ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லையே, ஏன்?

பாலியல் வன்கொடுமைகள்: அதன் விஷ வேர் எங்கு உள்ளது? தீர்வு காண்பது எப்படி? எப்பொழுது?

தினசரிகளைத் திறந்தாலும் சரி; தொலைக்காட்சிப் பெட்டிகளைத் திறந்தாலும் சரி; மாநில அளவிலும், ஒன்றிய அளவிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமைகள் – எண்ணற்ற கொடும் நிகழ்வுகள் நடக்காத நாள் இல்லை!  அது எந்தக் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் சரி; இக்கொடூரங்கள் அரங்கேறிய வண்ணமே உள்ளன. என்ன ஒன்று?  எண்ணிக்கையின் அளவுகளைக், கூடக் – குறையக் காண்பித்துக் கொள்வதிலும், எவ்வித விரைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டோம்; தண்டனை சிலவற்றுக்கு மற்றவரை விட கூடுதலாகப் பெற்றுத் தந்தோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதில் தான் வேறுபாடேயொழிய இவ்விடயத்தில் வேறொன்றும் சாதனையாளர்களாக  முதலாளித்துவ ஓட்டுக் கட்சிகளுக்குள் போட்டி போட்டுப் பீற்றிக் கொள்ள முடியாது. எனவேதான் ‘ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை’ என்கிறோம்.

அதிலும் சமூக நீதி மண் – பெரியார் மண் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் தமிழ் நாட்டில், இதில் ‘எவ்விதக் குறைபாடும் இல்லாமல்’ எண்ணற்ற கொடுமைகள் அரங்கேறிய வண்ணமே உள்ளன. ஸ்டாலின் ஆட்சி காலத்தில் நடந்த இப்படிப்பட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளை பூதாகரப்படுத்தி ரூட் மாஃபியா, விருச்சுவல் வாரியர் இன்னும் எண்ணற்ற லேட்டஸ்ட் தொழில் நுட்பங்கள் மூலம் பொய்ச் செய்திகளை (Fake News), கூலிக்கு அமர்த்தபட்ட இருபால் ‘ஜென்மங்கள்’ பரப்பிய வண்ணமே இருந்தனர். இதனால் கவர்ச்சி மோக பொறுக்கி அரசியல் கூத்தாடி விஜய்யையும் அவர்கள் விருப்பப்படியே ஆட்சி கட்டிலிலும் அமர வைத்து விட்டார்கள்.

ஆனால் விஜய் ஆட்சிக்கு வந்தமர்ந்து 15 நாட்களுக்கு உள்ளாகவே தமிழ்நாடு முழுவதும் கோவை சூலூர், ஓசூர், விழுப்புரம், திருச்சி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, தாராபுரம், நாங்குநேரி, கடலூர், மதுரை, சென்னை, சிவகங்கை எனப் பல்வேறு ஊர்களில் பெண்களுக்கு/சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் 20-க்குக் குறையாமல் நடந்துள்ளன. 25-க்கும் மேற்பட்ட கொலைகளும், நான்கு இரட்டைக் கொலைகளும் நடந்துள்ளன. ஆணவப் படுகொலை அரங்கேறி உள்ளது. எண்ணற்ற குற்றச் சம்பவங்கள், தவெக ரவுடிகளின் அட்டூழியங்கள் – அத்துமீறல்கள், செங்கல் சூளையில் உரிமையாளரிடம், வேலூர் மாவட்டப் பகுதி ஒன்றின் தவெக ஒன்றியச் செயலாளர் அரட்டி உருட்டி மிரட்டி மாதா மாதம் ரூ. ஒரு லட்சம் கோரியது(சந்தி சிரித்ததும் குற்றவாளியைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக தற்போது யோக்கியவான்கள்  போல் அறிவிப்பு வந்துள்ளது) இவ்வாறாக எண்ணற்றவை அரங்கேறி உள்ளன. செங்கல் கால்வாய் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததற்கு, ‘ஆளும் கட்சியாக இருக்கிறாங்க; கொஞ்சம் அனுசரிச்சுப் போயா’ என்று இன்ஸ்பெக்டர் சொன்னதை கூறி உரிமையாளர் அழுகிறார்.

படிக்க:

 விஜய்யின் ‘சிங்கப்பெண் அதிரடி படை’யும்  கோவை சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமைக் கொலையும்

 மோடியின் ‘இராம ராஜ்ஜியத்தில்’ பாலியல் பொறுக்கிகள் செங்கார்களுக்கு கொண்டாட்டமே!

காசி மேட்டு தவெக செயலாளர் தினேஷ் அப்பகுதிக்கு விருந்தாளியாக வந்த 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தமையால் மே 5-ல் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறான். இதுவரை அவன் மீது கட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்னும் பல தவெக எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியினர் நடத்தும் இழி செயல்களை எல்லாம் ஊடக வெளிச்சத்தில் நாறிப்போனவை பற்றி ஏற்கனவே சில கட்டுரைகளில் சுட்டிக்காட்டி உள்ளோம்..இது தவிர எண்ணற்ற மக்கள் போராட்டங்கள், திருச்சி செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவியர் போராட்டம், காரைக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம், விவசாயிகள் போராட்டங்கள், ‘நீட்’டுக்கு எதிரான மாணவர் அமைப்புகளின் போராட்டம், சனாதனத்திற்கு எதிரான புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்கள், திமுக-வின் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிற்சில சம்பவங்கள் நடந்து, அதற்கான சிற்சில நடவடிக்கைகளை ஸ்டாலின் மேற்கொண்டு இருந்தாலும், அவற்றை யெல்லாம் ஏகடியம் செய்து “ ‘மாற்றம் வேண்டும் – மாற்று வேண்டும்’ அதற்குத் தகுதி படைத்தவன் நான் ஒருவனே” எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த அரசியல் கோமாளி வேடதாரி விஜய். ஆனால், அவரது வேடத்திற்கு மாறாக இன்று பதவியேற்ற பதினைந்தே(15) நாட்களில் தமிழ்நாடு பல்லிளிக்கிறது. அவர் சொன்ன ‘மாற்றம் – மாற்று’ இவ்வசிங்கங்கள் தானோ?

இது மட்டுமல்ல; விஜய் அமைச்சரவையில் மட்டுமல்ல; கட்சியின் பல்வேறு மட்ட பொறுப்பாளர்களில் மிகச் சரி பாதிப் பேர் ஆர்எஸ்எஸ் பாஜக-வில் பயணப்பட்டவர்கள் அல்லது பற்றாளர்கள். அமைச்சர் நிர்மல் குமார் ஆர் எஸ் எஸ் பாஜக ஐ.டி. விங்கில் தலைமைத்துவ பங்காற்றி நாடு முழுமைக்கும் காவிகளுக்கு ஆதரவான வகையில் – எதிர்த்தரப்பினருக்கு பாதகமான வகையில் பொய்ச் செய்திகளை (Fake News) மட்டுமே பரப்பி பொருளாதார ரீதியில் சுருட்டிக் கொண்டவர் தான் இவர்; அமைச்சர் அருண்ராஜ் ஐஆர்எஸ், தான் சென்னையில் கூடுதல் வருமான வரி அலுவலராகப் (Additional Commissioner of Income Taxes) பணியாற்றிய காலத்தில் தான் பாஜக வழிகாட்டுதலில், நெய்வேலி படப்பிடிப்பில் இருந்த விஜய்யை (வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு – மற்றும் வருமான வரி ஏய்ப்பு முதலான குற்றச் செயல்களை முன்வைத்து) இழுத்து வந்து பேரம் பேசி பாஜக ஆலோசனையின் பேரில் தனிக்கட்சி துவங்க வைத்ததும், கிறித்தவ இஸ்லாமிய சிறுபான்மையினர் வாக்குகளையும்,  ரசிக மனப்பான்மை கொண்ட இளைஞர்களின் வாக்குகளையும் பிரித்தெடுப்பதற்கு பேரம் பேசவும், படிய வைக்கவும் காரணமாக இருந்தார்.

கரூர் 41 பேர் மரணம் மற்றும் விஜய் தொடர்பான எண்ணற்ற குற்றச்செயல் கோப்புகள் டெல்லி காவித் தலைவர்களின் காலடியில் குவிந்து கிடக்கின்றன. பின்னர் நூற்றுக்கணக்கான கோடிகளை சுருட்டியதாக அருண்ராஜ் மீது ஏற்பட்ட புகாரை அடுத்து அவர் பீகாருக்கு தூக்கி வீசப்பட்டு மாறுதலுக்கு உள்ளானார். பீகார் சென்ற சில மாதங்களிலேயே பதவியை ராஜினாமா செய்து விட்டு டெல்லி லாபியில் பாஜகவில் தஞ்சம் புக முனைந்த சூழலில், டெல்லி காவிக் கும்பல் காட்டிய வழிகாட்டுதலில், சென்னை வந்து தவெக-வில் ஐக்கியமானார். இன்று அவர் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்.

படிக்க:

 கவர்ச்சி மோக பொறுக்கி அரசியலும் நடிகர் விஜய் பதவியேற்பும்!

 பள்ளிச் சிறார்களை தனது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் நடிகர் விஜய்!

அதிமுக ஆட்சிக்காலத்தில் முன்னாள் வனத்துறை அமைச்சராக இருந்து கொள்ளையடித்தவரும், வாசாத்தி பழங்குடிப் பெண்கள் பாலியல் வன்புணர்வுகளுக்கும், கொலைகளுக்கும், இன்னும் வார்த்தைகளால் வடிக்க இயலாத சொல்லொண்ணாத் துயரங்களுக்கும் ஆட்படக் காரணமானவர்களில் மிக முக்கியமான பெரும் குற்றவாளி செங்கோட்டையன். எடப்பாடிக்கும் இவருக்கும் ஏற்பட்ட போதல் போக்கில் அமித்ஷாவை சில முறை சந்தித்ததும் அவர் காட்டிய வழிமுறையிலேயே செங்கோட்டையனை, தாம் பெற்றெடுத்த தவெக-வில் ஐக்கியமாகிடச் செய்ததும் உலகறிந்த ரகசியமே! இன்று அவர் வருவாய்த்துறை அமைச்சர்! மற்ற வகையில் லாட்டரி சீட்டுப் புகழ் குடும்ப ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் இவர்கள் கட்சிக்கே முதலீடு செய்பவர்களாக விளங்குகிறார்கள் என்பது மட்டுமல்ல; மோடி அமித்ஷா கும்பலின் செல்லப் பிள்ளைகளும் இவர்களே! இரு பார்ப்பனர்கள் எம்எல்ஏக்கள் ஆகியிருப்பதும் அதில் ஒருவர் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ அறநிலையத்துறை அமைச்சராகி இருப்பதும் இதுபோன்று எண்ணற்றோர் ஏற்கனவே காவிமயமானவர்கள் தான்.

கோவை சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து சிரித்து சிரித்து மழுப்பிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா முன்பு பாஜகவில் மிக முக்கிய செயல்பாட்டாளர். எனவே. கட்சியின் மாவட்ட ஒன்றிய பொறுப்புகளில் இருப்போரில் பாதிப்பேர் காவிக் கொள்கைக்கு உடன்பட்டவர்களே! இனி தமிழ்நாடு வடநாடு போல் கலவரம் பூமியாகவும், உரிமைகளைப் பற்றி பேச தகுதியற்ற பூமியாகவும் முழுமையும் மாற்றப்பட இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் போன்ற கட்சியினர் தவெக-வை பாஜக எதிர்ப்பு இயக்கம் என்று ‘ஒளிவட்டம்’ ஏற்படுத்தி அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியதோடு வன்னியரசும், ஜாஜகானும் அமைச்சர் அவையிலும் இடம் பிடித்து அசிங்கத்தைத் தேடிக் கொண்டார்கள். சபாஷ் தொல் திருமா.

தவெக ரூட் மாஃபியா கும்பலின் அருவருக்கத் தகுந்த அட்டகாசங்கள் பாரீர்!

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராடிக் கொண்டிருக்கின்ற தருணத்தில், விஜய்யிடம் இருந்து ஒரு வார்த்தை கூட வெளிவரவில்லை. ஆனால் பேட்டரி காரில் ஏறி கோட்டையை வலம் வந்தார்; அங்குள்ள தேவாலயத்தில் வழிபாடு செய்துள்ளார்; இரு பக்கமும் திரண்டு நின்று வேடிக்கை பார்த்த அரசு ஊழியர்களிடம் வழக்கம்போல கை உயர்த்திக் காண்பிக்கும் ‘ரீல்ஸ்’ விட்டுச் சென்றுள்ளார். பல்வேறு தரப்பிலும் கோவை சூலூர் சம்பவத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பிய பின், அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டுவது போன்று நாடகத்தை அரங்கேற்றுவதும், இப்படிப்பட்ட கூட்டங்களிலும் மற்ற பல நேரங்களிலும் முகத்தை மிகவும் சீரியஸாக வைத்துக் கொண்டு ரீல்ஸ் விடுவது அவரது ‘பொறுப்பு மிக்க’ இமேஜை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கான சிறந்த நடிப்பாகும். அதன்பின் ஒரு அமைச்சர் கோவை சூலூருக்கு நேரில் சென்று சிறுமியின் தாயிடம் பேசிய போது, விஜய்யையும் பேச வைத்துள்ளார். என்ன பேசினார் என்ற காணொளி தென்படவில்லை. பதவியேற்கின்ற பொழுது உளறி கொட்டியதைத் தவிர ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசவோ, நாட்டு நடப்புகளை எடுத்து இயம்பவோ அவரால் வாய் திறக்க திராணி இல்லை. ஸ்கிரிப்டைப் பார்த்தே பேசிப் பழக்கப்பட்டவருக்கு முதல்வர் நாற்காலியில் அமர்ந்து எதைப் பேச முடியும்?

திமுக ஆட்சி காலத்தில் திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் போலீஸ் காலிகளால் படுகொலை செய்யப்பட்ட பொழுது இப்படித்தான் இறந்தவரின் தாயிடம், ஸ்டாலின் பேசி ‘முதலமைச்சர் என்ற முறையில் நான் மிகவும் வருந்துகிறேன்-ம்மா; Sorry-ம்மா; உங்களது இன்னொரு மகனுக்கு வேலை, வீட்டு மனை இடம் உட்பட இன்னும் பல்வேறு உதவிகளை இந்த அரசு மேற்கொள்ளும் அம்மா’…என்ற பாணியில் சொன்னதற்குத் தான், ‘Sorry சொல்லிவிட்டால் போதுமா? பிரச்சனை தீர்ந்து விடுமா? சிபிஐ பாஜகவின் ஊது குழல் தானே; அவர்களிடம் ஏன் அஜித்குமார் மரண வழக்கை ஒப்படைத்தீர்கள்? மாண்டவர் உயிர் பிழைத்து வந்து விடுவாரா’ என்று வீர வசனம் பேசி கொக்கரித்தார்; கர்ஜித்தார் விஜய். இப்பொழுது இவ்வளவு நடந்த பின்னரும், இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் PINK PATROL எனப் பெண்கள் பாதுகாப்புக்கென விடப்பட்ட போலீஸ் வாகனங்களுக்கு எல்லாம் ஸ்டிக்கர் மாற்றி ஒட்டி ‘சிங்கப் பெண் அதிரடிப்படை’ என்றே வெட்கமின்றி சாதனையாக அறிவித்துக் கொண்டு இருக்கிறார். ஆனால் அறிவிக்கப்பட்ட அப்போலிப் படையும்,  இத்தகு கடுமையான தருணங்களில் கூட எங்கு ‘தலைமறைவாகி’ விட்டன எனவும் தெரியவில்லை. இப்பிரச்சினை தொடர்பாக கோவையில் அம் மண்டல போலீஸ் ஐஜி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் டிஐஜி-யையும், எஸ்பி-யையும் அருகில் வைத்துக் கொண்டு குலுங்க குலுங்க சிரித்து மகிழ்கிறார் ஐ ஜி. இவர்கள் குடும்பக் குழந்தைகள் இக்கதிக்கு ஆளானால் இப்படி இழிவாக நடந்து கொள்வார்களா?

படிக்க:

 திருவாளர் விஜய் முன்வைக்கும் மாற்று குறித்த பித்தலாட்டங்கள்!

 தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் ஒரு மாற்று என்பது கலப்படமில்லாத மோசடி!

இத்தகு சூழலில் விஜய்யின், ‘ரூட் மாஃபியா’ கும்பல் என்ன வேலைகளைச் செய்து கொண்டு திரிகின்றன தெரியுமா? உதாரணத்திற்கு ஓரிரண்டைப் பாருங்கள்.

‘கோவை சூலூர் சிறுமி இறப்பிற்கு அச்சிறுமியின் தாயார் தான் காரணம்; அவள் ஒரு ஒழுக்கம் கெட்ட பெண்; தண்ணி அடிப்பவள்; குழந்தையை விளையாட விட்டு விட்டு இவள் தன் சுகத்தைத் தான் பேணிக் கொண்டிருந்தாள்; அப்படி இருக்கின்ற பொழுது முதலமைச்சரை குறை சொல்லி என்ன ஆகப் போகிறது? பாவம் முதலமைச்சர்’ – என்று ஒருத்தி கூறி இருக்கிறாள். ‘கொலை செய்தவர்களில் ஒருவன் திமுக-காரன்; இப்படி அநியாயமாக சிறுமியைக் கெடுத்து கொலை செய்துவிட்டு முதலமைச்சரை குறை சொல்வது எப்படி நியாயம்? கரண்ட் கட் எல்லாம் திமுக காரர்களின் சதியால் தான் நடந்து கொண்டிருக்கிறது; உதயநிதி ‘அண்ணா; உதயநிதி அண்ணா’, உங்களுக்கு வெட்கமாக இல்லை… ஏன் இப்படி தூண்டிவிட்டு ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தறே? நீ உருப்படவே மாட்டே; விளங்கவே மாட்டே; முதலமைச்சருக்கு ஒரு நிமிடம் ஓய்வின்றி உழைத்தபடியே உள்ளார்; அவரது முகத்தைப் பார்க்கவே மிகவும் பரிதாபமாக இருக்கிறது; இந்த திமுக காரன்களால் ஆட்சியில் இருக்கும் பொழுதும் கேடு; இப்போது நல்லாட்சி நடக்கின்ற பொழுதும் கேடு…’ என்ற பாணியில் முழுப் பொய்களையும், புனைச்சுருட்டுகளையும் அவிழ்த்து விடுகிறாள் இன்னொருத்தி. ‘படுத்திருந்த குழந்தையின் தாயை நான் தான் எழுப்பினேன்; அவள் போதையில் இருந்தாள்; நான் எதிர்த்த வீட்டுக்காரிதான்; நான்தான் குழந்தையை காணோம்; தேடுடி என்று கூறினேன்; இதற்கெல்லாம் விஜய் என்ன செய்வார்…’- என்றாள் ஒருத்தி! ‘மிட்டாய்க்காகப் படுக்கப் போனால் – செத்து மடிந்தால் விஜய் காரணமா?…’ என்று ஒருவன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளான். அனைத்திற்கும் ‘முத்தாய்ப்பாக’ விஜய் ஆட்சியில் நாள்தோறும் நடக்கும் கொடும் செயல்களைக் கண்டித்துப் பேசிய ஒரு ஊடகவியலாளர் பெண்மணியை, ‘ரூட் மாஃபியா’ குழுவைச் சேர்ந்த ஒரு பெண்,  வார்த்தைகளால் வடிக்க இயலாத, காது கொடுத்துக் கேட்கச் சகிக்காத – மிக மிகத் தரந்தாழ்ந்த, அருவருக்கத்தக்க  வார்த்தை களால்(ஸ்டாலினையும் உதயநிதியையும் இணைத்துப்)பேசியதை காதுகளை அடைத்துக் கொண்டு ஆடியோ மூலமாக கேட்க நேர்ந்தது! அதனை அந்த ஊடகவியலாளரே வெளிப்படுத்தி மிகுந்த மன வேதனையைப் பதிவு செய்தார். ஆக ‘காசுக்காக’ இப்படி எல்லாம் கூசாமல் பொய்ச் செய்திகளைப் பரப்பவும், இழிந்த சொற்களால் வசை பாடவும் ஆண்களை விடப் பெண்கள் மிகவும் அதிகரித்திருக்கிறார்கள் என்பது கொடுமையிலும் கொடுமை! இவற்றை யெல்லாம் அறியும் பொழுது முன்பு சில பெண்கள் பேசிய பேச்சுக்களை வைத்து (முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உதவியாளராக இருந்த) திரு பொன்ராஜ் அப்பெண்களை நோக்கி  உதிர்த்த வார்த்தைகள் ‘தவறில்லையோ’ என நம்மைக் கூட எண்ணிடத் தூண்டுகிறது அல்லவா?

இப்படிப்பட்ட கோமாளி நடிகனின் ஆட்சியில் இன்னும் ஐந்து ஆண்டுகள் தமிழ்நாட்டு மக்கள் எத்தகைய கொடுமைகளை – துயரங்களைச் சந்தித்து அல்லலுறப் போகிறார்களோ என எண்ணுகின்ற பொழுது நெஞ்சம் பதறுகிறது. பதவியேற்ற நாள் முதல் ஊடகவியலாளர்களை சந்திக்கவோ, மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேசவோ துணிவின்றி வாயே திறக்காத மண்ணாகிப் போனார் விஜய்.  வசனங்களை மனப்பாடம் செய்து திரைப்படங்களில் ஒப்பித்து நடித்தேப் பழக்கப்பட்ட நடிகர் விஜய்யால், நிஜத்தில் முதலமைச்சராய் ‘நடிப்பது’ எளிதானது அல்ல என்பதனை இனிப் போகப் போக உணர்வாரா? புரியவில்லை.

பாலியல் வன்கொடுமைகளின் ‘விஷ வேர்’ எங்கு உள்ளது?

இருபால் மனித இனத்திற்குப் பாலியல் உணர்வுகள் என்பது இயற்கை நியதிகளின் படி தவிர்க்க இயலாததே. இது விடயத்தில் இயற்கைக்கு முரணாகச் சிந்திக்கவும் இயலாது. ஆனால் அவை மனித நேயத்திற்கு – வரம்பிற்கு உட்பட்ட செயல்களாக மட்டுமே அமையப் பெறல் வேண்டும். அறிவு பூர்வமாக காதல் வயப்பட்டு திருமணத்திற்கு இசைந்து உறவு கொள்வது தவறு இல்லை. பெற்றோர் ஏற்பாடுகளின் படி இருமனம் ஒத்த நிலையில் திருமணம் செய்து கொண்டு உறவு கொள்வதை எவரும் தவறெனப் பகர்வதில்லை.  ஆனால், ஆணாதிக்க மனோபாவத்தில் பெண்களைப் போகப் பொருள்களாகக் கருதி, அவர்களது விருப்பமின்றி பலவந்தமாக பாலியல் வன்புணர்வு செய்வதை – அதிலும் குறிப்பாக 3 வயது, 5 வயது, 10 வயது, 15 வயது சிறுமிகளை வயதான மூதாட்டிகளையும் கூட… மிருகங்களைவிடக் கேவலமாக உருமாறி பாலியல் வன்புணர்வு செய்வதும், சிறுமிகள் அலறித் துடித்து கதறியவுடன், பயந்து கொலை செய்வதும் சகிக்க முடியாத கொடும் செயல்களாகும். அவர்களை எந்த வகையிலும் விட்டு வைக்கக் கூடாது; மரண தண்டனைகள்  வழங்குவதில் தவறில்லை.

படிக்க:

 பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்குத் தண்டனை: மக்கள் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி!

 பாலியல் ஜல்சா கட்சிக்கு எதிராக களத்தில் இறங்கிய இந்திய மல்யுத்த வீராங்கனைகள்!

கட்டிக் கொண்ட மனைவியே ஆனாலும், அவள் விருப்பமின்றி வல்லுறவு கொள்வதோ, எக்காரணத்திற்காகவும் கணவன் என்ற கோதாவில் அடித்து துன்புறுத்தவோ ஒருவன் முனைவானேயானால் ‘அக்காமுகனை அவன் வாழ்நாள் முழுவதும் சவுக்கால் அடித்துக் கொண்டிருந்தாலும் நான் ரசித்துக் கொண்டே இருப்பேன்’ என்றார் ஆசான் கார்ல் மார்க்ஸ். எவ்வளவு நுண்ணறிவோடு 1840 காலக் கட்டத்திலேயே பெண்ணுரிமை போற்றி – பெண் பாதுகாப்பை வலியுறுத்திச் சொல்லி இருப்பார் மார்க்ஸ்? அன்றே அந்த அளவிற்கு மார்க்ஸ் புண்பட்டுப் போய் இருப்பார் என்றால், நாகரீகம் முன்னோக்கி வளரும் இக் காலக்கட்டத்தில் அவர் காலத்தை விடவும் மிக மோசமான சூழல் பெண்களுக்கு இழைக்கப் படுகிறது என்றால் எப்படிப்பட்ட தண்டனைகளை இக்காமுகர்களுக்கு வழங்க வேண்டும் என அனைவரும் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம். தமிழ்நாட்டிலுங்கூட  தந்தை பெரியார் பெண்களை, ஆண்களைப் போலவே உடை அணியவும், முடி திருத்திக் கொள்ளவும், பிள்ளை பெறும் இயந்திரங் களாக மட்டும் இல்லாமல் விமானம் ஓட்டவும், ரயில் ஓட்டவும் இன்ன பிற ஆண்கள் செய்யும் பணிகள் அனைத்தையும் செய்யத் தூண்டினார். பெண்கள் கல்வி கற்க போராடி முன்னேற வேண்டும் என்று தட்டி எழுப்பினார். சொத்துரிமைக்காக குரல் கொடுத்தார். பெண்ணுரிமைக்காகப் போராடவும் உரமேற்றினார். வீட்டின் அடுப்படிகளை அடித்து நொறுக்குச் சொன்னார். பெண்ணுரிமைக்காக எண்ணற்ற போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தியிருக்கிறார். பெண்கள் மாநாட்டில் தான் பெரியாருக்கு ‘தந்தை பெரியார்’ என்ற பட்டமும் சூட்டப்பட்டது. அவரது ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற நூல் இன்றும் பெண்ணுரிமை போற்றிப் பாதுகாக்கத் தக்கதாக அமைந்துள்ளது. அவர் அறிமுகப்படுத்திய – நடத்திய சுயமரியாதை – சீர்திருத்த – சாதி மறுப்புத் திருமணங்கள் எண்ணில் அடங்காதவை.  அப்படிப்பட்ட இம்மண்ணில் தான் தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. ஆணவ படுகொலைகளும் அரங்கேறிய வண்ணம் உள்ளன. தந்தை பெரியாரை தமது கொள்கைத் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ள விஜய் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் 15 நாட்களில் பெருக்கெடுத்துள்ளது என்பது கொடுமையிலும்  கொடுமையன்றோ?

திரைத் துறையில் அன்று எம்ஜிஆர் கலாச்சார சீரழிவை உருவாக்கி ஆட்சியைப் பிடித்தார் என்றால், இன்று அதே கலாச்சாரச் சீரழிவின் மூலம் விஜய் ஆட்சியைப் பிடித்துள்ளார்! ‘விஷ வேர்’-ரே இதுதான்!!

ஆனாலும் அரங்கேறும் இப்படிப்பட்ட பாலியல் வன்புணர்வு குற்றச்செயல்களுக்கு விஷ வேர் சமூகத்தில் எங்கே இருக்கிறது? பாலியல் உணர்வு என்பது இயற்கை நியதியின் பாற்பட்டது என மேலே கூறினோம். ஆனால் செயற்கையாக ஆண்கள் வயது வேறுபாடு இன்றி பாலியல் வெறி கொண்டு அலையும் அவலம்/வெறி எங்கிருந்து? எந்த சீரழிவுக் கலாச்சாரப் புள்ளியிலிருந்து  துவங்கப் பட்டது?  என்பதனை தமிழ்நாட்டு அனுபவங்களில் இருந்து சிலவற்றைப் பார்ப்போம்.

இத்தகு சீரழிவுக் கலாச்சாரத்தைக்ஷ தமிழ் நாட்டில் காலூன்றச் செய்த ‘பெருமை’ திரை உலகத்தையே சேரும். கருப்பு வெள்ளையாக பின்பு வண்ணத்திரையில் அக்காலத்தில் திரைப்படத்தில் கொலோச்சியவர் எம்ஜிஆர் தான். இவர் சரோஜாதேவி, கே ஆர் விஜயா, லட்சுமி, மஞ்சுளா, ஜெயலலிதா, பத்மினி விஎன் ஜானகி, சாவித்திரி, பானுமதி, லதா…எனப் பற்பல நடிகைகளுடன் கதாநாயகனாக இணைந்து நடித்துள்ளார். எம்ஜிஆர் காலத்திலேயே திரைத்துறையில் ‘காம இச்சை’யைத் தூண்டக்கூடிய அளவிற்கு கதாநாயகர்களும், கதாநாயகிகளும் உடைகளை மிக இறுக்கமாக அணிந்து கொள்வது; மிகவும் ஆபாசமான அரைகுறை ஆடைகளை அணிந்து கொள்வது; ஆபாசமாக கட்டிப்பிடித்து நடனம் ஆடுவது; விரசமாகப் பேசுவது…என அரங்கேற்றப்பட்டு விட்டன. அக்கால இளைய சமுதாயம் அந்த சீரழிவுக் கலாச்சாரத்திற்கு ஆட்பட்டே ஒரே படத்தை 5 தடவை 10 தடவை பார்ப்பது; ‘எம்ஜிஆரின் குறிப்பிட்ட படத்தை 100 தடவை பார்த்தேன்; கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு சைக்கிளில் சென்று எம்ஜிஆர் படம் பார்த்தேன்’ என்று பெருமைப் பட்ட அக்கால இளைஞர்களும் இருக்கத்தான் செய்தார்கள். இது பத்திரிகைகளில் வெளிவந்த வரலாறும் உண்டு.

படிக்க:

 தவெகவின் தேர்தல் வெற்றிக்கு அடிப்படை காட்சி போதைக்கு அடிமையாகியுள்ள தமிழ் சமூகத்தின் தோல்வியே!

 இந்துத்துவாவில் ஊன்றி நிற்கும் பாசிச பாஜக! சித்தாந்தமே இல்லாதவையாக தடுமாறும் எதிர்கட்சிகள்!

இப்படிக் கலாச்சார சீரழிவுகளை – இளைய சமுதாயத்தை நோக்கி வக்கிரமான கலாச்சாரத்தில் ஈடுபடுத்தினார் எம்ஜிஆர் என்பது ஒருபுறம் என்றால், மறுபுறம் ‘தொழிலாளி, விவசாயி, மீனவ நண்பன், ரிக்ஷாக்காரன், ஒளி விளக்கு, மதுரை வீரன், மலைக்கள்ளன், இதயக்கனி, நல்ல நேரம், எங்க வீட்டுப் பிள்ளை, தனிப்பிறவி, திருடாதே, எங்கள் தங்கம், பெற்றால் தான் பிள்ளையா? உலகம் சுற்றும் வாலிபன்’ – என எண்ணற்ற படங்களில் நாட்டின் உழைக்கும் மக்களின் பாதுகாவலனாக – நாயகனாக திரைத் துறையில் மட்டுமே நடித்து அம்மக்களுடைய உள்ளத்தைக் கவர்ந்தார் எம்.ஜி.ஆர். பாடல்களை பொருத்தமட்டில் அக்காலத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் எம் ஜி ஆரை புகழின் உச்சத்திற்கு இட்டுச் சென்றது. பிற்காலத்தில் அவர் முதலமைச்சர் ஆன பிறகு அவரே இப்படிக் கூறினார்: ‘இந்த முதலமைச்சர் நாற்காலியில் நான்கு கால்கள் இருக்கின்றன; மற்ற மூன்று கால்கள் எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும்! ஆனால் ஒரே கால் முக்கியமான கால் பட்டுக்கோட்டையின் ஒரு கால் இந்த நாற்காலியில் இடம் பெற்றுள்ளது. அவரின்றி இந்த முதல்வர் நாற்காலியை நான் பெற்று இருக்க முடியாது என்பது உண்மை’ – என்று ‘பெருமைபட’க் கூறினார். அந்த அளவிற்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் சீர்திருத்த புரட்சிகர பாடல்கள், எம்ஜிஆருக்கு ‘ஒளிவட்ட’ப் பிம்பத்தை – தனிப்பட்ட போலித் தனமான திரைப் பிம்பத்தை உண்டாக்கிக் கொடுத்தது. பட்டுக்கோட்டையின் எண்ணற்ற புரட்சிகரப் பாடல்களை அக்கால இளைஞர்கள் தெருக்களில் பாடித் திரிவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். ஆனால் அவை யாவும் எம்ஜிஆர் இயற்றி, அவரே பாடிய பாடல்களாக மூளையில் ஏற்றிக் கொண்டனர். அதே போலத் தான் ‘வில்லன்’களையும், அவர்கள் பின்னால் அணி சேர்ந்த நூற்றுக்கணக்கானோரையும், ஒரே நபராக எம்ஜிஆர் அடித்து வீழ்த்தி வீராதி வீரனாக படம் காண்பிப்பது; மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்காக திரைப்படத்தில் மட்டும் போராடுவது; எண்ணற்ற மக்கள் நலன் சார்ந்த வசனங்களைப் பேசுவது; ஒத்திசைவான திரைக் கதைகளை ஏற்படுத்தித் தர தயாரிப்பாளர்களிடம் இறைஞ்சி வேண்டுவது… இப்படியாக அனைத்துக்குமே…கதை ஆசிரியர்கள், இயக்குனர்கள், வசனகர்த்தாக்கள், பாடல் ஆசிரியர்கள், பாடகர்கள், சண்டைப் பயிற்சியாளர்கள், சண்டைக்கான டூப் மனிதர்கள், மேக்கப் மேன்கள்…எனப் பிறரின் பங்களிப்பு மூலமாகவே அவர் திரைகளில் ‘ஜொளித்தார்’. ஆனால் பாமர மக்களைப் பொருத்தமட்டில் மேலே பட்டியலிடப்பட்டுள்ள அனைத்துக்கும் எம்ஜிஆரே முழுப் ‘பொறுப்பாளி’ என்ற கனவுலகில் சஞ்சரித்தனர். அப்படிப்பட்ட திரைப் பிம்பத்தைக் கொண்டு – மக்களின் பாமரத் தனத்தைப் பயன் படுத்தி அவர் மீதான கவர்ச்சி மோக பொறுக்கி அரசியல் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டார்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் மறைந்த எம்எஸ்எஸ். பாண்டியன், “பிம்பச் சிறை” என்ற முக்கிய தலைப்பில் “எம். ஜி . ராமச்சந்திரன் – திரையிலும் அரசியலிலும்” என்றதொரு நூலில் – எம்ஜிஆரின் முகத்திரையை கிழித்து ‘அக்கு வேறு ஆணி வேறாக’ மிகச் சரியான கண்ணோட்டத்தில் அம்பலப்படுத்திய சிறப்பான நூல் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை களுக்காகக் களம் இறங்கிப் போராடி – தடியடி பட்டு, சிறையேகி, தியாகம் புரிந்தெல்லாம் எம்ஜிஆர் அரசியலுக்கு வரவும் இல்லை; முதலமைச்சர் நாற்காலியைக் கைப்பற்றவும் இல்லை. இன்றைய விஜய்யைப் போலவே அன்றைய எம்ஜிஆர்ருக்கும் அரசியல் தெரியாது. ‘முதலாளித்துவம் சோசலிசம் கம்யூனிசம் எல்லாம் சேர்ந்தது தான் அண்ணாயிசம்’ என்று ஒரே போடாய் போட்டு அதுதான் தமது அதிமுக கட்சியின் கொள்கை என்று அறிவித்துக் கொண்டார்.  மேலும் சினிமா கவர்ச்சி மோகம் – பொறுக்கி அரசியலில் தமிழகத்தை தள்ளிய பாசிசக் கோமாளியாகவே அவர் ஆட்சி பீடத்தில் முதலமைச்சராக இருந்து ‘நடித்தார்’! ஒரு தோழர் குறிப்பிட்டுச் சொன்னது போல, ‘எம்ஜிஆர் 40 ஆண்டு காலம் தமிழ் சினிமாவை ஆண்டார்; பத்தாண்டு காலம் தமிழக முதலமைச்சராக நடித்தார்’ என்பதை மையமாகக் கொண்டே பேராசிரியர் எம் எஸ் எஸ் பாண்டியன் நன்கு எம்ஜிஆரின் தோலை உரித்தெடுத்தார்.

திரைப்பட நடிகராக இருந்த அவர், முதலமைச்சராக இருந்து தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை நடத்திய பொழுது நிஜத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், கைத்தறி நெசவாளர்கள், மாணவர்கள், ஏழை எளிய மக்கள் தத்தம் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக வீதிகளில் இறங்கிப் போராடுகின்ற பொழுது,  எம்ஜிஆரின் அன்றைய அதிரடிப்படை போலீஸ் அதிகாரிகளாக பவனி வந்த வால்டேர் தேவாரம், மோகன் தாஸ் போன்ற உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையிலான போலீஸ் அடியாட் படை – எந்தத் திரைப் படங்களில் எல்லாம் மேற்கண்ட போராடும் மக்களுக்காக நின்று தியாகம் புரிவது போல் எம்ஜிஆர் நடித்தாரோ – அந்த மக்களை குண்டாந்தடி கொண்டு மண்டைகளைப் பிளக்கவும், கொடும் காயங்களை ஏற்படுத்தவும், துப்பாக்கிகளால் சுட்டு சாகடிக்கவும், காவல் மற்றும் சிறை கொட்டடிகளில் சித்திரவதைகள் செய்யவும், வட ஆற்காடு தர்மபுரி மாவட்டங்களில் சமூக மாற்ற விரும்பிகளான புரட்சிகர இயக்கத் தோழர்களை சுட்டு வீழ்த்தவும்,  உகண்டாவின் சர்வாதிகாரி இடிஅமீன், ஜெர்மெனியின் பாசிச ஹிட்லர், இத்தாலியின் முசோலினி பாணியில் போராடும் உழைக்கும் மக்களை – போராளிகளை அழித்தொழிப்பதில் ‘தன்னிகரற்று’ விளங்கினார் எம்ஜிஆர்.   இப்படிப்பட்ட மனிதருக்குத்தான் அவரது ‘பிழைப்புவாத’ கொள்ளைக்கார அடிமைக் கூட்டம், ‘புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், இதய தெய்வம், கொடை வள்ளல், டாக்டர் எம்ஜிஆர், மனிதக் கடவுள்…’ இப்படி எண்ணற்ற முற்றிலும் பொருத்தமற்ற பட்டங்களை சூட்டி மகிழ்ந்தது; அல்லது சிலவற்றை அவரே சூட்டி மகிழ்ந்தார்.

1987-ல் பாசிசக் கோமாளி எம்ஜிஆர் மண்டையைப் போட்டார். அத்தருணத்தில் அதாவது 1988 (ஜனவரி 1-15) “புதிய ஜனநாயகம்” ஏட்டில் “ஒரு பாசிஸ்டின் மரணம்”- பத்திரிக்கைகள்-ஓட்டுக் கட்சிகளின் பித்தலாட்டம் – நீலிக் கண்ணீர்! என்ற அட்டைப்பட கட்டுரையை எட்டுப்பக்க அளவில் நார் நாராய் கிழித்து அம்பலப்படுத்திருந்தது. பின்னர் ஒரிஜினல் மனைவி ஜானகி சில மாதம் முதல்வரானதும், உடன்கட்டை ஜெயலலிதா பின்னர் கட்சியையும், ஆட்சி அதிகாரத்தையும் முழுமையாகக் கைப்பற்றி எம்ஜிஆர் பாணியிலேயே பாசிச சதிராட்டம் சில ஆண்டுகள் போட்டதையும், தம் காலில் சாஸ்டங்கமாக விழுந்து வணங்கும் அடிமைகளுக்கு பதவிகளை வாரி வழங்கியதை நாம் கண்டோம்.

இந்த இரண்டு சினிமா கழிசடைகளோடு தமிழ்நாட்டின் அரசியலில், சினிமா கவர்ச்சி மோகம் வழியிலான பொறுக்கி அரசியல் முற்றுப்பெறும் என்று எண்ணியிருந்த வேளையில் தான் மக்களின் ‘சாபக்கேடோ’ என்னவோ மீண்டும் எம்ஜிஆர் பாணியில் அரசியல் தற்குறி நடிகர் விஜய் புதுவித யுக்திகளின் மூலம் அவரது தந்தை சந்திரசேகர் காலம் தொட்டு அரசியலில் தடம் பதிக்க வழி வகுத்தார். அன்று ‘பெற்றால்தான் பிள்ளையா?’ என்ற படத்தில் இளம் சிறார்களை எம்ஜிஆர் அரவணைத்து ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி… இந்த நாடே இருக்குது தம்பி…’ என்று ஆடிப்பாடி மக்களை- இளசுகளைக் கவர்ந்திழுத்தது போல, எம்ஜிஆர் மறைந்த மறு ஆண்டே, 1988-ல் S.A. சந்திரசேகர் தயாரிப்பில் வெளியான ‘இது எங்கள் நீதி’ என்ற திரைப்படத்தில் தமது மிக இளவயது சிறுவனான மகன் விஜய்யை நடிக்க வைத்து, அவனை ஆரத் தழுவி ‘சின்னத் தம்பி…உன்னை நம்பி…இந்த நாடு இருக்குது தம்பி…’ என்ற பாடலைப் பாடுவது போல் நடித்திருப்பார்கள் ராம்கியும், ராதிகாவும். ஆம், அன்றே சந்திரசேகர் தமது மகனை முதலமைச்சர் ஆக்குவதற்கான விதையை (எம்ஜிஆர் மூலமாக உணர்ந்ததை)ஆழப் பதித்து விட்டார்.

பின்பு கதாநாயகனாக விஜய் உருவெடுத்ததும், எம்ஜிஆர் பாணியிலேயே கலாச்சார சீரழிவை ஏற்படுத்துவதற்கு த்ரிசா, சிம்ரன், தேவயானி, அசின், சமந்தா, காஜல் அகர்வால், ஜோதிகா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், அமலா பால், சங்கவி, ஷாலினி, ரம்யா கிருஷ்ணன், மீரா ஜாஸ்மின், ஜெனேலியா, பிரியங்கா சோப்ரா, ஸ்ரேயா சரண், அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ஹன்சிகா மோத்வானி, இலியானா, பூஜா ஹெக், ரஷ்மிகா மந்தனா போன்ற எண்ணற்ற நடிகைகளுடன் (எம்ஜிஆர் கால திரைப்படத்தை விடவும்) கேவலமான அரைகுறை ‘சிக்’ உடையணிந்து ஆட்ட பாட்டங்களில் கூத்து கும்மாளம் அடித்து குத்தாட்டம் போட்டு இளைஞர்களை சீரழிவுக் கலாச்சாரத்தில் மூழ்கடித்தார்; கிரங்கடித்தார்!

ஒருபுறம் இப்படி இளைஞர்களை காம இச்சை போதைகளுக்கு உள்ளாக்கும் கலாச்சார சீரழிவை ஏற்படுத்திக் கொண்டே, மறுபுறம் கத்தி, மெர்சல், சர்கார், பிகில், தெறி, தமிழன், சிவகாசி, கில்லி, காவலன், ஆதி, கண்ணுக்குள் நிலவு, காதலுக்கு மரியாதை, குருதி, குஷி, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, சச்சின், தலைவா, சுறா, செந்தூர்பாண்டி, செல்வா, திருப்பாச்சி, திருமலை, துப்பாக்கி, துள்ளாத மனமும் துள்ளும், தேவா, நண்பன், நாளைய தீர்ப்பு, நிலாவே வா, நினைத்தேன் வந்தாய், நெஞ்சினிலே, நேருக்கு நேர், பகவதி, பத்திரி, புலி…இவ்வாறாக எண்ணற்ற திரைப்படங்களில் ஜோடி சேர்ந்து கதாநாயகிகளுடன் ஆட்டங்கள் போட்டிருந்தாலும் இவற்றில் பெரும்பாலான படங்களில் உழைக்கும் மக்கள் நலன் சார்ந்த வசனங்களும், உழைக்கும் மக்கள் துயர் தீர்ப்பதற்கான தலைவனாக முகிழ்த்து எழுந்து நிற்கும் தலைமைத்துவம் வாய்ந்த நாயகனாகவும், அதற்கேற்ற ஒத்திசைவான பாடல்களும், வசனஙங்களும், கதாபாத்திரங்களும் மக்களை – குறிப்பாக இளைஞர்களை, விஜய்யை நோக்கி (அந்தக் கால எம்ஜிஆர் போலவே) ஈர்த்திடச் செய்தது என்பது தமிழ்நாட்டின் ‘துரதிர்ஷ்டவசம்’ என்ற சூழ்நிலைக்கு தள்ளி விட்டது.

மக்கள் குறிப்பாக இளைஞர்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்டு புதை சேற்றுக்குள் மூழ்கடிக்கப்பட்டனர். தமது தலைவனாக – நாயகனாக வரித்துக் கொள்ளப்பட்ட விஜய், திரைப்படம் ஒன்றுக்கு 100 கோடி முதல் 300 கோடி வரை சம்பாதித்து பல்லாயிரம் கோடி அசையும் மற்ற அசையா சொத்துக்களை உள்நாட்டிலும்,  வெளிநாட்டிலும் குவித்து வைத்துக் கொண்டுள்ளவை எல்லாம் ரசிக மனோபாவம் கொண்ட இருபால் இளைஞர்களின் கண்களை மறைத்து விட்டன. அதனால் தான் விஜய் சுற்றுப்பயணம் செய்கின்ற பொழுது அவரது ‘கெத்’தைக் காண்பிப்பதற்காக மிக காலதாமதமாக வருவதும், அவரை எப்பாடு பட்டேனும் பார்ப்பதற்காக 7 மணி நேரம் 8 மணி நேரம் மக்கள் காத்துக் கிடப்பதற்கும், கரூரில் 41 பேர் உயிரிழக்கவும் தயாராக இருந்ததைப் பார்த்து நொந்தோம்! இந்த கரூர் சம்பவத்தில் அன்றைய முதல்வர் ஸ்டாலின் மாபெரும் தவறு ஒன்றிணைச் செய்தார். முக்கியக் குற்றவாளிகளான, விஜய், ஆதவ், புஸ்ஸி உட்பட சம்மந்தப்பட்ட கூட்ட ஏற்பட்டாளர்கள் அனைவரையும் கரூரை விட்டு தப்பிக்க விடாமல் காவல்துறை கொண்டு கைது செய்து சிறையில் தள்ளி இருக்க வேண்டும். அனைவர் மீதும் பெரும் குற்றம் புரிந்தமைக்கான FIR பதிவு செய்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் பெருத்தன்மையாக ஸ்டாலின் விட்டதன் விளைவு இன்று ரூட் மாஃபியா, விர்ச்சுவல் வாரியர் இன்னபிற தொழில் நுட்பங்கள், காவிக் கும்பலின் அரவணைப்புகள் மூலம் ஆட்சி அதிகாரத்தை அபகரிக்க செய்துள்ளது. ஆட்சியில் இருந்தவர்கள் மீதும் காவல்துறை மீதும் விஜய் கும்பல் குற்றத்தை திசை திருப்பி விட வாய்ப்பு அளித்து விட்டார் ஸ்டாலின்.

மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் எதுவும் விஜய்க்கு தெரியாது. ‘நான் மன்னர் பரம்பரை அல்ல; சாதாரண உதவி இயக்குனரின் மகனாகப் பிறந்து இந்த அளவிற்கு உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறேன்; எனக்கு ஏழ்மையைப் பற்றி தெரியும்…’ என்றெல்லாம் (ஏதோ வறுமையின் உச்சத்தை அனுபவித்தவர் போல்) பதவி ஏற்பு நிகழ்ச்சியில் வெற்று ஜம்பம் அடித்துக் கொண்டாலும்(ஆனால் பெருந்திரள் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் கார்ப்பரேஷன் பள்ளிகளிலும் அரசுப் பள்ளிகளிலும் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் – உண்மையில் சென்னை மிக முக்கிய ஆங்கில வழி தனியார் பள்ளியிலேயே பெரும் பணம் செலுத்தி படிக்கும் வாய்ப்பினைப் பெற்றோர் மூலம் பெற்றிருந்தார் விஜய் என்பதை லாவகமாக மறைக்கிறார் விஜய்) மக்களின் வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, சாதி மத கலவரங்கள், மொழிக் கொள்கை, கார்ப்பரேட்-காவிப் பாசிசம், தொழிலாளர் விவசாயிகள் பிரச்சனைகள் இவை எது பற்றியும் தெரியாது. இவற்றுக்கான தீர்வுகளும் தெரியாது. கட்சியின் விக்கிரவாண்டி முதல் மாநாட்டிலேயே, ‘அவுங்க(பாஜக)பாசிசம்னா, நீங்க (திமுக) என்ன பாயாசமா’ என்று பெரும் கைதட்டலுக்கு இடையில் தமது தற்குறி அரசியல் கோமாளித்தனத்தை காண்பித்துக் கொண்டவர் அல்லவா விஜய். எம்ஜிஆர் பாணியில் இவர்களது கொள்கை தலைவர்களாக அறிவித்துக் கொள்வது வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், தந்தை பெரியார், காமராஜர், அண்ணா… இவர்கள்தான்! ஆனால் இவர்களது கொள்கைகளில் ஒன்றைக் கூட எவராது எழுதிக் கொடுக்காமல் சுயமாக சொல்லத் தெரியாது. மாறாக அவர்களது கொள்கைகளுக்கு புறம்பான செயற்பாடுகளையே மிகுதியாகக் கொண்டு உள்ளார். செயல்படுத்துகிறார். மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் எதற்காகவும் இவர் வீதியில் இறங்கி போராடியவரோ, சிறைப்பட்டவரோ, தியாகம் புரிந்தவரோ இல்லை. இல்லவே இல்லை. ஒரே தகுதி எம்ஜிஆரைப் போல சினிமா மோகம் மூலமாக கிடைத்த செல்வாக்கை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தற்குறி பொறுக்கி  அரசியலை அறுவடையை செய்து கொண்டுள்ளார். முழுக்க முழுக்க எம்ஜிஆர் பாணியை பெரும் பகுதி அம்சங்களில் அப்படியே கடைப்பிடித்து உள்ளார். ஆதவ் அர்ஜுன் மற்றும் அவரது மாமனார் மார்ட்டின் மாமியார் லிமோரோஸ் லாட்டரி மாஃபியா கும்பலின் அரவணைப்பிலும், ஒட்டு மொத்தமாக மோடி அமித்ஷா கையடக்கத்திலும் விஜய்யின் ஆட்சி சிக்கிக் கொண்டுள்ளது. ‘குரங்கு கையில் பூமாலை’ போல் தமிழ்நாடு சகல வழிகளிலும் அல்லாடப் போகிறது. ‘தீய சக்தி’யை வீழ்த்திவிட்டு ‘தூய சக்தி’ பதவியேற்றுள்ளது.

‘தூய சக்தி’, மக்களை சகல வழிகளிலும் 15 நாட்களிலேயே திண்டாட்டத்திற்குள் உள்ளாக்கி விட்டிருக்கிறது. இந்த லட்சணத்தில் தற்போது ‘தளபதி’ என்ற ஒற்றை பட்டத்தை மட்டும் சுமக்கும் விஜய்க்கு, பதவியை விட்டு இறங்குவதற்குள் எம்ஜிஆரைப் போல எத்தனை எத்தனை ‘பட்டங்கள்’ தலையில் சுமத்தப்பட போகின்றன என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்!

பாலியல் வன்கொடுமைகளுக்குத் தீர்வுதான் என்ன?

நிலவுகின்ற சமூக அமைப்பு சொத்துடைமை குவிந்து கிடக்கின்ற சுரண்டல் அமைப்பாகும். இந்த சுரண்டல் அமைப்பு, தாம் மட்டும் அல்லாது சாதாரண மக்களையும் பல்வேறு விதமான நுகர்வு கலாச்சாரங்களில் நுழைத்து கடனாளிகளாக ஆக்கிக் கொண்டு விட்டது. விரல் விட்டு எண்ணக்கூடிய பெரும் முதலாளிகள் சகல வழிகளிலும் கொள்ளை லாபம் ஈட்டுவதில் முனைந்து நிற்கிறார்கள். முதலாளித்துவக் கட்சிகள் அனைத்தும் அவர்களுக்கு காவலர்களாகவும், பாதுகாவலர்களாகவும், கமிஷன் அடிப்பவர்களாகவும் துணை நிற்கிறார்கள்.

ஏழை எளிய நடுத்தர மக்கள் தான் அனைத்து வகைகளிலும் சொல்லொண்ணாத் துயரங்களில் மாட்டிக்கொண்டு விழி பிதுங்குகிறார்கள். இம்மக்கள் எந்த வகைகளிலும் தமது பிரச்சனைகளுக்கான சரியான தீர்வை நோக்கிய அறிவை – விஞ்ஞானத்தை – கல்வியை பெற்றுவிடக் கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருந்து கண்காணிக்கிறார்கள் – தடுக்கிறார்கள் இந்தச் சுரண்டும் கூட்டம்.

அதனால் தான் உழைக்கும் மக்கள் போதைக்கு அடிமையாகுவதிலோ, சாதி –  மதவெறி கலவரங்களில் ஈடுபட்டு இரத்தம் சிந்துவதிலோ, மூடநம்பிக்கைகளில் மூழ்கடிக்கும் ஆன்மீகப் போதையில் அடிமையாகிக் கிடப்பதிலோ தூண்டுதலாக இருந்து காரியம் ஆற்றுகிறார்கள். இப்படிப்பட்ட செயல்களுக்கு சுரண்டுவோர் பெருந்தொகைகளையும் நன்கொடையாக அள்ளி வீசுகிறார்கள். ஏனெனில் எதிரிகளான சுரண்டும் கூட்டம் பக்கம் உழைக்கும் மக்கள் பார்வை திரும்பி விடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்து கண்காணிக் கிறார்கள். அதனுடன் தான் இப்படிப்பட்ட பெண்கள் மீதான பாலியல் வக்கிரங்களில் இளைஞர்கள் சீரழிவதும் கூட ஆளும் வர்க்கப் பார்வையில் ‘சிறந்ததொரு’ நுகர்வுக் கலாச்சாரமாக மாறிவிட்டது; ஆம், மாற்றிவிட்டார்கள்! அப்படியெனில் பாலியல் வன்புணர்ச்சிக்கும் கூட இக்கேடுகெட்ட சமூக அமைப்பும் காரணமாகி விடுகிறது. எனவே நிலவுகின்ற கார்ப்பரேட் காவிப் பாசிச கும்பலை வீழ்த்தி மக்கள் ஜனநாயகக் கூட்டரசை உருவாக்கிட முனையும் பொழுது தான் இப்பிரச்சனைக்கும் ஓரளவேனும் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

அதுவரை கல்வி நிலையங்கள் அனைத்திலும் ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை பாலியல் தொடர்பான அறிவார்ந்த பாடத்திட்டங்கள் சேர்க்கப்படல் வேண்டும். இளம் பிஞ்சுகள் முதல் இளைஞர்கள் வரை வெளிப்படையான அறிவுபூர்வமான பாலியல் தொடர்பான பாடங்கள் கற்பிக்கப்படல் வேண்டும். மூடநம்பிக்கைகளை தகர்க்கவும், பெண்கள் பாதுகாப்பைப் போற்றவுமான கல்வி அறிவை மாணவப் பருவத்திலேயே விருப்பத்துடன் கற்க வழிவகை செய்ய வேண்டும். பரந்து விரிந்த பார்வையிலான சமூகக் கண்ணோட்டத்தை போதனை செய்ய வேண்டும். போதைக்கு அடிமையாதலில் இருந்து விடுபட அனைவரையும் பயிற்றுவிக்க வேண்டும். பொதுவான மக்கள் மத்தியிலும் கூட இதற்கான பிரச்சாரங்கள் பல்வேறு வடிவங்களில் விரிந்து எடுத்துச் செல்லப்படல் வேண்டும். பெண்கள் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்படல் வேண்டும். வெற்று டாம்பீகமாக அறிவித்துக் கொள்ளும் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற போலித் தனங்களை கைவிட்டு நிஜத்தில் அனைத்து வித மக்கள் விரோத கொடுமைகள் எங்கும் நிகழா வண்ணம் பாதுகாக்க வேண்டும்.

புரட்சிகர கண்ணோட்டம் உடைய அமைப்புகள் இந்த அரசு பற்றியும், அரசாங்கம் பற்றியும் தெளிவான உண்மை வரையறைகளை மக்களிடத்தில் பரப்புரை செய்து கூலிக்கு மாரடிக்கும் காவல்துறை உட்பட அதிகார வர்க்கக் கூட்டத்தால் பெண்கள் பாதுகாப்பும் இன்ன பிற மக்கள் நலன் சார்ந்த தேவைகளும் பூர்த்தி அடையாது; மாறாக மக்கள் நலச் சேவகர்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக்கம் பெறுவதன் மூலமே மக்கள் அனைவருக்குமான பாதுகாப்பையும் உருவாக்கித் தர முடியும் என்பதைக் கற்றுத் தர வேண்டும். அதன் மூலம் மட்டுமே குறைந்தபட்சம் பாலியல் வன்புணர்வு குற்றச்செயல்களை ஓரளவாவது குறைத்திட முடியும்.

“…பெண்ணுக்குப்
     பேச்சுரிமை
     வேண்டாமென்
     கின்றீரோ?
     மண்ணுக்குக்
     கேடாய் மதித்தீரோ
     பெண்ணினத்தை?

     பெண்ணடிமை
     தீருமட்டும்
     பேசுந் திருநாட்டு
     மண்ணடிமை தீர்தல்
     முயற் கொம்பே!

     அஞ்சுவதும்,
     நாணுவதும்
     ஆமையைப் போல்
     வாழ்வதும்
     கெஞ்சுவது மாகக்
     கிடக்கும்
     மகளிர்குலம்
     மானிடர்
     கூட்டத்தில்
     வலிவற்ற
     ஓர்பகுதி

     ஊமைஎன்று
     பெண்ணை
     உரைக்குமட்டும்
     ஆமை
     நிலைமைதான்
     ஆடவர்க்
     கும்உண்டு…”

மேற்கண்ட புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் கவிதை வரிகளில் மட்டுமல்ல; பெண்களுக்கு கல்வி, பேச்சுரிமை மற்றும் சம உரிமை என எண்ணற்ற கவிதை வரிகளை அன்றைக்கே பெண்களுக்காகவே சமைத்துச் சென்று விட்டார். ஆனாலும் தமிழ் போற்றும் நல் உலகில் பெண்களுக்கு எதிரான கொடிய பாலியல் வன்புணர்வுகளும், கொலைகளும் தொடர்வதை இனியும் நாம் அனுமதிக்கலாமா? உறுதியாகக் கூடாது!

ஆனால் இத்தகைய உயரிய நோக்கங்களைக் கொண்ட செயற்பாடுகளை –  தீர்வுகளை, விட்டேத்திளாக – ரவுடி மற்றும் லும்பன் கும்பலாக தறி கெட்டு அலையும் நடிகர் விஜய் தலைமையிலான தவெக-விடம் எதிர்பார்க்க முடியுமோ? உறுதியாக முடியாது! எனவே அப்பணிகளையும் செய்திட உயரிய சமூக அக்கறை கொண்ட முற்போக்காளர்களால் மட்டுமே முடியும். ஆம், அவற்றை செய்து முடிப்போம்! அதற்கான பரந்து விரிந்த ஐக்கிய முன்னணியை கட்டி அமைப்போம்!

எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here