தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் மற்றும் அவை வாங்கிய பத்திரங்களின் மதிப்பு மற்றும் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதி பெற்ற அரசியல் கட்சிகள் பற்றிய விபரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த விவரங்கள் கூட அரைகுறையானதாக முழுமை பெறாததாக உள்ளன.

தேர்தல் பத்திரங்களுக்கு என்று தனித்துவமான அடையாள எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன அந்த அடையாளங்கள் வெளியிடப்படவில்லை. எனவே எந்தெந்த நிறுவனங்கள் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு நிதி கொடுத்தன என்ற விவரத்தை துல்லியமாக அறிந்து கொள்ள முடியவில்லை.

அதுமட்டுமின்றி 3,346 தேர்தல் பத்திரங்கள் வாங்கிய, அதாவது சுமார் ரூ. 3,500 கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்கிய நிறுவனத்தின் பெயர்களும் அந்த பத்திரங்களை வாங்கி பணமாக்கிய அரசியல் கட்சிகளின் பெயர்களும் தற்போது வெளியிட்ட பட்டியலில் இடம் பெறவில்லை. இந்தப் பட்டிகளை அலசி ஆராய்வதன் மூலம் இருந்தே கூட பூதங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

இப்படி அரைகுறை விவரங்களை மட்டும் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்ததற்காக SBI வங்கியை உச்ச நீதிமன்றம் கண்டித்ததுடன் அந்த விபரங்களை வரும் 18ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

பல நிறுவனங்களில் அமலாக்கத்துறை மூலமாகவோ அல்லது வருமான வரித்துறை மூலமாகவோ சோதனைகள் நடத்தப்பட்ட சிறிது காலதிற்குள்ளாக அந்த நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன.

சில நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கியதற்கு சிறிது காலத்திற்கு முன்பாகவோ பின்பாகவோ அரசின் டெண்டர்கள் அந்த நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இவை பற்றிய சில விவரங்களை இங்கு பார்ப்போம்.

ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கிய ஃபியூச்சர் கேம்மிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் என்ற நிறுவனம் கோயம்புத்தூர் சேர்ந்த லாட்டரி மன்னன் மார்ட்டினுக்கு சொந்தமானது. இந்த நிறுவனம்தான் அதிகப்படியான தொகைக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நிறுவனங்களில் முதன்மையானதாக உள்ளது.

லாட்டரி மன்னன் மார்ட்டின் நிறுவனங்களுக்கு சொந்தமான 120 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கருப்பு பணம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில் சூலை 23,2019 அன்று அமலாக்கத் துறை மூலமாக சேர்க்கப்பட்டன. அதற்கு சில மாதங்களுக்கு முன்பாக இவரின் 70 இடங்களில் அமலாக்க துறையால் சோதனை நடத்தப்பட்டது.

இதையும் படிக்க: தேர்தல் பத்திர விவரங்கள்: பாஜக-வின் அரணாக SBI!

ஏப்ரல் 2, 2022-ம் தேதி அன்று அமலாக்கத்துறை மீண்டும் ஒருமுறை கருப்பு பணம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில் இந்த நிறுவனத்தின் ரூபாய் 409 . 9 2 கோடி சொத்துக்களை முடக்கியது. இது நடந்து சிறிது நாட்களுக்கு உள்ளாகவே ரூபாய் 100 கோடி மதிப்புடைய தேர்தல் பத்திரங்களை இந்த நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்த கம்பெனி ,2020 – 21 ஆம் நிதி ஆண்டில், பிராடன்ட் எலக்ட்டோரல் டிரஸ்ட் என்ற டிரஸ்டுக்கு 100 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது. பிஜேபிக்கு தேர்தல் நிதி அளித்த நிறுவனங்களிலேயே இந்த டிரஸ்ட் தான் அதிகப்படியான நிதியை அளித்துள்ளது.

லாட்டரி மன்னன் மார்ட்டின் நிறுவனம் அக்டோபர் 21, 2020 முதல் ஜனவரி 9, 2024 வரையிலான காலகட்டத்தில் தேர்தல் நிதி அளித்துள்ளது. அதே காலகட்டத்தில் தான் இந்த நிறுவனத்தின் இடங்களில் மத்திய அரசு துறைகளின் சார்பாக சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதிலிருந்து நமக்குத் தெரிய வருவது என்ன? இந்தத் துறைகளை வைத்து மிரட்டி பாஜக தேர்தல் நிதி பெற்றுள்ளது என்பதை யாராவது கூறினால் அதற்கு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளதா? என்று கேட்கின்றனர்.

தேர்தல் நிதி பத்திரங்களின் தனித்துவமான எண்கள் வெளியிடப்பட்டால் இதற்கான ஆதாரங்கள் துல்லியமாக கிடைக்கும். அது பொதுவெளியில் பரவி பிஜேபியும் அதன் முகமான மோடியும் மக்கள் மத்தியில் நாரடிக்கப்பட்டு விடுவார்கள் என்பதற்காகத் தான் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட முடியாது என்று எஸ்பிஐ மூலமாக பாஜக அரசு முட்டுக்கட்டை போட்டு வந்துள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லையா?

ஏப்ரல் 12 ,2019க்கும் அக்டோபர் 12, 2023 க்கும் இடைப்பட்ட காலத்தில்
மெகா இன்ஜினியரிங் இம்பாரஸ்ட்ரக்சர் லிமிடெட் என்ற நிறுவனம் ரூபாய் 980 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. மிக அதிக மதிப்பில் தேர்தல் பத்திரம் வாங்கிய நிறுவனங்களில் இந்த நிறுவனம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

வருமான வரித்துறை அக்டோபர் 12, 2019 அன்று மெகா இன்ஜினியரிங் இம்பாரஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தில் சோதனையில் ஈடுபட்டது. அதன் பிறகு இந்த நிறுவனம் தேர்தல் பத்திரங்களை வாங்குவதிலும் தனது நிறுவனத்திற்கு தேவையான டெண்டர்களை பெறுவதிலும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியுள்ளது.

செப்டம்பர், 2023 ஆம் ஆண்டில் மங்கோலியாவில் ரூபாய் 5,400 கோடி மதிப்புடைய கச்சா எண்ணெய் தொடர்பான ப்ராஜெக்ட் -ஐ இந்த நிறுவனம் பெற்றுள்ளது. இது இந்திய அரசுக்கும் மங்கோலிய அரசுக்கும் இடையிலான ஒரு ப்ராஜெக்ட்.
மேலும் இந்த நிறுவனம் மகாராஷ்டிராவில் 14,000 ரூபாய் மதிப்புடைய வேறு ஒரு ப்ராஜெக்டை அரசிடம் இருந்து பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, இந்திய பாதுகாப்புத்துறை (அதாவது ராணுவத் துறையில்) இருந்து 500 கோடி ரூபாய் மதிப்புடைய ஆர்டரை ஜூன் 2023ல் பெற்றுள்ளது.

குயிக் சப்ளை செயின் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் 410 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரம் வாங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் மொத்த மூலதனமே 130 கோடி ரூபாய் இந்த நிறுவனம் 2021 2022 ஆம் ஆண்டில் ஈட்டிய நிகர லாபம் ரூ.21.72 கோடி மட்டுமே. ஆனால் அதே காலகட்டத்தில் இந்த நிறுவனம் 360 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரம் வாங்கியுள்ளது. இது விந்தையிலும் விந்தையாக இல்லையா? அதுமட்டுமல்ல அதிக மதிப்பில் தேர்தல் பத்திரம் வாங்கிய நிறுவனங்கள் பட்டியலில் இந்நிறுவனம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. இந்த நிறுவனம் ரிலையன்ஸ் குழுமத்துடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: எஸ்.பி.ஐ. வங்கியை தலையில் குட்டிய உச்சநீதிமன்றம்!

தூத்துக்குடியில் 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா நிறுவனம் 400. 65 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரம் வாங்கியுள்ளது. இந்த நிறுவனம் இந்திய அரசிற்கு சொந்தமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனத்தை விலைக்கு வாங்க முயன்றது. அந்த நிறுவனத்தை விற்பதற்கான செயல்பாடுகள் இடையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அதை இந்த நிறுவனம் வாங்க இயலவில்லை.

அமலாக்கத் துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறையின் கண்காணிப்பின் கீழ் (2019 முதல் 2022 வரை) இருந்த பொழுது தான் வேதாந்த நிறுவனம் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.

இப்படி அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத் துறையின் மூலமாக நிறுவனங்களில் நடத்தப்படும் சோதனைகளுக்கும் மற்றும் அரசின் டெண்டர்கள் நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதற்கும் அந்தக் குறிப்பிட்ட நிறுவனங்களால் தேர்தல் பத்திரங்கள் வாங்கப்படுவதற்கும் நேரடித் தொடர்பு உள்ளது என்பது வெளிப்படையாக தெரிகிறது.

இப்படிக் கூறினால் பாஜக., ஆர் எஸ் எஸ் இன் ஆதரவாளர்கள் அதற்கு என்ன ஆதாரம்? என்று கேட்கிறார்கள். அதற்கும் ஒரு படி மேலே போய் அம்பானியையும், அதானியையும் வளர்த்து விடுவதைத் தான் மோடி தனது முதல் நோக்கமாகக் கொண்டுள்ளார்கள் என்கிறீர்களே அவர்களிடம் இருந்து ஒரு ரூபாய் கூட பாஜக தேர்தல் நிதி பெறவில்லையே இதற்கு என்ன நீங்கள் சொல்லப் போகிறீர்கள்? என்று கேட்கிறார்கள்.

இந்தக் கேள்வியை கேட்கும் பொழுது நமக்கு மூன்று கேள்விகள் எழுகின்றன.

1. யார் யாரிடமோ 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரம் மூலமாக நிதி பெற்ற பிரதமர் மோடி தனது நெ.ரு.க்.க.மா…ன நண்பர்களான அம்பானி, அதானிகளிடம் தேர்தல் பத்திரம் பெறாதது ஏன்?

2. அம்பானி, அதானியின் நேரடி பொறுப்பில் உள்ள நிறுவனங்களில் இருந்து தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெறாத போது அவர்களின் நிறுவனங்களுடன் தொடர்புடைய (குயிக் சப்ளை செயின் பிரைவேட் லிமிடெட் போன்ற ) நிறுவனங்களில் இருந்து நிதி பெற்று இருக்க வாய்ப்பு உள்ளது தானே?

3. இந்தியா முழுவதிலும் உள்ள எம்எல்ஏ –களை விலைக்கு வாங்குவது, கட்சிகளை உடைப்பது போன்ற வேலைகளைச் செய்வதற்கு தனக்கு நெருக்கமான நண்பர்களான அம்பானி அதானிகளிடம் இடம் இருந்து சட்டபூர்வமாக நிதியை பெறாமல் கருப்பு பணமாக பெற்றிருப்பாரோ?

தேர்தல் பத்திரங்களின் தனித்துவமான எண்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் பொழுது
இது போன்ற கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கும். அந்த பதில்கள் ஒவ்வொன்றும் பாஜக–வையும் உலக உத்தமர் மோடியையும் பிடித்து ஆட்டும் பூதங்களாகவும் இருக்கும்.

பூதங்கள் வெளிவருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

குமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here