
‘உங்கள் அம்மா அப்பாவிடம் அங்கிளுக்கு ஓட்டு போட சொல்லுங்க குட்டீஸ்’ என்ற ரீதியில் பேசி தேர்தலின் போது சிறுவர் சிறுமிகளை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தூண்டிவிட்டது குறித்து பலரும் விமர்சித்து வந்தனர்.
குழந்தைகளைத் தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு நடிகர் விஜய் பயன்படுத்தியது சட்ட விரோதம் என்று விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் நடிகர் விஜய் தரப்பினரோ ‘குழந்தைகளைத் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்துவது தவறு என்று எந்த சட்டமும் இல்லை’ என்று சட்டவாதத்திற்குள் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
அரசியலைப் பற்றியோ சமூகத்தைப் பற்றியோ புரிதலற்ற சிறுவர் சிறுமிகளை பயன்படுத்தி இவர்கள் மூலமாக இவர்களின் பெற்றோர்களை ‘அன்பான’ பிளாக் மெயில் செய்து வாக்குகளை பெறுவதற்கு விஜய் முயற்சி செய்துள்ளது ஒரு அயோக்கியத்தனம் என்று தான் கூற வேண்டும்.
நடிகர் விஜயின் மீது அபிமானம் கொண்ட இந்த சிறுவர் சிறுமிகள் தங்களது பெற்றோர்களிடம் மட்டுமல்ல தங்கள் வீட்டிற்கு வரும் உறவினர்களிடமும் தங்களின் பெற்றோர்களின் நண்பர்களிடமும் கூட “அங்கிள் விஜய்க்கு ஓட்டு போடுங்க” என்று கூறுவதை காண முடிந்தது.
இந்த நிலையில் தேர்தலில் அதிகப்படியான வாக்குப்பதிவானது தனது பிரச்சாரத்தால் தான் என்றும் அதற்கு உதவிய குட்டீஸ்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தற்பொழுது நடிகர் விஜய் அறிவிப்பை வெளியிட்டுள்ளது மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. (நடிகர் விஜயால்தான் தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் அதிகமானதாக கூறுவது அப்பட்டமான பொய் என்பது தற்பொழுது புள்ளி விவரக் கணக்குப்படி நிரூபனமாகியுள்ளது என்பது வேறு விஷயம். இப்பொழுது நாம் இதைப் பற்றி பேசப்போவதில்லை)
இத்துடன் நிற்காமல் ஏதோ தாங்கள் தேர்தலில் வெற்றி பெற்று விட்டது போலவும், முதலமைச்சராக விஜய்யும் பிறதுறை அமைச்சர்களாக செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் போன்றோரும் பதவியேற்கப் போவதாகவும் சமூக வலைத்தளங்களில் தமிழக வெற்றி கழகத்தினர் ஒரு செய்தியைத் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.
இதையெல்லாம் காணும் போது விஜய் -க்கு ஓட்டு கேட்ட சிறுவர் சிறுமிகளின் மனதில் எத்தகைய மனக்கிளர்ச்சியை – மகிழ்ச்சியை உருவாக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
படிக்க: “ப்ளீஸ் தமிழ்ல பேசுமா” குழந்தையின் அழுகை ரசிப்பதற்கு அல்ல!
நடிகர் விஜய்தான் நிச்சயமாக வெற்றி பெற்று முதலமைச்சராக போகிறார் என்று ஒரு கனவில் மிதந்து கொண்டிருக்கும் இத்தகைய சிறார்கள், விஜய் தேர்தலில் ஜெயிக்கவில்லை; முதலமைச்சர் ஆகவில்லை என்ற நிலை ஏற்பட்டால் என்ன ஆகும்? இந்த சிறார்களின் மனநிலை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவதற்கும், சிலர் தங்களின் மன உளைச்சலின் தன்மைக்கேற்ப சிறு வன்முறையை கையில் எடுப்பதற்கும், ஏன் தற்கொலை செய்து கொள்வதற்கும் கூட வாய்ப்பிருக்கிறது என்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது.
“தற்கொலையா? இது என்ன வக்கிரம் படைத்த கற்பனை?” என்று நமது இந்தக் கருத்திற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகத்தினர் கொதித்தெழுவதற்கு வாய்ப்பு உண்டு. அவர்களுக்கு கடந்த கால வரலாற்றில் நடந்த சிலவற்றை சுட்டிக்காட்டுவதன் மூலமாக நாம் பதிலளிக்கலாம்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் வைகோ, திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்ட பொழுது வைகோவின் அபிமானிகள் சிலர் தீக்குளித்து இறந்தனர். அதேபோல அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ‘நிரந்தர’ப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, நிரந்தரமாக மண்ணுலகை விட்டு நீங்கிய பொழுது ஜெயலலிதாவின் அபிமானிகள் பலர் தற்கொலை செய்து கொண்டனர்; மற்றும் பலர் அதிர்ச்சியில் இறந்தனர்.
நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் அவர்கள் தனது திரைப் பயணத்தில் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அவரது படத்தினை முதல் நாளில் முதல் காட்சியில் முதல் ஆளாக டிக்கெட் பெற்று பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த ஒரு ரசிகர் டி. ராஜேந்தர் அவர்களின் ஒரு படம் வெளியான பொழுது தனக்கு முதல் காட்சியில் முதல் டிக்கெட் கிடைக்காத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டார்.
படிக்க: தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் ஒரு மாற்று என்பது கலப்படமில்லாத மோசடி!
கடந்த காலங்களில் இப்படிப்பட்ட சாவுகளை எல்லாம் தமிழ்நாடு கண்டிருக்கிறது. இப்பொழுது விஜயின் ரசிகர் பட்டாளத்தை பற்றி பரிசீலிப்போம். விஜயின் மனைவி விஜய்யிடம் இருந்துவிவாகரத்து கேட்டுள்ளது குறித்த ஒரு கேள்விக்கு “சங்கீதா போனா போகட்டும்… நான் விஜய்க்கு தங்கச்சியாவும் இருப்பேன், தேவைப்பட்டால் பொண்டாட்டியாவும் இருப்பேன்” என்கிறார் ஒரு ரசிகை.
கரூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்-யை பார்ப்பதற்காக திரண்ட கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 40க்கும் மேற்பட்டோர் இறந்தது அனைவருக்கும் தெரியும். அது குறித்து பேசும் பொழுது “நான் கருவுற்று இருக்கிறேன். கரு கலைந்தாலும் பரவாயில்லை என்று விஜயை பார்ப்பதற்காக வந்திருக்கிறேன்” என்கிறார் ஒரு இளம் பெண்.
இன்னொரு பெண் “விஜயை பார்ப்பது தான் முக்கியம். என் குழந்தை செத்துப் போனால் போயிட்டு போகுது… இன்னொன்னு பெத்துக்கலாம். இத விட்டா விஜய் -ஐ நேரில் பாக்குற வாய்ப்பு கிடைக்குமா?” என்கிறார். “விஜய் ஜெயிச்சாகணும்… விஜய் ஜெயிக்கலேன்னா… புருசன், மாமனார், மாமியாருக்கு விசம் வச்சு கொன்னுடுவேன்” என்கிறார் வேறொரு ரசிகை. இத்தனையும் தொலைக்காட்சிகளிலும் youtube களிலும் வீடியோவாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.
படிக்க: விஜய் ரசிகர்கள் கூட்டம் படிப்பினை பெற வேண்டும்!
20 வயதிற்கு மேற்பட்டவர்களே இப்படி எல்லாம் பேசும் பொழுது பள்ளியில் பயின்று கொண்டிருக்கும் சிறார்கள் எப்படிப்பட்ட மனநிலையில் இருப்பார்கள் என்பதை நம்மால் யூகித்துக் கொள்ள முடியும். இந்த சிறார்கள் தங்களின் நம்பிக்கை, விருப்பத்திற்கு மாறாக தேர்தல் முடிவுகள் அமைந்து விஜய் தோல்வியுற்றார் என்ற செய்தியை கேட்க நேர்ந்தால் என்ன நடக்குமோ என்ற அச்சம் மேலோங்குகிறது.
நாம் மேலே கூறியுள்ளபடி பள்ளிச் சிறார்களுக்கு எதுவும் நடந்து விடக்கூடாது என்பதே நமது விருப்பம். ஒவ்வொரு பெற்றோரும் விஜய் -ன் தாக்கத்திலிருந்து தங்களது குழந்தைகளை காத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்பொழுதே தொடங்குவது நல்லது.
தான் அரசியலில் வென்று பதவியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, எதைப்பற்றியும் கவலைப்படாமல், குழந்தைகளைக் கூட வாக்குகளைப் பெற்றுத் தரும் ஒரு சாதனமாக, அரசியல் எதிரிகளுக்கு எதிரான ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதற்கு ஒரு மனநிலை வேண்டும். அந்த மனநிலை விஜய்க்கு இருக்கிறது.
விஜய்-யின் பேச்சு, செயல்பாடு காரணமாக தமிழகத்தின் சிறார்களுக்கு இப்படி ஏதேனும் நடக்குமானால் விஜய்யை பனையூர் பங்களாவிலோ வேறு எங்கேணுமோ ஒளிந்து கொண்டு சொகுசு வாழ்க்கை நடத்துவதற்கு மக்கள் அனுமதித்துவிடக் கூடாது.
– குமரன்







ஆம், சரியாகத்தான் கட்டுரையாளர் தோழர் குமரன், விஜய் தொடர்பாக அம்பலப்படுத்தி உள்ளார். விஜய் குறித்து எண்ணற்ற பெண்கள் கொச்சையாக பேசுவது – அதாவது ‘சங்கீதா போனால் என்ன? அவருக்கு பொண்டாட்டியாக இருப்பதற்கு நாங்கள் ஆயிரம் ஆயிரம் பேர் இருக்கிறோம்!’ என்றொரு பெண் பேட்டி அளிப்பதில் உள்ள ஆபாசம் ஒருபுறம்; ‘நான் விஜய்யை 20 வருடமாகக் காதலிக்கிறேன்; இதனை அவரது அப்பா சந்திரசேகரனிடம் கூடத் தெரிவித்து விட்டேன்; எனது கணவருக்கும் இது தெரியும்; எப்படியும் விஜய் ஜெயிப்பார்; எந்த ஒரு அரசியல் தலைவரும் விஜய்யை விமர்சிக்க யோக்கியதாம்சம் இல்லை’ – என்றொரு பெண் பரவசப்படுகிறார்! ‘விஜய் உறுதியாக ஜெயிப்பார்; தோற்றால் எனது குழந்தைகளுக்கு விஷத்தைக் கொடுத்து
கொன்றுவிட்டு, நானும் தற்கொலை செய்து கொள்வேன்’ – என்றொரு பெண் மிரட்டுகிறாள்! இப்படி சினிமா மோகத்தில் இளம் பிஞ்சுகள் மட்டுமல்ல; இளம் பெண்கள், குடும்பப் பெண்கள் உட்பட நாலாந்தரத் தனமாகக் கருத்துப் பரப்புவதை காட்சி ஊடகங்களில் கண்டு கொதிப்படையத்தான் செய்கிறோம்! எம்ஜிஆர் காலம் தொட்டு தமிழ்நாட்டு மக்கள் சினிமா மோகத்திற்கு ஆட்படுவதும், சினிமாவில் அவர்கள் வேடம் கட்டி மக்களுக்கானவர்களாக – ஏழை எளியவர்களுக்காக வாழ்வது போன்ற ‘நடிப்புக்களை’ (அல்லது ஆபாச கலாச்சார சீரழிவுகளை எல்லாம் ஓரங்கட்டி விட்டு) நிஜ வாழ்க்கையில் அவர்கள் யோக்கியமானவர்கள் தான் என்று எண்ணிய கூட்டம் அன்று மட்டும் அல்ல; இன்றும் நீடிக்கிறது என்பதற்கு கழிசடை நாயகன் விஜய் ஒரு எடுத்துக்காட்டு! இந்தப் பெண்கள் இவ்வளவு அநாகரீகமாகக் கருத்துக்களை வெளியிடுவது குறித்து இந்தக் கலாச்சார சீரழிவுவாதி விஜய் குதூகூளிக்ன்றாறே தவிர, ஒரு வார்த்தை கண்டித்துப் பேசுவதற்கு முன் வரவில்லை என்பதிலிருந்தே இவருடைய ஆபாச வக்கிரம் வெட்ட வெளிச்சமாகிறது! இதைத்தான் தோழர் மனம் நொந்து கட்டுரையாக்கி உள்ளார். வாழ்த்துக்கள்!
இந்தக் கலாச்சாரச் சீரழிவுப் போதை யிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் சமூகப் பற்றாளர்களின் கரங்களில் சுமந்து கிடக்கிறது! (எண்ணற்ற சமூகக் கடமைகளினூடே) அத்திசை நோக்கியும் பயணிப்போம்!