அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் சில நேரங்களில் நாட்டுக்காகவும் மக்களின் உரிமைக்காகவும் கூட சிந்திக்கிறார்கள் தான். அத்தகையவர்களின் எண்ணிக்கை சொற்பமாக இருந்தாலும், அவர்களில் ஒருவனை கதையின் ஹீரோவாக்கியே பேட்ரியாட் படம் வெளிவந்துள்ளது.
இஸ்ரேலிடமிருந்து வாங்கப்பட்ட பெகாசஸ் உளவு செயலியின் மூலம் எதிர்க்கட்சியினர் உள்ளிட்டவர்களை உளவு பார்ப்பதாக மோடி அரசின் மீது புகார் எழுந்துள்ளது. திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக அதற்கு எவ்வித நேரடி விளக்கமும் கொடுக்காமல், மௌனமாக கடந்து சென்றுள்ளது மோடி அரசு.
பெகாசஸ் என்பது இஸ்ரேலிய சைபர்-ஆயுத நிறுவனமான NSO குழுமத்தால் உருவாக்கப்பட்ட ஒரு உளவு மென்பொருளாகும். இது iOS மற்றும் ஆண்ட்ராய்டு இயங்கும் மொபைல் போன்களில் இரகசியமாகவும் தொலைவிலிருந்தும் நிறுவப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது . NSO குழுமம் பெகாசஸை குற்றம் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு தயாரிப்பாக சந்தைப்படுத்தினாலும், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் அதிருப்தியாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களைக் கண்காணிக்க இந்த உளவு மென்பொருளை வழக்கமாகப் பயன்படுத்தி வருகின்றன.
பேட்ரியாட் படத்தில் இந்திய பாதுகாப்பு துறையானது ஒரு உளவு செயலியை உருவாக்குகிறது. அதை பாதுகாப்பு துறை அமைச்சர் தனது மகனின் நிறுவனத்தின் மூலம் நாட்டு மக்களின் மீது பயன்படுத்த ஒப்பந்தமும் போட்டுத் தருகிறார். அந்தக் கார்ப்பரேட் நிறுவனம் எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி சொந்த கட்சியின் கேபினட் அமைச்சர்களின் ஃபோனையும் கூட உளவு பார்க்கிறது. இதை முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரான ரேவதி கண்டிக்கிறார். அவர் தனது நம்பகமான பாதுகாப்புத்துறை அதிகாரியான மம்முட்டியின் உதவியை நாடுகிறார். மம்மூட்டி பிரச்சினையில் தலையிட்டு நடப்பது குறித்து விசாரித்து அறிக்கையை முழுமையாக்கும் முன்னரே முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ரேவதி மர்மமாக உயிரிழக்கிறார். அடுத்ததாக மம்முட்டியும் குறிவைத்து வேட்டையாடப்படுகிறார்.
மம்முட்டி ஒரு ஹீரோவாக ஒரு புறம் வலிமை வாய்ந்த நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரையும் இந்திய அரசையும் சமாளித்தாக வேண்டும். மறுபுறம் ஆளுங்கட்சியின் கேபினட் அமைச்சர்களையே உளவு பார்க்கும் அளவுக்கு செல்வாக்கும், வலிமையும் பெற்றுவிட்ட கார்ப்பரேட் முதலாளியான பகத் பாசிலை எதிர்த்து போராடியாக வேண்டும்.
படிக்க:
♦ பெகாசஸ் உளவு: நாட்டை ஆளும் கார்ப்பரேட்- காவி பாசிச பயங்கரவாத கும்பல்! | Pegasus Project
♦ லெபனான் ஹிஸ்புல்லா பேஜர் வெடிப்புகளும் உலக மக்கள் மீதான கண்காணிப்பு அதிகரிப்பும்
நாட்டை விட்டு தப்பி ஓடி லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள மம்மூட்டி இத்தகைய சவாலை எப்படி எதிர்கொண்டார், சாதித்தார், என்பதுதான் பேட்ரியாட் திரைக்கதை. இந்தப் போராட்டத்தில் இவருக்கு முன்னால் ராணுவ அதிகாரி மோகன்லால் உதவிக்கு வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு எதிரிகளை பந்தாடுவதாக திரைக்கதை அமைத்துள்ளார்கள்.
“மத்திய அமைச்சர் ஜே.பி.சுந்தரத்தின் (ராஜீவ் மேனன்) மகன் சக்தி சுந்தரம் (பகத் பாசில்), தன் `சக்தி’ மென்பொருள் நிறுவனத்தின் மூலம் ஒருவருடைய போன், லேப்டாப்பில் நுழைந்து அவர்களை உளவு பார்க்கும் ‘பெரிஸ்கோப்’ என்ற ஸ்பைவேரைக் கண்டுபிடிக்கிறார். சட்டத்துக்குப் புறம்பான அதை அதிக அளவில் பயன்படுத்த, சக்தி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுகிறது ஒன்றிய அரசு. இந்த ஸ்பைவேரின் அடுத்தகட்டமாக மக்களுக்கு ‘சோஷியல் ஸ்கோர்’ என்ற ரேங்கிங்கையும் கொண்டுவரத் திட்டமிடுகிறார்கள். இதைத் தடுக்க முயலும் மத்திய அமைச்சர் நளினியும் (ரேவதி), சக்தி சாஃப்ட்வேர் நிறுவன ஊழியர் ஜோதியும் (தர்ஷனா) சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழக்க, பிரச்சினையைக் கையிலெடுக்கிறார் இந்தியப் பாதுகாப்புத்துறையில் அதிகாரியாக இருக்கும் டேனியல் ஜேம்ஸ் (மம்மூட்டி). ஆனால், அவர் மீதே தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட, வெளிநாட்டுக்குத் தப்பியோடவேண்டிய சூழல். சாமானியர்களைக்கூடக் காவு வாங்கும் இந்த ஸ்பைவேரையும், அமைச்சர் ஜே.பி.சுந்தரத்தையும், சக்தி சுந்தரத்தையும் டேனியல் எப்படி வீழ்த்தினார் என்பதே பேட்ரியாட்” என்கிறது விகடனின் விமர்சனம்.
அரசுதான் குற்றவாளி!
பொதுவில் அரசு என்பது வர்க்க சார்பு உடையது. அதிலும் இந்திய அரசானது 100 சதவீதம் கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக சிந்திப்பதாகவும், செயல்படுவதாகவும் உள்ளது. அத்தகைய அரசின் பாதுகாப்புத் துறையில் உயர் அதிகாரியாக இருப்பவர் அரசின் கொள்கைக்கு மாறாக, உழைக்கும் மக்களின் நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும் சிந்திக்கிறார், போராடுகிறார் என்பது நம்புவதற்கு சிரமமாக இருந்தாலும் மகிழ்ச்சியை தருகிறது. ரசிகர்களால் இது கொண்டாடவும் படுகிறது.
உளவு செயலியை மையப்படுத்தி வந்துள்ள படமானது நாம் பயன்படுத்தும் கையடக்க கைபேசி முதல், மடிக்கணினி, கம்ப்யூட்டர்கள் வரை அனைத்தும் எத்தகைய வர்க்கத்தின் பிடியில் உள்ளது? யாரின் நலனுக்கான ஆயுதமாக மாறும் வாய்ப்பைக் கொண்டிருக்கிறது? என்பதை தெளிவாக காட்சிப்படுத்தி இருப்பதன் மூலம் இப்படத்தை நாம் வரவேற்கலாம்.
வயதில் மூத்தவர்களாக மோகன்லாலும் மம்முட்டியும் பொருத்தமாக தோன்றியிருப்பது ரசிக்கக் கூடியதாக உள்ளது. ரஜினியைப் போல இந்த வயதிலும் உடல் ‘முறுக்கை’ காட்டி இம்சிக்காமல் எதார்த்தமாக இருவரையும் காட்சிப்படுத்தியுள்ளது சிறப்பு.
இது ஒரு கலை படைப்பு அல்ல சந்தைக்கான தயாரிப்பு தான். அதற்கு ஏற்ப சில காட்சிகள் வந்து போவது நெருடலை தருகிறது. குடும்பமாக அமர்ந்து ரசிப்பதற்கு பொருத்தமின்றியும் உள்ளது. பொதுவில் லாஜிக் பார்க்காமல் தான் சினிமாவை ரசித்தாக வேண்டும். இப்படமும் அதற்கு விதிவிலக்கு அல்ல தான்.
அரசின் இலவச மடிக்கணியை வாங்கி அதில் பொருத்தப்பட்டிருந்த உளவு செயலியின் மூலம் தனது சுதந்திரத்தையும், தந்தையின் உயிரையும் பறிகொடுத்து விட்டு நீதிக்காக போராடுகிறார். அவருக்கு மோகன்லால், மம்முட்டியும் உதவி செய்கிறார்கள். மம்முட்டியின் மனைவியாக வரும் வழக்கறிஞரான நயன்தாராவும் துணை நிற்கிறார்.
விடுதலை படத்தில் வில்லனாக அரசு அதிகாரியாக சிறப்பாக நடித்திருந்த ராஜீவ் மேனன் இந்தப் படத்திலும் பாதுகாப்பு அமைச்சராக சிறப்பாக நடித்துள்ளார். அவரை மேலும் கொடூரமாக காட்ட சொந்த மகனையே பலிதருவதற்கும் தயங்காதவர் என்று கதை அமைத்துள்ளனர்.
கார்ப்பரேட் கிரிமினல்களையும், கிரிமினல் அரசியல்வாதிகளையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்கின்ற உணர்வை இந்த படம் சாமானிய மக்களுக்கு தருகிறது என்ற வகையில் நாம் இதை வரவேற்போம்.
இளமாறன்






