
தமிழகத்தில், “செய்திகளை தேசிய பார்வையில் தருகின்ற ஊடகம்” என்ற பெயரில் வெளிவந்து கொண்டிருக்கின்ற TN நியூஸ் 24×7 டிஜிட்டல் என்ற சேனல் திருச்சியில் நடந்த சனாதனத்திற்கு எதிரான போராட்டத்தைப் பற்றி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது
“தமிழகத்தில் இனி சனாதனத்திற்கு எதிராகவோ, ஆர்எஸ்எஸ் – பாஜக சங் பரிவார கும்பலுக்கு எதிராகவோ போராட்டங்கள்; ஆர்ப்பாட்டங்கள் நடத்தால் இந்து முன்னணி உள்ளிட்ட பாசிச குண்டர் படையினர் சும்மா இருக்க மாட்டார்களாம். நேருக்கு நேர் வந்து மல்லு கட்டுவார்கள்!” என்று வெளிப்படையாக சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கின்ற வகையில் செய்தி வெளியிடுகின்றனர்.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றும், தமிழகத்தில் நடப்பது பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் என்று அனைவரையும் சமமாக மதிக்கின்ற அரசாங்கம் என்றும் யாராவது நம்பிக்கொண்டிருந்தால் அதைவிட மூடத்தனம் வேறு ஒன்றும் இல்லை என்பதை இந்த காணொளி நிரூபிக்கின்றது.
தமிழக வெற்றிக் கழகத்தின் திடீர் வெற்றிக்குப் பின்னால், டிஜிட்டல் ஊடகத்தை பயன்படுத்திக் கொண்டு, ரூட் மாபியா கும்பல் மூலம் நிமிடக் கணக்கில் பொய் செய்திகள், அரை உண்மை செய்திகள், உணர்ச்சிகரமான முறையில் பரப்பப்படும் செய்திகள், அழுகை, சோகம், சிரிப்பு, நக்கல், நையாண்டி உள்ளிட்ட நவரசங்களையும் உள்ளடக்கிய செய்திகளை வெளியிடுவது; அதன் மூலம் தமிழகம் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காட்டுமிராண்டிகள் ஆட்சியில் இருப்பது போல சித்தரித்ததன் விளைவு, விசில் விஜய் 234 தொகுதிகளிலும் வேட்பாளர் என்ற கணக்கில் 108 தொகுதிகளில் வெற்றி பெற செய்யப்பட்டுள்ளார்.
கிரிமினல் குற்ற கும்பல் பின்னணி கொண்ட இந்த தமிழக வெற்றிக் கழகம் பிற கட்சிகளில் இருந்து ஆட்களை இழுப்பது; கட்சிகளை உடைப்பது; பிற கட்சிகளில் இருந்து வெளியேறுகின்ற எத்தகைய பஞ்சமா பாதகம் செய்திருந்தாலும், கிரிமினல் குற்றவாளிகளை கேள்வி இல்லாமல் தனது கட்சிக்குள் சேர்த்துக் கொள்வது என்று நடந்து கொள்வதால் ‘ தூய சக்தி’ என தன்னை அறிவித்துக் கொண்ட சில காலத்திற்குள்ளேயே அம்பலமாகி நாறிக் கொண்டுள்ளனர்.
விஜய் என்ற பாசிச கோமாளியின் ஆட்சியின் கீழ் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பெண்களுக்கு கல்லூரியிலேயே பாதுகாப்பில்லை; வீட்டில் குடியிருந்தாலும் பாதுகாப்பு இல்லை; வேலைக்குச் செல்லும் இடங்களிலும் பாதுகாப்பு இல்லை என்ற நிலைமை அங்கொன்றும் இங்கொன்றும் நடந்தது என்பது மாறி ஒவ்வொரு மாவட்டத்திலும் அன்றாடம் இத்தகைய பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தலைவிரித்தாடுகிறது.
பெண்கள் மானபங்கம் செய்யப்படும் போதும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் போதும் திடீரென்று வானத்திலிருந்து குதித்து எதிரிகளை உதைத்த துரத்தி பெண்களை காப்பாற்றிய எம்ஜிஆர் எப்படி தனது கவர்ச்சிவாத முகத்தை காட்டி ஒரு சில பத்தாண்டுகள் தமிழக அரசியலை படாத பாடு படுத்தினாரோ அதேபோல பாணியில் திரைப்படங்களில் வசனத்தை பேசி, பெண்களை கவர்ந்து இழுத்த திருவாளர் விஜய் ரூட் மாபியா கும்பலுடன் இணைந்து கொண்டு நடத்திய பிரச்சாரங்களின் மூலமாக ஆட்சியை கைப்பற்றி விட்டாரே ஒழிய அவரது ஆட்சியில் திரைப்பட நிழல் உலகில் நடந்ததை போல நிஜ உலகில் எதுவும் நடக்கவில்லை.
சனாதனத்தை திமுக எதிர்ப்பதால் தான் புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகியவை எதிர்த்து போராடுகிறது என்று 24×7 சேனல் தனது பித்தலாட்ட செய்தியை அவிழ்த்து விட்டு உள்ளது.
தமிழகத்தின் அரசியலைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்ற பெரும்பான்மை உழைக்கும் மக்களும் அரசியல் நோக்கர்களும் மக்கள் கலை இலக்கியக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் கடந்த அரை நூற்றாண்டு காலமாக பார்ப்பன ஆதிக்கத்தையும், சாதி தீண்டாமை கொடுமைகளையும் வர்ணாசிரமத்தை கடைபிடிக்கின்ற ஆதிக்க சாதி வெறியர்களை கண்டித்து போராட்டங்கள் நடத்தியதையும் தொடர்ச்சியாக பார்த்திருப்பார்கள்.
தமிழகத்தை திமுக அல்லது அதிமுக அல்லது தமிழக வெற்றி கழகம் என்று யார் ஆண்டு வந்தாலும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்திக் கொண்டுதான் இருக்கின்றது. அதனை ஊடகங்கள் குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்கள் தவிர பெரிதுபடுத்துவது இல்லை என்பதாலேயே போராடவில்லை என்பது உண்மையாகி விடாது.
இந்திய ஒன்றிய அரசாங்கத்தை தற்போது கைப்பற்றியுள்ள பாசிச பாஜக நாடு தழுவிய அளவில் ஒரு பயங்கரவாத சக்தியாக மாறிவிடக்கூடாது என்பதையும், “ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கட்சி” என்ற ஒற்றைத் தன்மை கொண்ட பாசிச சர்வாதிகாரத்தின் கீழ் சென்று விடக்கூடாது என்பதற்காக தேர்தல் அரசியலில் ஆளும் வர்க்கத்துடன் ஊசலாடி கொண்டுள்ள திமுகவை ஆதரித்தது என்பதுதான் உண்மையாகும்.
அதேசமயம் தனது அடிப்படைக் கொள்கைகளில் நின்று கொண்டு 90களில் இந்தியாவின் மீது திணிக்கப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் உருவாக்குகின்ற கொடூரமான சுரண்டல் தங்கு தடையின்றி நடைபெறுவதற்கு அனுமதி; கார்ப்பரேட்டுகள் நாட்டை கொள்ளையடித்து செல்வதற்கு கொடுக்கப்படுகின்ற தாராளவாத அனுமதி போன்றவை அனைத்தும் இன்றைய காலகட்டத்தில் கார்ப்பரேட் பாசிசமாக தலைவிரித்தாடுகின்றது.
அதனை எதிர்த்து முறியடிப்பதற்கு பரந்துபட்ட உழைக்கும் மக்களை அறைகூவி அழைப்பதுடன் ஊசலாடுகின்ற சமரச சக்திகளையும் இணைத்துக் கொண்டு போராடுவதை மார்க்சிய லெனினிய வழியில் நின்று கடைப்பிடிக்கிறது புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள்.
இந்த கார்ப்பரேட் பாசிசத்தை இந்தியாவின் தன்மைக்கு ஏற்ப கொண்டு வருவதற்கு இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களை சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று இழிவுபடுத்தி வந்த பார்ப்பன இந்து மதத்தை அப்படியே பயன்படுத்துகிறது; அதன் வர்ணாசிரமக் கொள்கைகளையும்; சனாதனம் என்று சொல்லக்கூடிய பார்ப்பன மேலாதிக்கத்தையும் பயன்படுத்திக் கொண்டு இந்த நாட்டில் உள்ள இயற்கை வளங்களை, கனிம வளங்களை சூறையாடுவதற்கு துடித்துக் கொண்டுள்ளது கார்ப்பரேட் பாசிச கும்பல்.
படிக்க:
♦ தடையை மீறி சனாதன எதிர்ப்பு மகஇக ஆர்ப்பாட்டம்
♦ சனாதனம் என்கின்ற பார்ப்பன பாசிச பயங்கரவாதத்தை மோதி வீழ்த்துவோம்!
இதனால்தான் சனாதனத்தை முன்வைத்து மக்களைப் பிரித்தாளுகின்ற பார்ப்பன பாசிஸ்டுகளும், நாட்டை மறு காலனியாக்க துடித்துக் கொண்டுள்ள கார்ப்பரேட் பாசிஸ்டுகளும் ஒன்றிணைந்து கார்ப்பரேட் காவி பாசிசமாக பெரும்பான்மை மக்களின் மீது கொடூரமான தாக்குதல்களை தொடுத்து வருகிறது என்கிறோம்.
இத்தகைய பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக பெரும்பான்மை உழைக்கும் மக்களை பார்ப்பன பாசிச சக்திகளிடமிருந்து வெளியேற்றுவதற்கு, பார்ப்பன மதமான சொல்லிக் கொள்ளப்படும் இந்து மதத்தின் கீழ் சாதி தீண்டாமை கொடுமைகளை அனுபவித்துக் கொண்டே எத்தனை காலத்திற்கு இருக்கப் போகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள்.
சனாதனம் மட்டுமல்ல, இந்து என்று சொல்லாதே பார்ப்பான் பின்னே செல்லாதே! என்ற முழக்கங்களையும், தமிழா நீ இந்துவா? தமிழை நீச பாஷை என்று கூறக்கூடிய பார்ப்பன இந்து மதத்தில் உனக்கென்ன வேலை? என்ற அறைகூவலுடன் பெரும்பான்மை மக்களை இந்து என்று சொல்லி அடக்கி ஒடுக்குகின்ற சனாதனத்திலிருந்து வெளியேற்றுகின்ற வேலையை புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகம் உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் தொடர்ந்து செய்யும்.
தமிழகத்தில் பார்ப்பன கொடுங்கோன்மைக்கு எதிராக போராடிய சித்தர்கள் முதல் வள்ளலார், சமீபத்தில் ஆறுமுகசாமி வரை எண்ணற்ற கொடுமைகளை அனுபவித்துள்ளார்கள். சாதி தீண்டாமை கொடுமைகளை இன்றும் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் கிராமங்களில் நேருக்கு நேர் அனுபவித்து வருகிறார்கள். பார்ப்பனரல்லாத சாதியினர் அனைவரும் கோவிலுக்குள் நுழைவதற்கு அதாவது கருவறைக்குள் நுழைந்து வழிபடுவதற்கு பார்ப்பன மதம் தடை விதிக்கின்றது. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதற்கு பார்ப்பன மதம் தடையாகவே உள்ளது இவை அனைத்தையும் சனாதனம் என்ற பெயரில் தொடர்ந்து அவர்கள் கடைபிடித்து வருவதால் சனாதனத்தை ஒழித்துக் கட்டுகின்ற வரை; கடைசி ஒரு மனிதன் சனாதனத்தினால் இழிவு படுத்தப்படுவது துடைத்தெறியப்படும் வரை சனாதனத்திற்கு எதிராகவும் பார்ப்பன பாசிசத்திற்கு எதிராகவும் புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் போராடும்.
இத்தகைய போராட்டங்கள் ஜனநாயக ரீதியாக நடத்தப்பட வேண்டும் என்று இந்த அமைப்புகள் முன் வைத்தாலும் பாசிச குண்டர்கள் களத்தில் இறங்கி நேருக்கு நேர் மோதுவதற்கு தயாராகி விட்டனர் என்பதாலும், அரசியல் சித்தாந்தமற்ற தற்குறி கூட்டம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடமாடிக் கொண்டிருப்பதால் அவர்கள் எந்த நிமிடத்தில் வேண்டுமானாலும் இத்தகைய கலவரங்களை நடத்துவதற்கு தயங்க மாட்டார்கள் என்பதாலும், தமிழ்நாட்டில் உழைக்கும் மக்களுக்குள்ளேயே பல்வேறு பிரிவுகளாக பிரிந்து ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கின்ற ஒரு அபாயமான காலகட்டத்தை நோக்கி தமிழ்நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது.
இதனை இப்படியும் சொல்லலாம். மணிப்பூரில் பழங்குடி மக்களான மெய்தி, குக்கி இன மக்களிடையே தீராத மோதல்களை உருவாக்கி, தீராத அமைதியின்மையை உருவாக்கியுள்ளது போலவே தமிழகத்தையும் மணிப்பூராக மாற்றுவதற்கு ஆளும் வர்க்கங்கள் துடித்துக் கொண்டுள்ளனர். அதனை அமல்படுத்துவதற்கு பாசிச குண்டர் படை தயாராகிவிட்டது என்பதுதான் தமிழக மக்களுக்கு நாம் கொண்டு செல்ல வேண்டிய செய்தி.
- கணேசன்.
புதிய ஜனநாயகம் தினசரி






