ருவர் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி பிழைப்பு வாதியாக மாறினால் வழக்கமாக உள்ள பிழைப்புவாதிகளை மிஞ்சுகின்ற கடைந்தெடுத்த பிழைப்புவாதியாக, கைதேர்ந்த பிழைப்புவாதியாக செயல்படுவார்” என்று கூறினார் நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் ரங்கநாதன். அந்த வார்த்தைகள் மிகவும் உண்மை என்பதை நேபாளத்தின் முன்னாள் மாவோயிஸ்டுகள் நிரூபித்து வருகின்றனர்.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் பாராளுமன்ற ஜனநாயக அசிங்கங்கள் புதிய எல்லையை தொட்டுள்ளன.
முன்பு ஒரு காலத்தில் ஆயுதப் போராட்ட அரசியலில் முன்னே நின்ற நேபாள் மாவோயிஸ்ட் கட்சி, 2008 ஆம் ஆண்டு கூட்டரசாங்கத்தை நிறுவிய பிறகு படிப்படியாக புதிய ஜனநாயக புரட்சியை முன்னெடுத்துச் செல்வதை கைவிட்டு பிற ஓட்டு கட்சி அரசியல்வாதிகளைப் போல சந்தர்ப்பவாத சதிராட்டங்களிலும் தேர்தல் அரசியலுக்கே உரிய கேடுகெட்ட நடைமுறைகளையும் கடைபிடிக்கத்துவங்கினர்.

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாராளுமன்றத்தில் உள்ள மொத்தம் 225 இடங்களில் நேபாளி காங்கிரஸ் கட்சி 89 இடங்களை கைப்பற்றி அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சியாக மாறியது. திருத்தல்வாத கம்யூனிஸ்ட் கட்சியான CPN (UML) 78 இடங்களும், முன்னாள் மாவோயிஸ்டும், இந்நாள் பிழைப்புவாதியுமான பிரசண்டா தலைமையிலான மாவோயிஸ்ட் சென்டர் கட்சி 32 இடங்களும் பெற்றது.
பாராளுமன்றத்தை ஆட்சி செய்வதற்கு குறைந்தபட்சம் 138 இடங்கள் தேவை என்ற நிலையில் நேபாள் காங்கிரஸ் கட்சி தலைவரான ஷேர் பகதூர் தூபா உடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்ட “பிரசண்டா” நேபாள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க உதவினார்.

இரண்டரை ஆண்டுகளுக்கு ஷேர் பகதூர் தூபாவும், இரண்டரை ஆண்டுகளுக்கு பிரசண்டாவும் பிரதமர்கள் என ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தப்படி ஷேர் பகதூர் தூபா விலகாததால் ஆத்திரமடைந்த முன்னாள் மாவோயிஸ்ட் பிரசண்டா, UML கட்சியின் ஒலியுடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிதாக ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்.
இந்த ஒப்பந்தத்தின் முதல் கோரிக்கையாக மீதமுள்ள காலத்தில் அதாவது 2025 வரை முதல் பாதி நாட்கள் பிரசண்ட்டாவும், அதன் பிறகான நாட்களில்  கே. பி. ஷர்மா ஒலியும் பிரதமராக நீடிப்பது என்பது முன் வைக்கப்பட்டது. இது முன்னாள் மாவோயிஸ்டுகள் பதவியை சுவைப்பதற்கு என்று போடப்பட்ட புதிய ஒப்பந்தமாகும்.

பிரசந்தா மற்றும் கே. பி. ஷர்மா ஒலி

 

239 ஆண்டுகால மன்னர் ஆட்சியை வீழ்த்திய பிறகு 2006 ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு கூட்டரசாங்கம் ஒன்றை நிறுவுவதற்கு செயல்பட்ட மாவோயிஸ்ட் கட்சி தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மையை பெற்றது.
2008 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கூட்டரசாங்கத்தில் பிரதமராக பதவியேற்ற பிரசண்டா சிறிது காலம் மட்டுமே பிரதமராக இருந்தார். மீண்டும் 2016-17 காலகட்டத்தில் குறுகிய கால பிரதமராக செயல்பட்டார். தற்போது மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

கூட்டரசாங்கம் என்ற மேலிருந்து அமல்படுத்தப்படும் செயல் தந்திரத்தை கொச்சைப்படுத்துகின்ற வகையில் கூட்டணி மந்திரி சபை அமைப்பது ஒன்றையே கூட்டரசாங்கம் என்று திரித்துப் புரட்டிய அதிநவீன திருத்தல்வாத கும்பலான நேபாள் மாவோயிஸ்ட் கட்சி தனது இலட்சியங்களை கைவிட்டு தேர்தலில் பதவி ருசி கண்டு ஆட்சியை கவிழ்ப்பதும், புதிய கூட்டணி அமைத்துக் கொள்வதும், மீண்டும் பதவியை பிடிப்பதும் என்று முதலாளித்துவ ஓட்டு கட்சி அரசியல்வாதிகளைப் போல சீரழிந்து போய் உள்ளனர்.

நேபாளம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றது. அதன் பணவீக்கம் எட்டு சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. தன்னுடைய அடிப்படை தேவைகளுக்காக இறக்குமதியை பெரும் அளவில் சார்ந்திருக்கும் நேபாளம் கூட்டரசாங்கத்தை பயன்படுத்தி சுயசார்பு பொருளாதாரம் ஒன்றை கட்டியமைக்க தவறிய போலி புரட்சியாளர்களான மாவோயிஸ்ட் கட்சியின் தவறுகளினால் கடும் துன்பத்தை எதிர்கொண்டுள்ளது.

இதையும் படியுங்கள்: இமயத்தின் சிகரத்திலே எங்கள் நேபாளம் | மகஇக பாடல் | PALA SONG | NEPAL COMMUNIST

இது போன்ற சந்தர்ப்பவாத, பிழைப்புவாத கம்யூனிஸ்டுகளினால் நேர்மையாக செயல்படும் கம்யூனிஸ்டுகளுக்கு பெருத்த அவமானமாகவும், புரட்சிக்காக உயிர் தியாகம் புரிந்த பல்வேறு தியாகிகளின் தியாகமும் அர்ப்பணிப்பும் வீணாகிறது.
மக்கள் மத்தியில் சிறிது காலம் புரட்சிகர அரசியல் பேசுவார்கள், பிறகு தேர்தல் அரசியலில் குதித்து முதலாளித்துவ ஓட்டுக் கட்சிகளைப் போல சீரழிந்து போவார்கள் என்று அவநம்பிக்கை கொள்வதற்குதான் நேபாள மாவோயிஸ்ட் கட்சி வழி வகுத்துள்ளது.

அவர்களின் கேடுகெட்ட நடவடிக்கைகளினாலும் பிற அரசியல் கட்சிகளின் பதவி வெறி காரணமாகவும் 2008 ஆம் ஆண்டு மன்னராட்சியை தூக்கியெறிந்த பிறகு 14 ஆண்டுகளில் 10 முறை அரசாங்கங்கள் மாறியுள்ளது.

மாவோயிஸ்டுகள் ஆட்சி அமைத்த போது இமயத்தின் சிகரத்தில் எங்கள் நேபாளம், இந்திய விடுதலைக்கும் நீதான் பூபாளம் என்று மக்கள் கலை இலக்கியக் கழகம் முழங்கியது. ஆனால் தற்போதைய நேபாள மாவோயிஸ்ட் கட்சியின் கேடுகெட்ட நடைமுறைகள், எதிர்மறை படிப்பினையாக வழிகாட்டுகிறது.

  • சண். வீரபாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here