பாசிச பாஜக-வின் தேர்தல் பத்திர மோசடிகள் குறித்து நாள்தோறும் பல விவரங்கள் அம்பலமாகிவருகின்றன. அதில் ஒன்றுதான் குஜராத்தைச் சேர்ந்த ஒரு தலித் விவசாய குடும்பத்தின் சோகக்கதை.

பார்ப்பனிய-பனியா கும்பலின் ஆதிக்கத்தில் உள்ள குஜராத்தின்  கட்ச் மாவட்டத்தில், “சாவகார மன்வார்” என்ற ஒரு தலித் விவசாயியின் நிலத்தை அதன் சந்தை விலையான 76 கோடிகளை விட மிகக்குறைந்த விலைக்கு அதாவது 16 கோடிக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு வாங்கியுள்ளது அதானியின் துணை நிறுவனமான வெல்ஸ்பன் நிறுவனம் (Welspun Anjar SEZ). இழுபறியாக இருந்த இந்த வியாபாரத்தை இம்மாவட்டத்தின் துணை ஆட்சியர் மெஹுல் தேசாய் நேரடியாகத் தலையிட்டு முடித்துவைத்திருக்கிறார்.

தனது தொழில் விரிவாக்கத்துக்காக சாவகார மன்வார் என்ற தலித் விவசாயியின் 43000 சதுர மீட்டர் நிலத்தை வாங்கிய வெல்ஸ்பன் நிறுவனம் அதற்கான இழப்பீடாக ரூ. 16,61,21,877/-  அக்குடும்பத்தின் ஆறுபேரின் வாங்கிக்கணக்குகளில் செலுத்தியுள்ளது. ஆனால் அதன்பிறகு அந்நிறுவனத்தின் பொதுமேலாளர் மஹேந்திரசிங் சோதா மற்றும் அந்நகரின் பாஜக தலைவரான ஹேமந்த் ஷா ஆகியோர் சாவகார மன்வார் மற்றும் அவரது மகனான ஹரேஷ் ஆகியோரை அந்நிறுவனத்துக்கு வரச்சொல்லி “இவ்வளவு பெரிய தொகையை நீங்கள் வைத்துக்கொண்டிருந்தால் வருமானவரி சோதனை செய்து பறிமுதல் செய்துவிடுவார்கள். எனவே நீங்கள் பாஜக பேரில் தேர்தல் பத்திரங்களில் முதலீடு செய்துவிடுங்கள் ஒருசில வருடங்களில் ஒன்றரை மடங்காகத் திரும்பக் கிடைக்கும்” என்று ஏமாற்றி அவர்களை 11 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்க வைத்திருக்கின்றனர். அதில் 10 கோடி பாஜகவு-க்கும் மீதி 1 கோடி ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சிக்கும் போய்ச்சேர்ந்துள்ளது.

தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்த மன்வார் குடும்பத்தார் வெல்ஸ்பன் நிறுவன அதிகாரிகள் மீதும் அந்நகரின் பாஜக தலைவர் மீதும் அஞ்சார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் அவர்களின் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை. இதுவரை FIR கூட பதிவு செய்யவில்லை என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதையும் படியுங்கள்:

ஒரு தலித் விவசாய குடும்பத்தின் வாழ்வாதாரமான 76 கோடிகள் பெறுமான நிலத்தை வெறும் 16 கோடி கொடுத்து அடித்தட்டு விலைக்கு வாங்கிவிட்டு, அந்தத்தொகையையும் கூட நைச்சியமாக ஏமாற்றி ஆட்டையைப் போட்டு அக்குடும்பத்தை நடுத்தெருவில் நிற்கவைத்துள்ளது பாஜக-அதானி கொள்ளைக்கும்பல். கார்ப்பரேட்-காவி பாசிசத்தின் கூட்டுக்கு இந்த சம்பவம் ஒரு சிறு உதாரணம்தான். இதைப்போல நாடுமுழுவதும் எண்ணற்ற பழங்குடிகளின் நிலங்களை, மீனவர்களின் கடற்கரைகளைப் பறித்தும், உழைக்கும் மக்களின் குடியிருப்புகளை இடித்தும் வயிற்றிலடிக்கும் மோடி-அதானி-அம்பானி கூட்டு கொள்ளைக்கும்பலை வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தோற்கடிப்போம், தெருவிலும் தோற்கடிப்போம். நாட்டையே கூறுபோட்டுக் கொள்ளையடுக்கும் அதானி, அம்பானி சொத்துக்களை பறித்தெடுப்போம்!

ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here