ர இருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள மோடி தலைமையிலான ஆர்எஸ்எஸ் பாஜக காவி கும்பல் பெரிதும் நம்பி இருப்பது அயோத்தி ராமரையே.

நாடு காலனியாதிக்கவாதிகளிடம் அடிமைப்பட்டு கிடந்த போது அதற்கு எதிராக சிறு துரும்பையும் அசைக்க விரும்பாத ஜன சங்கத்தினர் வரலாற்றின் விடுதலைப் போராட்ட பக்கங்களில் தலைகாட்டவே வழி இல்லாமல் போனது.

போலி சுதந்திரத்திற்கு பின்னர் இந்துக்களின் நலனையோ உழைக்கும் மக்களின் நலனையோ முன்னிறுத்தி நேர்மையாக மக்களிடம் செல்வாக்கு பெறவும் பாஜகவால் முடியவில்லை.

ஏகாதிபத்தியங்களிடம் சரணடைந்துள்ள, தேசங்கடந்த தரகு முதலாளிகளின் கட்சியாக சீரழிந்துள்ள, போலி தேசபக்த வேடமிட்ட பாஜகவானது காங்கிரஸையும், கம்யூனிஸ்டுகளையும் தேர்தல் அரசியலில் வீழ்த்திட கையில் எடுத்தது கலவரங்களையே.

1990 அத்வானி தலைமையில் நடத்தப்பட்ட ரதயாத்திரை  கலவரத்தின் பலனாகத்தான் பாஜக ஒரு செல்வாக்கு பெற்ற கட்சியாக வட இந்தியாவில் படிப்படியாக காலூன்ற முடிந்தது.

அத்வானியின் கலவர ரத யாத்திரை 1990

தமிழகத்திலும் கூட நாகர்கோவிலில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலை மையப்படுத்தி கலவரங்களை நடத்தியும், கோவையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான படுகொலைகளை நடத்தி குண்டு வெடிப்புக்கு தள்ளி அதையே காரணமாக்கி பீதியுட்டியும்தான் குறைந்தபட்ச இருப்பையும் தக்க வைக்க முடிந்துள்ளது.

தொடர்ந்து இருமுறை ஒன்றிய அரசின் ஆட்சிப் பொறுப்பில் இருந்து, இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்லும் மோடி- அமித்ஷா கும்பல் தற்போது 2024 தேர்தலில் ராமரை வைத்து ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்றே வெறிகொண்டு அலைகிறது.

வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயிலுக்கு குடமுழுக்கு நடக்கிறது. மோடியே நேரில் சென்று, கட்டப்பட்டு வரும் நிலையில் உள்ள ராமர் கோயிலில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய உள்ளதாக நாடு தழுவிய அளவில் பெரும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

ராமர் சிலையை மோடி எப்படி தொட்டு தூக்கி வந்து பிரதிஷ்டை செய்ய முடியும்? இப்படி நடந்தால் எங்களுக்கு என்ன மரியாதை? – என சில சங்கராச்சாரியார்கள்  ‘அறச்சீற்றம்’ கொள்கின்றனர்.

மோடி உள்ளிட்ட ஆர்எஸ்எஸ்காரர்கள் கர்ப்ப கிரகத்திற்குள் செல்ல உள்ளதாக ராமர் கோயில் கமிட்டி அறிவித்தும் உள்ளது. பார்ப்பனரல்லாதவர்கள் கர்ப்ப கிரகத்துக்குள் நுழைய உள்ளதை நாம் எப்படி அணுகுவது?

பார்ப்பனர் அல்லாதவரான மோடி ராமர் சிலையை தொட்டு தூக்கி வந்தால் அதில் என்ன குற்றம்? என நம்மையும் மோடிக்கு ஆதரவாக அணி திரட்டும் கீழ்த்தரமான தந்திரமாகவே இதை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்.

வரலாறு தெரியாத அளவிற்கு கல்வியறிவு மறுக்கப்பட்டு, கால் வயிற்று கஞ்சிக்கே அல்லாடும் நிலையில் வைக்கப்பட்டுள்ள வட மாநில உழைக்கும் மக்களால் அயோத்தியில் நடப்பது என்ன என்று முழுமையாக சரியாக மதிப்பிட்டு புரிந்து கொள்ள முடியாது தான். அவர்களைப் பொறுத்தவரை ராமருக்கு கோயில் கட்டப்பட்டு, தமது ஊரிலிருந்து அரசே இலவசமாக போக்குவரத்து வசதிகளை செய்து கூட்டிச் சென்று   சுற்றிக்காண்பித்து திருப்பி அழைத்து வந்தால், அது நிச்சயம் அவர்களின் வாழ்நாளில் மறக்க முடியாத பயணமாகவே பார்க்கப்பட்டு பரவசத்துடன் பேசப்படவும் வாய்ப்பு உள்ளது. இது நிச்சயம் சங்கிகளுக்கு தேர்தலில் ஒரு வலுவான ஆதரவை உருவாக்கியும் தரப் போகிறது. அதாவது பாஜக அரசின் மூலம் ராமர் ஒவ்வொரு பூத்திலும் பாஜகவின் ஏஜென்ட் போல் வாக்குகளை உத்தரவாதப்படுத்த உள்ளார்.

இந்தியா கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் இந்த ராமரை – அயோத்தியில் கோயில் திறப்பை எப்படி அணுகப் போகிறது? பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த மக்கள் மத்தியில் என்ன மாற்றை முன்வைத்து பிரச்சாரம் செய்யப் போகிறது? பிஜேபியின் எதிர்ப்பு ஓட்டுகள் சிதறடிக்கப்படாதபடி எப்படி ஒரு வலுவான கூட்டணியை தக்க வைத்துக் கொள்ளப் போகிறது? என்பதில் தான் நம் நாட்டின் அரைகுறை ஜனநாயகத்தின் எதிர்காலம் அடங்கியுள்ளது.

முழுமையாக கட்டி முடிக்கப்படாத நிலையில் மோடி அவசர கதியில் அரசியல் ஆதாயத்திற்காக நடத்தும் திறப்பு விழா என்பதெல்லாம் எடுபடப்போவதில்லை. அதே போல் மோடிக்கு எதிராக சில சங்கராச்சாரியார்கள் குரலை உயர்த்துவதும் கூட நாட்டிற்கு உதவப் போவதில்லை. மாறாக, அந்த சங்கராச்சாரியார்களை எதிர்த்து மோடிக்கு ஆதரவாக தவிர்க்க முடியாமல் குரல் எழுப்பும் நிலைக்கு தள்ளப்படுவதன் மூலம் பிற முற்போக்கு ஜனநாயக அமைப்புகளின் பாசிச எதிர்ப்பும்கூட மட்டுப்படுத்தப்பட்டு நீர்த்துப்போகும் அபாயமும் உள்ளது.

மோடி அரசின் அடிப்படையான பொருளாதார கண்ணோட்டத்தை, வர்க்க சார்பை, மத – இன – சாதிவெறியை தூண்டி ரத்தம் குடிக்கும் இந்துத்துவா அரசியலை எந்த அளவிற்கு மக்களிடம் கொண்டு சென்று அதற்கு எதிரான ஒரு மாற்றுப் பொருளாதார திட்டத்தை முன் வைக்கிறோமோ அந்த அளவிற்கு மக்களை யோசிக்க செய்யும்.

கோடிக்கணக்கான வாக்காளர்களின் வாழ்க்கையை நாசமாக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக மாற்று என்ன என்பதை விளக்கி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் தருவதன் மூலமும், நாடு முழுவதும் உள்ள சிறு குறு நடுத்தர விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நம்மால் எப்படி முடியும் என்பதை விளக்குவதன் மூலமும், ஜிஎஸ்டியால் நசுக்கப்படும் வணிகர்களின் கதறலுக்கு காது கொடுத்து மாற்று வரி விதிப்பு முறையாக நாம் எதை கொண்டு வருவோம் என்பதை பகிரங்கமாக அறிவிப்பதன் மூலமும், மாணவர்களின் கல்வி உரிமை பறிக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக – நீட்டுக்கு எதிராக நாம் எத்தகைய தேர்வு முறையை அமல்படுத்தப் போகிறோம் என்பதை விளக்குவதன் மூலமாகவும்தான் நாடு தழுவிய அளவில் பரவலான செல்வாக்கைப் பெற்று கார்ப்பரேட் காவி பாசிசத்தை தேர்தலில் தோற்கடிக்க முடியும்.

2000 இஸ்லாமியர்களை படுகொலை செய்த பின்னரும் குஜராத்தில் தொடர்ந்து வெல்கிறது பாஜக. அதே பாணியில் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் என பரவலாக கலவரங்கள் – படுகொலைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், புல்டோசர்களால் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு வரும் நிலையில், மத சிறுபான்மையினரின் ஓட்டுக்களை இந்தியா கூட்டணி  பெறுவதற்கு பொருத்தமான நம்பிக்கையூட்டல்களை செய்ய வேண்டியதும் அவசியமாக உள்ளது.

இதையும் படியுங்கள்:

பாஜகவின் லட்சிய திட்டத்தில் ஒன்றான ராமர் கோயிலை இப்போது நிறைவேற்ற போகிறது. அடுத்த இலக்காக கிருஷ்ணன் கோயிலை கையில் எடுத்தும் விட்டது. மசூதிகளை இலக்காக்கும் இந்த கர – கடப்பாரை சேவையை தொடர விடலாமா?

தென் மாநிலங்களில் சங்கிகளால் காலூன்ற முடியாது; தமிழகத்தில் தலைகீழாக நின்றாலும் தாமரை மலராது என்றெல்லாம் நாம் சுய திருப்தி கொள்ள முடியாது. தென் மாநிலங்களில் ஒரு சீட்டு கூட கிடைக்காத போதும் , வட மாநிலங்களில் வெற்றி பெறுவதன் மூலமே தொடர்ந்து ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரத்தில் பாசிச கும்பல் கோலோச்ச முடியும். எனவே நாம் தமிழக அளவில் மட்டும் சிந்தித்தால் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்த முடியாது.

ராமனை முன்வைத்து களமிறங்கும் காவி கூட்டத்திற்கு சரியான பதிலடி தரப் போகிறோமா? அல்லது ராம பாணத்தால் வீழப் போகிறோமா?

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here