காங்கிரசின் பத்தாண்டு (2004-2014) ஆட்சி உள்ளிட்டு கடந்த 20 ஆண்டு காலத்திற்கு பொருளாதார வெள்ளை அறிக்கை நடந்துமுடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளான 10/02/24 வெளியிடப்படும் என்று பாசிச மோடி அறிவித்தார். அதையடுத்து காங்கிரசும் பாசிச பாஜகவின் பத்தாண்டு ஆட்சியின் இலட்சணத்தை அம்பலப்படுத்தும் விதமாக பத்தாண்டு அநியாய காலம் (10 saal anyay kaal) என்ற தலைப்பில் கருப்பு அறிக்கையை கடந்த 08/02/24 அன்று வெளியிட்டுள்ளது.

தாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு இந்த பத்தாண்டுகளில் என்னவெல்லாம் செய்திருக்கிறோம், அதன்மூலம் நாட்டு மக்களின் வாழ்நிலை எப்படி மேம்பாடு அடைந்திருக்கிறது என்பதை பற்றி அறிக்கை வெளியிட வக்கில்லாத கேடுகெட்ட பாசிஸ்டுகள் பத்தாண்டுகளுக்கு முன்னர் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியைக் குறித்து வெள்ளை அறிக்கையை சமர்பித்துள்ளார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் வேலையின்மை பிரச்சினை என்ன ஆனது என்பது குறித்தோ, பேரழிவு திட்டமான பணமதிப்புநீக்கத்தின் தாக்கம் குறித்து ஒரு சொற்றொடர் கூட மோடி அரசின் வெள்ளை அறிக்கையில் இல்லை. “கருப்புப் பண நோயை” ஒழிக்க பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட 2016 பணமதிப்பிழப்பு முடிவு, நாடு முழுவதும், குறிப்பாக ஏழைகள் மற்றும் இந்தியாவின் கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு திண்டாட்டத்துக்கு உள்ளாக்கியது பற்றி எதுவும் கூறவில்லை.  இந்த முடிவு எடுக்கப்பட்ட ஒரு மாதத்தில் 82 பேர் உயிரிழந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2017 முதல் நான்கு மாதங்களில், முக்கியமாக சிறு வணிகங்கள் மற்றும் முறைசாரா துறைகளில் 15 லட்சத்திற்கும் அதிகமான வேலைகள்  என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் குறித்தோ எந்த பதிவும் இல்லை. உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக நாடு உயர்ந்துள்ளது என்ற படோடபம் மட்டும்தான் உள்ளது. அந்த முன்னேற்றம் கார்ப்பரேட்டுகளுக்கானது என்ற உண்மை மறைக்கப்பட்டுள்ளது.

அதே சமயம்,காங்கிரஸ் வெளியிட்டுள்ள கருப்பு அறிக்கையில் குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் பல்வேறு புள்ளிவிபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அருகிவரும் வேலைவாய்ப்புகள்!

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்துள்ளது. 2012 ஆண்டுவரை ஒரு கோடியாக இருந்த வேலைவாய்ப்பற்றோர் எண்ணிக்கை, 2022-ல் 4 கோடியாக அதிகரித்துள்ளது. 10 லட்சத்துக்கும் அதிகமான ஒன்றிய அரசின் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகளின் ஏறக்குறைய 33 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர், மூவரில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதனால்தான் சாதாரண ரயில்வே பியூன் வேலைக்குக்கூட PhD பட்டதாரிகள் வரிசையில் நிற்கின்றனர். வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் ஒவ்வொரு மணிநேரத்துக்கும் 2 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

தோற்றுப்போன பொருளாதார கொள்கைகள்!

பணமதிப்பிழப்பு, GST-ன் வரிவிதிப்பினால் சூறையாடப்பட்ட சிறு குறு தொழில்கள். 2014-2024 பத்தாண்டில் கச்சா எண்ணெய் ஓர் பீப்பாயின் விலை சர்வதேச அளவில் 79 டாலராக குறைந்திருந்த போதும் உள்நாட்டில் விலையைக்குறைக்காமல் பாசிச பாஜக அரசு அடித்துவரும் கொள்ளையைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றத்தினால் அனைத்துப் பொருட்களின் விளையும் ஏறி விலைவாசி உயர்வினால் மக்கள் பரிதவித்து வருவதையும் குறிப்பிட்டுள்ளனர்.

விவசாயிகளுக்கு பச்சைத்துரோகம்!

விவசாயத்தில் மோடியின் நண்பர்களுக்காகவே கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள், குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்காதது, பயிர்காப்பீட்டில் கார்ப்பரேட்டுகள் இலாபம் சம்பாதிக்கும் வேளையில் ஒருமணிநேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலைக்குத் தள்ளப்படுதல் போன்ற விபரங்கள் உள்ளன. ஆட்சிக்கு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவேன் என்ற மோடியின் வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.

தொழிலாளர் விரோத கொள்கைகள்!

பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுவதால் தொழிலாளர்கள் நிர்கதியாக்கப்படுவதும், ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கப்படாததும், தொழிலாளர்களுக்கு கூலித்தொகையை நிலுவை வைத்துள்ளதும் இந்த கருப்பு அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது. நிரந்தரத் தொழிலாளர்கள் என்ற ஒரு முறையே இந்த பத்தாண்டுகளில் அழிக்கப்பட்டு ஒப்பந்தத் தொழிலாளிகளாக மாற்றுப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இதனால் தொழிலாளர்களின் வருமானம் குறைந்துவருகிறது, தொழிலாளர்களின் உரிமைகளும் பறிபோகின்றன. வெறும் 4 மணிநேர கெடுவில் அமலாக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு ஏறக்குறைய 4 கோடி புலம்பெயர்த் தொழிலாளர்களை பல நூறு கிலோமீட்டர்கள் நடந்தே சொந்த ஊருக்கு செல்லவேண்டிய அவலத்தையும் பாஜக பாசிஸ்டுகள் நிறைவேற்றினர். பாசிச மோடியின் ஆட்சியில் விரல்விட்டு எண்ணக்கூடிய அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் தரகு முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி, வரி தள்ளுபடி, பொதுத்துறை நிறுவனங்களை சல்லிக்காசுக்கு தாரைவார்ப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் அவர்களின் சொத்து மதிப்பு உயர்ந்து  உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பிடிப்பதும், கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மோதானி ராஜ்ஜியம்!

ஹிண்டன்பர்க் அறிக்கையின்மூலம் அம்பலமான அதானியின் மோசடிகள் குறித்து எந்த விசாரணையும் நடைபெறவில்லை. அதேபோல அதிக விலைக்கு நிலக்கரி இறக்குமதி செய்ததாகப் போலியான ரசீதுகள் மூலமும், அதிக விலைக்கு மின்சாரத்தை விற்று முறைகேடாக மக்களை சுரண்டிக் கொழுப்பது குறித்தும் அதானிமேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரங்களில் அனைத்து விசாரணை அமைப்புகளும், போன்ற கட்டுப்பாட்டு அமைப்புகளும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பவற்றையும் காங்கிரசின் கருப்பு அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மீது அதிகரிக்கும் தாக்குதல்கள்!

பாசிச மோடியின் கடந்த பத்தாண்டு ஆட்சிக்காலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மீது ஏறக்குறைய 48 சதவீதம் அதிகரித்துள்ள தாக்குதல்கள் குறித்தும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதன்மூலம் இடஒதுக்கீடு உரிமைகள் பறிக்கப்பட்டு நிரந்தர வேலைவாய்ப்புகளில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் புறக்கணிக்கப்படுவதும், அவர்கள் வேறு வழியில்லாததால் ஒப்பந்தத் தொழிலாளர்களாக மாற்றப்படும் அநியாயமும் அரங்கேறிவருகிறது.

பெண்களுக்கெதிரான பாசிஸ்டுகள்!

பாசிச மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்குவந்த பத்தாண்டுகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வந்துள்ளன. கடந்த 2022-ஆம் ஆண்டில் மட்டும் நாடுமுழுவதும் சுமார் 31516 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது நாளொன்றுக்கு 86 வழக்குகள். ஆனால் அதே சமயம் அவ்வழக்குகளில் தண்டனை கிடைத்திருப்பதோ வெறும் 27.4 சதவீதம் தான்.  இதுதவிர மோடியின் கட்சியைச் சேர்ந்தவர்களே மிகப்பெரும் பாலியல் குற்றவாளிகளாக உள்ளனர். இதற்கு உன்னாவ் MLA குல்தீப் செங்கார், பில்கிஸ் பானோ குற்றவாளிகள் போன்ற பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

சாதி, மத வெறுப்புப்பேச்சு!

பாசிச பாஜகவின் தலைவர்களே சாதி மத ரீதியிலான வெறுப்புப்பேச்சை பேசுபவர்களாகவும், பரப்புபவர்களாகவும் இருக்கின்றனர். சிறுபான்மையினர், பெண்கள், பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர் மீதான வன்முறையை தூண்டுபவர்களாகவும், அப்படி அவர்கள்மீது தாக்குதல் நடத்துபவர்களை மாலை போட்டு மரியாதை செய்பவர்களாகவும் உள்ளனர்.  குஜராத்தின் உனா பகுதியில் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையும், உ பி ஹத்ராஸில் கொடூரமாகக் கொல்லப்பட்ட மனிஷா சம்பவங்களே இதற்கு மிகச் சில உதாரணங்கள். உயர்கல்வி நிறுவனங்களில் சாதி வேறுபாடு தீவிரமாக புகுத்தப்பட்டு சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர் உயர்கல்விக்கே செல்லமுடியாத சூழ்நிலையை பாஜக பாசிஸ்டுகள் நிறுவியுள்ளனர். பாசிச பாஜக வின் சூழ்ச்சியால் வன்முறை களமாக்கப்பட்ட மணிப்பூர் 9 மாதங்களாகியும் இன்னும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது.

RSS கைக்கூலிகளால் நிரப்பப்படும் ஒன்றிய அமைப்புகள்!

பாசிச மோடியின் ஆட்சியின் பத்தாண்டுகளில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, CBI, NIA, தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி என அனைத்து ஒன்றிய விசாரணை அமைப்புகளும், பிரதான ஊடகங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து எதிர்கட்சிகளை ஒடுக்கும் ஆயுதங்களாக மாற்றியுள்ளது. நாடு முழுவதும் இவற்றைப் பயன்படுத்தி பல்வேறு மாநிலங்களில் ஆட்சிக்கவிழ்ப்பை நடத்திவருகிறது என்பவற்றை இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

சீனாவைக் கண்டு தொடைநடுங்கும் மோடி!

தேசிய பாதுகாப்பு விடயத்தில் பாசிச மோடியின் மறு, திசைதிருப்பு, பொய் சொல், நியாயப்படுத்து என்ற அணுகுமுறையால் பெரும் தோல்வியே மோடிக்குக்  கிடைத்துள்ளது. அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கில் ஏறக்குறைய 2000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது. இராணுவத்தரப்பில் 18 முறை நிகழ்த்தப்பட்ட பேச்சுவார்தைக்குப் பின்னரும் சீனா ராணுவம் அசைய மறுக்கிறது. அரசின் புள்ளிவிவரப்படியே இந்தோ சீனா எல்லையில் மொத்தமுள்ள ரோந்து பகுதிகளை இந்திய இராணுவம் இழந்துள்ளது. யாரும் நம் பகுதிகளை ஆக்கிரமிக்கவில்லை என்று கூறியதன்மூலம் கல்வான் பள்ளத்தாக்கில் சீனப் படைகளால் தாக்கப்பட்டு இறந்துபோன இராணுவவீரர்களை அவமானப்படுத்தியுள்ளார் பாசிச மோடி. சீனாவின் பெயரை உச்சரிக்கக்கூட பயப்படும் ஒரு கோழையாக மோடி உள்ளார் என்பதும் காங்கிரஸ் வெளியிட்டுள்ள பாஜக ஆட்சியின் கருப்பு அறிக்கையில் அடங்கியுள்ளது.

  • ஜூலியஸ்

ஆதாரம்: black paper: Congress releases ‘Black Paper’ highlighting Modi government’s failures; here’s what it says – The Economic Times (indiatimes.com)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here