ந்திய பெருங்கடலில் மேலாதிக்கம் செலுத்த அமெரிக்காவும் சீனாவும் போட்டி போட்டு வருகின்றன. இந்தியாவிற்கு தெற்கில் சர்வதேச கடல் வழித்தடத்தில் உள்ள இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகளை யார் தனது ஆளுகைக்குள் கொண்டு வருகிறார்களோ அவர்களே இந்துமாக் கடலில் செல்வாக்கு செலுத்த முடியும்.

நேற்று வரை இந்தியாவின் தெற்கே உள்ள இந்திய பெருங்கடலில் இந்தியாவின் ஆதிக்கம்தான் இருந்து வந்தது. அதாவது இந்தியாவை பயன்படுத்தி அமெரிக்காவின் ஆதிக்கமே கேள்விக்கிடமற்ற வகையில் நீடித்தது. அமெரிக்க கடற்படை தளமான டிகோ கார்சியா மாலத்தீவுக்கு தெற்கில்தான் அமைந்துள்ளது.

முக்கியத்துவம் பெரும் சர்வதேச கடல் வழித்தடம்!

சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட நாடுகளை தனது செல்வாக்கின் கீழ் கொண்டு வந்துள்ளது அமெரிக்கா. அதன் மலாக்கா நீரிணை வழியாக பயணிக்கும் சீன கப்பல்களை கட்டுப்படுத்துவதன் மூலம் சீன பொருளாதாரத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கவும் முயற்சித்து வருகிறது.

இதனால் சுதாரித்துக் கொண்ட சீனா தனது புதிய பட்டுப்பாதை திட்டத்தின் மூலம் மியான்மர் வழியாக வங்க கடலுக்கு பாதை அமைத்து விட்டது. மற்றொரு புறம் இமயமலையின் காரகோரம் நெடுஞ்சாலை வழியாக பாகிஸ்தானின் கதாவர் துறைமுகத்திற்கும் பாதை அமைத்து விட்டது.

தற்போது மாலத்தீவில் அதிபராக தேர்வான முகமது முய்சு மோடியின் கையை உதறிவிட்டு சீனாவுடன் இறுக்கமாக கை கோர்த்துள்ளார். அதிபர் முகமது முய்சு கடந்த வாரம் சீனாவுக்கு ஐந்து நாள் பயணமாகச் சென்றுவந்தார்.

நாடு திரும்பிய பிறகு, “மாலத்தீவு, சிறியதாக இருக்கலாம், இதனால் மட்டுமே எந்த நாடும் மாலத்தீவை மிரட்ட முடியாது,” என்று தலைநகர் மாலேயில் கூறியுள்ளார்.

இதன் மூலம் ஏற்கனவே இலங்கையில் துறைமுகத்தை அமைத்து தனது ஆதிக்கத்தை விரிவாக்கி வரும் சீனாவிற்கு இது கூடுதல் பலத்தை தருவதாக மாறி உள்ளது.

உதவியா – மேலாதிக்கமா?

மாலத்தீவுக்கு நாம் தந்த ஹெலிகாப்டர்கள் மற்றும் டார்னியர் விமானங்களை நம் நாட்டு வீரர்கள்தான் இன்றுவரை பராமரித்து இயக்கி வருகின்றனர். இதற்காக மாலத்தீவில் தங்கியுள்ள இந்திய ராணுவ துருப்புகளை திரும்பப் பெறுமாறு அந்நாட்டின் அதிபர் முகமது முய்சு தகவலும் அனுப்பியுள்ளார். வேலைக்காரன் தன் வேலையை வீசி எரிந்து விட்டு சுயமாக முடிவெடுத்து சென்றால் எஜமானருக்கு கோபம் வரத்தானே செய்யும்.

மாலத்தீவு அதிபரின் முடிவால் ஆத்திரமடைந்த மோடி அத்தீவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என களமிறங்கினார். லட்சத்தீவுக்கு சென்ற மோடி புதிய சாதனையையும் படைத்தார். ஸ்கூபா எனப்படும் ஆழ்கடல் டைவிங் செய்வதற்கான உபகரணங்களையும், தண்ணீருக்குள் மூழ்காதபடி மிதக்கவைத்து உயிரைப் பாதுகாக்கும் லைஃப் ஜாக்கட்டையும் ஒரே நேரத்தில் அணிந்து கொண்டு ஃபோட்டோஷூட்டை நடத்தினார்.

தனது லட்சத்தீவு ஆல்பம் மூலம் இந்திய சுற்றுலா பயணிகளை லட்சத்தீவிற்கே வரும்படி – அதாவது மாலத்தீவுக்கு செல்வதை தவிர்க்கும் படி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். பிரபல சினிமா நடிகரான நாகார்ஜுனாவும் தனது மாலத்தீவு சுற்றுலாவை ரத்து செய்து விட்டு அதற்கு பதிலாக லட்சத்தீவில் உள்ள பங்காரம் தீவுக்கு செல்ல இருப்பதாக அறிவித்தும் உள்ளார்.

மாலத்தீவின் முக்கிய வருவாய்க்கு சுற்றுலா தான் ஆதாரம். தற்போது கோவிட் தொற்று பரவல் காரணமாக வெளிநாட்டு பயணத்திற்கு சீனா கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருவதால் அங்கிருந்து சுற்றுலாப் பயணிகள் வருவதிலும் சிக்கல் நீடிக்கிறது.

சிறிய தீவுக்கூட்டம்தான் மாலத்தீவு!

மாலத்தீவு ஒரு சிறிய தீவு நாடு. 300 சதுர கிலோமீட்டர் தான் அதன் பரப்பளவு. பரப்பளவில் ஒப்பிட்டுப் பார்த்தால், மாலத்தீவை விட டெல்லி மட்டுமே ஐந்து மடங்கு பெரியது.

மாலத்தீவு என்பது சுமார் 1,200 சிறிய தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக் குழுவாகும். மாலத்தீவின் மொத்த மக்கள் தொகை வெறும் 5.21 லட்சம் மட்டுமே.

மாலத்தீவு கடல் பகுதியில் தான் சர்வதேச கடல்வழிப் போக்குவரத்து வழித்தடம் அமைந்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் உள்ள இந்தப் பாதைகள் வழியாகத் தான் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் சர்வதேச வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த வழியாகத்தான் வளைகுடா நாடுகளில் இருந்து வங்கக்கடலில் உள்ள இந்தியாவின் தமிழ்நாடு உள்ளிட்ட கிழக்கு பகுதிக்கு கச்சா எண்ணெய் அனுப்பப்படுகிறது.
மாலத்தீவில் உள்ள அரசு நமது மேலாதிக்கத்தை ஏற்கும் வகையிலேயே இந்திய அரசு இதுவரை பல்வேறு உதவிகளை வலிந்து செய்து வந்துள்ளது. அந்நாட்டில் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி நடக்கிறது என்னும் பொழுது நேரடியாக இந்தியா தனது துருப்புகளை அனுப்பி தலையிட்டு அந்த அரசை பாதுகாத்தும் உள்ளது. சுனாமி அடித்தபோது தன் சொந்த நாட்டு மக்களை காக்க கப்பல்களை அனுப்பியதோ இல்லையோ ஆனால் இலங்கைக்கும் மாலத்தீவுக்கும் உடனடியாக மீட்பு நிவாரண உதவிகளுக்கு கப்பலை முதல் ஆளாக அனுப்பியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அத்தியாவசிய மருந்துகளை, முக கவசங்களை அனுப்பியுள்ளது இந்தியா. அங்குள்ள கடல் நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் பிளான்ட் பழுதடைந்தபோது – குடிநீருக்கே தவிக்கும் நிலை ஏற்பட்டபோது, விமானத்தில் குடிநீரை கொண்டு சென்று கொடுத்து உதவி செய்துள்ளது இந்தியா.

இப்படி அங்கு நடக்கும் பல்வேறு பணிகளை காரணம் காட்டி இந்திய ராணுவ வீரர்களையும் அத்தீவில் நிறுத்தி வைத்துள்ளது. இப்படி இந்தியா மாலத்தீவுக்கு பெருமளவில் உதவிகளை செய்தே வந்துள்ளது.

முன்னர் ஆட்சி செய்த இப்ராகிம் சோலியின் அரசு இந்தியா ஆதரவு அரசு என்று அழைக்கப்பட்டது. தற்போது மாலத்தீவில் இந்திய வீரர்கள் இருப்பதற்கு எதிராக அதிபர் முய்சு பேசி வருகிறார். மேலும் அதிபராகப் பதவியேற்ற பிறகு அவர்களை நீக்குவதற்கான காலக்கெடுவை இப்போது விதித்துள்ளார். இவர் தேர்தல் பிரசாரத்தின் போதே ‘இந்தியா அவுட்’ எனும் பிரசாரத்தையும் முன்னிறுத்தினார்.

மாலத்தீவு இனி இருக்காது!

பருவநிலை மாற்றத்தால் பனிப்பாளங்கள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. கடல் மட்டத்திலிருந்து வெறும் மூன்று அடி உயரத்தில் உள்ள இந்த மாலத்தீவு சுமார் 50 ஆண்டுகளில் முழுவதுமாக காணாமல் போகவும் போகிறது. இதைப் பற்றி எல்லாம் கவலைப்பட மாலத்தீவின் அதிபர்களுக்கு நேரம் இருப்பதே இல்லை.

நயவஞ்சகமாக அமெரிக்க அரசால் வெளியேற்றப்பட்ட டிகோ கார்சியாவின் மக்கள் மடகாஸ்கரில் அகதிகளாக அலைகிறார்கள். விரைவில் மாலத்தீவு மக்களும் இப்படி அலைய நேரிடும்.

படிப்படியாக கடலில் மூழ்கவுள்ள மாலத்தீவு மக்களின் எதிர்காலத்தைப் பற்றி எல்லாம் சிறிதும் கவலைப்படாத ஏகாதிபத்தியங்கள் தனது பிராந்திய மேலாதிக்க வெறிக்காக சின்னஞ்சிறு தீவுகளை கூட பந்து போல் உருட்டிப் பார்க்கின்றன.
அமெரிக்காவின் – ஏகாதிபத்திய எஜமானர்களின் விசுவாசியாக சீனாவுடன் முறுகல் போக்கை கையாண்டு வரும் பாசிச மோடி அரசானது கைபனியனை மேலே சுருட்டி விட்டு மாலத்தீவை பார்த்து முண்டா தட்டி உறுமுகிறது.

  • இளமாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here