ந்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல், அனைவருக்குமான இந்தியாவா அல்லது பாஜக மோடியின் இந்துராஷ்டிரமா என்பதைத் தீர்மானிக்க போகிறது. சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அதானி மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் பற்றிய வழக்கில், செபி விசாரித்தால் போதும் என்று தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பின் அடிநாதமாக இருப்பது மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரம் ஒன்றிணைந்து சுயேச்சை என்று சொல்லிக் கொள்ளப்படும் நீதிமன்றங்கள் உள்ளிட்ட அனைத்துக் கட்டமைப்புகளையும் தன்வயப் படுத்தியுள்ளதை எடுத்துக்காட்டுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு மூன்று மாதங்களே உள்ள நிலையில், அதானி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ள சூழலில், ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகள் இந்த நெருக்கடியான சூழலைக் கருத்தில் கொண்டு, மோடியின் ‘புதிய இந்தியா’வில் நடைபெற்ற ஊழல், முறைகேடுகள் மற்றும் ஏனைய சதிகளை அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்ய வேண்டியது அவசியமாகிறது.

செபி – அதானி – ஹிண்டன்பர்க் வழக்கின் தீர்ப்பானது வரவிருக்கும் தேர்தலில் மோடி கும்பலை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டியதன் அவசர, அவசியத் தேவையை உணர்த்துகிறது. இந்தத் தீர்ப்பானது தேர்தல் பத்திரங்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான வழக்குகளிலும் உச்ச நீதிமன்றத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சிகள் என்ன செய்ய வேண்டும்?

வரவிருக்கும் தேர்தல் போரில் பாரதீய ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் இலக்காக இருக்க வேண்டும். அந்த இலக்கை அடைவதற்கு மோடி கும்பலின் நிலைத்திருக்கும் அதிகாரத்தின் தன்மையை முழுவதுமாக புரிந்து கொள்வதும் அதற்கு ஏற்ப வியூகங்களை அமைப்பதும் அவசியமாகிறது.

இன்றைய நிலையில் ஒரு நிலையான அரசாங்கம் என்ற அடிப்படைத் தேவைக்கு மோடி உத்தரவாதம் அளிக்கிறார் என்பதை முதலில் அங்கீகரிக்க வேண்டும். அதேபோல பெரும்பாலான மக்கள், தாங்கள் வலுவான மற்றும் பாதுகாப்பான இந்தியாவில் வாழ்வதாக உணர்கிறார்கள். இருப்பினும் எல்லைக்கு வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் மூலம் நிச்சயமற்ற தன்மை ஏற்படுவதையும், இந்த விஷயத்தில் மோடி அரசின் போலியான வாய்ச்சவடால்களையும் சேர்த்தே புரிந்து கொண்டுள்ளனர்.

மோடியை வீழ்த்த நினைக்கும் எதிர்க்கட்சிகள், பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை என்ற இரண்டு அம்சங்களில் மக்களிடம் நம்பிக்கையை உருவாக்க வேண்டும். மோடியின் பிஜேபிக்கு எதிராக உருவாகியுள்ள “இந்தியா” கூட்டணி தாங்கள் ஒற்றுமையுடன் கூட்டாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். தங்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட அகங்காரங்களை (Ego) விட்டொழித்தால்தான் மோடியை வீழ்த்துவது என்ற மகத்தான லட்சியம் நிறைவேறும். இதற்கான முதன்மைப் பொறுப்பு காங்கிரஸ் கட்சியிடம் உள்ளது. ராகுல் காந்தியையோ, மன்மோகன் சிங் போன்ற ஒரு ஏற்பாட்டையோ பிரதமராக இந்தத் தேர்தலில் முன்னிறுத்தக்கூடாது.

இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் அல்லாத மற்ற கட்சியினருக்கும் காங்கிரசுக்கு இணையாக உரிய பொறுப்பு உள்ளது. மோடியின் 10 ஆண்டுகால ஆட்சி சமமற்ற, நியாயமற்ற, சுதந்திரம் மற்றும் இணக்கம் இல்லாத சூழலை உருவாக்கியுள்ளது என்ற உண்மையை அம்பலப்படுத்த வேண்டும்.

மேலும் அது மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் கார்ப்பரேட் நலன் சார்ந்தும், ஊழலை சட்டபூர்வமாக்கியும் செய்த முறைகேடுகளை தீவிரமாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும். பத்து ஆண்டுகள் ஆட்சி புரிந்த பிறகும் இன்னமும் மோடியும் அவரது அடிவருடிகளும் ஜவஹர்லால் நேருவின் தவறுகளைப் பற்றி அவதூறு பரப்பி வருகின்றனர். இந்தப் போலியான பொய்ப் பிரச்சாரத்தைக் கூட்டணி கட்சிகள் முறியடிக்க வேண்டும்.

கூட்டணித் தலைவர்களுக்கு சொல்லாட்சித் திறன், அரசியல் ஆளுமைத் திறன் போன்றவை உள்ளன. இதை வைத்து மோடியின் பொய்யான பிம்பங்கள் உடைத்து நொறுக்கப்பட வேண்டும். மோடியின் “விகாஸ்” (வளர்ச்சி) எனும் கட்டுக்கதை கிராமங்கள் தோறும் அம்பலப்படுத்தப்பட வேண்டும். பரந்துபட்ட மக்களின் குறைகள் மற்றும் ஏமாற்றங்களை எதிரொலிக்கும் வகையிலான, அவற்றைத் தீர்ப்பதற்கான வழிகளை கூட்டணித் தலைவர்கள் பேச வேண்டும்.

இதன் மூலம்தான் தேர்தலுக்கான மோடியின் முக்கிய துருப்புச் சீட்டுகளான இந்துத்துவா மற்றும் அயோத்தி கோவில் பிரச்சாரத்தை முறியடிக்க முடியும். இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடம் நல்லிணக்கம் உருவாகும் வகையிலான கருத்துப் பிரச்சாரங்களை கட்டமைக்க வேண்டும். பெரும்பான்மைச் சமூகமானது சிறுபான்மை மக்களிடம் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், இது பெரும்பான்மை இந்துக்களுக்கு அநீதி இழைப்பதாக ஆகாது என்றும் புரிய வைக்க வேண்டும்.

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக நாக்பூரிலிருந்து ஆர்எஸ்எஸ் உருவாக்கிய வெறுப்பை விதைத்தல் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு பீதியை உருவாக்கும் நடவடிக்கைகள் போன்ற உணர்ச்சிகரமான மயக்கங்களில் இருந்து இந்துக்களை விடுபட வைப்பதை நோக்கமாகக் கொண்டு செயலாற்ற வேண்டும்.

அயோத்தி ராமனுக்கு எதிராக ராகுலின் பாரத் ஜோடோ நியாய யாத்ரா!

பாசிச மோடியின் தலைமையில் பிஜேபி-யின் மிருகத்தனமான அதிகாரத்தின் அடையாளமாக அயோத்தி விளங்குகிறது. 30 ஆண்டுகளாக உத்தரப்பிரதேசம் மற்றும் பிற இந்தி பேசும் மாநிலங்களில் ராமர் கோயில் விஷயத்தை முன்னிறுத்தி தனது அரசியல் செல்வாக்கை வளர்த்து வருகிறது பிஜேபி. வரவிருக்கும் தேர்தலில் வெற்றிக்கான யுக்தியாக ராமர் கோயிலை பயன்படுத்துகிறது.

இதற்கு எதிராக காங்கிரசு சார்பில் ராகுலின் பாரத் ஜோடோ நியாய யாத்ரா 2.0 முன்னெடுக்கப் படுகிறது. 15 மாநிலங்கள் வழியாக, முக்கியமாக உ.பி-யை குறிவைத்து (அங்கு காங்கிரஸ் மிகவும் பலவீனமாக உள்ளது) இந்த நடை பயணம் நடத்தப்படுகிறது.

அரசியலமைப்பு முன்னுரையில் உள்ள முக்கிய அம்சங்களான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நீதி என்பதில் கவனம் செலுத்தி, பரந்தளவில் பிரச்சாரம் என்பதே இந்த யாத்திரையின் முக்கிய நோக்கமாக உள்ளது.

எனினும் எந்த ஒரு யாத்திரையும் மக்கள் இயக்கமாக மாறாமல் – ஒரு தலைவரின் குரலானது எளிய மக்களின் வேதனையை எதிரொலிக்காமல் – இருக்கும் பட்சத்தில் தேர்தலில் ஆளும் தரப்புக்கு எதிராக வாக்காளர்களின் மனநிலை மாறிவிடாது.

தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமை இல்லாததும், அமைப்பு ரீதியான கட்டமைப்பு குறைபாடுகளும் பிஜேபிக்கு எதிராக வலுவான கட்சியாக காங்கிரஸ் இயங்க முடியாமல் இருப்பதற்கு காரணமாக உள்ளது.

பத்து ஆண்டு கால மோடியின் ஆட்சி சாதித்தது என்ன?

மோடியின் பிஜேபி கடந்த 10 ஆண்டுகளில் நடுத்தர வர்க்க மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. புதிய வேலைகள் மற்றும் வருமான வாய்ப்புகளை உருவாக்கவில்லை. சமத்துவமின்மை, விலைவாசி உயர்வு, வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டம் போன்றவை பெருகியதுதான் மோடி ஆட்சியின் சாதனை.

இதையும் படியுங்கள்:

மறுபுறம் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலைகளுக்கு ஏராளமான சலுகைகளை வாரிவழங்கும் வள்ளலாக விளங்குகிறார் மோடி. ரபேல் தொடங்கி சிஏஜி அம்பலப்படுத்திய நெடுஞ்சாலை ஊழல் வரையிலும், தேர்தல் பத்திரங்கள் தொடங்கி பிஎம் கேர்ஸ் வரையிலும் ஊழலில் புதிய அத்தியாயம் படைத்துள்ளார் பாசிச மோடி. மக்களிடம் இந்த உண்மைகளை எதிர்க் கட்சிகள் உரக்கப் பேச வேண்டும்.

வெல்லப்பட முடியாதவரா பாசிச மோடி?

மூன்றாவது முறையாக மோடி ஆட்சியில் தொடர்வதை தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும். அவர் ஒன்றும் வெல்ல முடியாத அல்லது தடுக்க முடியாத சக்தி அல்ல. மோடிக்கு எதிரானப் பெரும்பான்மையை உருவாக்க ஒற்றுமையாக ஒன்றிணைவது மட்டுமே இந்தியா கூட்டணியின் தற்போதைய தெளிவான உடனடிக் கடமையாக இருக்கும். இது ஒன்றும் நிறைவேற்ற முடியாத காரியம் அல்ல.

உறுதித் தன்மை, பாதுகாப்பு மற்றும் நியாயமான நிர்வாகம் போன்றவற்றை உறுதி செய்யும் வகையில் திறமை மற்றும் கருணையுடன் கூடிய உறுதியான கூட்டணி உருவாவதே நாட்டுக்கு தற்போதைய தேவையாக உள்ளது. காங்கிரஸ் கட்சி ஐந்து மாநிலத் தேர்தலில் இறுமாப்புடன் நடந்து கொண்டதைப் போல் அல்லாமல், அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்து செயல்பட்டால் தான் பாஜக எனும் கொடிய எதிரியை வீழ்த்த முடியும்.

இந்தத் தேர்தலில் மோடி வென்றால் இனி தேர்தலே நடக்காது என்பதை எதிர்க்கட்சிகள் உணர வேண்டும். நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் குறைந்தபட்ச செயல் திட்டத்தை முன்வைத்து பிரச்சாரம் முன்னெடுக்கப்பட வேண்டும். இதன் மூலம்தான் மோடியின் இந்துத்துவ மதவெறிக் கூட்டணியை வீழ்த்தி, மதச்சார்பற்ற, அனைவருக்குமான இந்தியாவை உருவாக்க முடியும்.

  • குரு

மூலம்: https://m.thewire.in/article/politics/narendra-modi-india-alliance-rahul-gandhi-2024?t=uKYMdKQCvUXjh5Xp5fW9DQ&s=08

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here