
நான் வசிப்பது திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியாகும். இது திருநின்றவூர் வடக்கு மின் எல்கைக்கு உட்பட்டதாகும். இப்பகுதி அனைத்தும் சென்னை பெருந்திட்ட வளர்ச்சி முகமை (CMDA)யில் அடங்கியவையாகும். இதில் குறிப்பாக நத்தமேடு, பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட நகர்ப் பகுதிகள் அடங்கியனவாகும். குறிப்பாக Dr.பிரகாசம் நகர், சம்பந்தம் நகர், சீனிவாசா நகர், ஸ்ரீபதி நகர், குமரன் நகர் உட்பட பற்பல நகர் பகுதிகள் அடங்கியுள்ளன.
இப்பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக மின்வெட்டு அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் இருக்கும். மக்கள் நிம்மதியாக தூங்க முடிவதில்லை. வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், பணியாளர்கள் மிகுந்த துன்பங்களை அடைந்தார்கள். இதில் பெரிய வேடிக்கை நத்தமேடு ஊராட்சிக்குட்பட்ட குமரன் நகர் பகுதியில் ஒரு வீதியில் நான் வசிக்கும் வீடு உட்பட 5 வீடுகள் மட்டுமே நத்தமேடு ஊராட்சியில் மின்வெட்டால் பாதிக்கப்படும். ஏனெனில் அவை பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட மின் கம்பத்திலிருந்து இந்த வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. குமரன் நகரின் ஏனைய வீடுகளுக்கு 98 விழுக்காடுகள் மின்வெட்டு இருப்பதில்லை. அதற்கான உண்மைக் காரணத்தை மின்வாரியம் தான் விளக்க வேண்டும். மேற்கண்ட 5 வீடுகளுடன் ஏனைய பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட மேற்கண்ட நகர் பகுதி வீடுகள் அனைத்தும் மின்வெட்டினால் தொடர்ந்து பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகும். இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு பல ஆண்டுகளாகப் புகார் விண்ணப்பம் அளித்த வண்ணம் இருந்தோம். நிரந்தர தீர்வினை ஏற்படுத்தக் கோரிக் கொண்டே இருந்தோம். ஆனாலும் குறைபாடுகள் தீர்ந்த பாடில்லை.
எனது கடிதமும் மின்வாரியம் அளித்த வேடிக்கை நிறைந்த பதிலும் காணீர்!
அதன் ஒரு கட்டமாக, நான் கடந்த 09-06-2026 அன்று, இப்பகுதியில் மேற்கண்ட நகர்களில் அடிக்கடி நிகழும் மின் வெட்டினால் மக்கள் படும் துயரங்களை எடுத்து விளக்கியும், நிரந்தர தீர்வை ஏற்படுத்த வலியுறுத்தியும் மின்வாரிய அதிகாரிகளுக்கும், சம்பந்தப்பட்ட மின்வாரிய அமைச்சருக்கும் கடிதம் ஒன்றை அனுப்பினேன்.
அதற்கு 11-06-2026 அன்று திருநின்றவூர் வடக்கு எல்லைப் பகுதிக்கான மின்வாரிய உதவிப் பொறியாளரிடமிருந்து அவரது வாட்ஸ்அப் (whatsapp) பக்கத்திலிருந்து ஒரு கடிதம் எனக்கு அனுப்பப்பட்டிருந்தது. அந்தக் கடிதம் என்பது எனக்கு உதவிப் பொறியாளரால் நேரடியாக விளித்து எனது கோரிக்கையின் பாற்பட்டு தெளிவுபடுத்தும் வகையில் அனுப்பப்பட்ட பதில் கடிதம் அல்ல; மாறாக, மின்வாரியத்தை இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்து – அதாவது “இப்பகுதிகளில் அனைத்து நகரங்களிலும் மின்வெட்டே நடப்பதில்லை; பள்ளி மாணவ மாணவியர்களுக்கு எவ்விதத் துன்பமும் இல்லாத அளவிற்கு மின்தடை இல்லாமல் உதவி செய்கின்றீர்கள்; அனைத்துப் பகுதிகளிலும் மின்விளக்குகள் பிரமாண்டமாக எறிகின்றன; திருநின்றவூர் மின்வாரியம் போல மின்வாரிய அதிகாரிகள், தொழிலாளர்கள் வேறு எங்கும் உழைப்பதில்லை; மின்வெட்டே இல்லாத அளவிற்கு இதற்காக சிறப்பான முறையில் கடுமையாக உழைத்திட்ட மின்வாரியப் பொறியாளர்கள், தொழிலாளிகள் அனைவருக்கும் இப்பகுதி மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்…நன்றிகள்” – என்ற பாணியில், இப்பகுதியில் வாழும் ஒரு அனாமதயப் பேர்வழி எதற்கெடுத்தாலும் தான் தான் என்று தலைப்பாகை கட்டிக் கொண்டு, இந்தப் பகுதி மக்களின் அனைத்துத் துறை சார்ந்த அனைத்துப் பணிகளும் தனது முயற்சியினால் மட்டுமே நடைபெறுகிறது என்று ஒளிவட்டப் பிம்பம் காட்டி அலையும் ஒரு நபர் மின்வாரிய உதவிப் பொறியாள ருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார். விளங்காத அந்த உதவிப் பொறியாளரோ, அந்நபரின் கடிதத்தை அப்படியே தமது வாட்ஸ் அப் (Whatsapp)பக்கத்தில் ஏற்றி எனக்குப் பகிர்ந்து (share)அனுப்பியுள்ளார்.
படிக்க:
♦ இருண்டு கிடக்கிறது தமிழ்நாடு சூட்டிங் ஸ்பாட்டாக தலைமை செயலகம்
உடனே நான் மின்வாரிய உதவிப் பொறியாளருக்கு அதே தேதியில் “இப்பகுதியில் மின்வெட்டு பிரச்சினை தொடர்பாக புகார் விண்ணப்பம் அளித்தவன் நான். எனது புகாரில் நியாயம் இருக்கிறதா? இல்லையா? என்பதனை நேரடி ஆய்வு செய்து விசாரித்துப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது. அதை விடுத்து சம்பந்தமே இல்லாத ஒரு அனாமதயப் பேர்வழித் தங்களுக்கு அனுப்பியுள்ள (வேடிக்கை நிறைந்த) பாராட்டுச் சான்றிதழை (Appreciation certificate) தங்களின் (அதாவது திருநின்றவூர் மின்வாரிய உதவிப் பொறியாளரின்)
வாட்ஸ் அப் (whatsapp) பக்கத்தில் ஏற்றி எனக்குப் பகிர்வு (share)செய்வது என்ன வகை நிர்வாக நடைமுறை என்பதை விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்நிலைத் தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் உயர் மட்டத்தினர், உயர் அரசு அதிகாரிகள் அனைவருக்கும் இப்பிரச்சினையை கொண்டு செல்வேன்” – என்று நான் பதிலளித்தேன். எனது இரண்டு கடிதங்களும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை ஆகும். அனைத்தையும் சேமிப்பு செய்து வைத்துள்ளேன்
எனது மேற்கண்ட பதில் கடிதத்தைப் பார்த்த அடுத்த வினாடியே உதவிப் பொறியாளர், தான் தமது வாட்ஸ் அப் பக்கத்தில் எனக்கு பகிர்ந்திருந்த அநாமதயப் பேர்வழியின் நற்சான்று (Appreciation certificate) கடிதத்தை அழித்து (Delete) விட்ட கேளிக்கைச் சம்பவத்தை என்னவென்று பகர்வது?
இவ்வாறு DELETE செய்த அசிங்க நடவடிக்கைகளையும் கண்டனம் செய்து உதவி பொறியாளருக்கு மீண்டும் ஒரு கடிதம் அனுப்பினேன். இதுதான் நிலைமை.
குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் நாள்தோறும் மணிக்கணக்கில் மின்வெட்டு நடப்பதும், பெண்கள் உட்பட மக்கள் நடுநிசியில் நின்று வீதிகளில் இறங்கி போராடுவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அந்த மக்களின் கோபத் ‘தீ’ -ஐ உணராதவர்களாக மின்சார வாரியப் பொறியாளர்களும், எமது பகுதியின் – அதிகார வர்க்கத்திற்கு ஜால்ரா அடித்து பிழைப்புவாதியாக வலம் வரும் அனாமதயப் பேர்வழியும் திகழ்கிறார்கள் என்பதே உண்மை!
இதுதான் அனைத்துத் துறைகளிலும் உள்ள இழிவான நிர்வாக நடைமுறையாக உள்ளது. இதற்கு எதிராக மக்கள் விழிப்புணர்ச்சி அடைந்து வினையாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் போராட்டக் குணமும் முன் தேவையாக உள்ளது.
உளுத்து உதவாக்கரைகளாகப் போய்விட்ட இச்சமூக அமைப்பின் (அரசு மற்றும் அரசாங்கம்) அனைத்துவித கேடுகெட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு எதிராக போர்குணத்துடன் போராடுவோம்!
– சுந்தரபாண்டியன்.சே
திருநின்றவூர்.







சிறப்பு தோழர்..
அரசு அதிகார வர்க்கத்தின் ஆட்சியின் அலட்சிய போக்கை பருண்மையாக சிட்டி காட்டி,கண்டித்து தொடர்ச்சியாக பல்வேறு பகுதி பிரச்சனைகள் சார்ந்து வினையாற்றிக் கொண்டிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்💐
நன்றி தோழர். டைப் செய்து அனுப்பும் முன் எழுத்துப் பிழைகளை கூர்ந்து கவனித்து சரியாக அமைந்துள்ளனவா என்பதை இறுதியாக்கி பின்பு அனுப்பவும்.
தோழர் வாழ்த்துக்கள் மின்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதை சுட்டிக் காட்டி எழுதியுள்ளீர்கள் சமீபத்தில் அனைத்து பகுதிகளிலும் இந்த நிலைமை அதிகரித்து வருகிறது இதை தீர்க்க மக்கள் போராட்டம் தான் தீர்வு…..
நன்றி தோழர்.
கட்டுரையின் ‘படிக்க’ என்று வரும் இடைப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள மின்வாரியத்தில் களப்பணியாளர்கள்/தொழிலாளர்கள் என பணியாற்ற வேண்டிய பணியிடங்களின் எண்ணிக்கை சுமார் 1.5 லட்சம் எனவும்
ஆனால் தற்போது 74 ஆயிரம் பணியாளர்கள்/தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர் என்பதை NDLF தொழிற்சங்கத் தலைமை சுட்டிக்காட்டி இருப்பது பொருத்தமான உண்மைச் சம்பவமாகும். அதனை நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கும் அரசிற்கும் உரியதாகும். அவர்களது அசிரத்தையான போக்கைக் கண்டித்து போராட வேண்டியது மின்வாரிய தொழிற்சங்கம் மற்றும் பிற தொழிற் சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் கடமை என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர்வுமாக!
திருநின்றவூர் மின்சார வாரியம் செயற்பாட்டின் அவலங்களை சுட்டிக்காட்டிய இக்கட்டுரையை, திருவள்ளூர் மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்டச் செயலாளர் தோழர் சே. பெரியசாமி அவர்களால் திருநின்றவூர் மின்வாரிய பொறியாளர்களுக்கு அனுப்பி தக்க நடவடிக்கை எடுக்குமாறு தகவல் தெரிவித்துள்ளார். இந்தக் கட்டுரையை பார்த்த மாத்திரத்திலேயே மின்வாரிய உதவிப் பொறியாளர், தோழர் பெரியசாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி மின்வெட்டு தொடர்பான பிரச்சனைகள் சீர்செய்யப்பட்டுள்ளன என்பதாகத் தகவல் தெரிவித்துள்ளார். உதவி பொறியாளர் தெரிவித்து உள்ளது போல் தற்சமயம் மின்வெட்டு இல்லை என்பது உண்மையே. இந்நிலைமை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதே நமது நம் விருப்பம்.
அந்த வகையில் உரிய நடவடிக்கைகளை அமைப்பு ரீதியாக மேற்கொண்ட
தோழர் பெரியசாமி அவர்களுக்கும் அவரது கடிதத்திற்கு உடன் வினை யாற்றிய திருநின்றவூர் மின்சார வாரிய உதவிப் பொறியாளருக்கும் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!
💐💐🙏🙏