2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வல்லரசாக்க போவதாக பாசிச பாஜக தொடர்ந்து கூவிக்கொண்டே இருக்கிறது.

ஆனால் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு விழுந்து கொண்டே இருக்கிறது. இதற்கு ஏற்ப உழைக்கும் மக்கள் வாங்கி பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரம் விழுந்து கொண்டே இருக்கிறது. இவ்வளவு இருந்தாலும் பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலைக்குக் காரணம் என்ன?

கொரோனா பெரும்தொற்று காலத்தில் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தை நடந்தே தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய நிலையை பாஜக அரசு ஏற்படுத்தியது. பாசிச பாஜக நினைத்திருந்தால் அந்த ஒரு சில வாரங்களில் இலவசமாக ரயில்களை இயக்கி புலம்பெயர் தொழிலாளர்கள் சிரமமின்றி தங்கள் ஊர்களுக்கு செல்வதற்கு ஏற்பாடு செய்திருக்க முடியும். இதை செய்யாத காரணத்தால் உண்ண உணவின்றி, உடல் நலக்குறைவிற்கு மருத்துவம் பார்ப்பதற்கு வழியில்லாத நிலையில் நடந்து சென்ற  புலம்பெயர் தொழிலாளர்களில் சிலர் வழியிலேயே இறந்து போன கொடுமை இந்த நாட்டில் தான் நடந்தது.

பணமதிப்பிழப்பு என்ற பெயரில் மக்கள் பயன்பாட்டில் உள்ள 500 ரூபாய் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று திடீரென அறிவித்து நாட்டையே, குறிப்பாக பெரும்பான்மை உழைக்கும் மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது பாஜக.

படிக்க:

 வட மாநில தொழிலாளர்களின் ரயில் பயணங்களும் அவர்கள் படும் துயரங்களும்!

 வல்லரசுக் கனவில் உள்ள இந்தியாவில் அதிகரிக்கும் வேலை வாய்ப்பின்மை  ஆய்வு முடிவில் அதிர்ச்சித் தகவல்கள்!

இந்தியாவில் ஏற்கனவே இருந்து வந்த வரி விதிப்பு முறையே சாதாரண உழைக்கும் மக்களுக்கு பெரும் துன்பத்தை விளைவிப்பதாக இருந்து வந்தது. இந்த நிலையில் அதைவிட அதிக துன்பத்தை ஏற்படுத்தக்கூடிய ஜி எஸ் டி வரி விதிப்பை அமுல்படுத்தி பெரும்பான்மை உழைக்கும் மக்களின் குறைந்த அளவு வருமானத்தில் இருந்து கணிசமான தொகையை மாதாமாதம் கொள்ளையடித்து வந்தது. இதை ஒவ்வொரு மாதமும் இவ்வளவு லட்சம் கோடி ஜிஎஸ்டி-யில் வசூலிக்கப்பட்டுள்ளது;  கடந்த மாதத்தை விட இவ்வளவு  கோடி அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று பெருமையாக வேறு பாசிச பாஜக அறிவித்துக் கொண்டே இருந்தது. சில ஆண்டுகள் இப்படி கொள்ளை அடித்த பிறகு தற்பொழுது ஜிஎஸ்டி வரி சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வரி என்ற பெயரில் உழைக்கும் மக்களை கொள்ளை அடிப்பது தொடர்கிறது.

பொருளாதார வீழ்ச்சியிலும் தேர்தல்களில் வெல்லும் மோடி! பலவீனமடையும் எதிர்க்கட்சிகள்!
நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

பாஜகவின் ஆட்சியில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை – வறுமை தலை விரித்து ஆடிக்கொண்டு இருக்கிறது. பாசிச  பாஜக ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்த 2014ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை  எந்த விதத்திலும் நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களின் வேலைவாய்ப்பை – வருமானத்தை அதிகரிப்பதற்கோ, வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கோ ஒரு சிறு துரும்பையும்  கிள்ளிப் போட்டதில்லை.

ஆனால் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்துக்களை அதிகரிப்பதற்கு இவர்கள் உலகப் பணக்காரர் வரிசையில் இடம் பெறுவதற்கு அனைத்து வேலையும் பாசிச பாஜக அரசு செய்து கொடுத்து வருகிறது.

இந்த நிலையிலும், தற்பொழுது நடந்த ஐந்து மாநில தேர்தல்களிலும் கூட அசாமில் மூன்றாவது முறையாக வென்று பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதைவிட முக்கியமாக மேற்குவங்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி தற்பொழுது பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது.

இந்திய உழைக்கும் மக்களுக்கு எதிராக பாசிச பாஜக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற பொழுதும் ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெற்று வருவதற்கு காரணம் என்ன?

படிக்க:

 பண்டோரா பேப்பர் வெளியிடும் உண்மைகள்! 1% பணக்காரர்கள் ’முடியை’ புடுங்குமா?

 தமிழ்நாடு: ஏற்றத் தாழ்வுகளின் அருங்காட்சியகமா? ரவிக்குமார்

புல்வாமா தாக்குதலை காட்டி மக்களிடையே தேசிய வெறியூட்டியது, செய்தி ஊடகங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தனக்கு பாதகமான கருத்துக்களை முடக்கியது மற்றும் தனக்கு சாதகமான செய்திகளைத் தொடர்ந்து பரப்பியது, இந்து மதவெறியை கிளப்பி விட்டு மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தியது, மிக முக்கியமாக தேர்தல் ஆணையத்தை பாஜகவின் மற்றொரு பிரிவாக மாற்றி வாக்காளர் பட்டியலிலும் வாக்கு இயந்திரத்திலும் தனக்கு சாதகமாக தில்லுமுல்லுகள் செய்தது  போன்ற பாஜகவின் செயல்பாடுகள்  மட்டும்தான் காரணம் என்று கூற முடியுமா?

இந்தக் காரணங்களையும் தாண்டியும்  முக்கியமான காரணங்கள் உள்ளன. இந்துராஷ்டிரத்தை அமைக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். -ன் அரசியல் பிரிவுதான் பாஜக. பார்ப்பன மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துராஷ்டிரத்தை அமைக்க வேண்டும் என்ற ஒரு மையமான திட்டத்துடன் களமாடிக் கொண்டிருக்கிறது பாசிச பாஜக. அம்பானி, அதானி, ஷிவ் நாடார் போன்ற தேசங்கடந்த தரகு முதலாளிகளின் நலனுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுதும் தனது இந்துராஷ்டிர செயல் திட்டத்தை – இலக்கை நோக்கி முன்னேறுவதில் உறுதியுடன் பாஜக இருக்கிறது. அதாவது பாசிச பாஜகவிடம் தேசம் கடந்த தரகு முதலாளிகளுக்கு சேவை செய்வது அதேசமயம் இந்துராஷ்டிரத்தை அமைப்பதற்கான முன்னெடுப்புகளை செய்வது என்ற ஒருங்கிணைந்த செயல்திட்டம் உள்ளது.

பொருளாதார வீழ்ச்சியிலும் தேர்தல்களில் வெல்லும் மோடி! பலவீனமடையும் எதிர்க்கட்சிகள்!

ஆனால் பாஜகவை எதிர்க்கும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், திமுக, விசிக போன்ற  கட்சிகளிடம் பாசிச  எதிர்ப்பில் அதாவது பாசிச பாஜகவின் செயல் திட்டத்திற்கு எதிரான என்ன திட்டம் உள்ளது. ஒன்றும் இல்லை.

பாசிச பாஜக – ஆர் எஸ் எஸ் கும்பல் இந்திராஷ்டிரத்திற்கு ஆதரவான கருத்துக்களை தனது தொண்டர்களிடம் மிக ஆழமாக பரப்பி உள்ளது. அதன் தொண்டர்கள் அந்தக் கருத்திற்கு ஆதரவாக மக்களிடையே தங்களால் இயன்ற அளவிற்கு தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்துராஷ்டிரத்தை, சனாதனத்தை, எதிர்த்துப் பேசுபவர்களிடம், இதுதான் ஆதாரங்களும் இன்றி மட்டையடியாகவேனும் உணர்வுபூர்வமாக, விடாப்பிடியாக ஆதரித்து பேசுகின்றனர்.

அதே சமயம் பாஜகவுக்கு எதிராக உள்ளதாக கூறிக் கொள்ளும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளில் உள்ள தொண்டர்களிடம் பாசிச பாஜக –வை எதிர்த்து பேசும்  காட்சியை காண முடிவதில்லை. இன்னும் சொல்லப்போனால் “பாசிச பாஜக என்கிறீர்களே பாசிசம் என்று எதைக் கூறுகிறீர்கள்?” என்று கேட்டால் இந்தக் கட்சியில் உள்ள  நிர்வாகிகள் பலரால் பதில் சொல்ல முடியாது.

படிக்க:

 இந்தியா ‘மதசார்பற்ற நாடு’! சொல்வது பாஜக அமைச்சர்!

 தேசிய வெறி-ராணுவ மயமாக்கப்படும் பொருளாதாரம்! தேசபக்தி பஜனையில் ஒன்று கூடும் அனைத்து கட்சிகள்.

காங்கிரஸ் கட்சியின் நிலை இந்த விஷயத்தில் மிகவும் கவலைக்கிடமானதாக உள்ளது.  காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் கார்கே, கர்நாடக முதல்வர் சித்தாராமையா போன்ற ஒரு சில தலைவர்கள் மட்டுமே இந்துத்துவா எதிர்ப்பு மன நிலையில் உள்ளவர்கள். இவர்களைத்  தவிர  காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் பலர்  பாஜகவின் இந்துத்துவா கருத்தையே தங்களது கருத்தாக கொண்டுள்ளவர்களாக உள்ளனர்.

ஒரு ஆண்டுக்கு முன்பு திராவிடம் – தமிழ் தேசியம் பற்றிய விசயம் தமிழகத்தில் பெரிய அளவிற்கு பேசுபொருளான பொழுது ஒரு செய்தியாளர் இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு ‘திராவிடம் என்பதெல்லாம் ஆய்வாளர்கள் சம்பந்தப்பட்ட விசயம். அது குறித்து நான் என்ன….. (சொல்வது)’ என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திருவாய் மலர்ந்தார். இதே மாதிரியான பெரியார் அண்ணா குறித்த ஒரு  கேள்விக்கு, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘எனக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா தெரியும் அவ்வளவுதான் மத்தவங்களப் பத்தி தெரியாது’ என்று ஒரே போடாய் போட்டு விட்டார். இவர்கள் இருவரும் இருப்பது “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற கட்சியில். இந்தக் கட்சியின் பெயரிலேயே அண்ணாவும் இருக்கிறது திராவிடம் இருக்கிறது. ஆனாலும் திராவிடம் குறித்தோ அண்ணா குறித்தோ எதுவும் தெரியாது என்று கூச்சநாச்சம் இல்லாமல் கூறுகின்றனர்.

திமுகவில் மேல்மட்டத் தலைவர்கள் சிலர் தவிர ஏறத்தாழ இதே நிலைமைதான்.. எடப்பாடி பழனிசாமி, ராஜேந்திர பாலாஜி போல இவர்களுக்கும் இதுகுறித்து எந்த ஒரு அறிவும் கிடையாது. இந்த நிலையில் தொண்டர்களைப் பற்றி கூறவே வேண்டியது இல்லை. எல்லா ஓட்டுக் கட்சிகளிலும் ஏறக்குறைய இதே நிலைதான் உள்ளது.

தனது தொண்டர்களின் இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று இந்தக் கட்சித் தலைவர்கள் சிந்திப்பதே இல்லை. கட்சித் தொண்டர்களின் நிலையையே மாற்ற விரும்பாத இந்த கட்சிகளால் இந்துராஸ்டிரத்திற்கு ஆதரவான கருத்துக்களை, பாசிச பாஜக, மக்களிடையே பரப்பி வருவதை எப்படி தடுக்க முடியும்?

இந்த நிலையில் “காங்கிரஸ் இல்லாத இந்தியா”, “கழகங்கள் இல்லாத தமிழ்நாடு”என்ற தனது இலக்கை நோக்கி சிறுகச் சிறுக பாசிச பாஜக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்தக் கண்ணோட்டத்தில் தான், தமிழ் நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்தது பாஜக -வினருக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும் திமுக விழுந்துவிட்டதை எண்ணி மகிழ்கின்றனர்.

பாசிச பாஜக எதிர்க் கட்சிகளை உடைத்து அல்லது எதிர்க்கட்சியினரை விலைக்கு வாங்கி ஆட்சி அமைப்பது என்பன போன்று  குறுகிய கால நலனுக்காக எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதன் ஊடாக நீண்டகால நோக்கில் தனது இந்துராஷ்டிர நோக்கத்திற்கு பலன் அளிக்கும் வகையிலேயே அதை செய்கின்றனர்.

இதற்கு நேர் எதிராக பாஜகவை எதிர்க்கும் கட்சிகளிடம் எந்த ஒரு பொது நோக்கமும் இல்லை. வாயளவில் பாசிச பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று கூறிக் கொண்டாலும் பாசிசத்தை வீழ்த்துவதற்கான குறைந்தபட்ச செயல் திட்டமோ விருப்பமோ இந்தக் கட்சிகளிடம் இருப்பதில்லை. நாங்கள் அதிக இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று பதவிக்கு வர வேண்டும் என்பதை மட்டுமே இலக்காகக் கொண்டு  இந்தக் கட்சிகள் இடையே பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன. இதன் காரணமாக தேர்தல்களின்போது இந்தக் கட்சிகள் சில மாநிலங்களில் எதிரெதிராக நின்று பாஜகவிற்கு வெற்றியை தேடி தருகின்றன.

இந்தக் கட்சிகள் பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்பதை  தங்களின் உண்மையான நோக்கமாக கொண்டு, அதற்கான குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கிக் கொண்டு, செயல்பட முன்வராத வரை பாசிச பாஜக வின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியாது. மாறாக இவர்களின் குறுகிய கால சுயநலமிக்க செயல்பாடுகள் இவர்களது கட்சியை மக்கள் மத்தியில் மதிப்பிழக்கச் செய்து பலவீனப்படுத்துவது மட்டுமின்றி பாசிச பாஜகவை – பாசிசத்தை மேலும் வளர்ப்பதற்கே உதவியாக அமையும்.

இந்தக் கட்சிகள் இதை உணர்ந்து தங்களை திருத்திக் கொள்வார்கள் என்று பாசிசத்தை எதிர்க்கின்ற முற்போக்கு, ஜனநாயக சக்திகள் காத்துக் கொண்டிருக்கக் கூடாது. மாறாக, இப்பொழுது இந்தியாவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு குறைந்தபட்ச செயல்திட்டத்தை முன்வைத்து பாசிச  எதிர்ப்பு ஐக்கிய முன்னணி பாசிச  எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டும் வேலையில் அனைவரும் ஈடுபட வேண்டியது காலத்தின் கட்டாயம். இதன் ஊடாகத்தான் தேர்தலில் பங்கேற்று வெற்றி பெறும் கட்சிகளையும் கூட உண்மையான பாசிச எதிர்ப்பு நடைமுறைக்குள் கொண்டு வர முடியும்.

குமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here