விஜய்யின் ‘சிங்கப்பெண் அதிரடி படை’யும் - கோவை சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமைக் கொலையும்
கலாச்சார சீரழிவை தமிழ்நாட்டில் உருவாக்கியதில் திரைப்படத் துறைக்கு மிகப்பெரும் பங்கு உண்டு. அந்த வகையில் விஜய்யும் அப்படிப்பட்ட சீரழிவுக் கலாச்சார உருவாக்கத்திற்கு பெரிதும் காரணமாக அமைந்தவரே என்பதில் ஐயமில்லை.

“என்ன சி.எம். சார்? எங்கு பார்த்தாலும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை! சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! கேட்டால் ஒரே வார்த்தை! ‘சாரி’ங்கம்மா! என்பதுதான் பதில்! இது போதுமானதா? இதற்கு ஒரு முதலமைச்சர் தேவையா? யோசிங்க ஸ்டாலின் அங்கிள்…” இப்படி எண்ணற்ற ஏக வசனங்களைத் திரைப்படப் பாணியில் எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்டை மனப்பாடம் செய்து அடித்தொண்டை வலிக்க பிரச்சாரக் கூட்டங்களில் விஜய் கத்திக் கதறியதை ஊடக வெளிச்சங்களில் கண்டோம்! இதுபோன்ற எண்ணற்ற போலிப் பிம்பங்களையும், பொய் பிரச்சாரங்களையும் நவீன தொழில்நுட்ப ஊடகங்கள் மூலமாக கட்டவிழ்த்து விட்டு விஜய்யின் தவெக, ஏதோ ஒரு வகையில் நயவஞ்சகமாக தமிழ்நாட்டு ஆட்சி அதிகாரத்தை அபகரித்துக் கொண்டு உள்ளது.

கோவையில் சிறுமி படுகொலை! ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்னாச்சு விஜய்?

கோவை சூலூர் பகுதியில் 21-05-2026 மாலையில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்டு – பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்; குளத்தில் வீசி எறியப்பட்டு இருக்கிறார். குழந்தையைக் காணவில்லை என்று பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கையை காவல்துறை உடனடியாக மேற்கொள்ளவில்லை. மறுநாள் மாலையில் குளத்திலிருந்து பிணத்தை கைப்பற்றிய பின்னரும் காவல்துறை,  பெற்றோரிடம் ‘வாருங்கள், குழந்தையை மீட்டு விட்டோம்…’- என்று உயிருடன் இருப்பது போன்று  காவல் நிலையம் வரவழைத்து இருக்கிறார்கள். பெற்றோர் காவல் நிலையம் சென்ற பிறகுதான் குழந்தை முகம் சிதைவுற்று பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட கொடுமையை காவல்துறை மூலமாக அறிகின்றார்கள்.

புகார் அளித்த மாத்திரத்திலேயே சிசிடிவி கேமராக்கள் மூலம் புலனாய்வு செய்து காவல் துறை நடவடிக்கை எடுத்திருக்குமேயானால் கடத்தப்பட்ட நாளன்றே குழந்தையைக் காப்பாற்றி இருக்க முடியும் என்று கூறுகின்றனர் பெற்றோரும் அப்பகுதி மக்களும். ஆனால் காவல்துறை வழக்கம்போல் மெத்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டதால்தான் இக்கொடும் துயரம் அரங்கேறியுள்ளது.

பின்னர், பெற்றோர், உறவினர், பகுதி மக்கள் நூற்றுக்கணக்கில் ஒன்று திரண்டு காவல் நிலையத்தை இரவில் முற்றுகையிட்டு குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர். பிறகுதான் போலீஸ் படை வருகிறது. மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் கூட ஒருவர் கூட வரவில்லை. அப்பகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் வந்து, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்து 15 நாட்கள் தான் ஆகிறது; உடனே எல்லாவற்றையும் சரி செய்ய முடியாது; காவல்துறை விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்; உங்களுக்குத்தான் பேசத் தெரியும் என்று ஆளுக்காள் வக்கீல்கள் மாதிரி பேசாதீர்கள்…’ என்று திமிர்த் தனமாக பேசியதை ஊடக வெளிச்சத்தில் காண முடிந்தது. ஆறுதல் தரும் வகையில் அந்த எம்எல்ஏ வின் பேச்சு அமையவில்லை; மாறாக அவரிடம் ஆணவமும் மிரட்டலுமே வெளிப்பட்டது. பெயரளவுக்கு முதல்வர் விஜய் நீலிக்கண்ணீர் வடித்து அனுதாபம் தெரிவித்துள்ளார். ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ என்னாச்சு? எங்கே போச்சு? என்பதற்கு எல்லாம் திருவாளர் விஜய் தான் பதில் அளிக்க வேண்டும். ஏனென்றால் ஸ்டாலினை விட ஒரே கிழியாய் கிழிக்கப் போவதைப் போலத்தானே ‘படம் காட்டினீர்கள்’ விஜய்!

சிசிடிவி கேமராவைக் கொண்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த கார்த்திக், மோகன்ராஜ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வந்துள்ளது. இதைத்தானே ஸ்டாலின் அரசும் செய்தது? ‘மாற்றம்’ காணத் துடிக்கும் விஜய், இதுபோன்ற இனங்களில் வேறு என்ன வித புரட்சிகர ‘மாற்றம்’ கொண்டு வர விழைந்தார் என்பதனையும் அவர் சேர்த்தே அல்லவா விளக்க வேண்டும்.

துவக்கமே பெரும் கேடுகளாய் மாநிலம் எங்கும் தலைவிரித்தாடுகின்றன!

இந்தக் கொடுமையை பாருங்கள்! சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்த மன நலம் பாதிக்கப்பட்டு பெற்றோர் மூலமாக மருத்துவரிடம் தொடர் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார் 19 வயது இளம்பெண். இவர் எந்த நேரத்திலும் அலைபேசியிலேயே மூழ்கி இருந்ததால் இன்ஸ்டாகிராம் மூலமாக சில இளைஞர்களிடம் தொடர்பில் இருந்துள்ளார்.

அதில் ஒரு இளைஞன் மே 13 அன்று காட்டிய வழிகாட்டுதல்படி எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கம் சென்று, அந்த இன்ஸ்டாகிராம் நண்பனை மனநிலை பாதிக்கப்பட்ட இப்பெண் சந்தித்துள்ளார். அவன் அப்பெண்ணை தமது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு மெரினா கடற்கரைக்கு மாலை நேரத்தில் சென்றடைந்திருக்கிறான். அங்கே பிரியாணி, ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து இருக்கிறான். நள்ளிரவு வரும் வரை காத்திருந்தக் அக்கொடியவன் மெரினா நீச்சல் குளம் அருகில் உள்ள மறைவிடத்தில் அப்பெண்ணை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து முடித்துள்ளான். பின்பு மறுநாள் மே 14 காலை கையில் 500 ரூபாய் கொடுத்துவிட்டு கோட்டை ரயில் நிலையத்தில் ஏறி மாம்பலம் சென்றடைய வழிகாட்டி இருக்கிறான்.

வீட்டிற்கு செல்லப் பயந்திருந்த அப்பெண் அப்பகுதி ஆட்டோக்காரர் மூலமாக வேலை கேட்டு ஒரு சிறிய ஜவுளிக்கடையில் இரண்டு நாட்கள் வேலை பார்த்திருக்கிறார்; மனநிலை பாதிப்பில் இருந்த சூழலில் திடீரென கோவை சென்று இருக்கிறார்; பிறகு மீண்டும் திருப்பூர் காட்பாடி வேலூர் வழியாக அரக்கோணம் வந்திருக்கிறார்; அங்கே கிடைத்த இன்ஸ்டாகிராம் நண்பர்கள் இருவர்

லாட்ஜ் வாடகைக்கு எடுத்துத் தங்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்பு அந்த இரண்டு கயவர்களும் பயந்து  அப் பெண்ணின் அலைபேசியையும் பறித்துக் கொண்டு (நட்டாற்றில் விட்டு விட்டு சென்றது போல்) ஓடிவிட்டனர்.

அதன் பின் அப்பெண் ஏதோ ஒரு வகையில் ரயிலைப் பிடித்து சென்னை சென்ட்ரல் வந்து அங்கிருந்து மாம்பலம் ரயில் நிலையம் வந்தடைந்து உள்ளார். உடல்களில் கீரலும், காய்ச்சலுமாக நடுங்கிக் கொண்டு படுத்திருந்தவரை பெற்றோர் கண்டெடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அதன் பின் போலீசார் விசாரித்ததில் மே 13-ல் அப்பெண்ணை மெரினா கடற்கரைக்கு அழைத்துச் சென்றவன் சிந்தாதிரிப்பேட்டை இம்ரான் என்பது புலனாகி அவன் கைது செய்யப்பட்டு உள்ளான். அரக்கோணத்தில் பாலியல் பலாத்காரம் செய்த இருவர் தேடப்படுவதாக காவல்துறை கூறுகிறது.  இப்படி மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு இளம் பெண் வாழ்வே இந்த அளவில் இழிவான முறையில் விஜய் ஆட்சி காலத்தில் தானே சீரழிக்கப்படுகிறது! இதற்கு அவர் பொறுப்பு ஏற்க வேண்டாமா?

படிக்க:

 பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஒழிக்கப்படுவது எப்போது? எங்கிருந்து தொடங்குவது?

 மனுதர்மத்தின் ஆட்சியும், பாலியல் கொலை குற்றவாளிகள் விடுதலையும்!

காசிமேடுப் பகுதிக்கு விருந்தாளியாக வந்திருந்த 10 வயது சிறுமி ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த தவெக வட்டச் செயலாளர் தினேஷ் என்பவன் பாலியல் பலாத்காரம் செய்து போக்சோ சட்டத்தில் கைது செய்யப் பட்டு சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான். இந்த நிமிடம் வரை இது குறித்து விஜய் உட்பட எந்த ஒரு தவெக ‘தலைவர்களும்’ வாய் திறக்கவும் இல்லை; அவன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்படவும் இல்லை.

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டு கழுத்தில் காதில் அணித்திருந்த நகைகளை கொள்ளையர்கள் களவாடிச் சென்றுள்ளனர்.

மணல் கொள்ளை, கனிமவளக் கொள்ளையில் தவெக கும்பல் போட்டி போட்டு களம் இறங்கிச் சண்டையிடும் காட்சிகள் ஊடகங்களில் நாறிப் போகின்றன.

விருதுநகர் அரசு மருத்துவமனையில் உள்ளே நுழைந்த தவெக-வைச் சேர்ந்த ஒரு பெண்மணி மருத்துவருக்கான வெள்ளைக் ‘கோட்’டை அணிந்து கொண்டு (போலி மருத்துவராக) அங்குள்ள உண்மையான மருத்துவர்களை அரட்டி உருட்டி மிரட்டல் வேலைகளைச் செய்துள்ளார்.

சகலத்திலும் போடுகின்ற ஊழல் ஒழிப்பு வேஷம் ஒவ்வொன்றாய் வெளுத்துக் கொண்டிருக்கிறது.

இப்படியாக கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலும் அனைத்து மாவட்ட பகுதிகளிலும் நடக்கின்ற பாலியல் வல்லுறவுக் கொடுமைகள், கொலைகள், ஆணவப் படுகொலைகள், போதையாட்டங்கள் அங்கிங்கெனாதபடி நாள்தோறும் நிகழ்ந்த வண்ணமே உள்ளன.

குறிப்பாக கலாச்சார சீரழிவை தமிழ்நாட்டில் உருவாக்கியதில் திரைப்படத் துறைக்கு மிகப்பெரும் பங்கு உண்டு. அந்த வகையில் விஜய்யும் அப்படிப்பட்ட சீரழிவுக் கலாச்சார உருவாக்கத்திற்கு பெரிதும் காரணமாக அமைந்தவரே என்பதில் ஐயமில்லை. அப்படிப்பட்ட திரைப்பட மோகமும் கவர்ச்சியும் தான் இந்த பொறுக்கி அரசியலை ஆட்சி பீடத்தில் அமர வைத்துள்ளது என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.

திருமா-வும், காதர் மொய்தீனும் ஏன் இப்படி ஆனார்கள்?

பாஜக ‘பூச்சாண்டி’ காண்பித்து, காவிகள் உள்ளே நுழைந்து விடக்கூடாது என்பதற்காகவே வெளியிலிருந்து தவெக ஆட்சிக்கு ஆதரவளிப்பதாகவும், அமைச்சரவையில் இடம் பெறப் போவதில்லை என்றும், திமுக கூட்டணியில் தாங்கள் நீடிக்கிறோம் என்றும் அறிவித்துக் கொண்டே இடதுசாரிகளும், விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்கள். தற்போது விசிக-வும், ஐஎம்யூஎல் கட்சியும் முறையே வன்னியரசும், ஷாஜகானும் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக்கொண்ட அசிங்கங்கள் அரங்கேறி உள்ளன. இதற்கு இவர்கள் என்ன நியாயம் கற்பிக்க முயன்றாலும் அவை ஆபாசமானதே.

முதலில் தவெக, பாஜகவின் எதிர்ப்பு முகாம் என்று கருதுவதே பேதமைத்தனம் வாய்ந்தது. தேர்தல் பிரச்சார காலக்கட்டத்தில் அந்த இரு கட்சிகளும் ஒருவருக்கொருவர் ஏதும் விமர்சித்துக் கொள்ளாததில் இருந்தே அனைத்தையும் உணரலாம். தற்போதுள்ள அமைச்சரவையில் சரி பாதிப்பேர் ஆர் எஸ் எஸ் உணர்வு பெற்றவர்களே. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஒரு இடத்தை மட்டுமே கைப்பற்றியது குறித்து துளியும் வெட்கப்படவுமில்லை; வேதனைப் படவும் இல்லை. அவர்கள் திமுக வீழ்த்தப்பட்டதையும் தவெக வெற்றி பெற்றதையும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

படிக்க:

♦ தவெகவின் தேர்தல் வெற்றிக்கு அடிப்படை காட்சி போதைக்கு அடிமையாகியுள்ள தமிழ் சமூகத்தின் தோல்வியே!

 தமிழகத்தில் தவெக ஆட்சி: மூன்றாம் இடத்தில் தமிழ்!

தமிழ்நாட்டில் இதுவரை அமைச்சரவை பதவியேற்பு உட்பட அரசு நிகழ்வுகளில் ‘வந்தே மாதரம்’ சமஸ்கிருத பாடல் முதல் நிலைக்கு வந்து விட்டது; தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு வந்துவிட்டது; பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக் கையெழுத்திடல், ஆர்எஸ்எஸ்-ன் மாணவர் அமைப்பு நிர்வாகிகள் முதல்வர் விஜய்யை சந்தித்து மும்மொழிக் கொள்கை உட்பட பல்வேறு தமிழர் விரோத ஒன்றிய அரசின் திட்டங்களை நிறைவேற்றக் கோரியிருக்கிறார்கள்; ஆவண செய்வதாக முதல்வர் உறுதி அளித்துள்ளதாக அந்த சங்கி மாணவர் அமைப்பு பேட்டி கொடுக்கிறது. அறநிலையத்துறை அமைச்சராக ஸ்ரீரங்கம் எம்எல்ஏ ரமேஷ் சீனிவாசன் என்ற பார்ப்பனர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இனி உறுதியாக திருப்பரங்குன்றம் பிரச்சனையில் சங்கிகள் கனவு நனவாகும்.

காவிக் கும்பல் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தபடி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து இந்து கோவில்கள் விடுபட்டு பார்ப்பனர்கள் கையில் அல்லது பார்ப்பன தாசர்கள் கையில் தாரை வார்க்கப்படும். தில்லை நடராஜர் கோவில் தீட்ஷிதப் பார்ப்பனர்கள் போல ஒட்டுமொத்த கோவில் சொத்துக்களும் இனி எவ்விதத் தடைகளுமின்றி சூறையாடப்படும்!

தற்போது ‘ரீல்ஸ்’ ஆட்சியே நடைபெறுகிறது. டீக்கடை வைத்திருந்தவர், ஆட்டோக்காரர் என எண்ணற்ற ஏழை எளிய வேட்பாளர்களே தவெக-வினர் என வெற்று ஜம்பம் அடிக்கிறார்கள். ஆனால் உண்மையில் தவெகவினர் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில், அவர்களே அளித்த பொய்க் கணக்கின் படியே 93 எம்எல்ஏக்கள் கோடீஸ்வரர்கள். உண்மை கணக்கின்படி அவர்களில் சிலர் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதிகளாவர்.

நிலைமைகள் இவ்வாறு இருக்கும் பொழுது, தொல் திருமா, காதர் மொய்தீன் போன்றோர் சேர்ந்து ‘விஜய் – ஆதவ் அர்ஜுன்’ கும்பலுக்கு ஒளிவட்டம் ஏற்படுத்த முனைந்திருக்கக்கூடிய செய்கை என்பது அவர்கள் இவ்வளவு காலம் பேசி வந்த போலி முற்போக்குத்தனம் முற்றிலுமாக நொறுங்கிச் சிதைகிறது. குறிப்பாக தொல் திருமாவுக்கு இது பெரும் இழிவைத் தேடித் தரும் என்பதில் ஐயமில்லை.

‘திமுக புடம் போட்ட தங்கமான அமைப்பு’ என்று நாம் வாதிடவில்லை; அப்படிப்பட்ட பிரம்மாண்டமான தகுதியும் அவர்களிடத்திலே இல்லை. நிலவுகின்ற சமூக அரசியல் பொருளாதார சூழலில் அரசும்,  அரசாங்கமும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கான சேவகர்களாகவேப் பணி புரிகின்றனர். அத்தோடு காவிக் கூட்டமும் முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு நாட்டில் கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை நிலைநாட்ட முனைந்திருக்கும் மிக அபயகரமான காலச் சூழல் இது. இவ்வேளையில் ‘சாக்கடை’க்குப் பயந்து ‘மலத் தொட்டி’யில் விழுந்த கதையாகவே விசிக., ஐஎம்யூஎல் அமைப்புகள் தவெக-வில் கரைந்துள்ள அவலங்களாகப் பார்க்க முடிகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம்!
பொய்மை உடைபடும்!
உண்மை வெளிச்சத்திற்கு வரும்!

  • எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here