தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனை போட்டி நடந்ததாக ஊடகங்கள் ஓயாமல் பிரச்சாரம் செய்து கொண்டே இருந்தன. ஆனால் தற்போது அதிக இடங்களை பெற்றுள்ள அதாவது 234 தொகுதிகளில் 108 இடங்களை பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தொடர்ச்சியாக ஒரு கருத்துப் பிரச்சாரம் செய்யப்பட்டுக் கொண்டே வந்தது.
அதன்படி தமிழகத்தில் 4 முனை போட்டி எல்லாம் கிடையாது. இரண்டு முனைகளுக்கு எதிரான போட்டி தான் அது ஒன்று திமுக; மற்றொன்று தமிழக வெற்றிக் கழகம் என்று பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தை 2021 ஆம் ஆண்டு முதல் ஆண்டு வந்த திமுகவையும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினையும், தீய சக்தி என்று தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வந்தார் திருவாளர் விஜய்.
பாசிச பாஜக தனக்கு எதிராக ஆட்சி புரிகின்ற மாநிலங்களில் நேரடியாக வெற்றி பெற முடியாத போது தனது பினாமி கும்பல்களை உருவாக்கி அதன் மூலம் முதல் கட்டத்தில் அதிகாரத்தை கைப்பற்றுவது; அதற்கு அடுத்தடுத்த கட்டங்களில் அந்தக் கட்சியை உடைத்து தனக்கு சாதகமாக மாற்றுவது; படிப்படியாக தனது கட்டுப்பாட்டின் கீழ் அந்த மாநிலத்தை கொண்டு வருவது என்பது தான் நாடு முழுவதும் நடந்து கொண்டுள்ளது.
பாசிச ஆர்எஸ்எஸ் பாஜக தூய்மையான கட்சி; நேர்மையான எண்ணம் கொண்டவர்கள்; தேசபக்தர்கள் என்ற பித்தலாட்டங்கள் அனைத்தும் தேர்தலுக்கு முன்னர் அவர்கள் நடத்துகின்ற கூட்டணி பேரங்கள்; தேர்தல் முடிந்த பிறகு அவர்கள் நடத்துகின்ற குதிரை பேரங்கள் மற்றும் ஆட்சிக்கவிழ்ப்புகள் ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து அம்பலமாகி நாறிக் கொண்டுள்ளது.
1947 க்கு பிறகு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370 ஆம் பிரிவின் கீழான சிறப்பு அந்தஸ்தை ஒழித்துக் கட்டிவிட்டு மாநிலத்தை இரண்டாக பிரித்தது ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல். அப்போது இந்திய ஒன்றியத்தில் உள்துறை அமைச்சரான திருவாளர் அமித்ஷா, “தலைக்கு வைத்தியம் பார்க்கப்பட்டுவிட்டது. இனி காலுக்கு வைத்தியம் பார்க்க வேண்டியது தான் பாக்கி” என்று வெளிப்படையாக அறிவித்தார்.
இதில் தலை என்பது காஷ்மீர் என்பது அனைவருக்கும் புரிந்த விஷயம்தான். கால் என்பது தமிழ்நாட்டை தான் அவர் குறிக்கின்றார் என்பது படிப்படியாக அமலாகத் துவங்கியது.
தமிழ்நாட்டை ஆண்டு வந்த திமுகவிற்கு எதிராக பல்வேறு விதமான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது. இந்திய ஒன்றிய அரசாங்கத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து செலுத்தப்படும் வரியிலிருந்து குறிப்பிட்ட தொகை மட்டுமே திருப்பித் தரப்பட்டது என்பது துவங்கி தமிழ்நாடானது இந்திய ஒன்றியத்தின் மாநில உரிமை பறிப்புகள்; இந்தி திணிப்பு மற்றும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது போன்ற அம்சங்களில் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவிக்கிறது என்ற காரணத்திற்காகவே பல்லாயிரம் கோடி ரூபாய்களை கொடுக்காமல் நெருக்கடிக்கு உள்ளாக்கியது.
இதையெல்லாம் எதிர்கொண்டு ஐந்தாண்டு காலம் ஆட்சியை முடித்த திமுக, மீண்டும் தமிழகத்தில் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு தமிழக வெற்றிக் கழகம் களத்தில் இறக்கி விடப்பட்டது. மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சாரம் செய்வது என்ற வடிவத்தை புறந்தள்ளிவிட்டு அதனை இரண்டாம் பட்சமாகவும், விருச்சுவல் வாரியர் என்று சொல்லக்கூடிய ‘ஊடகப் போராளிகள்’ (ரசிகர்கள்) மூலமாக ஊடகங்களின் மூலம் கருத்துருவாக்கம் செய்யக்கூடிய வேலையை முன்னிலைப்படுத்தியும் திட்டமிட்டு நடத்தினார்.
படிக்க:
♦ பள்ளிச் சிறார்களை தனது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் நடிகர் விஜய்!
♦ தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் ஒரு மாற்று என்பது கலப்படமில்லாத மோசடி!
தமிழகத்தின் மூலை முடுக்குகளில் நடந்த பாலியல் வன்கொடுமைகள்; சாதி ஆதிக்க வெறியாட்டங்கள் மற்றும் போலீஸ் லாக்கப் படுகொலைகள் ஆகியவை அனைத்தும் திமுகவினால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது பிரதானமாக்கப்பட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; போலீஸ் நிலையங்களில் பாதுகாப்பு இல்லை; சார் சிஎம் சார்; என்றெல்லாம் மேடைகளில் முழங்கி வந்தது மட்டும் இன்றி விருச்சுவல் வாரியர்ஸ் மூலம் கருத்துருவாக்கத்தை மேற்கொண்டனர்.
இவ்வாறு அவர்கள் கருத்துருவாக்கம் செய்யும்போது தீய சக்திகள் என்று வர்ணிக்கப்பட்ட திமுகவுடன் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிட்ட திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடது, வலது கம்யூனிஸ்டுகள் ஆகியவர்களை தீய சக்திகள் என்று இளம் தலைமுறையினர் மத்தியில் கருத்துருவாக்கம் செய்யப்பட்டது.
அரசியலற்ற அரசியலுக்கும், காட்சி போதைக்கும், திரை போதைக்கும் அடிமையாக்கப்பட்ட இளம் தலைமுறையினரை தனது வெற்றிக்கு பயன்படுத்திக் கொண்ட தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைப்பதற்கு போதிய இடங்கள் கிடைக்கவில்லை என்றவுடன் இதுவரை பேசி வந்த, ஸ்கிரிப்ட் ரைட்டர்கள் மூலமாக எழுதிக் கொடுக்கப்பட்ட அனைத்து கருத்துகளையும் தூக்கி எறிந்து விட்டு காங்கிரஸுக்கு கடிதம் அனுப்புவதும், இடது, வலது கம்யூனிஸ்டுகளுக்கு கடிதம் அனுப்புவதும், விடுதலைச் சிறுத்தைகளுக்கு கடிதம் அனுப்புவது போன்ற செயல்கள் அனைத்தும் இவர்கள் முன்வைக்கின்ற மாற்றத்தின் யோக்கியதையை பளிச்சென்று வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.
2016 தேர்தலில், மாற்றம்- முன்னேற்றம்- அன்புமணி என்று கார்ப்பரேட் பிரச்சார ஊடகங்களின் மூலம் ரவுண்டு கட்டிய வன்னிய சாதி வெறியரான அன்புமணி பதவிக்காகவும், சீட்டு &நோட்டு பெறுவதற்காகவும், பெற்ற தகப்பனையை மிதித்து பாசிச பாஜகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்ட கடைத்தெடுத்த பிழைப்புவாதி. அவரையும் தற்போது தனக்கு ஆதரவளிப்பதற்கு அழைத்து வருவதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது.
விஜய் பிறப்பால் ஒரு கிறிஸ்தவர் என்பதால் மதச்சார்பற்ற ஆட்சி அமைக்க போகிறார் என்றும், பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மிகப்பெரும் பாதுகாப்பு ஆட்சியை நடத்தி விடுவார் என்றும், சாதி அடக்குமுறைகளுக்கு எதிராக சாட்டையை சுழற்றுவார் என்றும் அவர் மீது ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது.
முற்போக்கு பேசி வந்த பலரும், பாசிச பாஜகவின் இளைய சங்கிகளாக மாறி நீல சங்கிகளாகவும், சிவப்பு சங்கிகளாகவும் மாறி வருகின்றனர் என்பது சமூக ஊடகங்களில் அவர்கள் தெரிவிக்கின்ற கருத்துக்களில் இருந்து நாம் கண்டுகொள்ள முடிகிறது.
தமிழகத்தில் எம்ஜிஆர், ஆந்திராவில் என்டிஆர் போன்று திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்த பாசிச கோமாளியான விஜய் நல்லாட்சி தருவார் என்று மீண்டும், மீண்டும் கருத்துருவாக்கம் மேற்கொள்ளப்படுகிறது. அதிகார வர்க்கம், போலீசு உள்ளிட்ட அரசு கட்டமைப்பு எந்தவிதமான சேதாரமும் இன்றி அப்படியே நீடிக்கின்றது. கார்ப்பரேட்டுக்கு ஆதரவான பொருளாதாரக் கொள்கைகள் மீது தமிழக வெற்றிக் கழகம் எந்த விதமான கருத்தும் இல்லாமல் இருக்கின்றது. சாதிய அடக்கு முறையையும், பார்ப்பன மேலாதிக்கத்தையும் முன்வைத்து களமாடுகின்ற சனாதனத்தை பற்றி தெளிவான முடிவுகள் எதையும் அறிவிக்காமல் இருக்கின்றது.
இதனால் தான் பார்ப்பன கழிசடையான கிரிஷ் போன்ற பாடகர்கள் துவங்கி மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ள வெங்கட்ராமன் வரை இனி பார்ப்பனியம், சனாதனம் என்ற பேச்சுக்கே தமிழகத்தில் இடமில்லை என்று கொக்கரிக்கின்றனர்.
திமுகவின் மோசமான ஆட்சியை தூக்கி எறிந்து விட்டு இப்போதுதான் வந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் குறித்து உடனே விமர்சனத்தை வைக்க கூடாது; ஆறு மாதமாவது போன பிறகு தான் அதைப்பற்றி பேச வேண்டும் என்றெல்லாம் பாசிச கோமாளியை பாதுகாப்பதற்கு பல்வேறு தகிடுதத்தம் செய்து வருகின்றனர்.
ஆட்சியை அமைப்பதற்கு முன்னரே போதுமான இடங்களை பிடிப்பதற்கு ஏற்கனவே பேசி வந்த அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு பல்வேறு சமரசங்களை மேற்கொள்வதற்கு தயாராகி உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் தான் நல்லாட்சியை தரப்போவதாக அடுத்த சுற்று கருத்துருவாக்கத்தில் இறங்கியுள்ளனர்.
இதனை செய்வதில் திருவாளர் சமஸ் துவங்கி சாவித்திரி கண்ணன் உள்ளிட்ட ஊடக பிரபலங்கள் துவங்கி 4000, 5000 பேரை முகநூல் பக்கத்தில் இணைத்து வைத்துக் கொண்டு உருட்டுகின்ற அறிவு பிழைப்புவாதிகளான சிறு, சிறு கும்பல்கள், புரட்சிகர அமைப்புகளில் பணியாற்றி தாக்குபிடிக்க முடியாமல் தலை தெறிக்க ஓடியவர்கள் வரை பாசிச பாஜகவிற்கு பாதை அமைத்துக் கொடுப்பதற்கு வெவ்வேறு அலைவரிசையில் களத்தில் குதித்துள்ளனர் என்பதில் நாம் எச்சரிக்கையுடன் இருப்போம்.
◾செட்டில்டு சண்முகம்.







தவெக 108 ல் புனிதமாக போற்றப்படுகிறது.
இது பாசிச பெற்றெடுத்த குழந்தைதான் என்பதை நாம் பேசுகிறோம்.
ஆனால் எல்லோரும் குறிப்பாக அறிவுஜீவிகள் பாசிச எதிர்ப்பு போராளி என சமரச படுத்துகிறார்கள்.
நம்மை போன்ற புரட்சிகர இயக்கம் தான் உறுதியாக விஜய் பாசிஸ்டுகள் உருவாக்கிய நபர் என ஆணித்தரமாக தையிரியமாக பேசுகிறோம்.
பேசுவோம் ,மேலும் பேசுவோம் இவர்கள் பாசிஸ்டுகளின் கைகூலிதான் என்பதை மக்களிடம் உரக்கச் அம்பலபடுத்துவோம்.