண்டம் ஹப் கன்சல்டிங் இணை நிறுவனர் அபராஜிதா பார்தி கூறுகையில்,  பெண்களுக்கான பணியிடத்திலோ, பயணத்திலோ அவர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்களா என்பதே மிக முக்கியம்.  விளையாட்டில் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர் என்பது தெரிய வந்தால் விளையாட்டில் ஈடுபடும் மற்றப் பெண்களின் மீது அது தாக்கத்தை ஏற்படுத்தும். அது இறுதியில் நாட்டுக்கு மோசமான விளைவையே ஏற்படுத்தும் என்றார்.

 உடனடித்தேவை – மாற்றங்களே!

இந்தப் போராட்டம் இந்திய விளையாட்டு கூட்டமைப்புகளின் நிர்வாகத் தோல்விகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. ஜனவரியில் முதல்முறை மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை தொடங்கியபோது, விளையாட்டு அமைச்சகமும், இந்திய ஒலிம்பிக் சங்கமும் – குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும் மல்யுத்த கூட்டமைப்பின் செயல்பாடுகளை ஒழுங்கமைக்கவும் – குழுக்களை அமைத்தன.

விளையாட்டு அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழு, சிங் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எந்த முடிவுக்கும் வரவில்லை என்ற செய்தி ஊடகங்களில் கசிந்தது. அதன் அறிக்கை வெளியிடப்படாதது வீரர்களை கோபமடையச் செய்தது. இப்போதைய போராட்டத்தின் போது, புதிய அமைப்பு தேர்ந்தெடுக்கப்படும் வரை, மல்யுத்தக் கூட்டமைப்பை நிர்வகிக்க ஒலிம்பிக் சங்கம் ஒரு தற்காலிகக் குழுவை அமைத்தது. ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி. உஷா, “பொது இடத்தில் போராட்டம் நடத்துவது அநாகரிகம்” என தெரிவித்த கருத்தால் வீரர்கள் மேலும் கோபம் அடைந்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த போகட், “நாங்கள் தெருவில் உட்கார்ந்து இருப்பதற்கு சில காரணங்கள் இருக்கும் அல்லவா?  ஒலிம்பிக் சங்கமோ, விளையாட்டு அமைச்சகமோ, எங்களது உணர்வுகளை யாரும் மதிப்பதில்லை. உணர்ச்சியற்ற வகையில் பி.டி.உஷா பேசியுள்ளார். நான் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் எனது அழைப்பை அவர் ஏற்கவில்லை “என்றார்.

“அவர்களது குரலை செவிமடுத்து கேட்க யாருமில்லை என்பதால் தான் தெருவில் இறங்கியுள்ளார்கள்” என்கிறார் போபையா. அவர் மேலும் கூறுகையில், “பரிவுடன் கூடிய வார்த்தை, ஆறுதல் மற்றும் கவனிப்பு, நாங்கள் உங்களுடன் உள்ளோம் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு உருவாக்குவதுதான் இன்றையத் தேவையாக உள்ளது “என்றார்.

“பாலியல் துன்புறுத்தல் தொடர்பான செய்திகள் வரும்போதெல்லாம் பெண்களுக்கு  பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று விவாதிக்கப்படுகிறது. பெண்கள் தலைமை பொறுப்பில் இருப்பதால் மட்டுமே அங்கு பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாகி விடாது. மாறாக அதிகமான பெண்கள் இருக்கும் போது அங்கு பாதுகாப்பான நிலை ஏற்படும்” என்கிறார் பார்தி.

இந்தப் போராட்டமானது விளையாட்டு வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது. விளையாட்டு அமைப்புகளில் பதவி வகிக்கும் சக்தி வாய்ந்த அரசியல்வாதிகளை எதிர்ப்பது கூடுதல் கடினம் என்பதையும் இந்தப் போராட்டம் தெளிவாக்கியுள்ளது.

மல்யுத்த வீரர்கள் தங்களது நிலையை மாற்றியது ஏன்?

ஜனவரியில் போராடத் தொடங்கிய போது, பிரிஜ் பூஷன் சிங்குக்கு அரசியல் பின்னணி இருந்த போதிலும், போராட்டக்காரர்கள் எந்த அரசியல் கட்சியின் ஆதரவையும் விரும்பவில்லை. ஆனால் இந்த முறை ஜந்தர் மந்தரில் தற்போதைய மற்றும் முன்னாள் முதல்வர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் பிற தீவிர அரசியல் செயற்பாட்டாளர்களை அடிக்கடி அங்கு பார்க்க முடிகிறது. மல்யுத்த வீரர்கள் அனைத்து தரப்பின் ஆதரவையும் இப்போது ஏற்கத் தயாராக உள்ளனர். இதைப் பார்த்த சிங், போராட்டத்திற்கு பின்னே அரசியல் உள்நோக்கம் உள்ளது எனக் கூறுவது வேடிக்கைதான்.

“முடிவுக்கு வராமல் நீளும் போராட்டத்தில் பங்கேற்பாளர்கள் தங்கள் பிரச்சனை தீர்வதற்கு பல்வேறு உத்திகளைக் கையாள்வார்கள். ஆரம்ப கட்டத்தில் அரசியல்வாதிகளது ஆதரவு, போராட்டத்தை திசை திருப்பும் என எண்ணி இருக்கலாம்.  இவ்வாறு தீவிரமான விசயத்தின் தீர்வுக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்பதை உணர்ந்தவுடன் வேறு வழிகளைத் தேர்ந்தெடுப்பது இயல்பானதுதான்” என்றார் ஷதாப் பானோ.

போராட்டக்களத்தில் போலிசின் வெறியாட்டம்!

மே 3 -ஆம் தேதி இரவு போராட்டக் களத்தில் புகுந்த காவல் துறையினர் மல்யுத்த வீரர்களை தாக்கினர். போராட்டக் களத்துக்கு மடிப்பு படுக்கைகளை கொண்டு வர முயன்ற போது, போலீசார் உள்ளே புகுந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். பல மல்யுத்த வீரர்கள் தலையில் தாக்கப்பட்டு, ஒருவர் மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் இருவர் தலையில் பலத்த காயம் அடைந்தனர்.

“ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதி அனுமதியின்றி மடிப்பு படுக்கைகளுடன் போராட்ட களத்துக்கு வந்தார். போலீசார் தலையிட்ட போது சிறு வாக்குவாதம் ஏற்பட்டது. எம்எல்ஏ – வுடன் மற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்” என்கிறது புகுந்து தாக்கிய டெல்லி காவல்துறை. மல்யுத்த வீரர் ராஜ்வீர் “குடி போதையில் இருந்த தர்மேந்திரா எனும் காவலர் வினேஷ் போகட்டை ஆபாசமாக திட்டி எங்களுடன் தகராறில் ஈடுபட்டார்” என்றார்.

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற கீதா போகட், தனது இளைய சகோதரனின் மண்டை உடைந்து விட்டதாகக் கூறினார். ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற வினேஷ் போகட், “நாங்கள் என்ன குற்றவாளிகளா? எங்களைக் கொல்ல விரும்பினால் அதைச் செய்யுங்கள்” என்று உடைந்து அழுதபடியே கூறினார். ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா, “நான் வென்ற அனைத்துப் பதக்கங்களையும் திரும்பப் பெறுமாறு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

தாக்குதலைத் தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, போராட்டக்காரர்களை பத்திரிகையாளர்கள் சந்திக்க முடியாதபடி தடுப்பு வளையத்தை அமைத்துள்ளனர். டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவால், டெல்லி போலீசார் குண்டர்களைப் போல நடந்து கொண்டனர் என்றார். போராட்ட இடத்துக்கு சென்ற அவரை காவலர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. நீண்ட போராட்டத்திற்கும் வாக்குவாதத்திற்கும் பிறகே உள்ளே செல்ல முடிந்தது.

போராட்டத்துக்கு துணை நிற்போம்!

ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பெண் மல்யுத்த வீரர்களின் அவல நிலையை சுட்டிக்காட்டி பாஜகவை கடுமையாக விமர்சித்தனர். ராகுல் தனது ட்விட்டர் பதிவில் வீராங்கனைகள் மீதான தாக்குதலுக்கு கண்டனங்களையும், இது போன்ற நடத்தை வெட்கக்கேடானது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் “பேட்டி பச்சாவோ”( மகளைக் காப்பாற்றுங்கள்) என்று மோடி முழங்குவது வெறும் பாசாங்குத்தனம். உண்மையில் நாட்டின் மகள்கள் மீது வன்முறை நிகழ்த்துவதை பாஜக ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை” என்றும் குறிப்பிட்டார்.

இதையும் படியுங்கள்: பாலியல் ஜல்சா கட்சிக்கு எதிராக களத்தில் இறங்கிய இந்திய மல்யுத்த வீராங்கனைகள்!

நீதி வேண்டிப் போராடும் அவர்களுக்கு உரிய தீர்வு வேண்டும் என்பதற்காக ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, கிரிக்கெட் வீரர்களான ஹர்பஜன், கபில்தேவ், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் தங்களது தார்மீக ஆதரவை அளித்துள்ளனர். மேலும் பஞ்சாப், ஹரியானா, உ.பியைச் சேர்ந்த விவசாய சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. ‘பிரிஜ் பூஷன் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட வேண்டும்’ என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

இந்தியாவின் மகள்களை இழிவுபடுத்தும் மோடி அரசு!

ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறு நாடுகள் கூட கோப்பைகளை அள்ளும் போது, மாபெரும் மனிதவளத்தைக் கொண்டுள்ள இந்தியா சார்பில் ஓரிரு கோப்பைகளாவது கிடைக்குமா என ஏங்கும் சூழலில், அப்படியான கோப்பைகளை வென்று பதக்க பட்டியலில் இந்தியாவின் பெயரை இடம்பெற வைத்த வீராங்கனைகளுக்கே இதுதான் கதி!

விருதுகளை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர்கள், இன்று தன் மானம் காக்கவும், அடுத்த தலைமுறை வீராங்கனைகளை பாதுகாக்கவும், பிஜேபியின் பொம்பள பொறுக்கி எம்.பியை எதிர்த்து நடத்தும் போராட்டம் இது! இந்த நாட்டை ஆளும்  ‘தேசபக்தி’ வேடம் போடும் மோடியின் அரசு இந்தியாவின் மகள்களை இழிவுபடுத்துகிறது.

எது இந்தியாவுக்கு தலைகுனிவு?

கொலை, கொள்ளை மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை பாசிச பாஜக அரவணைத்துக் கொள்கிறது. அவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து புனிதர்களாக்கி  விடுகிறது. இத்தகைய நபர்களெல்லாம் எம்எல்ஏ, எம்பி ஆகி, வேறு பல உயர் பொறுப்புகளிலும் அமர்த்தப்பட்டால் இத்தகைய அலங்கோலங்கள் நடக்கத்தானே செய்யும்!

“வீரர்கள் வீதிக்கு வந்து போராடுவது இந்தியாவுக்கு தலைகுனிவு” என பி.டி. உஷா சொல்கிறார். ஆனால் ஒரு ஆளும் கட்சியின் எம்.பி பாலியல்  சேட்டைகள் செய்வதும், அவருக்கு எதிராகப் பல வீராங்கனைகள் புகார் கொடுத்து பல மாதங்கள் ஆகியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாமல் அவர் பதவியில் நீடிப்பதும்தானே உண்மையில்  தலைகுனிவு? மூன்று வாரங்களாகத் தொடர்ந்து களத்தில் உறுதியுடன் இருக்கும் போராட்ட வீரர்களுக்கு துணை நிற்பது அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.

செய்தி மூலம்:

https://scroll.in/field/1048293/wrestlers-protest-for-indian-sportspeople-to-feel-safe-reforms-are-urgently-needed

ஆக்கம்: குரு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here