ஸ்டேன் சாமி அவர்களது மடிக் கணினியின் மின்னணு நகலை ஆராயச் சொல்லி அவரது வழக்கறிஞர்கள் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து, அமெரிக்காவின் டிஜிட்டல் தடயவியல் நிறுவனமான அர்சனால் கன்சல்டிங், அதை ஆராய்ந்து தனது ஆய்வு முடிவுகளை இப்போது வெளியிட்டுள்ளது. அதில் சுவாமியின் மடிக்கணினியில் திருட்டுத்தனமாக குற்ற ஆவணங்கள் புகுத்தப்பட்டுள்ளன என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது.

2019 ஜூன் மாதம் அவரது மடிக்கணினி காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டது. ஆனால் 2014ஆம் ஆண்டிலிருந்து, அதாவது மோடி அரசு பொறுப்பேற்றதில் இருந்தே சுமார் ஐந்து ஆண்டுகளாக அவரது கணினியில் ஊடுருவும் மென்பொருள் (Malware) மூலம் கண்காணிப்பும், ஏராளமான ஆவணங்கள் உள்ளீடும் என அவருக்குத் தெரியாமலேயே இவ்வளவும் நடந்துள்ளன. இந்த காலகட்டத்தில் ஹேக்கர் ஒருவரின் மூலமாக அவரது கணினி முழு கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டு டஜன் கணக்கான கோப்புகளை(Files) மறைக்கப்பட்ட கோப்புறைகளில் ( Hidden Folders) அவர் இறக்கி விட்டுள்ளார் என அர்சனாலின் அறிக்கையை மேற்கோள் காட்டி வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது.

தேசியப் புலனாய்வு முகமை (NIA) ஸ்டேன் சாமியை அக்டோபர் 2020இல் கைது செய்தது. எல்கர் பரிசத் (பீமா கொரேகான்) வழக்கில் கைது செய்யப்பட்ட 16 வது நபர் இவர். அனைவருக்கும் நிகழ்ந்தது போலவே இவருக்கும் தொடர்ச்சியாக பிணை மறுக்கப்பட்டு வந்தது. அவர் கடுமையான நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நீர் அருந்த உறிஞ்சு குழல் டம்ளர் கூட வழங்காமல் அவரை சித்திரவதை செய்து சிறையிலேயே கொன்றது இந்தக் கொடூர அரசு. 2014 அக்டோபரில் இருந்து Netwire எனும் உளவு மென்பொருள் மூலமாக அவரது கணினியில் ஊடுருவி, கடவுச்சொல் திருட்டு உட்பட பல்வேறு முறைகேடுகள் அரங்கேறி உள்ளதாக அர்சனால் அறிக்கை கூறுகிறது.

இதைச் செய்த ஹேக்கர், சுவாமியின் கணினியில் இருந்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோப்புகளை தனது சர்வரில் நகலெடுத்தார் எனவும் கூறுகிறது. இதே ஹேக்கர்தான் சமூக செயற்பாட்டாளர் ரோனாவில்சன் மற்றும் வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங் ஆகியோரையும் குறி வைத்தவன். இவர்கள் இருவருமே இதே வழக்கில் கைதாகி 4 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்கள்தான். அந்த ஹேக்கர் ஒரே விதமான ஊடுருவல் மென்பொருள், கட்டுப்பாட்டு சர்வர், பாஸ்வேர்ட் ஆகியவற்றை பயன்படுத்தி உள்ளதும் தெரிய வந்துள்ளது. சென்ற ஆண்டு டிசம்பரில் இதே நிறுவனம் ரோனா வில்சனின் கணினியில் இதே போன்ற ஊடுருவல் மற்றும் குற்ற ஆவணங்கள் உள்ளீடு செய்யப்பட்டதை ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தியது.

இது மட்டுமல்லாமல், அமெரிக்க சைபர் செக்யூரிட்டி நிறுவனமான sentinel one – ன் ஆய்வாளர்கள் வில்சன், வரவர ராவ் மற்றும் டெல்லிப் பல்கலைக்கழக பேராசிரியர் ஹானிபாபு ஆகியோரது இமெயில்(Email) ஹேக் செய்யப்பட்டு களவாடப்பட்டதில், புனே போலீசாருக்கு உள்ள தொடர்பை அம்பலப்படுத்தினர். ஜூன் 2017- லேயே தொழில்நுட்ப இதழான Wired இத்தகவலை வெளிப்படுத்தியது. புனே போலீசார்தான் ரோனா வில்சன் உள்ளிட்ட 16 பேரையும் கைது செய்தனர்.

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி மாறி சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றவுடன், எங்கே இந்த வழக்கின் உண்மைத் தன்மை வெளிப்பட்டு விடுமோ என பதட்டம் அடைந்த மோடி அரசு, இவ்வழக்கை உடனடியாக தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியது. ரோனா வில்சன் உள்ளிட்ட சிலரின் கணினியில் கிடைத்த ஆதாரத்தை வைத்துதான் அனைவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. அப்படி அதில் இருந்ததாக சொல்லப்படும் இவர்கள் காட்டும் அனைத்து ஆதாரங்களும் திட்டமிட்டு, போலீசால் ஹேக்கர் மூலம் புகுத்தப்பட்டவை என்பதால் இந்த வழக்கே ஒரு ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு தான் என்பது உறுதியாக நிரூபணமாகிறது.

2014-இல் மோடி அரசு அமைந்ததில் இருந்தே இது போன்ற சதி வேலையை தொடங்கி விட்டது. வில்சன் எழுதியதாக கூறப்படும் கடிதங்களின் அடிப்படையில் இந்த வழக்கு கட்டியமைக்கப்பட்டது. வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், கல்வியாளர் ஆனந்த் தெல்தும்டே, கவிஞர் வரவர ராவ், பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் இதுபோன்ற போலி கடித ஆதாரங்களின் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படியுங்கள்: மோடி அரசால் சிறையில் வாடும் சமூக செயற்பாட்டாளர்கள்!  தோழர்.பாலன் உரை

மோடியைக் கொல்ல சதி செய்ததாக அறிவுத்துறையினர் 16 பேர் மீது அபாண்டமாக பழிசுமத்திய மோடி அரசுதான், உண்மையில் சதி செய்து அவர்களை குற்றவாளிகள் ஆக்கியது. நான்கு ஆண்டுகளுக்கு மேலாக அவர்களுக்குப் பிணை கிடைப்பதைக் கூட தடுத்து சிறையில் வாட்டி வதைக்கிறது. புலனாய்வு மற்றும் விசாரணை அமைப்புகளை கேடாகப் பயன்படுத்தித்தான் இப்படியொரு சதிச்செயலை அரங்கேற்றி உள்ளது பாசிச மோடி கும்பல்.

இந்த சதிச்செயல் அம்பலமாகிய நிலையில், அந்த ஆதாரங்களின் அடிப்படையில் சிறப்பு விசாரணை குழு ஒன்றை நீதிமன்ற கண்காணிப்பில் அமைத்து, ஏற்கனவே விசாரித்த புலனாய்வு மற்றும் விசரணைக் குழுவினரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மற்றும் சிறையில் உள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பினரால் வழக்கு தொடரப்பட்டு அது ஓராண்டாக நீதிமன்றத்தில் தூங்குகிறது. பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது பாசிச ஆட்சியில் அவ்வளவு எளிதானதா என்ன?

நாட்டில் ஏற்கனவே பெயரளவில் உள்ள ஜனநாயகமும், மோடி – அமித்ஷா வகையறாக்களால் சிதைத்து சின்னா பின்னமாக்கப் பட்டு வருகிறது. அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலையில் உள்ள உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக போராடுபவர்களை எல்லாம், அனைத்து அதிகாரவர்க்க, அரசுத் துறைகளையும் பயன்படுத்தி கடுமையாக ஒடுக்கி வருகிறது ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ள பாசிச பாஜக அரசு.

மக்கள் உரிமை மற்றும் புரட்சிகர அமைப்புகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு போல மக்கள் மத்தியில் வீச்சான பிரச்சாரத்தையோ, மக்கள்விரோத அரசுக்கெதிராக தீவிரமான போராட்டத்தையோ முன்னெடுக்காததும் இந்த கும்பலின் அராஜகத்துக்கு ஒரு காரணமாக உள்ளது. இன்றைய அபாயகரமான காலகட்டத்தில், அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராடாமல் இக்கும்பலை வீழ்த்த முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.

செய்தி ஆதாரம்: THE WIRE

ஆக்கம்: குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here