“இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி இருக்கிறது என்பானும் இருக்கின்றானே
மருட்டுகின்ற பொய்க்கதைகள்
மேல்கீழ் என்று வகுத்ததுவே பார்ப்பனியம் மறந்தா போனோம்?
விரட்டுகின்ற கூட்டமடா வெள்ளைக் கூட்டம்;
வீழ்ந்துபட்ட கூட்டமாகத் தமிழர் கூட்டம்!
மிரட்டுகின்ற வெறிச்சாதிச் செயலால் –
இன்று வேறுபட்டோம்; பலவாராய் சிதைந்தே போனோம்!
உடன்பிறந்த பிறப்புகளைப் பகைத்தோம்!
நாமோ ஒரு சாதிக்குள்ளேயே சிறுத்துப் போனோம்!
தடம்மாறித் தற்குறியாய் ஆனோம்! வீணில்
தறி கெட்டு வேற்றுமையால் உயர்விழந்தோம்!
விடம்போன்ற பார்ப்பனரின் புளுகுக் கூற்றை
விருப்பமுடன் மதி கெட்டு ஏற்றுக் கொண்டோம்!
தடந்தோளர் தமிழர் நாம் என்றோ வீழ்ந்தோம்;
தாய்மொழியை உதறிவிட்டு நோயிற் சாய்ந்தோம்!
இளைப்பாற அமர்ந்தால்நம் நிழலும் தீட்டாம்;
இக்கொடுமை அவர்க்கெதுவும் இல்லை பாரீர்!
இளக்காரம் ஏன் என்றே எதிர்த்துக் கேட்டால்
எலும்புடைப்பர் நம் உடலைத் துண்டாய்ச் செய்வர்!
விளைக்கின்ற பயிர்மொத்தம் அவர்கள் வீட்டின் விருந்திற்கு; நம்முடைய உழைப்பும் வேண்டும்;
சளைக்காமல் உழைத்தாலும் சாமி கோயில் சாகும் வரை நுழைவதற்கு வழியே இல்லை!
பீடுடுபெறத் திருக்குறளைக் கற்றுத் தேர்வோம்; பீடையெனும் சாதிபேத நார்கிழிப்போம்!
கேடற்ற நீதிநெறி தமிழில் உண்டு; கீழான சாத்திரத்தை எரிப்போம் இன்று!
பாடற்ற தயங்காத தமிழர் மாண்பு
படிக்கட்டும் செம்மணியைத் தலையின் மீதில்
மேடுற்ற ஒரு சிலரின் கொள்ளை வாழ்வு
வீழட்டும் இனி வேண்டாம் ஏற்றத்தாழ்வு!”
– என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (29-04-1891—21-04-1964) அவர்கள் சாதி தீண்டாமை குறித்து-மனித இனத்திற் கிடையிலான ஏற்றத்தாழ்வுகள் குறித்து – சனாதன பார்ப்பனியம் குறித்து அக்காலத்திலேயே தமிழ் மக்களைத் தட்டி எழுப்பி உறைக்கும்படி உரத்துக் கூறிச் சென்றார்.
பெரியார் பிறந்த மண்…தமிழ் மண்…எனப் பீற்றிக் கொள்கிறோம்! ஆனால் வடநாட்டைப் போலவே தமிழ்நாட்டிலும் – எந்த கட்சி ஆட்சி புரிந்தாலும் ஆதிக்க சாதி வெறி கொழுப்புக் கொடுஞ் செயல்களும், ஆணவப் படுகொலைக் கொடூரங்களும் நின்ற பாடில்லை! தொடர்ந்து அரங்கேறிய வண்ணமே உள்ளன! இதைத்தான் ‘ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை’ என ஏற்கனவே வரையறுத்துக் கூறினோம். சாதித் தீண்டாமை கொடுமைகளுக்கு ஆணிவேர் சனாதன பார்ப்பனியம் தான் என்பது சரியே! எனினும், ஆணவப் படுகொலைகளில் ஈடுபடும் ஆதிக்க சாதி வெறி கூட்டம் 4 வர்ணத்தில் 4-வது வர்ணமான சூத்திர சமூகத்தினரேயாவர். மூலவர்களான – ஆணவப் படுகொலைகளை வேடிக்கை பார்க்கும் கூட்டமாக பார்ப்பனீயம் தப்பித்துப் பிழைக்கிறது. ஆதிக்க சாதி வெறியர்களோ தமக்கு எதிரிகள் யார் என்பதனை உணர்ந்து அவர்களுக்கு எதிராகப் போரிடுவதற்குப் பதிலாக எவருடன் ஒற்றுமைப்படல் வேண்டுமோ, அவர்களையே நாயினும் கேடாய் மதித்து வெறுத்தொதுக்கித் தம்மை மேம்பட்டவர்களாகத் தலைப்பாகைக் கட்டிக் கொண்டு, இப்படிப்பட்ட ஆணவப் படுகொலைகள் எனும் ஈனச் செயல்களில் ஈடுபட்டு மிருகங்களை விடவும் கேடானவர்களாய் மதி இழந்து நிற்கிறார்கள்! இவர்கள் என்றுதான் திருந்துவார்கள்? அல்லது நாம் அவர்களை என்றுதான் திருத்தப் போகிறோம்? அல்லது எப்படித்தான் இந்தக் கொடுஞ்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போகிறோம்? என்பதுதான் நம்முன் உள்ள கேள்விகளாக நீடிக்கின்றன. தற்போது பாருங்களேன்!
தமிழ்நாட்டில் வழக்கம் போல் கொழுந்து விட்டு எரியும் தென் மாவட்டங்களில் அண்மையில் நடந்த இரண்டு ஆணவப் படுகொலைகள்: கட்டபொம்மன், ஊமைத்துறை, வ உ சி, பாரதியார் போன்றோர் பிறந்த ஒன்றுபட்ட நெல்லை மாவட்டம் சுத்தமல்லி மேலகிராமம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் -கண்ணகி இவர்களது மகள் ராமலட்சுமி (23). மகன் முத்துகிருஷ்ணன் (21). ராமலட்சுமி தனது காதலனுடன் அடிக்கடி அலைபேசியில் பேசி வருவதை கண்ணுற்ற அவரின் தம்பி முத்துகிருஷ்ணன் சகோதரியுடன் தகராறு செய்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்து தனது ஆதிக்க சாதி வெறியை நிலைநாட்டி இருக்கிறான். போலீசார் அவனைக் கைது செய்து இருக்கிறார்கள். இது ஒரு ஆதிக்க சாதி வெறி ஆணவப் படுகொலையாகும்.
படிக்க:
♦ கவின் ஆணவப்படுகொலை குற்றவாளி கிருஷ்ணகுமாரி கைது: 10 மாத தாமதம் ஏன்?
♦ தொடரும் ஆணவப் படுகொலைகள்..! வடநாடு போல மாறுகிறதா தமிழ்நாடு..?
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் 19 வயதுடைய அபிச்செல்வி என்பவர் ஹரி பிரசாத் என்ற தாழ்த்தப்பட்ட இளைஞனை கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். அபிச்செல்வி குடும்பத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக் கிறார்கள். ஆனாலும் அபிச்செல்வி தனது காதல் உறவை நீடித்துக் கொண்டிருந்ததால் தனது தம்பி சிவஞானம் என்பவன் சகோதரியை கடும் தாக்குதல் தொடுத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்து இருக்கிறான். இதற்குத் தனது தாய் எஸ்தர் பவுலின்-னும் உடந்தையாக இருந்திருக்கிறார். இறந்த பிறகு அபிச்செல்வி தூக்கில் தொங்கி விட்டதாக கதை கட்டி பரப்பி இருக்கிறார்கள். ஆனால் காவல்துறை விசாரணையில் இது ஆணவப் படுகொலை என்ற உண்மையை அறிந்து சிவஞானத்தையும், எஸ்தர் பவுலினையும் கைது செய்து சிறையில் அடைத்திருக் கிறார்கள்.
இவ்வாறாக தமிழ்நாட்டின் கிழக்கு – மேற்கு; தெற்கு – வடக்கு எனக் குறுக்கிலும் நெடுக்கி லுமாக பரந்துபட்ட மக்கள் வெளியில் ஆணவப் படுகொலைகள் அரங்கேறிய வண்ணமாக நீடித்துக் கொண்டே இருக்கின்றன.
ஆணவப் படுகொலைகளும் – நீதிமன்றச் செயற்பாடுகளும்: நெல்லை கவின் வழக்கு -குற்றவாளி சரவணனுக்கு ஜாமின்!
அத்தி பூத்தாற் போல ஆணவப் படுகொலை இனங்களில் ஒரு சிலருக்கு நீதிமன்றங்கள் சில தண்டனைகளை வழங்குகின்றன என்பது உண்மையே! ஆனாலும் பெரும்பகுதி இனங்களில் குற்றவாளிகள் தப்புவிக்கப் படுகின்றனர்; அல்லது மிகக் குறைந்தபட்சத் தண்டனைகள் வழங்கப் படுகின்றன. எளிதாக பிணை பெற்றுச் சென்று விடுகின்றனர். தூத்துக்குடி ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மென் பொறியாளர் ச.கவின் செல்வ கணேஷ் & நெல்லை மாவட்ட ஆதிக்க சாதி வகுப்பைச் சேர்ந்த ச.சுபாசினி என்ற சித்த மருத்துவர் இருவரும் பள்ளிப் பருவக் காலம் தொட்டே மனம் ஒத்து காதலித்து வந்தனர். இச்சூழலில் அப்பெண்ணின் குடும்பத்தாரின் கூட்டுச் சதி காரணமாக செல்வ கணேஷ் ஈவிரக்கமின்றி அநியாயமாக 2025 ஜூலை 27-ல் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஆனால் ஏ1 குற்றவாளி சுர்ஜித்தைத் தவிர மற்ற மூன்று குற்றவாளிகள் மீதும் பிணையில் எளிதாக
வெளிவரத் தக்க – குற்றச் செயலில் இருந்து தப்பித்துக் கொள்ளத் தக்க ஏதுவான வகையில் காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. அதில் முக்கிய ஏ3 குற்றவாளியான அப்பெண்ணின் தாய் கிருஷ்ண குமாரி (SI), கொலை நடந்து பத்து மாதம் கடந்தபின் தான் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது உடனடியாக பிணை கோரி விண்ணப்பித்து உள்ளார். இந்நிலையில் வழக்கின் ஏ2 குற்றவாளியான சுபாசினியின் தந்தை சரவணன்(எஸ்.ஐ.)-க்கு 10 மாதம் நிறைவடைவதற்கு முன்பாகவே மதுரை நீதிமன்றம் பிணை வழங்கி உள்ளது. இவ் வழக்கில் கவின் தரப்புக்கு ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் பா.பா. மோகன் முன்பே கூறியது போல ‘ஏ1 குற்றவாளி சுர்ஜித் மீது மட்டுமே கொலை வழக்காக (இபிகோ 302 விதியில்) FIR-ல் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது; மற்ற ஏ2, ஏ3, ஏ4 மூவர் வீதம் பிணையில் வெளிவரக்கூடிய – குற்றத்திலிருந்து தப்புவிக்க ஏதுவான மிக எளிதான பிரிவுகளிலேயே காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது; காவல்துறையின் இந் நடவடிக்கை மிகவும் தவறு…’ என்பதாகத் தெரிவித்திருந்தார். இவ் வழக்கில் ஏ2, ஏ3 சுபாஷினியின் (தந்தை தாய்) காவல் துறையில் சார் ஆய்வாளர்கள் என்பதாலும் பல்வேறு மேலிடச் செல்வாக்குகளைப் பெற்றவர்கள் என்பதாலும் இவ்வித சலுகைகளை அனுபவிக்கும் வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்கள். “மக்கள் அதிகாரம்” போன்ற அமைப்புக்கள் மேற்கண்ட மூவரின் மீதும் பிணையில் வெளிவர இயலாத அளவிற்கான விதிகளின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யக்கோரி இயக்கங்கள் எடுத்தன. எனினும் சரவணன் எஸ்.ஐ. பிணையில் வெளிவந்து விட்டார்.
படிக்க:
♦ புத்தாண்டில் புதுக்கணக்கைத் துவங்கியுள்ள சாதி ஆணவப்படுகொலை!
♦ கவின் ஆணவப் படுகொலை: ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்ற வழக்கு விசாரணை!
ஆக, நீதிமன்றங்கள் கதைக்கொவ்வாத பிரச்சனைகளுக்கெல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு பணியாற்றுவதும், தீர்ப்புகள் வழங்குவதும் மிக சாதாரணமாக புழக்கமாகி விட்ட நிலையில், இப்படிக் கொடூரமான முறையில் மனித உயிர்கள் பழியிடப் படுகின்ற கொடுமையான விடயங்களில், குற்றவாளிகள் மீது மென்மையைக் கடைப்பிடிப்பது இச்சமூக அமைப்பின் ‘சாபக்கேடு’ போன்றும்…! இதே போன்ற ஒரு தொழில் முறை குற்றவாளிக்கு நீதிமன்றம் பிணை வழங்கிய பின்பு தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளியின் மிகக் கொடுமையான இழிசெயலை அண்மையில் கண்டோம். ஆக, இதுபோன்ற கொடுமைகளுக்கு மக்கள், ‘நீதி மன்றங்களை நம்பிப் பயனில்லை’ என்ற எண்ணத்தை நீதிமன்றங்களே விதைக்கின்றன என்பதே உண்மை!
ஆடி அடங்கும் இடத்திலும் சாதியக் கொடுமையா?
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பெரியகோட்டக் குப்பம் என்பது ஆதிதிராவிடர்கள் நிரம்ப வாழும் பகுதி. இவர்களுக்கென தனி மயானம் இருக்கிறது. ஆனால் அதே வானூர் வட்டத்தைச் சேர்ந்த நடுக்குப்பம் மீனவர்கள் தத்தம் படகுகளை ஆதி திராவிடர்களுக்கான மயானப் பகுதியில் நிறுத்தி வைத்துக் கொள்கிறார்கள். ஜூன் 8 அன்று ஆதி திராவிடர் கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த ஒருவர் மரணம் அடைந்து விட்ட சூழலில் அவரது உடலை அவர்களது சுடுகாட்டில் அடக்கம் செய்ய கொண்டு சென்ற பொழுது நடுக்குப்பம் மீனவர்கள் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். இதனால் சடலத்துடன் ஆதிதிராவிடர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். உடனே மீனவர்கள் கும்பலாக சேர்ந்து கொண்டு ஆதி திராவிடர்கள் குடியிருப்புக்குள் நுழைந்து தாக்கியும், வீடுகளை சேதப்படுத்தியும் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்தி இருக்கிறார்கள். ஆதிதிராவிடர்கள் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காவல்துறை மீனவர்கள் 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் வானூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற அமைதிக் கூட்டத்தில் கோட்டாட்சியர் முருகேசன் கீழ்கண்ட தகவல்களைத் தெரிவித்துள்ளார்: “மயான இடத்தில் நடுக்குப்ப மீனவர்களின் 21 பழுதடைந்த படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன; அதனை இரண்டு நாட்களில் அகற்ற வேண்டும்; மீனவர்கள் படகுகளை நிறுத்திக் கொள்ள கடற்கரையை ஒட்டிய இடம் விரைவில் தேர்வு செய்து வழங்கப்படும்; மயான இடம் ஏற்கனவே அளவீடு செய்துள்ளோம்; இந்த இடத்தில் எல்லைக் கல் நடப்படும்”. என்ற முடிவினை கோட்டாட்சியர் அறிவித்தார். இது சரியான முடிவும் கூட. ஏனெனில் கிராமப் பதிவேடுகளின்படி மீனவர்கள் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடம் சம்பந்தப்பட்ட கோட்டக்குப்பம் ஆதிதிரார்களுக்கான மயான இடமாகும்.
படிக்க:
♦ ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வைரமுத்துவின் குடும்பத்தினரை சந்தித்த மக்கள் அதிகாரம் தோழர்கள்!
மீனவர்களுக்கு படகுகள் நிறுத்துவதற்கு இடம் தேவையெனில் அரசாங்கத்திடம், அதிகாரிகளிடம் முறையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமேயொழிய ஆதிதிராவிடர்களிடம் மோதல் போக்கைக் கடைபிடிப்பது சரியாகாது.
இந்நிலையில் ஜூன் 9 காலை 9 மணி அளவில் 100க்கும் மேற்பட்ட மீனவப் பெண்கள் நடுக்குப்பம் கடற்கரையில் படகுகள் நிறுத்தப்பட்ட இடத்தில் ஒன்று திரண்டனர். பின்னர் அங்கு நின்றபடி தங்களது கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டியபடி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சமூக நீதி அமைச்சர் வன்னி அரசுக்கு எதிராகக் கோஷமிட்டனர். தகவல் கிடைத்து அங்கு வந்த கோட்டக்குப்பம் போலீசார் பெண்கள் கழுத்தில் அணிந்து இருந்த கயிற்றை பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்குப் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசு ஆதிதிராவிடர் மக்களுக்கு மட்டும் ஆதரவாக செயல்படுகிறது; எங்கள் படகுகளை அப்புறப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனப் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இவ்வளவுக்குப் பிறகும் போலீஸ் பாதுகாப்புடன் மயானத்தை அளவீடு செய்து கற்கள் நடப்பட்டன. உடனே ஆத்திரமடைந்த மீனவப் பெண்கள் நடப்பட்ட கற்களைப் பிடுங்கி கடலுக்குள் வீசினர். இருப்பினும் இறுதிக்கட்டத்தில் இடுகாடு மீட்கப்பட்டு மீண்டும் கற்கள் நடப்பட்டுள்ளன. சமூக நீதி அமைச்சரும் மீனவ அமைச்சரும் தளத்திற்கு செல்ல இருக்கிறார்களாம்…!
ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் மீனவர்கள் உழைக்கும் பிரிவினராய் இருந்தாலும் அதில் உள்ள மிகப்பெரும் பணக்காரர்கள் ஆர் எஸ் எஸ் பாஜகவால் வழிநடத்தப்படுகிறார்கள். காவிகள் உள்ளே நுழைந்து விட்டாலேயே அது ஆமை புகுந்த வீடாகும் என்பது எல்லோரும் அறிந்ததே. அந்த வகையில் இப்படிப்பட்ட சாதிய மோதல் உருவாவதற்கு சங்கிக் கூட்டமே காரணம் என்பது தெளிவாகிறது. காவிக் கும்பல் மீனவர்கள் மத்தியில் தலித்துகளுக்கு எதிரான சாதி வெறியை ஊட்டி வளர்த்து அரசியல் அறுவடை செய்கிறார்கள். மீனவர்களோ ஆதிதிராவிடர்களோ அனைவரும் உழைக்கும் வர்க்கப் பிரிவினரே. மீனவ பெண்கள் கழுத்தில் தூக்கு மாட்டிக் கொண்டு சாவது போன்ற ஒரு போராட்டத்தை முன்னெடுப்பது என்பது உழைக்கும் பிரிவினராய் இருந்து கொண்டே சக உழைக்கும் ஆதிதிராவிடர் மக்களை எதிரிகளாகப் பாவிப்பதும் அவர்களை விட தாம் உயர்ந்தவர்கள் என்ற இறுமாப்புக் கொள்வதும் இந்து சனாதன பார்ப்பனியத்தின் சாதி தீண்டாமை கொடுமைகளின் விளைவே ஆகும். இப்படிப்பட்ட சம்பவங்கள் தமிழ்நாடு உட்பட நாடு முழுமைக்கும் பரவலாக நடப்பதைக் காண முடிகிறது. உழைக்கும் மக்களின் உண்மையான எதிரிகளான கார்ப்பரேட் காவிப் பாசிஸ்ட்டுகளுக்கு எதிராக அணி திரள வேண்டிய உழைக்கும் மக்கள் சாதி ரீதியாக அணி பிரிந்து மோதக்கூடிய சூழல் தான் இன்று நாட்டின் பெரும் அவலமாகத் தென்படுகிறது.
எனவே சாதித் தீண்டாமை கொடுங்கோன்மை எந்த ரூபத்தில் வெளிப்பட்டாலும், சாதி மறுத்து காதல் கொண்டு இரு மனங்கள் ஒன்று சேர்வதை தடுத்து ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து அரங்கேறுவதை எக்காரணத்தை முன்னிட்டும் அனுமதிக்க முடியாது. இவ்வினத்தில், நீதிமன்றம் கடுமையான தனிச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும். அரசாங்கமும் அதிகார வர்க்கமும் இதில் முழுக் கவனம் செலுத்த வேண்டும். தவறிழைக்கும் ஆணவப் படுகொலை குற்றவாளிகளை – சாதி தீண்டாமையைப் பின்பற்றும் குற்றவாளிகளை பிணையில் வெளிவராத வகையிலான பிரிவுகளில் வழக்குப்பதிந்து சிறையில் தள்ளுவதோடு மிகக் கடுமையான தண்டனையை வழங்கக்கூடிய வகையில் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படல் வேண்டும். அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படல் வேண்டும். அவர்களுக்கான இட ஒதிக்கீடு ரத்து செய்யப்படல் வேண்டும். சாதித் தீண்டாமை ஒழிப்புக்கான பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு ஆரம்பக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை மாணவ மாணவியருக்கு விஞ்ஞான பூர்வமாக பாடம் புகட்டப்படல் வேண்டும். அரசாங்கமே, மாணவ மாணவியர் மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் சனாதனப் பார்ப்பனியம் – சாதி தீண்டாமைக்கு எதிரான அறிவுபூர்வமான பகுத்தறிவு பிரச்சாரத்தை முடுக்கி விட்டு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். விஜய் ப்ரோ-வின் அரசாங்கமும், நீதிமன்றங்களும், அதிகார வர்க்கமும் இக்கொருகைகளை நிறைவேற்றுவர் என நம்புவோமாக! மறுத்தால் வீதிகளில் இறங்கி போர்க்களம் காண்போமாக!
சாதி தீண்டாமைக் கண்ணோட்டத்தை துடைத்தெறிவோம்!
உழைக்கும் வர்க்கமாய் ஒன்றுபடுவோம்!
கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம்!
- எழில்மாறன்






