இந்தியாவின் நீதித்துறை மற்றும் ஆளும் வர்க்கத்தின் மேட்டுக்குடி மனப்பான்மைக்கு எதிராக, வேலையில்லாத இளைஞர்கள் ஒரு மாபெரும் டிஜிட்டல் புரட்சியை முன்னெடுத்துள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், வேலையில்லாத இளைஞர்களை “கரப்பான்பூச்சிகள்” மற்றும் “ஒட்டுண்ணிகள்” என்று வர்ணித்த அவமதிப்பிலிருந்து பிறந்த ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (CJP), இன்று ஆளும் வர்க்கத்தின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது.
தலைமை நீதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மகாராஷ்டிராவை சேர்ந்த (தற்போது அமெரிக்காவில் இருக்கும்) 30 வயதான அபிஜீத் திப்கே என்பவர், பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கான தளம் என்று கூறி, ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP) என்ற பெயரில் இணையவழி நையாண்டிக் கட்சியைத் தொடங்கினார். மீம் அடிப்படையிலான நகைச்சுவையாகத் தொடங்கப்பட்ட இக்கட்சி, தற்போது வேலை வாய்ப்பின்மை மற்றும் நுழைவுத் தேர்வு முறைகேடுகளால் விரக்தியடைந்துள்ள இந்திய இளைஞர்களின் மிகப்பெரிய குரலாக உருவெடுத்து உள்ளது
அவமானமே ஆயுதம்: கரப்பான்பூச்சிகளின் அரசியல்
அதிகார வர்க்கத்தால் அருவருப்பானவையாகவும், ஒடுக்கப்பட வேண்டியவையாகவும் கருதப்படும் கரப்பான்பூச்சிகளைத் தங்களின் அடையாளமாக இளைஞர்கள் ஏற்றுக்கொண்டது குறியீட்டு அரசியலாகும். அழுகிய அமைப்பில், மிக மோசமான சூழலிலும் உயிர்வாழும் மற்றும் எதற்கும் பணியாத கரப்பான்பூச்சிகளின் குணமே, இன்றைய இந்திய இளைஞர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது. வெறும் ஐந்து நாட்களில் 1.5 கோடிக்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களைப் பெற்று, ஆளும் பாஜகவின் எண்ணிக்கையையே இக்கட்சி மிஞ்சியுள்ளது.
வேலையில்லா திண்டாட்டமும் கார்ப்பரேட் சுரண்டலும்
இந்தியாவின் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே வேலையில்லா திண்டாட்டம் 9.9% ஆக உள்ளது; நகர்ப்புறங்களில் இது 13.6% என்ற கவலைக்குரிய நிலையில் உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்காக உழைப்புச் சந்தை சீர்குலைக்கப்படுவதும், கல்வித் தகுதி இருந்தும் நிலையற்ற எதிர்காலமும் இளைஞர்களை விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளன. NEET தேர்வுத்தாள் கசிவு போன்ற ஊழல்கள், தகுதியுள்ள ஏழை இளைஞர்களின் வாய்ப்புகளை கார்ப்பரேட் மயமாக்கப்பட்ட கல்வி முறை எப்படிப் பறிக்கிறது என்பதற்குச் சான்றாகும். இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவே “தொழில்முறைப் புலம்பல்” (rant professionally) என்ற கிண்டலான முழக்கத்துடன் இளைஞர்கள் திரண்டுள்ளனர்.
அரசின் அச்சமும் நசுக்கப்படும் குரல்களும்
எளிய இளைஞர்களின் இந்த கிண்டல் கலந்த எதிர்ப்பு, மோடி அரசை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் (national security concerns) என்ற பெயரில், உளவுத்துறையின் (IB) பரிந்துரையின்படி CJP-யின் ‘X’ தளம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருப்பதும், அதன் நிறுவனர் அபிஜீத் டிப்கே-வுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதும், ஒரு மெய்நிகர் (virtual) இயக்கத்தைக் கண்டு அரசு எவ்வளவு அஞ்சுகிறது என்பதைக் காட்டுகிறது.
படிக்க:
♦ வேலையில்லா இளைஞர்களை இழிவுப்படுத்தும் நீதித்துறையின் அதிகாரத் திமிர்!
♦ அதிகரிக்கும் வேலையின்மை; அதிகரிக்கப்போகும் சமூக குற்றங்கள்!
கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியை மிரட்டும் விதமாக சங்பரிவார்கும்பல் செய்யும் குரங்கு வித்தைகள் சமூக வலைதளங்களில் கேலிப் பொருளாகியுள்ளது. சமூக வலைதளத்தை ஆக்கிரமித்திருக்கும் கரப்பான் பூச்சிகள் பாஜகவையும் ஆர்எஸ்எஸ்-யும் மீம்கள் மூலமாகவும் AI வீடியோக்கள் மூலமாகவும் அடித்து துவைத்து வருகிறார்கள். இதை எதிர்கொள்ள முடியாமல் திணறிவரும் இணைய சங்கிப்படை கர்ப்பான் பூச்சிகளை பாட்டிலில் அடைத்து கொல்வதை போன்ற காணொளிகளை பரப்பி வருவதும், சமாளிக்க முடியாமல் பாகிஸ்தானை சேர்ந்தவர்களே கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டியில் இணைந்துள்ளதாக தேசிய வெறியை உருவாக்கியும் வருகிறார்கள்.
இது ஒரு ஆரம்பமே
இந்த இயக்கம் வெறும் இணையதள நையாண்டி மட்டுமல்ல; இது ஒடுக்கப்பட்டவர்களின், பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்தக் குரல். அழுகிய நிலையில் உள்ள இந்த அமைப்பைச் சுத்தம் செய்ய கரப்பான்பூச்சிகள் கிளம்பிவிட்டன. வட இந்தியர்களிடையே பரபரப்பாகியுள்ள இவ்வியக்கம் இந்தியா முழுவதும் வேலையில்லாத இளைஞர்களை இணைத்துக் கொண்டு நாட்டை சூறையாடும் கார்ப்பரேட் – காவி பாசிச கும்பலுக்கு எதிரான மிகப்பெரும் மாற்று அரசியல் இயக்கமாக பரிணமிக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்.
அதிகாரத்தின் அடக்குமுறைகள் எத்தகையதாக இருந்தாலும், எதற்கும் மசியாத இந்த ‘கரப்பான்பூச்சிக் கூட்டம்’ ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான விதையைத் தூவியுள்ளது.
- நலன்








‘கரப்பான் பூச்சிகள் ஜனதா பார்ட்டி’ உருவாக்கம் பெறுவதற்கு மூல காரணமான உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக் செய்து முடக்கியுள்ள பாசிச பாஜக காவி(லி)க் கும்பலுக்கு கோடானு கோடி நன்றிகளை உரித்தாக்குவோம்! இது ஒரு நல்ல நகர்வு!
கட்டுரையாளர் தக்க தருணத்தில் சுருக்கமாகவேனும் அம்பலப்படுத்தி ஏதோ ஒரு வகையில் ‘கரப்பான் பூச்சி’க்கு
கை கொடுக்க முனைந்தமைக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!
இந்த ‘கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி’யின் பணிகள் தமிழ்நாட்டின் ‘விர்ச்சுவல் வாரியர்ஸ்’, ‘ரூட் மாஃபியா’க்களையும்… சார்ந்து நிற்கும் தவெக தற்குறி அரசியல் அமைப்பையும் இல்லாதொழிக்கும் சூழலும் உருவாகியேதீரும் என நம்புவோமாக!
இந்தியாவின் கரப்பான் பூச்சிகள் !அதிகார வர்க்கத்தை நடுங்க வைத்தது எப்படி ?
உச்சநீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் வேலையில்லா இளைஞர்கள் கரப்பான் பூச்சிகளைப் போல ஒட்டுண்ணி கூட்டம் என்று கேலி கிண்டல் செய்தார்
அபிஜித் தீப்கோ இளைஞர் உச்ச நீதிமன்ற நீதிபதியின் கிண்டல் கேளிக்கை கரப்பான் பூச்சி பெயரில் இணையதளத்தை உருவாக்கி கொடிக்கணக்கான பாலோவர்ஸ் ஈர்த்தார் பாஜக பாலோவர்ஸ் விட பல மடங்கு பார்வையாளர்களை கவர்ந்தார் இதனால் இந்திய அரசியலில் சி ஜே பி என்ற ஒரு கட்சி தொடங்கி மாணவர்களை நினைப்பதற்கான வேலைகளை முன்னெடுத்தார் இதனால் வேலையில்லா பட்டதாரிகள் அதிக அளவில் மீம்ஸ் களையும் ரீல்ஸ்களையும் போட்டு பரப்பிக் கொண்டு இருந்தனர் இதனால் அச்சமடைந்த மோடி வாழும் வர்க்கம் வீதி அடைந்து அவருடைய தளத்தை முடக்கியது அவரை கொலை மிரட்டலும் விடுத்துள்ளது
இணையதளத்தில் கரப்பான் பூச்சி கட்சி என்றவுடன் வீதி அடைந்த ஆளும் வர்க்கம் இரவில் தூக்கத்தை தொலைந்து நடுங்கி கொண்டு இருக்கிறார்கள் என்பதை இந்த கட்டுரை உணர்த்துகிறது
நிஜத்தில் காக்ரோச் கட்சி இளைஞர்களை ஒட்டுமொத்தமாக திரட்டினால் மோடியின் ஆட்சி கேள்விக்குறியாகும் அபிஜித் தீப்கோவின் முயற்சி பாராட்டுக்குரியது
கட்டுரை ஆசிரியர்
நலன்
அவர்களுக்கு நன்றி