தமிழ்நாடு உட்பட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன. தமிழ்நாடு தவிர மற்ற மாநில முடிவுகள் எதிர்பார்த்த வையே! மேற்கு வங்கத்தைப் பொருத்த மட்டிலும் பாஜக, பல்வேறு அராஜக தில்லு முல்லு ரவுடிச வழிமுறைகளின் மூலம் மம்தாவின் திருணாமுல் காங்கிரஸிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை தட்டிப் பறித்து விட்டது. கேரளாவில் சிறிய மாநிலம் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமல்ல; அங்கும் இடதுசாரிகளை விட காங்கிரஸ் வந்து விடுவதால் ஒன்றிய பாசிச பாஜக-விற்கு பெரும் பாதிப்பு வந்துவிடும் என்று அக்கும்பல் கருதவில்லை. அஸ்ஸாம், பாண்டிச்சேரியை பொருத்தமட்டில் தத்தம் ஆட்சிகளைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவிற்கான ஏற்பாடுகளை வழக்கம் போல் நிலைநாட்டிக் கொண்டது.
ஆனால் தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் தொடர்ச்சியாக ஒன்றிய அரசுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஸ்டாலின் தலைமையிலான திமுகவை – தம்மால் முடியாவிட்டாலும், யாரைக் கொண்டாவது துடைத் தெரிய வேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு (தாம் ஆட்சிக்கு வர முடியாது என்பதைத் தெரிந்து கொண்டு) தமது பினாமி அமைப்பாக உருவாக்கிய த.வெ.க.-வை ஒரு கணிசமான எண்ணிக்கையில் இடம் பிடிக்க வழிவகை செய்து திமுகவை தோற்கடித்தது போன்றும், அதே நேர்வில் த.வெ.க.வை தனிப் பெரும்பான்மையில் வரவிடாத சூழலில் தொங்கு சட்டமன்றம் உருவாக வழி வகுத்து, தன் பிடிக்குள் வைத்துக் கொள்ளலாம் என்றே கருதியது பாஜக! ஆனால் நிலைமையோ தலைகுப்புற மாறியது. காங்கிரஸ் முந்திக் கொண்டு (திமுக-விற்குத் துரோகமிழைத்து விட்டு) த.வெ.க.-வில் துண்டு போட்டு இடம் பிடித்துக் கொண்டது.
எடுத்த எடுப்பிலேயே தமது தவெக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 107 பேர் பட்டியலை மட்டும் ஆளுநரிடம் கொடுத்து, தான் அதிக உறுப்பினர்களைக் கொண்ட தனிப்பெரும்கட்சி என்ற அடிப்படையில் தம்மை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோராமல், காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலையும் சேர்த்துக் கொடுத்தமையால், ‘பெரும்பான்மைக்கு இன்னும் 6 குறைகிறது’ (என்று சாக்குப் போக்குடன் மோடி-அமித்ஷா கும்பல் வழிகாட்டுதல்படி) என்று கூறி ஒரு முறை அல்ல; மூன்று முறை விஜய்யை அலைக்கழித்து திருப்பி அனுப்பி முகத்தில் கரி பூசினார் பொறுப்பு ஆளுநர் அர்லேகர்.
பாசிசமா? பாயாசமா? என்றெல்லாம் வாய்க்கொழுப்பெடுத்துப் பேசிய விஜய் பாசிசம் வெளிப்படுத்தும் உண்மையை உணர திராணியற்று, ஆளுநருக்கு எதிராகவோ, பாஜகவிற்கு எதிராகவோ வாய் திறக்க வக்கின்றி பிளாஸ்திரி போட்டு ஒட்டிக்கொண்டு மௌனம் காத்தார். ‘என்ன அமித்ஷா சார்.. இதுதான் ஜனநாயகமா?’ என்றெல்லாம் கேட்கத் துணிவில்லை.
இறுதியில் தவெக ஆட்சியில் அமராவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சிப் பிரகடனப் படுத்தப்பட்டு ஆளுநர் ஆளுகையில் மாநிலம் சென்று விடும் என்ற நோக்கில் இரு இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல்…போன்ற திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள், தவெக- வின் வேண்டுகோளை ஏற்று விஜய் தலைமை யிலான ஆட்சி அமைக்க வழி வகுத்து மே-10ல் பதவி ஏற்பும் நடந்து முடிந்து விட்டது. இந்நிகழ்வில் வெட்கமின்றி ராகுலும் கலந்து கொண்டார். விஜய்யின் தாய் தந்தையருடன் ‘மிக மிக முக்கியப் பிரமுகர்’ நடிகை திரிஷா முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். முன்பு பாசிசக் கோமாளி எம்.ஜி.ஆருக்கு ஜெயா உடன்கட்டையாக இருந்த நினைப்பில் எதிர்காலக் கனவுத் திட்டம் ஏதும் இருக்கிறதோ என்னவோ?
பதவி ஏற்பு நிகழ்வு அலங்கோலங்கள்!
விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்ட பொழுது திரைப்பட வசனப் பாணியில் ஆக்ரோஷமான குரலில் பதவி ஏற்றது நடுநிலையாளர்களைக் கூட நாணச் செய்தது. விஜய் கையை காலை ஆட்டுவதை பார்த்த ஆளுநர் இடையில் குறுக்கிட்டு தாளில் அச்சாகியிருக்கும் விவரங்களை மட்டும் படித்து உறுதிமொழி ஏற்குமாறு வழிகாட்டுதல் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
மொத்தம் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்ற பிறகு வாக்குறுதிகளை நிறைவேற்றியதற்கு அடையாளமாக ஒருசில கோப்புகளில் கையொப்பமிடும் ‘நாடகம்’ அரங்கேறியது. அதில் ஒன்று 200 யூனிட் இலவச மின்சாரம் என்பதாகும். மற்றவை பெண்கள் பாதுகாப்புக்கான ‘சிங்கப் பெண் திட்டம்’, போதை பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் என்ற வகையில் போலித் தனங்களை உள்ளடக்கிய கோப்புக்களில் கையொப்பமிட்டுள்ளார். மக்கள் ஆவலோடு எதிர்பார்த்த உருப்படியான எந்த ஒரு வாக்குறுதியிலும் பதவி ஏற்ற நாளில் அவர் கையெழுத்திடவில்லை.
மாறாக நிகழ்வில் ‘முதல் உரை’ நிகழ்த்துகையில், ‘என்ன பேசுவது? எதைச் சொல்வது என்றே எனக்குப் புரியவில்லை. நான் சாதாரண ஒரு உதவி இயக்குனர் குடும்பத்தில் மகனாக பிறந்தவன். நான் மன்னர் பரம்பரையிலிருந்து வந்தவன் அல்ல; எனவே வறுமை ஏழ்மை குறித்து எனக்கு நன்றாகவே தெரியும். (மோடி போல விஜயும் ஏழைத்தாயின் மகன் வேடம் போடுகிறார்) இன்று நான் கூடுதலாக எதையும் அறிவிக்கவில்லை என்பதாக எவரும் எண்ணிவிட வேண்டாம். கடந்த கால ஆட்சியாளர்கள் 10 லட்சம் கோடிக்கு மேல் கடன் வைத்துவிட்டுச் சென்று விட்டனர். இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்; கோட்டைக்குப் போய் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். அப்பொழுது தான், என்ன இருக்கு? என்ன இல்லை? என்பதையெல்லாம் அறிய முடியும். எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்;
படிப்படியாக வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்; நண்பா-நண்பிகளே (வாக்குரிமையற்ற இளசுகள்-இவர்கள் தானே விஜய்யை வெற்றி பெறச் செய்தவர்கள்) உங்களை என்றைக்கும் மறக்க மாட்டேன்; உங்களுக்கும் வேண்டியதை இந்த விஜய் செய்வான்..’ என்ற பாணியில் சவடால் அடித்துள்ளார் விஜய். மொத்தத்தில் ஒரு திரைப்பட சூட்டிங் நடந்தது போன்ற காட்சிகள் பதவியேற்பு நிகழ்வில் அரங்கேறி உள்ளன.
காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு பாஜக ஆட்சியைப் பிடித்த பின் இன்றைய நிலையில் கடன் தொகையை 224.24 லட்சம் கோடியாக உயர்த்தி விட்டது அதானி அம்பானி, கும்பலின் ஏகோபித்த பாதுகாவலனான மோடி அரசு. (இந்தக் கடன் எல்லாம் விஜய்க்கோ, எடப்பாடிக்கோ கண்ணை மறைத்துவிடும்.) எடப்பாடிக்கு பின் ஆட்சிக்கு ஸ்டாலின் வருகின்ற பொழுது எடப்பாடி வைத்துச் சென்ற 5.5 லட்சம் கோடிகள் கடன் இருப்புடனேயே ஆட்சியில் அமர்ந்தார். ஸ்டாலின் அளித்த பதிலில் ஒரு மாநில அரசு 28 முதல் 30 சதவீதம் வரை கடன் வைத்து இருக்கலாம் என்றும், தமது அரசு முந்தைய ஆட்சி நிர்வாகத்துடன் ஒப்பிடுகையில் 26 சதவீதத்திற்கு உள்ளேயே கடன் வைத்திருந்ததாகவும், அதுவும் பெருவெள்ளம், இயற்கை இடற்பாடுகள், கொரோனா, மக்கள் நலன் சார்ந்த இன்ன பிற திட்டங்களுக்கான நிதிகள் ஏதும் தராமல் அனைத்திலும் ஓரவஞ்சனையாக ஒன்றிய பாஜக அரசு நடந்து கொண்ட போதிலும் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை தமது அரசு நிறைவேற்றி உள்ளதாகவும், எனவே ‘கெட்டிக்காரத்தனமாக’ பொய்ச் செய்திகள் பரப்பி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுதலிலிருந்துத் தப்பித்திட எண்ணிட வேண்டாம்; ஆட்சி நடத்தும் நுணுக்கங்களை கற்றறிந்து மக்கள் பணி ஆற்றுங்கள்..’ என்ற பாணியில் ஸ்டாலின் (அவரது ஆட்சியில் பல மக்கள் விரோத கோளாறுகள் இருந்திட்டாலும்), விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இவை ஒரு புறமிருக்க, பதவி ஏற்பு விழாவில் தமிழ்நாடு இதுவரை கண்டிராத வகையில் முதலில் வந்தே மாதரம், இரண்டாவதாக தேசீய கீதம், மூன்றாவதாக தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது என்பது தமிழக வரலாற்றில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்துள்ளார் விஜய். இதுவரை அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தும் தேசிய கீதமும் மட்டுமே பாடப்பட்டது அல்லது இசைக்கப்பட்டது. வந்தே மாதிரம் பாடல் இப்பொழுதுதான் முதல் முறையாக தமிழ்நாட்டில் நுழைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் கண்டனங்களை எழுப்பி உள்ளன. இதற்கு ஒன்றிய அரசின் உத்தரவை காரணம் காட்டியுள்ளது தவெக அரசு. ஆனால், மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக முதல்வர் பதவியேற்கும் விழாவிலேயே வந்தே மாதரம் பாடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமா? இந்தியை நுழைக்கும் வகையில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையொப்பம் இடுமாறு பதவியேற்கும் முன்பே ஒன்றிய அரசு மாநில அரசுக்கு தாக்கீது அனுப்பி விட்டது. இது தொடர்பாக எல்லா அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வரும் சூழலில், வழக்கம்போல் விஜய் வாய் திறக்கவே இல்லை. மேற்கு வங்கத்தில் முதல் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக கூட பதவியேற்பு நிகழ்ச்சியில் வந்தே மாதிரம் பாடலை இசைக்கவில்லை. பெரியார் வழி, அம்பேத்கர் வழி, சமூக நீதி என்று வாய்ச் சவடால் அடிக்கும் விஜய் இது குறித்து எல்லாம் எதுவும் அறிந்திடாத – வாய் திறந்திடாத மண்ணாக மரித்துப் போனார்.
எனவே அனைத்து வகைகளிலும் துவக்கமே விஜய் ஆட்சியில் கோளாறாக உள்ளது.
ஸ்டாலினை ‘தீய சக்தி’ என்று கூறிவிட்டு தன்னை ‘தூய சக்தி’யாகக் காண்பித்துக் கொள்ளும் விஜய் கட்சியின் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தமது சகாக்களுடன் குடிபோதையில் கையில் மது பாட்டிலை வைத்துக் கொண்டு ‘தண்ணித் தொட்டித் தேடி வந்த கண்ணுக் குட்டி நான்…’ என்ற பாடலை பாடிக்கொண்டு குத்தாட்டம் போடுகின்ற காட்சிகளை ஊடகங்களில் பார்த்தோம். ராயபுரம் எம்எல்ஏ K.V.விஜய் தாமு ஓரிரு நாட்களுக்கு முன்பு தமது பிறந்த நாளில் தன் சகாக்களுடன் ‘பெரிய வாளால்’ கேக் வெட்டிய ‘கண்கொள்ளாக்’ காட்சியையும் ஊடக வெளிச்சத்தில் பார்த்தோம்.
காசிமேடுப் பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சிதைத்தெறிந்த அப்பகுதி த.வெ.க. வட்டச் செயலாளர் தினேஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் கம்பியை எண்ணிக் கொண்டிருக்கிறான். இப்படி மாநில மெங்கனும் தமது கட்சியினரின் அருவருக்கத் தகுந்த நிகழ்வுகளைக் கண்டிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் இதுவரை முனையவில்லை விஜய். மூன்று வயது சிறுமி தற்போது பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளார். துவக்கத்தில் கரூரில் 41 பேர் மரணம் அடைய இவரது செயற்பாடுகளே காரணமாக இருந்தது. இது விடயத்தில் இன்றைய முதல்வர் ஸ்டாலின் மிகவும் மெத்தனமாக நடந்து கொண்டார். எளிதாகக் கடந்து சென்று விட்டார் என்றே கூற வேண்டும். தற்போது ஆரம்பச் சூழலே அருவருக்கத் தகுந்ததாய் – மக்கள் மனம் உடைந்து போவதாய் உள்ளது.
படிக்க: கரூர்: 42 மனித உயிர்கள் படுகொலை! பாசிசக் கோமாளி விஜயை கையாள வேண்டிய அணுகுமுறை!
‘மாற்றம் வேண்டும்’ என்றார். துவக்க ‘மாற்றமே’ அதிர்ச்சி அளிக்கிறது. இன்னும் பொறுத்திருந்து பார்ப்போம்! முதல் நாளில் பதவியேற்றுள்ள அமைச்சர்கள் சிலரின் யோக்கியதாம்சங்கள் ஏற்கனவே அம்பலப்பட்டு போனவையே!
குறிப்பாக கோடீஸ்வரன் ஆதவ் அர்ஜுனா குறித்து அவரது மைத்துனர் ‘லாட்டரி புகழ்’ மார்ட்டின் மகன் பாண்டிச்சேரி மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் மார்ட்டின் (இவர் என்னவோ யோக்கியர் போல) ஆதவ் அர்ஜுனா பெரும் கொள்ளைக்காரன்; விஜய் இவர் விஷயத்தில் எச்சரிக்கையாக இருந்து கண்காணிக்க வேண்டும் என்பதாகக் கூறியுள்ளார். இது மறுக்க முடியாத உண்மையும் கூட. தமிழ்நாட்டில் கூடுதல் வருமான வரி ஆணையராக இருந்து சிலவற்றில் மாட்டிக் கொண்டதன் காரணமாக பீகாருக்கு மாறுதல் செய்யப்பட்டவரும், தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்தவரும், பின்பு டெல்லி லாபியில் பாஜக-வில் இணைய முற்பட்டு காவிக் கும்பல் வழிகாட்டுதலில் தமிழ்நாட்டுக்கு திரும்பி தவெக-வில் ஐக்கியமாகிவிட்டவரும் ஆன அருண்ராஜ்,IRS-ன் கதைகள் ஏராளமாக குவிந்து கிடக்கின்றன. முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் வனத்துறை அமைச்சராக இருந்த பொழுது வாசாத்தி கொடுமைகளுக்கு இவரும் ஒரு முக்கிய குற்றவாளி என்றே கூற வேண்டும்.
பக்கா ஆர்எஸ்எஸ்-காரரான நிர்மல் குமார் ஐ.டி. விங்-கில் ஆயிரம் ஆயிரம் பொய்ச் செய்திகளை இந்திய அளவில் காவிக் கூட்டத்திற்கு சார்பான தன்மையில் பிரச்சாரம் செய்தவர் தான். மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கட்ராமன் ஒரு பார்ப்பனர். அவருக்கு கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெற்றி அடைந்த உடனேயே இனி சனாதனத்திற்கு எதிராக பார்ப்பனீயத்திற்கு எதிராக எவன் பேசுகிறான் என்பதைப் பார்ப்போம் என்று சவடால் அடித்தார். இவரும் ஒரு ஆர் எஸ் எஸ் காரரே. எனவே காவி கும்பல் கனவு காணும் குலக்கல்வி திட்டம் இந்தி திணிப்பு போன்றவற்றை தமிழ்நாட்டில் நிலைநிறுத்த இவரது பங்களிப்பை பெரிதும் பயன்படுத்திக் கொள்ளும் காவிக் கும்பல். பெரியாரிசம், அம்பேத்காரிசம், சமூக நீதி பேசிக் கொண்டு அனைவரும் பதவி ஏற்பின் பொழுது ஆண்டவன் பேரில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட வினோதமும் அரங்கேறியது.
விஜய் வெற்றியின் ரகசியமும் – தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத் தன்மை இல்லாத ரகசியமும்…!
ரூட் மாஃபியா எனப்படும் டிஜிட்டல் மூளைச்சலவை – சென்டிமென்ட் ட்ராக்கிங் இன்ஃபர்மேஷன் பம்பார்ட்மென்ட் என்ற வகையிலும், விரிச்சுவல் வாரியர் அதாவது ஊடகப் போராளிகள் என்ற பெயரிலும், தூண்டில் (The Hook) அரசியல் கருத்துக்களை பரப்புவதற்கு திரைப்படக் காட்சிகளை ஒரு ‘ட்ரோஜன் குதிரையாக’ (Trojan Horse)ப் பயன்படுத்தினர். இது வெறும் சாதாரணத் ‘தகவல்’ அல்ல; பொழுதுபோக்குக்கும் பரப்புரைக்கும் இடையிலான கோட்டினை திட்டமிட்டு அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு உளவியல் போர் (Psychological Operation). ஒரு ஒட்டுமொத்த மக்கள் தொகையின் சிந்தனைப் போக்கையே இவர்கள் மாற்றி அமைத்து விட்டனர்.
படிக்க: சதிக் கோட்பாடுகள் எவ்வாறு மக்களின் நம்பிக்கையை பெறுகின்றன?
சென்னையை தலைமை இடமாக கொண்டு, 6 மையங்களில் (Hubs) பரவி இருக்கும் 4000-க்கும் மேற்பட்ட கணக்குகள், ஒவ்வொன்றுக்கும் 250-க்கும் மேற்பட்ட பின் தொடர்பாளர்களுடன் (Followers), 5 மாதகாலத்திற்கு 7 கோடி மனங்களை குறி வைத்து இயங்கின. இதன் வீச்சு, நாளொன்றுக்கு பத்து லட்சத்திற்கும் அதிகமான (1M+) பார்வைகள் சளைக்காத வேகத்துடன் வளர்ந்து கொண்டே இருந்தன; மிக நுணுக்கமான மாவட்ட ரீதியிலான இலக்குகள் (Targetting) இவ்வாறாக பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான ஐ.டி., இன்ஸ்ட்ராகிராம் மூலமாக இளசுகள் மேற்கொண்ட பரப்புரைகள் – பொய்களை எளிதாக உண்மையாகுதல் – அளவுக்கு மீறி விஜய் மீதான சினிமா மோக போலி பொறுக்கித் தலைமைத்துவப் பண்பை சுமத்துதல் போன்ற பிரச்சாரங்கள் விஜய்யின் இந்த மோடி மஸ்தான் வெற்றிக்கு வழி வகுத்துள்ளது.
இவ்வளவிற்கும் அவர் மற்ற அரசியல் கட்சிகளைப் போல தமிழ்நாடு முழுமையும் சுற்றிப் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே அவர் கால் பதித்தார். மொத்தத்தில் சுமார் ஒரு மணி நேரம் பேசி இருப்பாரா என்பதே சந்தேகம். பேசிய உரைகளும் ஆழமான கருத்துச் செறிவுகள் அடங்கிய அரசியல் உரை ஏதுமில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த வெற்றியை அவரே எதிர்பார்க்க வில்லை. எம்ஜிஆர் காலத்தில் இருந்த கவர்ச்சி மோகம், பொறுக்கி அரசியல், பாசிசக் கோமாளித்தனம் போன்ற அனைத்துப் பரப்புரைகளும் இந்த கோமாளி விஜய் காலத்திலும் விஞ்ஞான தொழில்நுட்பத்திற்கு ஏற்றபடி ஆட்சிக் கட்டிலில் அமர வைத்து உள்ளது.
எம்ஜிஆர் காலத்தில் அவர் வேன்-னில் நின்று பிரச்சாரம் செய்கின்ற பொழுது அவர் குடித்த எச்சில் சோடா பாட்டில்களை முண்டியடித்துப் பாய்ச்சல் வேகத்தில் பெற்று வாங்கிக் குடித்த இளம் பெண்கள் ஏராளம். இன்று விஜய் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி நீதிமன்றம் சென்றால், ‘அதெல்லாம் ஒர்த் இல்லாத கேசு’ என்கிறார் விஜய். உடனே அவரது ரசிகைகள் திருமணம் ஆனவர்கள் உட்பட, ‘ஒரு சங்கீதா போனால் என்ன? அவருக்கு ஆயிரமாயிரம் சகோதரிகளாக, பெண்டாட்டிகளாக இருப்பதற்கே தயாராக இருக்கிறோம்’ என்கிறார் ஒருவர்; ‘விஜய்யை நான் 20 வருடங்களாக காதலிக்கிறேன்; இவ்விவரத்தை அவரது தந்தை சந்திரசேகரனிடமே தெரிவித்திருக்கிறேன்; எனது கணவருக்கும் கூட இவ்விவரம் தெரியும்’ என்று குதூகுலிக்கிறார் இன்னொரு திருமணம் ஆன பெண்மணி. ‘நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் இந்தக் கூட்டத்தில் விஜய்யைப் பார்க்க வரலாமா?’ என்று ஒரு பெண்ணிடம் கேட்டபொழுது, ‘குழந்தை செத்துப் போனால் இன்னொன்றைப் பெற்றுக் கொள்ளலாம்; ஆனால் தளபதி விஜய்யை இந்த வாய்ப்பை விட்டால் பார்க்க முடியுமா?’ என்று கரூர் கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு கர்ப்பிணிப் பெண் எதிர்க் கேள்வி கேட்டார். இப்படிப்பட்ட அநாகரீகமான – கேவலமான பெண்களின் கருத்தோட்டங்களை விஜய் கண்டித்து விமர்சனம் செய்யவே இல்லை. மாறாக இவ்விதமான பெண்களின் கேவலமான கருத்துக்களை ரசித்து உள்ளூர மகிழ்ச்சியிலேயே திளைத்துக் கொண்டிருக்கிறார் விஜய்.
தேர்தல் ஆணையத்தை பொருத்தமட்டில் முழுமையும் வெளிப்படைத்தன்மை அற்றதாக என்றோ மாறிவிட்டது. SIR + EVM + VVPAT தில்லுமுல்லு மோசடிகள் பெரிய அளவில் பாஜக அல்லாத மாநிலங்களில் அரங்கேறி உள்ளன. அதில் தமிழ்நாடும் அடங்கும். பழைய வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் மக்களுக்கு விளம்பரப்படுத்தப் படவில்லை. அனைத்துக் கட்சியினரும் நீக்கப்பட்ட வாக்காளர்கள் சரியான முறையில் தான் நீக்கப்பட்டனரா என்பதனை முழுமையாக சோதித்தறியவும் இல்லை. பல தொகுதிகளில் பதிவான வாக்குகளை விட எண்ணப்பட்ட வாக்குகள் கூடுதலாகவோ குறைவாகவோ இருந்துள்ளன. உதாரணத்திற்கு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சீனிவாச சேதுபதி (83365) என்பவர் முன்னாள் அமைச்சர் கே ஆர் பெரியகருப்பனை(83364) விட ஒரு வாக்கு கூடுதலாக பெற்று வென்றுள்ளார். ஆனால் அந்த திருப்பத்தூர் தொகுதிக்கு வரவேண்டிய தபால் வாக்குகள் சில திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு தவறுதலாக அனுப்பப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் கவனத்திற்கு கொள்ள கோரியும் தேர்தல் அதிகாரியோ தலைமை தேர்தல் ஆணையரோ கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி உள்ளனர். தற்போது இப்பிரச்சனை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
படிக்க: மாற்றம் வேண்டும் என்பவர்கள் தேர்தலைத் தாண்டி சிந்திப்போம்!
எது எப்படியோ EVM மூலமான வாக்குப்பதிவு முறை ரத்து செய்யப்படுவதும் பழைய பாணியில் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டியதும் அவசியமாக இருக்கிறது. இந்திய தேர்தல் ஆணையர்கள் நியமன குழுவை பழைய முறையிலேயே மாற்றி அமைக்க வேண்டும். தேர்தல் ஆணையம், பாராளுமன்ற வழிகாட்டுதல் மற்றும் மோசடியான சட்ட திருத்தங்களை புதிதாக பிறப்பித்த உத்தரவுகள் யாவற்றையும் ரத்து செய்ய வேண்டும். இப்படிப்பட்ட கோரிக்கைகளுக்காக எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும் ஒருங்கிணைந்த தன்மையில் கலகம் புரிய வேண்டும். இல்லையேல் அழுகி நாறும் இந்த வாக்கு வங்கி போலி பாராளுமன்ற ‘ஜனநாயக’ குறைந்தபட்ச ‘மாண்பையும்’ தக்க வைத்துக் கொள்ள முடியாது.
எனினும் நிலவுகின்ற சமூகச் சூழலில் அறியாமையில் மூழ்கி கிடக்கும் – வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு இந்த 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்களிப்பது ஒன்று மட்டுமே அரசியல் ஜனநாயக கடமை என்ற மாயை உடைத்தெறியப்படல் வேண்டும். பாராளுமன்றத்தின் மூலமாக நிரந்தரமாக இருக்கக்கூடிய ‘அரசு’ என்று சொல்லக்கூடிய அடியாள் படையான சட்டங்களை நிறைவேற்றும் அதிகார வர்க்கத்தின் வாயிலாக எலும்பு துண்டுகளை – இலவசங்களை மக்களை நோக்கி வீசி எறியப்படும் சிலவற்றைத் தவிர எதையுமே சாதித்துக் கொள்ள முடியாது. உண்மையான ‘மாற்றம்’ எதையும் காண முடியாது என்பதே பேருண்மை.
‘பாராளுமன்றம் – அனைத்து மக்களுக்குமான வாக்குரிமை – அரசு’ ஆகியன பற்றி மார்க்சிய ஆசான்கள் காட்டிய வழிமுறைகளை நினைவில் கொள்வோம்! வினையாற்றுவோம்!
ஆசான்கள் மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் கண்ணோட்டங்களைப் புரிந்து கொள்வது என்பது “… பாராளுமன்ற முறையை விட்டொழிப்பதானது பிரதிநிதித்துவ உறுப்புகளையும் தேர்தலையுமே விட்டு ஒழிப்பதாகாது. பிரதிநிதித்துவ உறுப்புகள் வெறும் வாய்ப் பேச்சு கூடங்களாய் இருப்பதை மாற்றி அவற்றைச் “செயலாற்றும்” உறுப்புகளாக்க வேண்டும் என்பதே இதன் பொருள். “கம்யூனானது பாராளுமன்ற உறுப்புகளாயில்லாமல் செயலாற்றும் உறுப்பாய், ஒருங்கே சட்டமன்றமாகவும் நிர்வாக குழுவாகவும் செயல்படும் உறுப்பாய் திட்டமிடப்பட்டது.”
“… ஆளும் வர்க்கத்தின் எந்த உறுப்பினர் பாராளுமன்றத்தில் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அடக்கியொடுக்க வதென (ver-und zertreten) மூன்று அல்லது ஆறு ஆண்டுகளுக்கு ஒரு தரம் தீர்மானிப்பதற்குப் பதிலாய் அனைத்து மக்கள் வாக்குரிமையானது கம்யூன்களாய் வகுக்கப் பெற்ற மக்களுக்கு – எந்த ஒரு முதலாளியும் தனது தொழிலுக்கு தொழிலாளர்களையும் போர்மன்களையும் கணக்கர்களையும் தேடிக் கொள்ள தனியார் வாக்குரிமை பணியாற்றுகிறது அல்லவா, அதுபோல பணியாற்ற வேண்டும்.” …என்று ஆசான் லெனின் பாராளுமன்ற முறை குறித்து 1871 அனுபவங்களில் இருந்து தொகுத்துரைப்பதை நாம் உள்வாங்க வேண்டும்.
மேலும் மையக்கூறான இந்த “… ஒருவகைப் பாராளுமன்றம்” முதலாளித்துவ பாராளுமன்ற உறுப்பினர் அர்த்தத்தில் ஒரு பாராளுமன்றமாய் இருக்காது. இந்த “ஒரு வகைப் பாராளுமன்றம்” காவுத்ஸ்கி கற்பனை செய்வது போல – காவுத்ஸ்கியின்
சிந்தனை முதலாளித்துவ பாராளுமன்ற முறையின் வரம்புகளுக்கு அப்பால் செல்லவில்லை – “செயல்முறை விதிகளை நிலைநாட்டி அதிகார வர்க்க பொறியமைவின் நிர்வாகத்தை மேற்பார்வையிடுவதோடு”
நிற்காது என்பதுதான் இந்த விவகாரத்தின் மையக்கூறு. சோசலிச சமுதாயத்தில், தொழிலாளர்களுடைய பிரதிநிதிகள் அடங்கிய இந்த “ஒருவகைப் பாராளுமன்றம்”
“நிர்வாகத்தை மேற்பார்வையிடும்” என்பது மெய்தான். ஆனால் இந்தப் பொறியமைவு “அதிகார வர்க்கப்” பொறியமைவாய் இராது.
தொழிலாளர்கள் அரசியல் அதிகாரம் வென்று கொண்ட பிறகு அவர்கள் பழைய அதிகார வர்க்கப் பொறியமைவை நொறுக்கி விடுவார்கள்; அடியோடு அதை தகர்த்துத் தரையோடு தரையாக்கி விடுவார்கள். அதனிடத்தில் புதிய பொறியமைவை, அதே தொழிலாளர்களாலும் சிப்பந்திகளாலுமான பொறியமைவை நிறுவிக் கொள்வார்கள்” என விளக்கிச் செல்கிறார் ஆசான் லெனின்.
மேலும் முதலாளித்துவ பாராளுமன்ற முறை ஜனநாயகத்தை (மக்களுக்கானது அல்ல) அதிகார வர்க்கத்துடன் (மக்களுக்கு எதிரானது) இணைத்திடுகிறது. பாட்டாளி வர்க்க ஜனநாயகம் அதிகார வர்க்கத்தை வேர் அளவுக்கு வெட்டிக் குறுக்க உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கும; இந்த நடவடிக்கைகளை அவற்றின் இறுதி முடிவு வரை செயல்படுத்திச் செல்லவும், அதிகார வர்க்கத்தை முழுமையாய் ஒழித்திடவும், மக்களுக்கு முழு நிறை ஜனநாயகத்தைச் செயல்படுத்தவும் கூடியதாய் இருக்கும்… என்றும் ஆசான் லெனின் நாம் பயணப்பட வேண்டிய பாதையை தெளிவுபடுத்துகிறார்.
இவ்வாறாக வரலாற்று வளர்ச்சிப் போக்கினை நாம் உட்கிரகித்து மேலும் மேலும் முன்னேற்ற பாதையில் அடி எடுத்து வைக்க வேண்டிய காலகட்டத்தில், நிலவுகின்ற பாராளுமன்ற சரணடைவுப்பாதை ஓட்டை உடைசல்களைக் கொண்டதாயினும் அதை வைத்தே ஏகாதிபத்திய முதலாளித்துவம் கார்ப்பரேட் முதலாளிகளின் நலன் காப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. அந்த அட்டூழியங்கள் மக்கள் முன் அம்பலப்பட்டு போகாமல் இருக்க மதவெறி – சாதிவெறி – ஆன்மீக வெறி – போதைகள் ஊட்டி வளர்க்கப்படுகின்றன. அதுவே கார்ப்பரேட் காவிப் பாசிசமாக உருவெடுத்து நாட்டு மக்களை- குறிப்பாக உழைக்கும் மக்களை புதை குழியில் தள்ளிக் கொண்டிருக்கிறது.
விவரம் அறியா சிறுவர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள் படித்தவர்கள் எனக் கூறிக் கொள்வோர் இவ்வாறாக திரைப்பட கவர்ச்சி மோக அரசியல் அற்ற பொறுக்கி அரசியல் தலைவனை உயர்த்திப் பிடிப்பதற்கு கொஞ்சமும் கூச்ச நாச்சப் படுவதில்லை. எப்படி அரசியல் தெளிவு பெறுவது; படித்த கல்வி அறிவை எப்படி நடைமுறையில் முன்னோக்கி பார்வையை செலுத்துவது என்பது அறவே அற்றுப் போய்விட்டது. தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் ஆட்சியில் விஜய் வருகையின் மூலம், முன்பு எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தின் பொறுக்கி அரசியல் தன்மையிலான ஆட்சி அதிகார வெறி, லஞ்ச ஊழல் பாசிச ஒடுக்கு முறைகளை இன்னும் கூடுதலாகவே எதிர்பார்க்கலாம்.
எனவே, தமிழ்நாட்டில் மண்டிக் கிடைக்கும் சினிமா மோகத்தையும், பொறுக்கி அரசியலையும், ஆன்மீகம் என்ற பெயரிலான மதவெறி சார்ந்த பக்தி மார்க்கத்தில் மூழ்கிக் கிடத்தலையும் மக்களிடமிருந்து – குறிப்பாக இளசுகளிடமிருந்து வெட்டிச் சாய்க்க பிரச்சார இயக்கங்கள் – பொதுக்கூட்டங்கள் – தனிநபர் சந்திப்புகள் என்பதோடு நிற்காமல் தற்கால சூழ்நிலைகளுக்கு ஏற்ற, எதிரிகள் கையாளும் “கையில் அடங்கிக் கிடக்கும்” அனைத்துவித தொழில்நுட்பங்களையும் அவர்கள் பாணியிலேயே ஆயுதமாக கையில் எடுத்து முற்போக்கு இயக்கங்கள் வினையாற்ற வேண்டும்.
போலிப் பாராளுமன்ற தொழுவம் குறித்தும் மார்க்சிய- லெனினிய ஆசான்கள் எடுத்துரைத்த சமூக விஞ்ஞான உண்மைகளை நாம் கிரகிப்பதோடு இளைஞர்கள் மத்தியிலும் ஆழமாக விதைக்க வேண்டிய பணியிலும் ஈடுபட வேண்டும். அதுவரை இப்படிப்பட்ட போலி அரசியல் தலைவர்கள் தலை எடுப்பதையும், மக்கள் ஏமாற்றப்படுவதையும் தடுத்து நிறுத்தி விட முடியாது.
எழில்மாறன்








கவர்ச்சி மோக பொறுக்கி அரசியலும் விஜய்யின் பதவி ஏற்பும் !
விஜய் ஒரு பொறுக்கி அரசியல் சினிமா மோகன் கவர்ச்சி வாதத்தால் மக்களை ஏமாற்றி ஊடகங்கள் மூலமாக பொய் சொல்லி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளார் என்ற முழு விவரத்தையும் எம்ஜிஆர் ஜெயலலிதா பாணியில் ஊதாரி அரசியல் விஜய் செய்வார் என்றும் அவர் பதவியேற்பு விழாவில் நடந்த கோளாறுகளும் அருமையாக சுட்டிக்காட்டப்பட்டது
தோழர்களின் மேற்கொள் பாராளுமன்றம் குறித்து மிக அருமையாக விளக்கப்பட்டுள்ளது
கட்டுரையாசிரியர் எழில் மாறன் அவர்களுக்கு நன்றி