தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்சியைத் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் 35 சதவீத வாக்குகளைப் பெற்றும், 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 108 உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்தும் தமிழகத்தின் முதலமைச்சராக திருவாளர் விஜய் பதவி ஏற்றுள்ளார்.
தமிழகத்தின் நூற்றாண்டுகளுக்கு மேல் நிலவிவரும் திராவிடப் பாரம்பரியம் என்பதையெல்லாம் ஓரம் கட்டி வைத்துவிட்டு திடீரென்று உருவான தமிழக வெற்றிக் கழகத்தின் இத்தகைய வெற்றியானது எவ்வாறு சாத்தியமானது.
பொதுவாக அனைவரும் புரிந்து வைத்திருப்பதைப் போல திராவிட இயக்கங்களின் மீதான வெறுப்பு; அதாவது ஊழல், லஞ்சம், அதிகரித்த கிரிமினல் குற்றச் செயல்கள், இடைநிலை சாதிகளின் ஆதிக்கம்; பட்டியலின மக்கள் மீதான ஒடுக்குமுறையை வேடிக்கை பார்த்தது, போலீசு ராஜ்யத்தை நடத்தியது, அதிகார வர்க்கத்தினர் தான் விரும்பியது போல் ஆட்சியைக் கட்டுப்படுத்தியது போன்றவை மட்டும்தான் காரணம் என்று புரிந்துக் கொண்டால் அது சமூக விஞ்ஞான அரசியல் பற்றிய இயக்கவியல் பார்வைக்கு எதிரானது.
இவையெல்லாம் திமுக ஆட்சியில் தொடர்ந்து நீடித்து வந்த போதிலும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக அங்கம் வகித்த இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. இரண்டே ஆண்டுகளில் எப்படி இந்த நிலைமை மாறியது என்பதைப் பற்றி புரிந்துக் கொள்வதற்கு திடீரென்று சமூகத்தில் உருவான எழுச்சி என்றோ; சாதாரண மக்களின் அரசியல் பிரவேசம் என்றோ; ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலை உருவாக்கிய வெற்றி என்றோ புரிந்துக் கொள்வது எளிமையானது, பாமரத்தனமானது.
தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த வெற்றிக்கு பின்னால் ஒளிந்துள்ள டிஜிட்டல் மாஃபியாக்களின் மூலமாக கருத்துருவாக்கம் எவ்வாறு நடைபெற்றது என்பதைப் புரிந்துக் கொண்டால் தான் இந்த திடீர் வெற்றியின் பின்னணியையும் நாம் புரிந்துக் கொள்ள முடியும். தனது வெற்றிக்கு கைதேர்ந்த டேட்டா சயின்டிஸ்டுகள் மற்றும் பொறியாளர்கள், டெக்னீசியன்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களை சம்பளத்துக்கு வைத்து அவர்கள் மூலம் மக்களின் மூளையில், ‘டிஜிட்டல் மேனுபிளேட்’ செய்து தான் வெற்றி பெற்றுள்ளார்.
சுமார் 1,58,00,000 பேர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்துள்ளார்கள் என்பது மக்களின் செல்வாக்கு இருப்பதை காட்டுகிறது என்று புரிந்துக் கொள்வதை விட இந்த செல்வாக்கு மிகப்பெரிய டிஜிட்டல் மாயாஜாலத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனைத் தான் எலன் மஸ்க் தலைமையிலான ஊடக மற்றும் தொழில்நுட்பக் கார்ப்பரேட்டுகள் உலகம் முழுவதும் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக, ‘ரூட் மாஃபியா’ (Root mafia) என்று அழைக்கப்படும் இந்த அதிநவீன டிஜிட்டல் மோசடிகளை தான் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். இதன் மூலமாக மக்கள் மத்தியில் உள்ள ஆளும் கட்சிக்கு எதிரான வெறுப்புணர்ச்சிகளையும், இயல்பாகவே பல்வேறு கோணங்களில் உருவாக்கப்படுகின்ற எதிர்ப்புணர்வுகளையும் மீண்டும், மீண்டும் மையப்படுத்தி மக்களை ‘மூளைச்சலவை’ செய்வது என்பது தான் இதன் அடிப்படை.
தமிழக வெற்றிக் கழகத்தின் டிஜிட்டல் பிரச்சாரகராக சுமார் 34,000 வாட்ஸ் அப் குழுக்கள், நாள் ஒன்றுக்கு 150 க்கும் மேற்பட்ட வீடியோக்கள், இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் ஆகியவற்றின் மூலமாக ஒவ்வொரு வாக்காளரின் செல்ஃபோன் திரையிலும் விஜய், விஜய் என்றும் தமிழக வெற்றிக் கழகம் ஒரு மாற்று என்பதையும் ஆக்கிரமிப்பு செய்வது. ஒரு எடுத்துக்காட்டாக இன்ஸ்டாவில் வெளியாகும் விஜய்யின் ரீல்ஸ்கள் 3.7 கோடி பார்வைகளையும், 34 லட்சம் லைக்குகளையும்,1.36 லட்சம் கமெண்டுகளையும் பெறுகிறது.
இதனைத் தான் சமூக அக்கறை கொண்டவர்கள் பலரும் முன் வைக்கும் போது பேருந்து பயணங்களிலும் சரி!, வியாபாரத் தளங்களிலும் சரி! வேலை நேரம் போக மீதம் இருக்கும் நேரங்களிலும் சரி! வாட்ஸ் அப், முகநூல் பக்கம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களை திறந்தால் தொடர்ச்சியாக விஜய் பேசுவது; விஜய் திமுகவை தீய சக்தி என்று தொண்டை கிழிய கத்துவது; என்னை பழிவாங்காதீர்கள் என்று ஒப்பாரி வைப்பது; எனது பிரச்சாரத்தை தடுத்து விட்டார்கள் என்று பொய் குற்றச்சாட்டை எழுப்புவது ஆகியவை அவர்களின் அலைபேசிகளில் வந்து விழுகின்றன என்கின்றனர்.
படிக்க:
♦ கவர்ச்சி மோக – பொறுக்கி அரசியலும் நடிகர் விஜய் பதவியேற்பும்!
♦ திருவாளர் விஜய் முன்வைக்கும் மாற்று குறித்த பித்தலாட்டங்கள்!
பொதுவாக நீங்கள் கூகுள் மூலம் ஒரு விஷயத்தை தேடும்போது அதற்கு சம்பந்தமுள்ள நூற்றுக்கணக்கான விடயங்கள், அது நுகர்வுப் பொருளாக இருந்தாலும் சரி, ஒரு பொருளைப் பற்றி புரிந்து கொள்வதற்காக நீங்கள் கேட்கின்ற கேள்வியாக இருந்தாலும் சரி வந்து விழும் என்பதை கவனித்து இருப்பீர்கள்.அதாவது உங்களின் தேவை, தேர்வு ஆகியவற்றுக்கு நீங்கள் சிந்திக்கும் தன்மையை விட பல மடங்கு அதிகமாக தரவுகள், தேர்வுகள் உங்களை வந்தடையும். இதற்குப் இன்ஃபர்மேஷன் பம்பார்ட்மெண்ட் என்று பெயர். இது பற்றி டாக்டர் நிக் என்பவர் ஒரு புத்தகத்தையே எழுதியுள்ளார்.
உங்களது உணர்ச்சிகள்; ஆசைகள்; இன்பங்கள்; துன்பங்கள்; மறைமுக எண்ணங்கள்; உரையாடல்கள்; கண்ணீர் துளிகள்; மகிழ்ச்சியின் தருணங்கள் ஆகியவை அனைத்தும் அதனை நிர்வகிக்கின்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் மூலம் கண்காணிக்கப்பட்டு உங்களுக்கு ஒவ்வொரு செய்தியும், போலித் தகவல்கள் அல்லது மிகைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகள் வடிவத்தில் உங்களுக்கு நேரடியாக வந்து சேரும். இந்த தொழில்நுட்ப உத்தியை சரியாகக் கையாண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் டிஜிட்டல் தரப்பு, ரீல்ஸ் மூலம் மீண்டும், மீண்டும் விஜய்யை பரப்புவதற்கு முயற்சி செய்ததில் வெற்றியடைந்துள்ளது.
இன்றைய இளைய தலைமுறையினர் என்று அழைத்துக் கொள்ளப்படும் 20 வயதிற்கு உட்பட்டவர்கள்; அதாவது 3 வயதுக்கு மேற்பட்டு 20 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் மீடியாக்களின் மூலம் அதாவது வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் தான்.
இவர்களை கவர்கின்ற விதமாக, “நண்பா, நண்பீ, மாமா, குட்டீஸ்” என்று உறவு முறையை வைத்து மீண்டும், மீண்டும் விஜய் பேசிய உரையாடல்கள்; தேர்தலுக்கு முதல் நாள் வீட்டில் உள்ள பெரியவர்களை ஓட்டு போட சொல்லி அடம்பிடியுங்கள் என்று முன்வைத்த வக்கிரத்தனங்கள் ஆகியவை அனைத்தும் ஒன்று சேர்ந்து மூளையை ஆக்கிரமித்திருந்தது. புலனுணர்ச்சிகளுக்கும் மூளைக்கும் இடையில் புகுந்து நுட்பமாக கட்டுப்படுத்துவதுதான் தொழில்நுட்பக் கார்ப்பரேட்டுகள் செய்யும் வேலையாகும். இதனை டெக் ஜெயண்ட்டுகள் எனப்படும் நிவிடியா, ஆல்பாபெட், ஆப்பிள், மைக்ரோசாப்ட், அமேசான், மெட்டா போன்ற பிக் டெக் நிறுவனங்கள் கையாள்கின்றன.
படிக்க:
♦ நாட்டை சூறையாடிவரும் கார்ப்பரேட் பாசிச பயங்கரவாத ஆட்சி
♦ கார்ப்பரேட் ஆதரவு கொள்கையுடன் “சமூக நீதி” ஆட்சி நடத்த முடியாது!
இவையெல்லாம் பிற கார்ப்பரேட் கட்சிகளுக்கும், பிராந்திய, மாநில மற்றும் தேசிய கட்சிகளுக்கும் தெரிந்த விடயங்கள் தான் என்றாலும், இவற்றை முன் வைப்பதற்கு ஒரு கவர்ச்சி வாத முகம் தேவைப்படுகிறது என்பது தான் விஜயின் வெற்றிக்கு மற்றொரு முக்கியக் காரணம்.
எம்ஜிஆர் தமிழகத்தை ஆண்ட போது, “அவர் முகத்தை பார்ப்பதற்கே லட்சக்கணக்கானவர்கள் கூடுவதும், அவரது நிறம் தங்க நிறத்தில் உள்ளது, அவர் தங்க பஸ்பம் சாப்பிட்டு வருகிறார், தகதகவென மினுக்குகிறார்,” என்றெல்லாம் பேசிய அறிவு விடலைகள் போலத்தான் தற்போது விஜய் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது என்றெல்லாம் பேசுகின்ற நவீன அறிவு விடலைகளை உருவாக்கியுள்ளனர்.
தனது வெற்றிக்கும், தனது தோல்விக்கும் எந்த மாதிரியான முகபாவனையுடன், எந்த மாதிரியான வசனங்களை பேசுவது என்ற மாயத் தோற்றங்களைக் கொண்டு மக்களின் கைகளில் தவழுகின்ற அலைபேசியின் மூலமாக அவர்களைக் கவர்ந்திழுக்க உதவும் என்பதை அவர்கள் திட்டமிட்டு வைத்திருக்கிறார்கள். இந்த திட்டத்தின் அடிப்படையில் அடுத்தடுத்து உங்களுக்கு வந்து சேருகின்ற தகவல்கள் அனைத்தும் உண்மை என்பதைப் போல உங்களது மூளைக்கு உணர்த்திக் கொண்டிருக்கும்.
“மக்களின் உண்மையான தேவைகளை புரிந்துக் கொள்ள விடாமல், அவர்களது மனநிலையை மென்பொருள் மூலம் சிதைத்து, ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்குகளாக மாற்றுவது உண்மையான ஜனநாயகத்திற்கு எதிரானது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தாலும், விஜய் ஆதரிக்கின்ற, ஆதரிக்கப் போகின்ற நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களின் அறியாமை இந்த வீடியோக்கள் மூலமாக உண்மை உலகத்தை மறைத்து விடுகிறது. ஏற்கனவே ஜனநாயகம் என்றால் என்ன என்பதைப் புரிந்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ள அவர்கள் டிஜிட்டல் மாஃபியாக்கள் உருவாக்கும் மாய வலைக்குள் வீழ்கின்றனர்.
இதனால்தான் தமிழகத்தின் உண்மையான பிரச்சனைகளான மாநில உரிமைகள் பலியாவது; ஜிஎஸ்டி வரி பிடுங்கிக் கொள்ளப்படுவது; கவர்னர் மூலம் அதிகாரத்தை செலுத்த எத்தனிப்பது; நீட் தேர்வு மூலம் இளம் மருத்துவர்கள் உருவாவதை ஒழித்துக் கட்டுவது; தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மாநிலங்களுக்கான கல்வி உரிமைகளுக்கு சாவுமணி அடிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைப் புரிந்துக் கொள்ள விடாமல் ஒரு மாய உலகத்தை உருவாக்குகின்றார்கள்.
பொதுவாக ரீல்ஸ் மூலமும், வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் நீங்கள் பார்க்கின்ற காட்சிகள் அனைத்தும் உண்மையில் வாழ்க்கையில் எதிர் கொள்கின்ற உண்மைகளுக்கு நேர் எதிரானது என்பது மட்டுமின்றி, இவையெல்லாம் காட்சி போதை மூலமாக உருவாக்கப்படுகின்ற டிஜிட்டல் மோசடிகள் ஆகும்.
படிக்க:
♦ சினிமா டூ மாநாடு: நடிப்பில் அசத்தும் விஜய்!
♦ திரை நாயகன் விஜய் கட்சி தொடங்கியது முதல் 41 உயிர்கள் காவு கொடுத்தது வரை!
இந்தக் காட்சி போதையின் மூலம் விஜய் ஒரு மிகப்பெரும் சக்தியாகவும், ஆதர்ச நாயகனாகவும் உருவாக்கப்பட்டுள்ளார் என்பதுதான் எதார்த்தத்தில் உண்மையாகும். அவருக்கு அரசியல் தெரியாது; பொருளாதாரம் புரியாது; பண்பாட்டு நெறிமுறைகளை பற்றி கவலைப்பட மாட்டார் என்பதைப் பற்றியெல்லாம் அவரை இயக்குகின்ற தன்னார்வக் குழுக்கள்; ஏகாதிபத்திய கைக்கூலி நிறுவனங்களான டிஜிட்டல் மாஃபியாக்கள் மற்றும் கார்ப்பரேட் முதலாளிகளில் ஒரு பிரிவினர் ஆகியோர் கவலைப்படுவதில்லை.
தமிழகத்தில் எம்ஜிஆர், ஆந்திராவில் என் டி ஆர், தற்போது பவன் கல்யாண் போன்று நடிகர் என்ற அந்தஸ்துடன் அரசியலில் நுழைந்த பாசிசக் கோமாளிகள் மக்களின் அறியாமையை அப்படியே தக்க வைத்துக் கொள்வதன் மூலம் பல ஆண்டுகாலம் அரசியலில் கோலோட்சி கொண்டிருந்தார்கள் என்பதும் புரிந்துக் கொள்ள வேண்டிய உண்மை.
“மக்கள் வறுமையில் இருக்கிறார்கள். அவர்களின் வயிறு காலியாக இருக்கிறது என்று கவலைப்படாதே! அவர்களின் மூளை காலியாக இருப்பதுதான் மிகவும் ஆபத்தானது. அதில் இராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட கட்டுக்கதைகளை இட்டு நிரப்பு! அதன் மூலம் அவர்களின் வயிற்றுப் பசி, வறுமையைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள் அல்லது சிந்திக்க மாட்டார்கள்” என்று ராஜபுத்திர மன்னர்களுக்கு சாணக்கியன் அறிவுரை சொன்னது தற்போது புதிய வடிவில் அமுலாகிறது.
வறுமை, ஏழ்மை மற்றும் உண்மையான சமூக நீதி, எதிர்காலம் குறித்த கவலைகள் ஆகியவை அனைத்தையும் பின்னுக்குத் தள்ளுகின்ற அற்புதமான வேலையை மூளை என்ற கருவியை வைத்துக் கையாண்டு வருகின்ற தொழில்நுட்ப மாஃபியாக் கும்பல் தொடர்ச்சியாக விஜயின் ஆட்சிக்கும் துணை நிற்பார்கள்.
இந்த வகையில் காட்சி போதை மற்றும் கவர்ச்சி வாதம், இவை மட்டுமின்றி அரசியலற்ற அரசியல் என்ற தற்குறித்தனம் ஆகியவை அனைத்தும் இணைந்து குறிப்பிட்ட சில காலத்திற்கு தமிழகத்தின் அரசியலை ஆட்டி படைக்கப் போகிறது என்பதைப் புரிந்துக் கொள்வோம்.
இந்தியா ஒன்றிய அரசாங்க அதிகாரத்தின் மூலமாக பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஏறக்குறைய 72% மக்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாத சக்திகளை எதிர்த்து முறியடிப்பதற்கு பதிலாகத் தமிழகமும் துணை போகின்ற நிலைமையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழகம் முன்னணியில் நின்று களமாட வேண்டும் என்பதுதான், இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் திடீர் வெற்றி; கட்டமைக்கப்பட்ட வெற்றி மக்களுக்கு உணர்த்தியுள்ள உண்மையாகும்.
புதிய ஜனநாயகம்
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்
தலையங்கம் மே 2026







விஜயின் டிஜிட்டல் மோசடி பிரித்த இந்த கட்டுரை மிக சிறப்பாக உள்ளது